நன்றாக நீந்திக் கொண்டிருந்த மீனை தூக்கி பரந்து விரிந்த பாலை வனத்தில் போட்டார்கள், அதுவும் தட்டுத்தடுமாறி நடக்கப் பழகி கொண்டு சில நாட்களில் தன்னை ஒட்டகமாக மாற்றிக் கொண்டது. நன்றாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் அதை மரமேறச்சொல்லி வற்புறுத்தி குரங்காக்கினர், பின் பருந்து, சிலந்தி, பல்லி என பல உருவங்கள் எடுத்து தன் சுயத்தை இழந்து சுண்ணாம்பாகிப் போனது. அந்த சுண்ணாம்பு சுவருக்கு அடிப்பதற்காக நீரில் கரைக்கப்பட்டது, திடீரென சுயத்தை உணர்ந்த சுண்ணாம்பு கொதித்தெழுந்தது. ஆனால் வாளியைத்தாண்டி அதன் வீரியம் வெளிப்படவில்லை.