சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Friday, June 15, 2012

பல நாள் சந்தேகங்களின் பட்டியல்

  • என்னுடைய சந்தேகம் எனக்கு தமிழ் எந்த அளவிற்கு தெரியுமென்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.இதற்கு விடை காண இங்கு சில வினாக்களை வைக்கிறேன் .
  • தமிழென்ற மொழிக்கு தமிழ் என்ற பெயர் எப்போது வைக்கப் பட்டது. எந்த சங்க கால இலக்கியத்தில் முதன் முதலில் தமிழ் என்ற சொல் பயன் படுத்தப் பட்டது.
  • உதாரணமாக திருக்குறளில் தமிழ் என்ற சொல் ஒரு இடத்தில் கூட பயன் படுத்தப் படவில்லை. அதற்காக அது தமிழில் எழுதப் படவில்லை என்று சொல்லவில்லை,தமிழைப் பற்றி எழுதவில்லை.
  • கேரளத்தை ஆண்டவர்கள் சேரர்கள் என்றால் தமிழ் சங்க கால இலக்கியங்களில் அவர்களின் பங்கு என்ன?
  • பழந்தமிழ் இலக்கியமான பழமொழியில் வரும் ஒரு வாசகம் இது "நாய் பெற்ற தெங்கம்பழம்" ,மலையாளத்தில் தெங் என்றால் தேங்காய்.
  • அப்படியானால் பழந்தமிழ் நூல்கள் பல தென்னிந்தியாவிற்கு பொதுவான ஒரு திராவிட மொழியில் எழுதப் பட்டது என்று வைத்துக் கொள்ளலாமா?.
  • நம் சங்க இலக்கியங்களை மலையாளிகள் ஆர்வம்கொண்டு படிக்கிறார்களா?
  • திருக்குறள், புறநானூறு,கலிங்கத்துப் பரணி முதலிய சங்க இலக்கியங்களை என்னால் உரை இல்லாமல்படிக்க முடிவதில்லை. அப்படிஎன்றால் நான் தமிழில் தான் பேசுகிறேனா இல்லை நான் பேசுவதை தமிழ் என்று சொல்லி கொள்கிறேனா?
  • தமிழக கேரள எல்லைப் பகுதியான பொதிகை மலையில்  வாழ்ந்த அகத்தியர் தமிழுக்கு முதன் முதலில் வரி வடிவம் தந்தார் என்று சொல்லப் படுகிறது,ஆகவேதான் நமது  வரிவடிவமும் மலையாள வரி வரிவடிவமும் மிகுந்த அளவிற்கு ஒற்றுமையாக காணப்படுகிறதா?
  • அப்படியெனில் நமக்கும் அவர்களுக்கும் பொதுவில் ஏதும்சங்க இலக்கியங்கள் எழுதப் பட்டிருக்கிறதா?   
  • சமஸ்க்ருதம் , தெலுகு, கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகளின் சங்க இலக்கியங்கள் என்னென்ன? 
  • கம்பருக்கு வால்மீகியின்  ராமாயணம் எப்படி கிடைத்தது?
  • நவீனத்துவம்,பின் நவீனத்துவம்  என்று பேசியே நாம் பழங்கால இலக்கிய பாதையில் இருந்து சிதறிவிட்டோமா?
தமிழன் என்ற கர்வத்தை என் தலையில் இருந்து சற்று இறக்கி வைத்து இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டு பிடிக்க வேண்டும்.

Saturday, June 9, 2012

குறுங்கவிதைகள் - நிழலின் பிம்பம்

                               மலையாள கவிஞர் குஞ்நுண்ணி மற்றும் மறைந்த தமிழ் எழுத்தாளர் நகுலனின் கவிதைகளை படிக்க நேர்ந்தது. இருவரின் கவிதைகளும் நம்மை எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்துகிறது. இருவரின் எழுத்து நுட்பமும் மிகவும் புத்திசாலித்தனமானது. படித்தவுடன் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பதில்லை. அவர்களது கவிதைகள். வாசிப்பாளரை மிகுந்த சிந்தனைக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையும் உண்மையையும் உணர்த்துகிறது. இவர்களது கவிதைகளுக்கென்று தனி விளக்கம் எதுவும் கிடையாது. அது வாசிப்பாளரை பொறுத்து மாறுகிறது.பெரும்பாலும் அவர்களது கவிதைகள் ஐந்து அல்லது ஆறு வரிக்குள்ளாகவே அமைந்து விடுகிறது 
அவர்களது கவிதைகள் சிலவற்றை படிக்க கீழே சொடுக்கவும்

குஞ்நுண்ணி கவிதைகள்.

நகுலனின் பத்துக் கவிதைகள்

நகுலன் சொன்னது : ஒரு எழுத்தாளன் என்பவன் வாசிப்பவனுக்குள் சென்று அவனையும் எழுத தூண்ட வேண்டும்.
அதுனால நானும் சில குறுங்கவிதைகள் எழுத முயற்சி செய்தேன். அவற்றின் விளைவு கீழே,
   
நிழலின் பிம்பம் 

(1)அந்த வெளிர் மஞ்சள் நிறம் 
மெல்ல இறங்கி 
ஒரு மின்சார விளக்கின் 
அடியில் சென்று ஒளிந்துகொண்டது


(2) சில நேரங்களில் 
என் நிழல் கூட 
என்னுடன் சேர்ந்து கொள்கிறது 
ஆனால் என் பிம்பம் 
எப்பொழுதும் 
எனக்கெதிராகவே உள்ளது.
 (3) தொலைந்ததை தேடினேன் 
தொலைத்ததெல்லாம் கிடைத்தது 
தொலைந்ததை தவிர!!!
 (4) சிட்டுக்குருவி பழத்தை 
பங்கிட்டுக் கொள்கிறது, 
பூச்சிகள் என்னை 
ஒரு பொருட்டாக 
நினைக்காமல்
ஏறி விளையாடுகின்றன
பெருமையாக இருக்கிறது
 (5)ஊருக்கு தெரிந்து
புகைப்பதை நிறுத்தி

ஐந்து நாட்களாகி விட்டது
எல்லாமும் சரியாய்தான்
போய் கொண்டிருந்தது
ஆறாம் நாளில் கையரிப்பு
யாருமில்லா ஓர் இரவில்
ஊருக்குத் தெரியாமல்
கிளம்பி விட்டேன்
கையில் சிகரட்டுடன்
பற்ற வைத்தேன்
பார்த்து விட்டார்
கடவுள்.

 (6) வானிலையை
 பொறுத்தே 
அமைகிறது
 பலரின் மனநிலை

Monday, June 4, 2012

ஏக் காவ் மேம் ஏக் கிசான் ரகதாத்தா -சைக்கிள்காரன் கோயிங் டூ கொல்கத்தா



  ஏக் காவ் மேம் ஏக் கிசான் ரகதாத்தா பெரும்பாலான தமிழர்களுக்கு தெரிந்த ஒரே இந்தி வார்த்தை. நான் கொல்கத்தா சென்றடைந்தபோது எனக்கும் அந்த வார்த்தையை தவிர இந்தியில் வேறொன்றும் தெரியாது. இப்பிடித்தான் ஒருநாள் ஓட்டலுக்கு போகச்ச வாசல்ல இருந்த செக்யுரிடி ஆவோஜினு சொன்னான் , அது நான் இல்லீங்கனு  நான் சொல்ல. உடனே என் நண்பன் டே ஆவோஜினா உள்ள வாங்கனு அர்த்தம்டா.ஓ அப்பிடியா நான் ஏதோ ராம்ஜி பிரேம்ஜி மாதிரி பேருன்னுல நெனைச்சேன். இப்பிடியே கேவலமா போயிட்டு இருந்தது வாழ்க்கை. ஏதோ டீகே , அச்சான்னு ரொம்ப சிம்பிளான வார்த்தைகள மட்டும் கத்துக்கிட்டேன்.அழகான பொண்ணுங்ககிட்ட அட்ரெஸ் கேக்குற அளவுக்காவுது இந்தி கத்துக்கணும்னு ஒரு ஆசை. ஊர்ல இருந்தப் போது ஓயாம வாயடிகிட்டு இருந்தேன். இங்க வந்து பெரும்பாலும் தனியாதான் பேசிருக்கேன். இந்தில யாராவது பேசுனாக் கூட பெரும்பாலும் தமிழ்ல தான் பதில் சொல்றது. இந்த ஊர் பயபக்கிக சில பேருக்கு தமிழ் சொல்லிக்குடுத்தும் இருக்கேன். ஆனா எக்காரணம் கொண்டும் அவிங்களுக்கு கெட்ட வார்த்தை சொல்லிக் குடுக்குறது இல்ல. பின்னாடி நம்மளையே திட்டினாலும் திட்டிருவானுக. மாதங்கள் கடந்தன நல்ல சாப்பாடு சாப்டாம நாக்கும், நல்ல தமிழ் கேட்க முடியாம காதும் சாகத் தொடங்கின.எங்க ஊட்ல தோசை கொஞ்சம் முருகலா இல்லைன்னாலும தோசை தட்டோட பறக்கும். இங்க வந்து ஒரு தோசை திங்கிறதுக்கு கட கடையாய் ஏறி எறங்கி கடசியா ஒரு பீத்த கடையில் அம்பது ரூபா குடுத்து தோசைங்கிற பேர்ல ஏதோ ஒன்ன தின்னுட்டு வந்தேன்.இந்த வெளி மாநில வாசம் எனக்குச் செய்த மிகப்பெரிய புண்ணியம் என் மாநிலத்தின் அருமையை எனக்கு எடுத்துரைத்ததே. இந்த ஊர் சாப்பாடு ஒவ்வொரு நாளும் சொல்லிக் குடுத்த பாடம் என் அம்மாவின் சமையலே சிறந்ததென்று. 
                                 இந்த ஊரிடம் நான் கற்றுக் கொண்டது நிறையவே.ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் சத்யஜித் ரே, விவேகானந்தர்,ரபீந்திரநாத் தாகூர்,பங்கிம் சந்திரா சட்டர்ஜியின் புகைப்படங்கள். பழைமையை மிகவும் மதிக்கத் தெரிந்தவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் விவாசய நிலம் எதையும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கொடுக்கவில்லை. மாறாக ஊருக்கு வெளியே குப்பை கொட்டும் பீக்காடாய் இருந்த நிலப்பரப்பை கம்ப்யூட்டர் கம்பெனிக்கு கொடுத்துவிட்டார்கள். ஒருவேள ரெண்டும் ஒண்ணுதான்னு நெனைச்சிருப்பாய்ங்களோ அதுபோகட்டும்.இங்கே விவசாயம் எந்த அளவிற்கும் பாதிக்கப்படவில்லை. உருளை கிழங்கு கிலோ ஏழு ரூபாய். சாத்துக்குடி கிலோ ஐந்து ரூபாய். நான் கற்றுக் கொள்ள நிறையவே இருந்தது அந்த மக்களிடம்.
                              எனக்குள் அடிக்கடி எழும் ஒரு கேள்வி. நாம எல்லாம் நல்ல படிச்சி வேலைக்கு சேந்துட்டோம். அப்பிடியே சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கிசெட்டில் ஆக வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கனவும்கூட. சரி சென்னையில வீடு வாங்கி செட்டிலும் ஆயிட்டோம்.நம்ம புள்ளைங்கள சென்னையில சிறந்ததா ஒரு பள்ளிக் கூடத்துல சேத்தும் விடுவோம். எப்பவாது தாத்தா ஊருக்கு போவோம்னு அவனை நம்ம சொந்த ஊருக்கு கூட்டிபோவோம். அவனுக்கு அங்க விளையாட வீடியோ கேம் கூட இல்லாம போரடிக்கும். அவனும் வளந்து பெரியாளா ஆயிடுவான்,நாம சென்னையில செட்டில் ஆக ஆசைப்பட்ட மாதிரி அவனும் வெளிநாட்டுல செட்டில் ஆக  ஆசைப் படலாம்.அப்புறம் நம்ம பேரனக் கூட்டிட்டு அவனும் எப்பவாவது தாத்தா நாட்டுக்கு வருவான். நல்லா கவனிங்க இன்னும் அம்பது வருசத்துல பல பேருக்கு இந்தியா தாத்தா நாடு ஆயிடும்.இப்பவே பாதி பேருக்கு ஆயிடுச்சு.அப்போ தென் தமிழகத்தில ஏதோ ஒரு மூலையில இருக்கிற என் ஊர் என்னவாயிருக்கும் அங்க யார் இருப்பாங்க. இது தான் என்னுள் எழுந்த கேள்வி. கொஞ்சம் பெரிய கேள்விதான். ஆனால் என்னால் இதற்கு விடை கண்டு பிடிக்க முடியும். இதையெல்லாம் ஒரு பெரு நகரத்தில் வாழ்ந்து இல்லை பிழைத்துக் கொண்டிருக்கும் எனக்கு சொல்ல கொஞ்சம் கூட தகுதி இல்லை. ஆனால் என்னுடைய பயணம் என் சொந்த ஊரை நோக்கியே இருக்கும்.இது கூட இந்த பெரு நகரங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடமே. 
 
தினங்காலையில்
பள்ளிக்குக் செல்லும்முன்
பெட்டிக்கடை பாட்டியிடம்
வாங்கி தின்னும்
புளிப்பு மிட்டாயின் சுவை
வந்து மறைகிறது
அடிநாக்கில்
என் ஊரின் ஞாபகம்
வரும்போதெல்லாம்

சொலவடை