சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Tuesday, July 17, 2012

In which annie gives it those ones - அருந்ததி ராய்’s Film

     அருந்ததி ராய் கதை, திரைக்கதையில் அவரே ஒரு முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து 1989 வெளிவந்த ஒரு தொலைக் காட்சித் திரைப்படம். தூர்தர்சன் வெளியீடு.  அருந்ததிராயின் கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். அருந்ததிராயை படிக்க விரும்புபவர்கள் இப்படத்தைப் பார்த்தால் அவரைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளலாம். 
                                           1970களின் தொடக்கத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. National institute of Architecture விடுதியில் மாணவர்களின் அன்றாட காட்சிகளை காட்டுவ்திலிருந்து காட்சி தொடங்குகிறது. கதையின் நாயகன் ஆனந்த் எல்லோராலும் அன்னி என்று அழைக்கப் படுகிறான். ஐந்து வருடங்கள் படிக்க வேண்டிய கட்டிடக்கலை படிப்பை எட்டு வருடங்களாக படித்துக் கொண்டிருப்பவன். புத்திசாலிதான், ஆனால் ஒரு ஆசிரியரிடம் சேட்டையைக் கொடுத்ததால், ஒவ்வொரு வருடமும் இறுதியாண்டு தீஸிஸ் ப்ரெசண்ட் செய்யும் போதும் அந்த ஆசிரியர் அவனை தோல்வி அடையச் செய்கிறார். அவனுடன் சக மாணவியாக இறுதி ஆண்டு படிக்கிறார் ராதா (அருந்ததி ராய்). பேச்சிலும் , செயலிலும் பயங்கரத்துடிப்பு. 1970 களில் நடப்பது போல் காட்டியிருப்பதால் அந்தக் கால கட்டதில் ட்ரெண்டாக இருந்த ஹிப்பி கலாச்சாரத்தை அதாவது நடை, உடை பாவனை எல்லாம், பாப் மார்லேவை போல் இருக்கிறது கல்லூரி மாணவர்களின் நடவடிக்கை. 
                                                ஒரு காட்சியில் ஆசிரியர் சமையலறை கட்டமைப்பை பற்றிய பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார், அப்போது பெண் மாணவர்களைப் பார்த்து, சமையலறையைப் பற்றிய சிறு முன்னுரை கொடுக்குமாறு கேட்கிறார். அதற்கு ராதா எழுந்து சமையல் அறையைப் பற்றிப் பெண்கள் தான் தெரிந்த கொள்ள வேண்டுமா, நீங்க ஏன் இத ஆம்பளப் பசங்ககிட்டக் கேட்கக் கூடாது, என்று கேட்கிறார். ஆசிரியர் உடனே கோபப் பட்டு, இது கட்டிடக் கலையப் பற்றிய படிப்பு, பெண்கள் விடுதலையைப் பற்றியதல்ல என்று கூறி ராதாவை வகுப்பை விட்டு வெளியேற்றுகிறார். இப்படி பல காட்சிகளில் ராதா அவுட் ஸ்டேண்டிங் ஸ்டூடண்டாகவே இருக்கிறார். மேலும் ஒரு காட்சியில் ராதாவின் காதலன் அர்ஜூன், ஆசிரியர் சொன்னது சரிதானே, A Women should be in the kitchen right? என்று கிண்டல் செய்கிறான், அதற்கு ராதா சிரித்துக் கொண்டே, No a woman should be on  top.  என்கிறார். இப்படி இலைமறைகாயாக பல இடங்களில் இளமை ததும்பும் அருந்ததி ராயின் வசனம் தெறிக்கிறது. 
                                       இறுதியாண்டு ஆயவறிக்கை மாதிரி சோதனை நடக்கிறது, ஆனந்த் (அன்னி)  தன் ப்ளானை ஆசிரியரிடம் (அவனைப் பார்த்தாலே எரிச்சலாவாறே அவர்தான்). காட்டுகிறான், அவனுடைய ப்ளான் என்னவென்றால், தண்டவாளங்களின் ஓரத்தில் எல்லாம் மாமரங்கள் நடுவது, அதற்கு தண்ணீர் ஊற்றுவது போல ரயில் வண்டியின் கட்டமைப்பை மாற்றி டிசைன் செய்திருந்தான், மேலும் பல கிராமங்களில் தண்டவாளங்களில் தான் மக்கள் வெளிக்கி போவார்கள் என்றும், அவனது இந்த யோசனையை செயல் படுத்தினால், மக்கள் அந்த மரத்தடிகளில் போக வசதியாக இருக்குமென்றும், அதன் மூலம், மரத்திற்கு இயற்கை உரம் கிடைக்கும் என்கிறான். இதைக் கேட்டு விழுந்து, விழுந்து சிரித்த ஆசிரியர் இதெல்லாம் என்னய்யா தீஸிஸ், உங்க ஆயா காலத்துல பண்ண வேண்டியத இப்போ பண்ணிருக்க என்று சதாய்த்து விடுகிறார். மற்றவர்களின் ப்ளான்களுக்கெல்லாம் ஓகே சொல்லிவிட்டு அன்னியின் தீஸிஸை மாற்ற சொல்லி விடுகிறார். இறுதி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இன்னும் இரண்டே வாரங்கள் இருக்கும் நிலையில் பேராசிரியர் இவ்வாறு சொன்னது கண்டு இந்த ஆண்டும் கோட்டு தான் என்று நினைக்கிறான் அன்னி.
                     இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருக்கிறது. அர்ஜூனும், ராதாவும், அன்னியை இந்த வருடம் எப்படியாவது அன்னியை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று அவனுக்காக புதிய ப்ளான் தயார் செய்கிறார்கள். இரண்டு வாரங்கள் கடக்கிறது, மாணவர்கள் எல்லோரும் தங்கள் ப்ளான்களையும், மாதிரிகளையும் ட்ராயிங் ரூமில் வந்து வைக்கிறார்கள். மறுநாள் Viva voce. அந்த அறை பூட்டப்பட்டு அரக்கினால் சீல் செய்யப் படுகிறது. அன்றைய இரவு அன்னியும், அர்ஜூனும் சீலை லாவகமாக உடைத்து திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து,  அன்னியின் ப்ளானையும்,  கட்டிட மாதிரியையும் வைத்து திரும்பும் போது, யாரோ டார்ச்சு அடித்துக் கொண்டு வருவது போல் தெரிகிறது, பதறி இருவரும் ஒளிந்து கொள்கிறார்கள், அப்போது ஒளியின் மறுபக்கத்தில் இருந்து ஒரு குரல் வருகிறது “Hey Annie Great minds think Alike". என்று சொல்லிக் கொண்டே இன்னொரு மாண்வன் தன் ப்ளானை சமர்பிக்க வந்திருக்கிறான். அட நீயும் தெள்ளவாரிதானா என்று நாம் ஆச்சர்யப் படும் அளவிற்கு அந்த காட்சியைப் படம் பிடித்திருப்பார்கள். 
                                   மறுநாள் முன்னணி கட்டிக்கலை நிபுணர்கள் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட வருகிறார்கள். ஒவ்வொரு மாணவனாக தனியே அழைக்கப்பட்டு கேள்வி கேட்க்கப் படுகிறான். ராதாவின் முறை வருகிறது. அவள் தன் ப்ளானை பற்றி விளக்குகிறாள். விலங்குகள் தங்கள் எல்லையை வரையறுத்துக் கொள்ள மூத்திரத்தையோ அல்லது அதன் வாசனையையோ பயன்படுத்துகிறது, மனிதன் தான் நிலத்திற்கு வேலி போடுகிறான், இது உன்னது, இது என்னது என்று நிலத்தை பிரித்து வைத்திருக்கிறான், ஆக என்னுடைய ப்ளானை விலங்குகள் வசிக்க தனி இடம், மனிதன் வசிக்க தனியிடம் என்ற முறையில், காடுகளை அழிக்காமல், பழங்குடியினருக்கும், வனவிலங்குகளுக்கும் பாதுகாப்பான வகையில் அமைத்திருக்கிறேன் என்கிறார். அதற்கு நடுவராக வந்த ஒருவர், இந்த மாதிரி டிசைன எல்லாம் க்ளைண்ட் ஏத்துக்க மாட்டாங்க என்கிறார். அதற்கு ராதா, நான் க்ளைண்டுகளுக்காக இதையெல்லாம் டிசைன் செய்யலையே என்கிறார். அதற்கு நடுவர்கள், க்ளைண்ட திருப்தி படுத்த முடியலேன்னா நீ பெரிய ஆர்கிடெக்ட் ஆக முடியாது என்கிறார்கள், நான் அப்பிடி ஒரு ஆர்க்கிடெக்ட் ஆக விரும்பலைங்றார் ராதா. இதன் மூலம் அருந்ததி ராய் படிக்கும் காலத்திலிருந்தே மிகுந்த சமூக அக்கறை கொண்டவராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.
                                  கடைசியாக Viva voce ற்கு அன்னியை அழைக்கிறார்கள், தயங்கியபடி உள்ளே நுழைகிறான் அன்னி. அவனைப் பார்த்த ஆசிரியர் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார். அர்ஜூன் ஒரு மாணவனை கூப்பிட்டு, டேய் நீ வெளியே போய்  யம் தூதிற்கு(அந்த ஆசிரியரின் பட்டப் பெயர்) கால் பண்ணுடா என்கிறான். வைவை வோசை அந்த ஆசிரியர் குழப்பிவிடாமல் இருக்க இப்படி ஒரு ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கேற்றார்ப் போலவே தகுந்த நேரத்திலில் ஆசிரியரின் அம்மா போல குரலை மாற்றிப் பேசி ஆசிரியரை திசை திருப்பும் நேரத்தில், அன்னி தன் ப்ரெசெண்டேசனை நல்லபடியாக முடித்து விடுகிறான். ஓரிரு நாட்கள் கழித்து ரிசல்ட் வருகிறது, ஒரு சிலர் தேர்ச்சி அடைகிறார்கள், ஒரு சிலர் படுதோல்வியைச் சந்திக்கிறார்கள். அன்னி நல்ல மதிப் பெண்கொண்டு தேர்ச்சி அடைகிறான். எல்லோரும் அன்னிக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் அன்னி கையில் புத்தகத்துடன் எங்கிருந்தோ வருகிறான். என்னவென்று கேட்கையில் தான் பகுதி நேரத்தில் சட்டம் படிப்பதாகவும், வழக்கறிஞறியராய் மாறிப் போராடி தன் தண்டவாள ஓர மாமரத் திட்டத்தை செயல் படுத்தப் போகிறேன் என்று சொல்வதோடு படம் முடிகிறது. 
                                             1989லேயே கல்வி முறை எப்படி இருக்கவேண்டும் என்று ஆராய்ந்து பல விசயங்களை இப்படம் சொல்கிறது. இப்படத்தைப் பார்த்த பாதிப்ப்பினாலேயே சேத்தன் பகத் த்ரீ இடியட்ஸ் எழுதியிருக்க கூடும். என்னுடைய கல்லூரி வாழ்க்கை இப்படம் என் கண் முன்னே கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். இப்படத்தில் வரும் ஆசிரியரின் கதாப்பாத்திரம் 3 இடியட்ஸின் போமன் இரானியின் கதாப் பாத்திரத்தை ஒட்டியே இருக்கிறது. கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவர்கள் இந்தப் படத்தை வெகுவாக ரசிக்க முடியும். கண்டிப்பா பாருங்க. நல்ல சினிமா பார்ப்பது ஒர் நல்ல இலக்கியத்தை வாசிப்பதை ஒத்தது. அருந்ததிராயை அறிய இப்படம் 200% உபயோகப் படும்.

சுட்டி : In which Annie gives it those ones 

கூடுதல் தகவல்:  இப்படத்தில் ஷாருக் கான் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். பெரும்பாலும் இதுவே அவரின் முதலோ அல்லது இரண்டாவது படம் என்று நினைக்கிறேன். அருந்ததி ராய் வங்காள த்தந்தைக்கும் , மலையாளி தாய்க்கு பிறந்ததாலோ என்னவோ கம்யூனிசக் கோட்ப்பாடு அவர் ரத்ததிலேயே இயற்கையாக கலந்திருக்கிறது. 
                                                                                                                       END

2 comments:

 1. நல்ல பகிர்வு...
  உங்கள் தளத்திற்கு முதல் வருகை...
  Follower ஆகி விட்டேன்... நன்றி...
  வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 2. இது குறித்து சுஜாதா கணையாழியின் கடைசி பக்கங்களில் எழுதியிருக்கிறார். விவரம் தேடித் தருகிறேன்.
  - ஜெகன்

  ReplyDelete

சொலவடை