சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Tuesday, January 28, 2014

முன்கதைச் சுருக்கம்

                                 
                             அவன் எது செய்தாலும் நான் அதில் ஒரு படி மேல் செய்ய வேண்டும், இல்லையென்றால் அன்றைக்கு எனக்கு தூக்கம் வராது. அவன் 90 மார்க் எடுத்தால் நான் 95 எடுத்தாக வேண்டும். அவன் 50 ரன்கள் அடித்தால் நான் 100 ரன்களாவது அடிக்க நினைப்பேன். என் பெற்றோர்களும் பெரும்பாலும் அவனோடு ஒப்பிட்டே என்னை வளர்த்தார்கள். இப்படி அவன் எது செய்தாலும் போட்டி போட்டு நானும் செய்து கொண்டிந்த அந்த காலகட்டங்களில், அவன் செய்த ஒரு விசயத்தை என்னால் செய்ய முடியவில்லை. அப்போது நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம், வகுப்பில் வாத்தியார் வர தாமதமான ஒரு நேரத்தில், அனைவரின் காது பிளக்க, கைகளை மடக்கி வாயில் வைத்து அவன் அடித்த விசிலில் சகமாணாக்கர்கள் மத்தியில் அவன் பெரிய பெயரை எடுத்துவிட்டான். என்னுடன் சுற்றித்திரிந்த சிலரும் இப்பொது அவன் பக்கம். இப்போது நான் எப்படியாவது விசில் அடிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அதுவும் அவனை விட சத்தமாகவும், ஸ்டைலாகவும். அப்போதுதான் வகுப்பில் இழந்த புகழை நான் பெற முடியும். 

அன்றிலிருந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். எப்போதும் எனது வாயில் எச்சில் அதிகமாக உமிழாதபடி வறட்சியாகவே வைத்துக் கொண்டேன். குளிக்கும் போது, கழிக்கும் போது, சாப்பிடும் போது, தூங்கும் போது கூட என எல்லா நேரத்திலும் விசில் பழகிய வண்ணமே இருந்தேன். ஒரு வாரம் ஆனது, என்னால் இன்னும் சரிவர விசில் அடிக்க வரவில்லை. அவன் அவ்வப்போது வகுப்பிலும், வெளியிலும் விசில் அடித்து தன் கெத்தை நிலை நிறுத்திக் கொண்டிருந்தான். வயித்தெரிச்சல் தாள முடியாத நான், காய்ச்சல் என்று பொய் சொல்லி வகுப்பிற்கு லீவு போட்டு விசில் கற்றுக் கொண்டிருந்தேன். என் இயலாமை எனக்கு பெரும் ஏமாற்றத்தையும் அழுகையையும் வர வழைத்தது. அழுதே விட்டேன். அடுத்த நாள் பள்ளியில் ப்ரேயர் நடந்து கொண்டிருந்தது, நீராடுங் கடலுடுத்தவில் ஆரம்பித்து, அனைவரும் கண் மூடி ஜன கண மன அதி பாடிக் கொண்டிருந்த சமயம், கடவுளின் கருணை எனக்கு கிட்டியது. ஓங்கி அடித்த என் விசிலின் சத்தம் அனைவரின் காதுகளின் கதவுகளைத்திறந்து உள்ளே நுழைந்தது. தாள முடியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குத்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ப்ரேயரில் விசில் அடித்த குற்றத்திற்காக ஈ.பீ.கோ ஏதோ ஒரு செக்சனின் படி, தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப் பட்டேன்.

அவர் எனது இன்ன பிற விவரங்களை வாங்கிக் கொண்டு தேசிய கீதத்தை ஒரு முறை எனனை பாடச்சொன்னார். நான் பாடி முடித்தபின், நம்ம தேசிய கீதத்தை யார் எழுதுனது தெரியுமா?, என்றார். நான் தெரியாது என்பது போல் உதடு பிதுக்கினேன். என்ன மொழில எழுதப்பட்டதுன்னாவது ஒனக்கு தெரியுமா தம்பி?, மறுபடியும் உதடு பிதுக்கல். என்னைப் பொறுத்தவரை எனக்கு விசில் வந்து விட்ட சந்தோசம் எனக்கு. அவர் பேச ஆரம்பித்தார், நம்ம தேசிய கீதம், வங்க மொழியில் ரவீந்தரநாத் தாகூரால் எழுதப்பட்டது என்று ஆரம்பித்து, வங்க மாகாணத்தையும், கல்கத்தைவப் பற்றியும் கூறினார். அவர் பேசப் பேச எனக்கு வியப்பு மேலிட்டது. அதுவரை எனக்கு பேசத்தெரிந்த மொழி தமிழ், கொஞ்சம் கொஞ்சமாக படிக்கப் பழகிக் கொண்டிருந்த மொழி ஆங்கிலம், தூர்தர்சன் தொலைக் காட்சி புண்ணியத்தில் ”இருக்கு” என்று தெரிந்த மொழி இந்தி. இப்போது இவர் வங்க மொழியைப் பற்றியும், கல்கதாவைப் பற்றியும் கூறியது எனக்கு புதியதாகவும், திறக்கப் படாத ஒரு பரிசுப் பெட்டியின் கிளர்ச்சியையும் எனக்குள் எழுப்பியது. நான் பின்னோரு நாளில் கல்கத்தா செல்வேன் என்று அப்போது உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். இத்தோடு என் முன் கதைச்சுருக்கத்தை முடித்துக் கொள்கிறேன். அந்த திறக்கப்படாத பரிசுப் பெட்டியில் நான் திறந்தெடுத்தது என்ன என்பதை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, January 24, 2014

எலிகள் இழுக்கும் தேர்

பணம் படைத்த பரங்கி தேசத்தினர் அமர தேர் செய்யப்படுகிறது. கணிணியில் செய்த கயிறு கொண்டு வடம் உருவாக்கப்படுகிறது. வடமிழுக்க வளரும் நாடுகளின் வளங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மனிதன் தேரை இழுக்க, மனிதனை குதிரைகள் இழுக்க, குதிரைகளை எருதுகள் இழுக்க, எருதுகளை எலிகள் இழுக்க மெல்ல நகர்கிறது தேர். வேகத்தை அதிகரிக்க உயர்ந்த நிலையில் இருந்து அடி கொடுக்கபடுகிறது. அடி அங்கிருந்து அடுக்கடுக்காய் கீழிறங்கி எக்கச்சக்கமாய் எலிகள் மேல் வந்து விழுகிறது. ஏரோப்ளேன் வேகத்தில் எலிகள் ஓட்டப்படுகின்றன. சேதம் தாங்க முடியாத சில எலிகள் செத்து விழுகின்றன. செத்த எலிகள் சீக்கிரம் அகற்றப்பட்டு, அவ்விடத்தை நிரப்ப அடுத்தடுத்து எலிகள் ரெக்ரூட் செய்யப் படுகின்றன. இப்படியாக நகர்ந்து கொண்டே இருக்கிறது அத்தேர்.

சொலவடை