சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Sunday, October 20, 2013

சுயம்

நன்றாக நீந்திக் கொண்டிருந்த மீனை தூக்கி பரந்து விரிந்த பாலை வனத்தில் போட்டார்கள், அதுவும்  தட்டுத்தடுமாறி நடக்கப் பழகி கொண்டு சில நாட்களில் தன்னை ஒட்டகமாக மாற்றிக் கொண்டது. நன்றாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் அதை மரமேறச்சொல்லி வற்புறுத்தி குரங்காக்கினர், பின் பருந்து, சிலந்தி, பல்லி என பல உருவங்கள் எடுத்து தன்  சுயத்தை இழந்து சுண்ணாம்பாகிப் போனது.  அந்த சுண்ணாம்பு சுவருக்கு அடிப்பதற்காக நீரில் கரைக்கப்பட்டது, திடீரென சுயத்தை உணர்ந்த சுண்ணாம்பு கொதித்தெழுந்தது. ஆனால் வாளியைத்தாண்டி அதன் வீரியம் வெளிப்படவில்லை.

Thursday, September 5, 2013

இனி கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப்போவதில்லை.

                        நீங்க சவுத் இந்தியனா, உங்காளுங்க ரஜினிய கடவுளா பாப்பாங்களாமே? என்னா ராஸ்கலா? தமிழ் சினிமால எல்லாரும் இப்பிடித்தானா? இது போன்ற  அரை வேக்காட்டு கேள்விகளை கடந்த இரண்டு வருடங்களாக கேட்டுக் கேட்டு காது புளித்த நிலையில் இதை நான் எழுதத் தொடங்குகிறேன். தொடக்கத்தில் இந்தப் பொடியர்களுக்கு ரஜினியின் பெருமையை எடுத்துக் கூறிக் கொண்டுதான் இருந்தேன், ஆனால் இனி நான் கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப் போவதில்லை.  

கதைக்கு வருவோம்.
                                        நீங்க ரஜினிய தெய்வமா பாக்குறீங்களே, படிப்பறிவு இருக்கிற எவனாவது இப்பிடி செய்வானா? என்றான். சரி நீங்க யாரெல்லாம் தெய்வமா பாப்பீங்க என்றேன். ஒரு நமட்டுப் புன்னகையுடன் எங்களுக்கு காளி, ராம், சிவ்  இவங்க தான் தெய்வம் என்றான் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு. காளி, ராம், சிவ் இவங்கல்லாம் எப்ப வாழ்ந்தாங்கன்னு சொல்ல முடியுமா? என்பது என் கேள்வி ? அவங்கள்லாம் இதிகாச நாயகர்கள், காலத்தால் அழிக்க முடியாதவங்க, அவங்க வாழவும் இல்லை சாகவும் இல்லை என்றான் பெருமிதம் பொங்க. ஆக, கதைகளில வர்ற  கதாப் பாத்திரங்கள, கார்ட்டூன் கேரக்டர்கள கடவுளா கும்பிடறீங்க அப்பிடித்தானே? உங்களைப் போல இல்லாத ஒரு விசயத்தை கடவுளா பாக்குறதுக்கு (சற்றே நிறுத்திக் கொண்டு), ஒரு பாமரன், உழைப்பாளி, சினிமாவை மட்டுமே தனது கேளிக்கையாக கொண்டிருப்பவன், தன்னை சந்தோசப் படுத்துபவனையும் தன்  மனக் குழப்பத்திற்கு வசன மருந்து தருபவனையும் கடவுளா பாக்குறதுல என்ன தப்பு? என்றவுடன் என்னை எரிச்சலுடன் பார்த்தான். 
                    மேலும் தொடர்ந்தேன், தமிழ் நாட்டுல மூணுவிதமான மக்கள், ஒரு சாரர், முகாலய படையெடுப்புக்குப் பின்னர் இசுலாமியர்களாக மாற்றப் பட்டவர்கள், மற்றொரு சாரர் ஆங்கிலேய வருகைக்குப் பின்னர் கிருத்தவர்களாக மாற்றப் பட்டவர்கள், மூன்றாமவர்கள் தங்களை மெஜாரிட்டி என்று சொல்லிக் கொள்ளும் ஆரிய வருகைக்குப்பின் இந்துக்களாக மாற்றப் பட்ட  கூட்டம். இதை கேட்டவுடன் அவனுக்கு சிறு குழப்பம், அப்படின்னா நீங்க மதமே இல்லாதவர்களா? என் கருத்தை அவனிடம் வைத்தேன், தன்னை உணர்ந்த எவனுக்கும் மதம் தேவைப் பட்டதில்லை. புத்தன் சொன்னதை, கீதை சொன்னதை, பைபிள்  சொன்னத்தை, திருக் குரான் சொன்னதை எங்கள் திருக்குறளும் பல்லாயிரம் வருடத்திற்கு முன்னரே சொல்லியிருக்கிறது. அந்த திருக்குறளைப் பற்றி உனக்கு தெரியுமா என்றென். மதங்களை கடந்த எங்கள் புனித  நூல், மனிதம் பேசிய முதல் நூல், கேள்வியாவது பட்டிருக்கிறாயா என்றேன். இல்லை என்றவாரு தலை அசைத்தான். அந்த திருக்குறள் உனது மொழியில் கூட மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது, படித்துப்பார், மதங்களை துறப்பாய், மனிதனாக உணர்வாய். உங்களது நோக்கம், நல்ல விசயங்களை அறிந்து கொள்வதில் இல்லை. உங்கள் நேரம் போவதற்காக யாரையாவது பற்றி புறணி  பேசுவது. உனக்கு விருப்பம் இருந்தால் எங்கள் ஊரைப் பற்றிய நல்ல விசயங்களை உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன், இல்லை என் நேரத்தை வீணாக்காமல் இங்கிருந்து போய்விடு என்றேன்.
                          இது ஒரு சாரரை தாக்கி எழுதப் பட்டதல்ல,நான் ஒன்றும் இனவெறியனும் அல்ல,  இவர்களைப் போன்றவர்கள் எல்லா விதமான இனத்திலும், மதத்திலும், மொழியிலும் இருக்கிறார்கள், இந்தப் பதிவு தமிழின் பெருமை பேசுவதற்காக போடப் பட்டதில்லை, இது போன்ற மாக்களை  கடந்து செல்வதற்கும், நல்லவர்தம் உறவு வளர்ப்பதற்கும் போடப் பட்டதே. 

இனி கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப்போவதில்லை. அந்த அவசியமும் இல்லை.

Sunday, July 28, 2013

தனிமை

அணைக்க ஆளில்லாத மெழுகு,
அழுது வடிந்து
தனிமைத்தீயில் உருகி
தன்னைத் தானே
அணைத்துக் கொள்கிறது

Friday, July 5, 2013

நான் யார்?

நான் யார்?

என் கண்ணாடியில்
தினம் தெரியும் பிம்பமா?

வெளிச்சத்தில் என்னுடன்
நடந்து வரும் நிழலா?

உணவுக்கு கவளங்கள்
என் வயிற்றை
நிரப்பிக் கொண்டே போயின!

என்னைப் பற்றிய
கேள்விகள் என் மனதை
நிரப்பிக் கொண்டே போயின!

புத்தனைப் படி
உன்னை அறிவாய் என்றார்கள்
புத்தனோ கண்மூடித்தனமாக
என்னை பின் தொடராதே
என்று கூறி விரட்டிவிட்டான்

நகுலன்தான் என்னில்
இப்படியெல்லாம்
கிளர்ச்சியேற்படுத்தியவன்

ஆக அவன் சொன்னதுபோல்
என்னிடம் நானே கேட்டுப் பார்த்தேன்
நான் யார்? என்று
அப்படியும் அறிந்தபாடில்லை!!!

நான் இறந்தபின்
என் சவக்குழியின் மேல்
எழுதிவைப்பார்கள்
நான் யாரென்று
அப்போது வந்து
பார்த்துக் கொள்கிறேன்!

Saturday, May 11, 2013

நல்ல ரசிகனின் கடமை


காலஞ்சென்ற விடுதலை போராட்டத்தியாகி திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாளை நான் அடிக்கடி சென்று சந்திப்பது, சில சமயம் பத்திரிக்கைக்காக பேட்டி எடுப்பதும் என் வழக்கம். என்னையும் அவர் தன் மகனைப் போலவே பாவித்து வந்தார். திரைப்படங்களையே தன் வாழ்நாளில் பார்த்திராத அவர், ஒருநாள் என்னை அழைத்து தான் திரைப்படம் பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரை அழைத்துக் கொண்டு என் விருப்பமான நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் ராஜபாட் ரங்கதுரை திரைப்படத்திற்கு சென்றோம். படத்தில் ஒருகாட்சியில் சிவாஜி திருப்பூர் குமரன் வேடமிட்டு வருவார். காட்சியின் முடிவில் காவலர்கள் அவரை தடியால் அடித்து அவர் கீழே விழுந்து இறப்பார். இக்காட்சியைப் பார்த்த ராமாயி அம்மாள் அக்கணமே திரையரங்கில் மயக்கம் போட்டு சாய்ந்தார். பின் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று காரணம் கேட்டபோது அவர் சொன்னதாவது, “என் கணவர் இறந்தபோது எனக்கு பன்னிரெண்டரை வயது, பக்குவப்படாத பருவம். என் கணவரின் நடை,உடை பாவனை கூட என் மனதில் சரியாக பதியாத வயது. அவர் இறந்த அன்று கூட அவ்வளவு துக்கப்படவில்லை. இன்று திரைப்படத்தில் அந்த நடிகர் நடித்தது என் கணவர் போலவே பட்டது, அவர் காட்சியில் இறந்து விழுந்த போது என்கணவர் இறந்த போது எழாத துக்கம் மேலெழுந்து கீழே சரிந்தேன்” என்றார். தான் உயிருடன் இருக்கும் வரை இதை எழுத வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். பின்னாளின் அவர் காலமானபின் இதை நான் பத்திரிக்கையில் எழுதியிருந்தேன். எழுதிய சில மாதங்கள் கழித்து என்னை அலுவலகத்தில் இருந்து திரையரங்கத்திற்கு அனுப்பி அப்போது வெளியாகியிருந்த சிவாஜி கணேசனின் லாரி ட்ரைவர் ராஜாகண்ணு படத்தைப் பற்றி விமரிசனம் எழுதச்சொன்னார்கள். படத்தைப் பார்த்து ஒரு நல்ல சினிமா ரசிகன் என்ற முறையில் எழுத ஆரம்பித்தேன், ”இப்படத்தில் கதை இருக்கிறது என்று சொன்னால் என் பேனா சதை இருக்கிறது என்று எழுதுகிறது, இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் என் பேனா கடித்திருகிறார்கள் என்று எழுதுகிறது”, இப்படியாக தமிழ் சினிமா காணாத ஒரு மிக மோசமான படம் என்ற முறையில் விமரிசனம் எழுதி பிரசுரமும் ஆகிவிட்டது. தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்ட நடிகர் திலகம் என்னை யார் என்று விசாரித்தார், பின் நான் தான் ராமாயி அம்மாளைப் பற்றியும் எழுதியவன் என்று தெரிந்து கொண்டு, “என்னையா ஒன்னு ஒரேடியா தூக்கி வச்சி எழுதுறீங்க, இல்லை போட்டு ஒரேடியா கவுத்தீட்றீங்க” என்று சற்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டுக் கொண்டார். அவரிடம் மிகப் பணிவாக நான் ”ஐயா, நான் உங்க தீவிர ரசிகன், நீங்க இனிமே இதுபோன்ற படங்களில் நடிப்பதை தடுப்பதே என்னைப்போன்ற நேர்மையான ரசிகனின் கடமை, மன்னிக்கனும்” என்றேன். எனது விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொண்டார் நடிகர் திலகம்.

--ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் எழுத்தாளர்/சினிமா விமர்சகர்/பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன் கூறியது.

----நமது விருப்பத்திற்குரிய நடிகர் நடிக்கும் நாராசமான படங்களைக் கூட தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் மூலம் சினிமாவை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்கிறோம். மண்டையில் ஊறுகாய் அளவுக்கு மூளையிருக்கிறவன் கூட அப்பிடி செய்ய மாட்டான். இதை நான் எழுதுறதுக்கு காரணம் நேத்து ரெண்டு வெ.மா.சூ.சொ இல்லாத பார்ட்டிங்க, ”பில்லா II” நல்லபடமா, ”சுறா” நல்ல படமான்னு சண்டைபோட்டுகிட்டானுங்க!!!

சொலவடை