சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Thursday, November 6, 2014

தேவையா காதல் முத்தப் போராட்டம்?

              கொச்சியைத் தொடந்து கொல்கத்தாவிலும் பரவுகிறதாம் காதல் முத்தப் போராட்டம். பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துவதை எதிர்க்கும் சில மதச்சார்பு கட்சிகளுக்கு எதிராக, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் போராட ஜாதவ்ப்பூர் மாணவர்கள் முடிவு. கலந்துகொள்ள விருப்பமுடைய அனைவருக்கும் அழைப்பு.
                       ஏன் போராடமாட்டீங்க, அடுத்த வேளை சோத்த பத்தி உங்களுக்கு கவலை இல்லை, காசு குடுக்க , காலேஜ் ஃபீஸ் கட்ட அப்பாவோட பணம் இருக்கு, சொகுசா வாழ்ற உங்களுக்கு அளவில்லாம ஹார்மோன் சுறக்குது, வேற வழியே இல்லாம எதிர் இனத்தால கவரப் படுறீங்க (அதைக் காதல்னு சொல்ல மாட்டேன்). அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகுது, இந்த ஹார்மோன் சுரப்பீ, பொது இடத்துல, காலேஜுக்குள்ள கட்டி அணைக்கிறதும், முத்தம் கொடுக்குறதும்னு மேற்கத்திய வாழ்க்கைய வாழப் பழகுறீங்க.

            உங்க கல்லூரிலயே அடுத்த வேள சோத்துக்கும் வழியில்லாம, அடுத்த செமெஸ்ட்டருக்கு ஃபீஸ் எப்பிடிக் கட்டுறதுன்னு தெரியாம, கல்விக் கடனை எதிர்ப்பாத்து , வேலை கிடைச்சாத்தான் என் கஷ்டத்துக்கெல்லாம் தீர்வுன்னு ஒரு வித பயத்தோடயே படிச்சு, இந்தக் இனக்கவர்ச்சி எழவு ஹார்மோன்களலெல்லாம் சுரக்குதா, சுரக்கலையான்னே தெரியாம சொரண கெட்டு வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒரு ஏழப் பையனுக்காக என்றைக்காவது குரல் கொடுத்துருகீங்களா? சமீபத்தில கூட கல்விக்கடன் கிடைக்காம ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் தற்கொலை.
                 அவன் முன்னாடி உங்க காம லீலைகளை நடத்தி அவனுக்குள்ள காழ்ப்பையும், தாழ்வு மனப்பான்மையையும், மனச்சிதைவையும் ஏற்படுத்தி அவனை காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி ஆக்கி, நீங்க என்னவோ இந்தியாவின் எதிர்காலத் தூண்கள்மாதிரி பேசிக்கிறீங்க.

            எல்லாத்துக்கும் அழைப்பு விடுத்திருக்கிற இந்தப் போராட்டத்துல, கொல்கத்தாவின் வீதிகளிலும், சாலைகளிலும் வாழ்கின்ற, அன்றாடம் சோத்துக்கு குப்பை பொறுக்கியும், பிச்சை எடுத்துகிட்டும் வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒருவனோ ஒருத்தியோ இந்தப் போரட்டதில கலந்துகிட்டா உங்க அரவணைப்பையும், முத்ததையும், அன்பையும் அவரிடத்தில வெளிப்படுத்துவீங்களா? அப்படி வெளிப்படுத்துனா ஒத்துக்கிறேன் அன்னை தெரசா வாழ்ந்த, அவரைப் பின்பற்றும் புண்ணிய பூமி கொல்கத்தான்னு.

           இது கொச்சியையோ, கொல்கத்தாவையோ சாடி எழுதப் பட்டதில்ல, பொதுவில எல்லாக் கல்லூரிகளும், பொது இடங்களிலும் நடக்கிறதுதான். இது போன்ற போராட்டங்களால் உருவாகப் போவதென்னவோ மனிதர் வாழ மனிதர் நோகும் ஒரு வேற்றுமை சமுதாயாமே.

Monday, November 3, 2014

அனைத்து ராசி நேயர்களுக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

அனைத்து ராசி நேயர்களே, கீழே சொல்லப் பட்டிருக்கும் வழிகளை வாஞ்சையுடன் பின்பற்றினால் ஏழரை சனியில் இருந்து மட்டுமல்ல, ஏகப்பட்ட சனியில் இருந்து தப்பிக்கலாம்.

1.வீண் விவதாம் கூடாது. (குறிப்பாக மேனேஜருடனும், மனைவி (அ) காதலியுடனும்)
2.செலைவக் குறைத்து சிக்கனத்தைக் கடைபிடிப்பது சாலச் சிறந்தது,
3.தேவையற்ற ஆடம்பரப் பொருட்களின் மீது சில விளம்பரச் சனிகள் ஆர்வத்தை தூண்டும் அவற்றை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.
4.கம்ப்யூட்டர் கம்பனிகளில் வேலை செய்வோர் ஆன்சைட்டுக்காக தேவுடு காக்காமல், செய்வன சிறப்பெனச் செய்தால் கிட்டுவது கிட்டும். சில விசச் சனிகளின் வீண் அறிவுரைகளைக் கேட்டு மனம் கலங்க வேண்டாம்
5. வாழ்க்கைத் துணையத் தேர்ந்தெடுப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும், அந்தஸ்த்து என்னும் சனியைத் தள்ளிவைத்து, எளிமையுடன் நடந்தால் நன்மை கூடம், நல்ல வரன் அமையும்.
6.இணைய தளத்தை முறையாக பயன்படுத்துவது மிக முக்கியமாகும், டுவிட்டர், ஃபேஸ்புக்கில் சண்டை என்னும் சனியை தவிர்த்து உருப்படியானவற்றை பகிர்ந்தால் சனிபகவான் மனம் குளிர்வார். அவரும் சமூக வலைத்தளங்களில் உள்ளார் என்பதை மனதில் கொள்க.
7.பணப் பறிமாற்ற விவகாரங்களில் நேர்மையுடன் நடந்து கொள்வது நல்லது. கொடுத்த கடனை திரும்பக் கேட்டால் கோபம் வரப் படாது.
8.குறுக்கு வழியில் பணம், புகழ் சம்பாதித்து வந்தால் அதைவிட மிகப் பெரிய சனி எதுவும் இல்லை. நேர்வழி நடப்பது நல்லது.
9.பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பை முன்வைத்து மட்டுமே படிக்காமல், உணர்ந்து அர்த்தம் புரிந்து எதற்காக இதை நான் படிக்க வேண்டும் என்று தங்களுக்குள்ளேயும், தங்கள் ஆசிரியரிடமும் விளக்கம் கேட்டு படித்தால் அறியாமைச் சனி விலகும்.
10. கோள்மூட்டிச் சனிகளின் பேச்சைக் கேட்டு , நண்பர்களின் மேல் சந்தேகம் அறமே கூடாது.
11. காதலியுடன் அதிக நேரம் தொலைபேசியில் உரையாடுபவர்கள், உடல் நலத்தை பேணிக்காப்பது நல்லது, அவர்கள் நடந்து கொண்டோ, ஒடிக் கொண்டோ தொலைபேசியில் பேசினால், தொப்பைச் சனி குறையும்.
12. அனைத்து தொழில் செய்பவர்களும் முழு மூச்சுடன் தரமான பொருட்களை தயாரித்து மக்களுக்கு தந்தால் லாபம் பெருகும். பேராசைச் சனி பீடித்து குறுக்கு வழியில் லாபம் தேட நினைப்பவர்கள் மன நிம்மதி கெட்டு எப்படியும் நடு ரோட்டிற்கு வருவர். அதற்கு சனிபகவான் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்.
13.சினிமா, கலைத்துறையில் இருப்போர், மக்களின் நலனுக்கேற்ப நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும். சில சீரழிவுச் சனிகள் மேல் மக்களுக்கு ஆர்வம் இருந்தாலும், அதை ஆதரித்து உங்கள் படைப்புகள் இருந்தால் நீங்கள் சீக்கிரம் ஃபீல்ட் அவுட் சனியால் ஆக்கிரமிக்கப் படுவீர்கள்.
14. பெற்றோர்களால் எப்போதும் பிள்ளைகளுக்கு நன்மையே உருவாகும்.

             கடைசியாக ஒன்று, எல்லா ராசி நேயர்களே, உங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஒற்றை வாழ்க்கையான இதை மற்றவர்க்கு உபத்திரம் கொடுக்காமல், முடிந்த அளவிற்கு சுற்றத்திற்கும் , வரும் சந்ததியற்கும் ஏதோனும் நனமை செய்து விட்டு சென்றீர்களானால், இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் சனி உங்களை அண்டாதிருக்கும்.

--தன்னம்பிக்கையுடன் நம்மைச் சுற்றியுள்ள சனிகளை எதிர்கொள்வோம்.

Saturday, October 25, 2014

பெயரில் என்ன இருக்கிறது?

                      பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில்தான் எல்லாமே இருக்கிறது எனலாம். நமக்கு பிடித்த ஒருவரின் பெயரைக் கொண்ட எல்லோருமே நமக்கு பிடித்தவர்களாகிறார்கள் என்கிறது உளவியல். அத்தைகய சிறப்பு மிக்கது பெயர். பெயர் சொல்லும் வாரிசே பெயரன் ,பேரன் என்றானது. கனிகளுக்கும், பூக்களுக்கும் , ஊர்களுக்கும், தெருக்களுக்கும் பண்டையத் தமிழன் வைத்த பெயரை உற்றி நோக்கி ஆராய்ந்தால் அதன் வரலாறே வெளிவரும். அவ்வகையில் பெயர், ஒரு வரலாற்றையே உள்ளடக்கி இருக்கிறது. 
              எனக்கு பிடித்தமானவர்களின் பெயரை அடிக்கடி மனதால் உச்சரித்துக் கொண்டும், யாரும் இல்லாத தனிமையில் சத்தமிட்டு உச்சரித்தும், அதை எழுதிப் பார்த்தும் குதூகலித்துக் கொண்டதுண்டு. பெயர் என்பது ஒரு நினைவு, ஒன்றை மறக்காமலிருக்க நம் மனதிற்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் புக்மார்க். புத்தகங்களுக்கு இடையில் வைக்கப்படும் மயில் இறகைப் போல. பெயர்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை.
             இவ்வளவு ஏன் கணவனுக்கும், மனைவிக்குமான உறவில் முதல் ஊடலை ஏற்படுத்துவதே இந்தப் பெயர்தான். தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதிலிருந்து அது ஆரம்பிக்கிறது. அது என்னவோ தெரியவில்லை, தமிழுக்கு அந்நியமான ஷ, ஸ, வில் தற்போது பல தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை பார்க்க முடிகிறது. ஒரு மொழியை வாழ வைப்பத்தில் பெரும் பங்கு அம்மொழியில் வைக்கப் பட்ட, அம்மொழியைத் தாங்கி நிற்கும் மனிதர்களின் பெயர்களே என்பது என் கருத்து.
             பெருகி வரும் சமசுகிருத பெயர்கள் பெரும் அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. ஆட்டு மந்தையாய் தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு பெயரிடுவது அடிமுட்டாள்த்தனமாய் படுகிறது. பெயர் ஒருவனுக்கு/ ஒருவளுக்கு கம்பீரத்தை தர வேண்டாமா? வடநாட்டு இனிப்புகளின் பெயரையெல்லாமா அர்த்தம் தெரியாமல் வைப்பது. உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைப்பது என்பது பற்றிச் சொல்ல எனக்கு தகுதியில்லை. ஆனால் அதைப் பற்றி யோசித்து செயல்பட உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. 
                    எனக்குத் தெரிந்த ஒரு சில வழிமுறைகளை சொல்கிறேன் முடிந்தால் பின்பற்றுங்கள்,
1. முடிந்தவரை தமிழில் வையுங்கள். 
2.அரசன், கவிஞர், புலவர்களென்று தனித்துவம் வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டில் பல்லாயிரக் கண்க்காணோர். அப்படி யாரேனும் ஒருவர் உங்களைக் கவர்ந்தால் அவரின் பெயரை வையுங்கள். 
3.இன்றைய காலகட்டத்திற்கு சீத்தலை சாத்தானார், ஆலங்குடி வங்கனார், மாற்பத்தி போன்ற பெயர் எடுபடாதுதான் ஆனால் அறிவுடை நம்பி , ஆண்டாள், இளவெயினி என்பனவை எக்காலத்துக்கும் இனிமையானவை.
4. இப்படித்தேடி கண்டுபிடிப்பதில் நீங்களும் சில நல்ல புலவர்களையும் அவர்கள் பாடல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம், பிற்காலத்தில் உங்கள் குழந்தைக்கும் அதன் பெயர் காரணத்தைக் கூறி வளர்க்கலாம். எல்லாக் குழந்தைகளும் தன் பெயருக்கான காரணத்தை பெருமிதத்தோட மற்றவர்க்கு கூறி வளரவே ஆசைப்படுவார்கள். அவர்களின் தன்னம்பிக்கையும் பெருகும்.
5. பெண்குழந்தைகளுக்கு பூக்களின் பெயர்களை வைக்கலாம்,.
6. சரித்திர/ இதிகாச தலைவன்/ தலைவிகள் பெயர் ஏராளம். சீவகன், கோவலன், போன்றவை
7. அல்லது உங்கள் மூதாதையரின் பெயர் கலந்து குமார் கருப்பையா, தம்பி அண்ணாமலை , வெற்றி வாசகம், கோதைத் திருமகள் போன்றவையும் மிடுப்பானவையே.


கடைசியாக ஒன்று  பெயரும், அதன் அர்த்தங்களுமே ஒரு வரலாற்றை தாங்கி நிற்கும் தூண் என்பது என் கருத்து, உங்களது குழந்தைகளை எந்தவித எழுத்துப் பிழைகளும் இல்லாமல் வாயாற அழைக்க தாய்மொழிப் பெயரே சிறந்தது. அந்நிய மொழியில், அர்த்தமே தெரியாமல், எந்தவித பின்புலமும் இல்லாத, வெறும் ந்யூமாராலிஜிக்காக பெயர் வைப்பது கடைந்தெடுத்த மாங்காய்த் தனமென்றும், அப்படிப்பட்ட மாங்காய்களில் நீங்களும் ஒருவராகிவிடக் கூடாது என்பதற்கே இந்தப் பதிவு. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போம், தன்மானம் காப்போம், தன்னம்பிக்கை மிக்க எதிர்காலத்தை உருவாக்குவோம்.

-- மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி

Wednesday, October 22, 2014

சமூக விரோதிகள்

                                தனக்கென்று லட்சியமென்று எதுவும் இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அவர்களுக்கென்று இருக்கும் ஒரே லட்சியம், அடுத்தவர்க்கு கிடைக்கும் அனைத்தும் தனக்கும் கிடைத்து விட வேண்டுமென்பதே. தனக்கு அத்தியாவசியமற்ற பொருளே ஆயினும், தன்னைச் சுற்றி வாழும் அந்த லட்சிய கும்பல் அதை வாங்கிவிட்டால் தானும் அதைக் கடன் வாங்கியாவது வாங்கி விட வேண்டுமென துடிக்கிறார்கள்.

தாம் சந்தோசமாக இருக்கிறோம் என்பதை யார் யாருக்கோ நிருபிக்க துடிக்கிறார்கள், ஆனால் அதை தங்களிடம் நிரூபிக்க தவறிவிடுகிறார்கள். கவலைப் படுவதற்கென்றே அடுக்கடுக்காய் காரணம் வைத்துக் கொள்வார்கள். ஆன்சைட் கிடைக்காதது, அம்பதாயிரம் சம்பளம் போதவில்லை, எனக்கு பின்னாடி சேர்ந்தவன் என்னை விட அதிகம் வாங்குறான் எனப்படுவது இவர்களின் அதிகபட்ச கவலையாக இருக்கும். 
 
இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இவர்கள் எண்ணுவதைத்தான் உலக யதார்த்தம் என பிதற்ற ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தவனோடு தன்னை ஒப்பிட்டே தன்னை மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு பிறக்கப் போகின்ற/பிறந்த குழந்தையையும் அப்படியே வளர்க்க முயலுகிறார்கள். சீர்கெட்ட சமூகத்தை உருவாக்கும் சமூக விரோதிகள் இவர்களைத் தவிர வேறு எவரும் இல்லை. 
 
எல்லோருக்கும் கிடைக்கும் ஒன்று உங்களுக்கு கிடைக்காது போனால், நீங்கள் பாவம் செய்தவர்களல்ல, அவர்களிடத்து தள்ளி நிற்கும் தனித்துவம் வாய்ந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களோடு ஒப்பிட்டு உங்களின் தனித்துவத்தை இழக்காதீர்கள். பிடித்த வேலையை உயிர்ப்போடு செய்யுங்கள், அதில் கிடைக்கும் எதையும் முழு மனதோடு எடுத்துக் கொள்ளுங்கள். மிதமிஞ்சுவது எப்போதும் அனுபவம் மட்டுமே. அதை சேமிக்க பழகிக் கொள்ளுங்கள்.

இவர்களை இவ்வளவு சாடும் அளவிற்கு எனக்கு என்ன நடந்தென்று நீங்கள் கேட்கலாம்? எனக்குள் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எச்சம் என்னுள் வரமாலிருக்க இதைப் பதிகிறேன், இது எனக்காக பதியப் பட்டது, அவ்வப்போது அந்த இழி பிறவிகள் என்னுள் வரும்போது இதை மறுபடியும் மறுமபடியும் படித்து அவர்களை விரட்டுவேன்.

Tuesday, October 21, 2014

இனமெனப் படுவது இரண்டே பிரிவு

மனதிற்பட்ட சிலவற்றை வெளிப்படையாக எழுதுகிறேன். 

என்னளவில், இந்த மனித இனம் வெறும் இரண்டு பிரிவினரால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கிறது. ஒன்று பெரும்பான்மையினர், மற்றொன்று சிறுபான்மையினர். இந்த பெரும்பான்மையினர் எனப்படுபவர் சன/இனத்தொகையாலோ அல்லது பணத்தொகையாலோ உயர்ந்து இருப்பவர். இதற்கு நேர் எதிரான விளக்கத்தை சிறுபான்மையினருக்கான அர்த்தமாக கொள்ளலாம். பெரும்பான்மையினர் என்பதால் அவர் தங்களுக்கான சட்டதை வகுத்துக் கொள்கிறார், சிறுபான்மையினரும் அதற்கு உட்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்தப் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்தால் அது அரசாங்கம் எனப்படுகிறது, அதையே சிறுபான்மையினர் செய்ய நினைத்தால் அதை தேசத் துரோக கலகக் குழு என்கிறது பெரும்பான்மைச் சமூகம். 

பெரும்பான்மையினர் ஆயுதம் தூக்கினால் அது தற்காப்பிற்கு எனவும், ஒடுக்கப்பட்ட இனம் ஆயுதம் தூக்கினால் அது அராஜ தீவிரவாதம் எனவும் சித்தரிக்கப்பட்டுவிட்டது. பெரும்பானமையினரின் மொழி, கலாச்சாரம் இன்னபிற அரசியல்கள் தொடர்ந்து சிறுபான்மையினரின் மீது இன்றைய நாள் வரை தொடர்ந்து திணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து வந்து சிறுபான்மையினருக்காகப் போராடுபவன் தியாகி என்றும் தலைவனென்றும் போற்றப்படும் அதே நேரத்தில், சிறுபான்மைச் சமூகத்திலுருக்கும் ஒருவன் தன் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுப்பது கண்டுகொள்ளப் படாமலே போகிறது

எல்லாத் தெருவிலும், ஊரிலும், மாநிலத்திலும், நாட்டிலும் இவ்வகை சிறுபான்மையினரையும் பெரும்பான்மையினரையும் காணலாம். ஏதோ ஒருவகையில் நீங்களும் நானும் சிறுபான்மைச் சமூகதிலும் அதே நேரம் பெரும்பான்மைச் சமூகத்திலும் இருக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய ஒன்று, அவரவர் அடுத்தவர் தனித்துவதிற்கு மரியாதை கொடுத்து,  பெரும்பான்மையினனாக பிறந்ததற்காக எவ்விதத்திலும் மமதை கொள்ளாமலும், சிறுபான்மையினத்தினறாக பிறந்ததற்காக காழ்ப்பும், தாழ்வு மனப்பான்மையும் கொள்ளாமல் நல்ல கல்வி பெற்று, செய்வன திருந்தச் செய்து, நமக்குப் பின் வரும் சந்ததிகளிடம் அந்த வேற்றுமை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்வதே ஆகும்.

இது என்னளவில் உருவான கருத்து, மாற்றமென்பது ஒவ்வொரு மனிதனின் மனதின்  ஆழத்திலும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்திலே எழுதப்பட்டது. இதில் நான் யாரையும் தாழ்த்தியோ உயர்த்தியோ கூறியிருந்தால் மன்னிக்கவும்.

-- நன்றி

Tuesday, July 15, 2014

துகிலுறிப்பு

கருப்புக் கண்ணாடிக்குள்தான்
கண்கள் தன் சுயரூபத்தைக் காட்டுகின்றன
இருண்ட தனிமையில்தான்
மனம் தன் சேட்டையைக் காட்டுகிறது.
போதுமான தனிமையை வேண்டி எடுத்துக் கொள்ளுங்கள்
உங்கள் குற்றங்களை உங்களிடமாவது ஒப்புக்கொள்ளுங்கள்
உள்ளத்தின் காழ்ப்பை மனமுவந்து பகிர்ந்து கொள்ளுங்கள்
அந்த இருண்ட தனிமையில்
நீங்கள் உங்களுடன் இருக்கும்போது
உங்களின் மறுபக்கத்தை
பகிரங்கமாக கிழித்தெறியுங்கள்.
பகட்டு செய்வதை விட்டு தெரியாத விசயங்களைப் பற்றித்
தெரிந்து கொள்ள முனையுங்கள்.
உங்களின் அழுக்கை சலவை செய்ய அந்த
இருண்ட தனிமையை சலவைக் கல்லாய் பயன்படுத்துங்கள்.
மனம்தன் அழுக்குச் சட்டையை துகிலுறித்து
நிர்வாணப் படுத்துங்கள்.
அதிலொன்றும் தவறில்லை
ஆடைக்குள் அனைத்து மனிதனும் அம்மணமே.
அம்மனமும் அம்மணமே.

காலில் விழுந்த கடவுள்

கதறி அழுது கொண்டிருந்தேன்
கடவுள் வந்தார் அவ்வழியே,
கனிவாய் ஆறுதல் தந்து
கஷ்டங்களைப் போக்குவதாகச் சொன்னார்.
கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னேன்
என்னிலும் ஏழைகள் ஆயிரம்,
தன்ன்னம்பிக்கை இல்லா தற்குறிகள் பலகோடி
அவரிடம் காட்டிக் கொள் உன் தயவை,
என்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.
காலில் விழுந்த கடவுள்
வந்தவழி சென்றார்.


Friday, April 25, 2014

Story of a Social Animal.

                                    அன்றோரு நாள் அதிகாலையில் ஏதோ ஒன்று பழுதாகி அந்தக் குடியிருப்பு முழுக்க மின்சாரம் தடைபட்டது, எல்லோருக்கும் முன் முதல் ஆளாய்ப் போய் புகார் பதிவு செய்தான். குடியிருப்பு நிர்வாகம் தடங்களுக்கு வருத்தம் தெரிவித்ததோடு அன்றிரவே எல்லோர் வீடுகளுக்கும் மின்சாரம் மீண்டு வர வழி செய்தது. இவன் போன சென்மம் செய்த பாவத்தின் பயனால் இவனுடைய வீட்டை மட்டும் எட்டவில்லை மின்சாரம். கடுங்கோபத்துடன் மீண்டுமொருமுறை நிர்வாகத்தை அணுகினான். 
தனியொருவருக்காக நள்ளிரவில் ஆள் அனுப்ப இயலாது, காலை வருவதாக சொல்லி நிர்வாகம் பின்வாங்கியது. கடுப்புடன் போய் படுத்துக் கொண்டான், அன்றிரவு அவன் உடலிலிருந்து ஆவியும், உடலே ஆவியாகவும் வெளியேறியது வெப்பத்தினால்.

இரண்டாம் நாள் நிர்வாகம் ஒரு ஏப்ப சாப்பையான ஆளை பழுது பார்க்க அனுப்பியது, அவன் எதையோ பார்ப்பதைப் போல் பார்த்து பின் வருவதாகக் கூறிச் சென்றான். போனவன் இரவாகியும் வரவில்லை. இரண்டாம் நாள் இரவும் இருட்டில். 
இப்போது இவனுக்கு தோன்றியது தீவிரவாத எண்ணம், தனி ஒருவனுடையவனின் பிரச்சனை யாராலும் கண்டு கொள்ளப் படுவதில்லை, அதுவே ஒரு சமூகத்தின் பிரச்சனையால் இவனுடன் சேர்ந்து குரல் உயர்த்த யாரேனும் வரலாம், ஆக மெல்ல சென்று அந்த குடியிருப்பின் மெயின் MCB யை அணைக்க முனைந்தான், ஆனால் அவனுக்கு தீவிரவாதம் செய்யத் தைரியம் இல்லை. ஆக இரண்டாம் இரவிலும் ஈரத்துணி கட்டிக் கொண்டு தூங்கிவிட்டான் (தாளாத வெப்பத்தின் காரணத்தால் மட்டுமே).

மூன்றாம் நாள் காலை சேதி வந்தது, ”பிரச்சனை அப்பார்ட்மண்ட்டின் உள்க்கட்டமைப்பில் இல்லை, உங்கள் வீட்டுக்குமட்டும் ஈ.பியிலிருந்து கரண்ட் வரல, நீங்க நேரா அங்க போய் ஒரு புகார் பதிவு பண்ணிடுங்க”. இவனுக்கு தலை சுத்திக் கொண்டு வந்தது, இப்பிறவி முழுக்க இவனுக்கு மின்சாரம் எட்டாக் கனியாய் தூரம் செல்லப் போவதைப் போல் ஒரு பதை பதைப்பு. ஈ.பி ஆபீஸில் புகார் பதிவி செய்து விட்டு திரும்பினான். 
மூன்றாம் நாள் இரவு, இப்போது இவனுக்கு தோன்றியது புரட்சிகர எண்ணம், அரசாங்கத்தின் மேல் கோபம் வந்தது, தான் நன்றாகப் படித்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகப் போவதாக சபதம் எடுத்துக் கொண்டான். ஆனபின் தன்னை அலைக்கழித்த நிர்வாகிகளையும், அரசாங்கத்தையும் ஒருகை பார்த்துவிட தீர்மானித்தான், அரசாங்கப் பணிகளை துரிதப் படுத்துவேன் என்று காரிருளில், கண்களில் தீப்பொறி பறக்க தீர்மானம் எடுத்துக் கொண்டான். எப்படியோ அப்படியே தூங்கிவிட்டான்.

நான்காம் நாள் காலை, இன்னும் மின்சாரம் வந்தபாடில்லை. இவனுடைய காலை பொலிவில்லாமல் புலர்ந்தது, அலுவலகம் சென்றான், 
இப்போது இவனுக்கு தோன்றியது, "Survival of the Fittest" மனநிலை, அன்று முழுக்க வேலை எதுவும் செய்யாமல், இணையத்தில், மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி, எளிய முறையில் உடலை குளிர்வித்துக் கொள்வது எப்படி என்று படித்துத் தெரிந்து கொண்டான். இரவு வந்தது, பூட்டிய வீட்டைத்திறந்தான், எப்போதும் போல் கை தானாகச் சென்று விளக்கை ஆன் செய்யச் செல்லவில்லை. விரக்தி, பழகிவிட்டது. தலை கிண் கிண் என்றது, தனிமை மிகப் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. ஏதும் செய்ய முடியா கையாலாகா நிலை அவனை பின்னுக்கு தள்ளினாலும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவன் கைய இறுக்கமாக பற்றிக் கொண்டே இருந்தது. 

ஐந்தாம் நாள் காலை - ஆறு மணி, ”காலிங்பெல் அடிக்கும் சத்தம்”, கண் விழித்து கதவைத்திறந்தான், வெளியில் பால்க்காரன், “சார் கரண்ட் வந்துடுச்சு போல??”. முந்தைய இரவே மீண்ட மின்சாரத்தை இவன் கவனிக்க மறந்திருந்தாலும், அதிகாலையிலாவது அதைத் தெரிவித்த பால்காரன் தேவதூதனாகத் தெரிந்தான். மின்சாரம் இல்லாமலே அவன் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அப்போது அவன் கோவம், புரட்சி, தீவிரவாத எண்ணம் எல்லாம் மறந்து, மீண்டும் ஒரு “Common Man" ஆக, சமூக விலங்காக மாறிக்கொண்டிருந்தான். 

முற்றும்.

Tuesday, January 28, 2014

முன்கதைச் சுருக்கம்

                                 
                             அவன் எது செய்தாலும் நான் அதில் ஒரு படி மேல் செய்ய வேண்டும், இல்லையென்றால் அன்றைக்கு எனக்கு தூக்கம் வராது. அவன் 90 மார்க் எடுத்தால் நான் 95 எடுத்தாக வேண்டும். அவன் 50 ரன்கள் அடித்தால் நான் 100 ரன்களாவது அடிக்க நினைப்பேன். என் பெற்றோர்களும் பெரும்பாலும் அவனோடு ஒப்பிட்டே என்னை வளர்த்தார்கள். இப்படி அவன் எது செய்தாலும் போட்டி போட்டு நானும் செய்து கொண்டிந்த அந்த காலகட்டங்களில், அவன் செய்த ஒரு விசயத்தை என்னால் செய்ய முடியவில்லை. அப்போது நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம், வகுப்பில் வாத்தியார் வர தாமதமான ஒரு நேரத்தில், அனைவரின் காது பிளக்க, கைகளை மடக்கி வாயில் வைத்து அவன் அடித்த விசிலில் சகமாணாக்கர்கள் மத்தியில் அவன் பெரிய பெயரை எடுத்துவிட்டான். என்னுடன் சுற்றித்திரிந்த சிலரும் இப்பொது அவன் பக்கம். இப்போது நான் எப்படியாவது விசில் அடிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அதுவும் அவனை விட சத்தமாகவும், ஸ்டைலாகவும். அப்போதுதான் வகுப்பில் இழந்த புகழை நான் பெற முடியும். 

அன்றிலிருந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். எப்போதும் எனது வாயில் எச்சில் அதிகமாக உமிழாதபடி வறட்சியாகவே வைத்துக் கொண்டேன். குளிக்கும் போது, கழிக்கும் போது, சாப்பிடும் போது, தூங்கும் போது கூட என எல்லா நேரத்திலும் விசில் பழகிய வண்ணமே இருந்தேன். ஒரு வாரம் ஆனது, என்னால் இன்னும் சரிவர விசில் அடிக்க வரவில்லை. அவன் அவ்வப்போது வகுப்பிலும், வெளியிலும் விசில் அடித்து தன் கெத்தை நிலை நிறுத்திக் கொண்டிருந்தான். வயித்தெரிச்சல் தாள முடியாத நான், காய்ச்சல் என்று பொய் சொல்லி வகுப்பிற்கு லீவு போட்டு விசில் கற்றுக் கொண்டிருந்தேன். என் இயலாமை எனக்கு பெரும் ஏமாற்றத்தையும் அழுகையையும் வர வழைத்தது. அழுதே விட்டேன். அடுத்த நாள் பள்ளியில் ப்ரேயர் நடந்து கொண்டிருந்தது, நீராடுங் கடலுடுத்தவில் ஆரம்பித்து, அனைவரும் கண் மூடி ஜன கண மன அதி பாடிக் கொண்டிருந்த சமயம், கடவுளின் கருணை எனக்கு கிட்டியது. ஓங்கி அடித்த என் விசிலின் சத்தம் அனைவரின் காதுகளின் கதவுகளைத்திறந்து உள்ளே நுழைந்தது. தாள முடியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குத்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ப்ரேயரில் விசில் அடித்த குற்றத்திற்காக ஈ.பீ.கோ ஏதோ ஒரு செக்சனின் படி, தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப் பட்டேன்.

அவர் எனது இன்ன பிற விவரங்களை வாங்கிக் கொண்டு தேசிய கீதத்தை ஒரு முறை எனனை பாடச்சொன்னார். நான் பாடி முடித்தபின், நம்ம தேசிய கீதத்தை யார் எழுதுனது தெரியுமா?, என்றார். நான் தெரியாது என்பது போல் உதடு பிதுக்கினேன். என்ன மொழில எழுதப்பட்டதுன்னாவது ஒனக்கு தெரியுமா தம்பி?, மறுபடியும் உதடு பிதுக்கல். என்னைப் பொறுத்தவரை எனக்கு விசில் வந்து விட்ட சந்தோசம் எனக்கு. அவர் பேச ஆரம்பித்தார், நம்ம தேசிய கீதம், வங்க மொழியில் ரவீந்தரநாத் தாகூரால் எழுதப்பட்டது என்று ஆரம்பித்து, வங்க மாகாணத்தையும், கல்கத்தைவப் பற்றியும் கூறினார். அவர் பேசப் பேச எனக்கு வியப்பு மேலிட்டது. அதுவரை எனக்கு பேசத்தெரிந்த மொழி தமிழ், கொஞ்சம் கொஞ்சமாக படிக்கப் பழகிக் கொண்டிருந்த மொழி ஆங்கிலம், தூர்தர்சன் தொலைக் காட்சி புண்ணியத்தில் ”இருக்கு” என்று தெரிந்த மொழி இந்தி. இப்போது இவர் வங்க மொழியைப் பற்றியும், கல்கதாவைப் பற்றியும் கூறியது எனக்கு புதியதாகவும், திறக்கப் படாத ஒரு பரிசுப் பெட்டியின் கிளர்ச்சியையும் எனக்குள் எழுப்பியது. நான் பின்னோரு நாளில் கல்கத்தா செல்வேன் என்று அப்போது உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். இத்தோடு என் முன் கதைச்சுருக்கத்தை முடித்துக் கொள்கிறேன். அந்த திறக்கப்படாத பரிசுப் பெட்டியில் நான் திறந்தெடுத்தது என்ன என்பதை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, January 24, 2014

எலிகள் இழுக்கும் தேர்

பணம் படைத்த பரங்கி தேசத்தினர் அமர தேர் செய்யப்படுகிறது. கணிணியில் செய்த கயிறு கொண்டு வடம் உருவாக்கப்படுகிறது. வடமிழுக்க வளரும் நாடுகளின் வளங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மனிதன் தேரை இழுக்க, மனிதனை குதிரைகள் இழுக்க, குதிரைகளை எருதுகள் இழுக்க, எருதுகளை எலிகள் இழுக்க மெல்ல நகர்கிறது தேர். வேகத்தை அதிகரிக்க உயர்ந்த நிலையில் இருந்து அடி கொடுக்கபடுகிறது. அடி அங்கிருந்து அடுக்கடுக்காய் கீழிறங்கி எக்கச்சக்கமாய் எலிகள் மேல் வந்து விழுகிறது. ஏரோப்ளேன் வேகத்தில் எலிகள் ஓட்டப்படுகின்றன. சேதம் தாங்க முடியாத சில எலிகள் செத்து விழுகின்றன. செத்த எலிகள் சீக்கிரம் அகற்றப்பட்டு, அவ்விடத்தை நிரப்ப அடுத்தடுத்து எலிகள் ரெக்ரூட் செய்யப் படுகின்றன. இப்படியாக நகர்ந்து கொண்டே இருக்கிறது அத்தேர்.

சொலவடை