சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, April 25, 2014

Story of a Social Animal.

                                    அன்றோரு நாள் அதிகாலையில் ஏதோ ஒன்று பழுதாகி அந்தக் குடியிருப்பு முழுக்க மின்சாரம் தடைபட்டது, எல்லோருக்கும் முன் முதல் ஆளாய்ப் போய் புகார் பதிவு செய்தான். குடியிருப்பு நிர்வாகம் தடங்களுக்கு வருத்தம் தெரிவித்ததோடு அன்றிரவே எல்லோர் வீடுகளுக்கும் மின்சாரம் மீண்டு வர வழி செய்தது. இவன் போன சென்மம் செய்த பாவத்தின் பயனால் இவனுடைய வீட்டை மட்டும் எட்டவில்லை மின்சாரம். கடுங்கோபத்துடன் மீண்டுமொருமுறை நிர்வாகத்தை அணுகினான். 
தனியொருவருக்காக நள்ளிரவில் ஆள் அனுப்ப இயலாது, காலை வருவதாக சொல்லி நிர்வாகம் பின்வாங்கியது. கடுப்புடன் போய் படுத்துக் கொண்டான், அன்றிரவு அவன் உடலிலிருந்து ஆவியும், உடலே ஆவியாகவும் வெளியேறியது வெப்பத்தினால்.

இரண்டாம் நாள் நிர்வாகம் ஒரு ஏப்ப சாப்பையான ஆளை பழுது பார்க்க அனுப்பியது, அவன் எதையோ பார்ப்பதைப் போல் பார்த்து பின் வருவதாகக் கூறிச் சென்றான். போனவன் இரவாகியும் வரவில்லை. இரண்டாம் நாள் இரவும் இருட்டில். 
இப்போது இவனுக்கு தோன்றியது தீவிரவாத எண்ணம், தனி ஒருவனுடையவனின் பிரச்சனை யாராலும் கண்டு கொள்ளப் படுவதில்லை, அதுவே ஒரு சமூகத்தின் பிரச்சனையால் இவனுடன் சேர்ந்து குரல் உயர்த்த யாரேனும் வரலாம், ஆக மெல்ல சென்று அந்த குடியிருப்பின் மெயின் MCB யை அணைக்க முனைந்தான், ஆனால் அவனுக்கு தீவிரவாதம் செய்யத் தைரியம் இல்லை. ஆக இரண்டாம் இரவிலும் ஈரத்துணி கட்டிக் கொண்டு தூங்கிவிட்டான் (தாளாத வெப்பத்தின் காரணத்தால் மட்டுமே).

மூன்றாம் நாள் காலை சேதி வந்தது, ”பிரச்சனை அப்பார்ட்மண்ட்டின் உள்க்கட்டமைப்பில் இல்லை, உங்கள் வீட்டுக்குமட்டும் ஈ.பியிலிருந்து கரண்ட் வரல, நீங்க நேரா அங்க போய் ஒரு புகார் பதிவு பண்ணிடுங்க”. இவனுக்கு தலை சுத்திக் கொண்டு வந்தது, இப்பிறவி முழுக்க இவனுக்கு மின்சாரம் எட்டாக் கனியாய் தூரம் செல்லப் போவதைப் போல் ஒரு பதை பதைப்பு. ஈ.பி ஆபீஸில் புகார் பதிவி செய்து விட்டு திரும்பினான். 
மூன்றாம் நாள் இரவு, இப்போது இவனுக்கு தோன்றியது புரட்சிகர எண்ணம், அரசாங்கத்தின் மேல் கோபம் வந்தது, தான் நன்றாகப் படித்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகப் போவதாக சபதம் எடுத்துக் கொண்டான். ஆனபின் தன்னை அலைக்கழித்த நிர்வாகிகளையும், அரசாங்கத்தையும் ஒருகை பார்த்துவிட தீர்மானித்தான், அரசாங்கப் பணிகளை துரிதப் படுத்துவேன் என்று காரிருளில், கண்களில் தீப்பொறி பறக்க தீர்மானம் எடுத்துக் கொண்டான். எப்படியோ அப்படியே தூங்கிவிட்டான்.

நான்காம் நாள் காலை, இன்னும் மின்சாரம் வந்தபாடில்லை. இவனுடைய காலை பொலிவில்லாமல் புலர்ந்தது, அலுவலகம் சென்றான், 
இப்போது இவனுக்கு தோன்றியது, "Survival of the Fittest" மனநிலை, அன்று முழுக்க வேலை எதுவும் செய்யாமல், இணையத்தில், மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி, எளிய முறையில் உடலை குளிர்வித்துக் கொள்வது எப்படி என்று படித்துத் தெரிந்து கொண்டான். இரவு வந்தது, பூட்டிய வீட்டைத்திறந்தான், எப்போதும் போல் கை தானாகச் சென்று விளக்கை ஆன் செய்யச் செல்லவில்லை. விரக்தி, பழகிவிட்டது. தலை கிண் கிண் என்றது, தனிமை மிகப் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. ஏதும் செய்ய முடியா கையாலாகா நிலை அவனை பின்னுக்கு தள்ளினாலும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவன் கைய இறுக்கமாக பற்றிக் கொண்டே இருந்தது. 

ஐந்தாம் நாள் காலை - ஆறு மணி, ”காலிங்பெல் அடிக்கும் சத்தம்”, கண் விழித்து கதவைத்திறந்தான், வெளியில் பால்க்காரன், “சார் கரண்ட் வந்துடுச்சு போல??”. முந்தைய இரவே மீண்ட மின்சாரத்தை இவன் கவனிக்க மறந்திருந்தாலும், அதிகாலையிலாவது அதைத் தெரிவித்த பால்காரன் தேவதூதனாகத் தெரிந்தான். மின்சாரம் இல்லாமலே அவன் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அப்போது அவன் கோவம், புரட்சி, தீவிரவாத எண்ணம் எல்லாம் மறந்து, மீண்டும் ஒரு “Common Man" ஆக, சமூக விலங்காக மாறிக்கொண்டிருந்தான். 

முற்றும்.

Tuesday, January 28, 2014

முன்கதைச் சுருக்கம்

                                 
                             அவன் எது செய்தாலும் நான் அதில் ஒரு படி மேல் செய்ய வேண்டும், இல்லையென்றால் அன்றைக்கு எனக்கு தூக்கம் வராது. அவன் 90 மார்க் எடுத்தால் நான் 95 எடுத்தாக வேண்டும். அவன் 50 ரன்கள் அடித்தால் நான் 100 ரன்களாவது அடிக்க நினைப்பேன். என் பெற்றோர்களும் பெரும்பாலும் அவனோடு ஒப்பிட்டே என்னை வளர்த்தார்கள். இப்படி அவன் எது செய்தாலும் போட்டி போட்டு நானும் செய்து கொண்டிந்த அந்த காலகட்டங்களில், அவன் செய்த ஒரு விசயத்தை என்னால் செய்ய முடியவில்லை. அப்போது நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம், வகுப்பில் வாத்தியார் வர தாமதமான ஒரு நேரத்தில், அனைவரின் காது பிளக்க, கைகளை மடக்கி வாயில் வைத்து அவன் அடித்த விசிலில் சகமாணாக்கர்கள் மத்தியில் அவன் பெரிய பெயரை எடுத்துவிட்டான். என்னுடன் சுற்றித்திரிந்த சிலரும் இப்பொது அவன் பக்கம். இப்போது நான் எப்படியாவது விசில் அடிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அதுவும் அவனை விட சத்தமாகவும், ஸ்டைலாகவும். அப்போதுதான் வகுப்பில் இழந்த புகழை நான் பெற முடியும். 

அன்றிலிருந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். எப்போதும் எனது வாயில் எச்சில் அதிகமாக உமிழாதபடி வறட்சியாகவே வைத்துக் கொண்டேன். குளிக்கும் போது, கழிக்கும் போது, சாப்பிடும் போது, தூங்கும் போது கூட என எல்லா நேரத்திலும் விசில் பழகிய வண்ணமே இருந்தேன். ஒரு வாரம் ஆனது, என்னால் இன்னும் சரிவர விசில் அடிக்க வரவில்லை. அவன் அவ்வப்போது வகுப்பிலும், வெளியிலும் விசில் அடித்து தன் கெத்தை நிலை நிறுத்திக் கொண்டிருந்தான். வயித்தெரிச்சல் தாள முடியாத நான், காய்ச்சல் என்று பொய் சொல்லி வகுப்பிற்கு லீவு போட்டு விசில் கற்றுக் கொண்டிருந்தேன். என் இயலாமை எனக்கு பெரும் ஏமாற்றத்தையும் அழுகையையும் வர வழைத்தது. அழுதே விட்டேன். அடுத்த நாள் பள்ளியில் ப்ரேயர் நடந்து கொண்டிருந்தது, நீராடுங் கடலுடுத்தவில் ஆரம்பித்து, அனைவரும் கண் மூடி ஜன கண மன அதி பாடிக் கொண்டிருந்த சமயம், கடவுளின் கருணை எனக்கு கிட்டியது. ஓங்கி அடித்த என் விசிலின் சத்தம் அனைவரின் காதுகளின் கதவுகளைத்திறந்து உள்ளே நுழைந்தது. தாள முடியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குத்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ப்ரேயரில் விசில் அடித்த குற்றத்திற்காக ஈ.பீ.கோ ஏதோ ஒரு செக்சனின் படி, தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப் பட்டேன்.

அவர் எனது இன்ன பிற விவரங்களை வாங்கிக் கொண்டு தேசிய கீதத்தை ஒரு முறை எனனை பாடச்சொன்னார். நான் பாடி முடித்தபின், நம்ம தேசிய கீதத்தை யார் எழுதுனது தெரியுமா?, என்றார். நான் தெரியாது என்பது போல் உதடு பிதுக்கினேன். என்ன மொழில எழுதப்பட்டதுன்னாவது ஒனக்கு தெரியுமா தம்பி?, மறுபடியும் உதடு பிதுக்கல். என்னைப் பொறுத்தவரை எனக்கு விசில் வந்து விட்ட சந்தோசம் எனக்கு. அவர் பேச ஆரம்பித்தார், நம்ம தேசிய கீதம், வங்க மொழியில் ரவீந்தரநாத் தாகூரால் எழுதப்பட்டது என்று ஆரம்பித்து, வங்க மாகாணத்தையும், கல்கத்தைவப் பற்றியும் கூறினார். அவர் பேசப் பேச எனக்கு வியப்பு மேலிட்டது. அதுவரை எனக்கு பேசத்தெரிந்த மொழி தமிழ், கொஞ்சம் கொஞ்சமாக படிக்கப் பழகிக் கொண்டிருந்த மொழி ஆங்கிலம், தூர்தர்சன் தொலைக் காட்சி புண்ணியத்தில் ”இருக்கு” என்று தெரிந்த மொழி இந்தி. இப்போது இவர் வங்க மொழியைப் பற்றியும், கல்கதாவைப் பற்றியும் கூறியது எனக்கு புதியதாகவும், திறக்கப் படாத ஒரு பரிசுப் பெட்டியின் கிளர்ச்சியையும் எனக்குள் எழுப்பியது. நான் பின்னோரு நாளில் கல்கத்தா செல்வேன் என்று அப்போது உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். இத்தோடு என் முன் கதைச்சுருக்கத்தை முடித்துக் கொள்கிறேன். அந்த திறக்கப்படாத பரிசுப் பெட்டியில் நான் திறந்தெடுத்தது என்ன என்பதை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, January 24, 2014

எலிகள் இழுக்கும் தேர்

பணம் படைத்த பரங்கி தேசத்தினர் அமர தேர் செய்யப்படுகிறது. கணிணியில் செய்த கயிறு கொண்டு வடம் உருவாக்கப்படுகிறது. வடமிழுக்க வளரும் நாடுகளின் வளங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மனிதன் தேரை இழுக்க, மனிதனை குதிரைகள் இழுக்க, குதிரைகளை எருதுகள் இழுக்க, எருதுகளை எலிகள் இழுக்க மெல்ல நகர்கிறது தேர். வேகத்தை அதிகரிக்க உயர்ந்த நிலையில் இருந்து அடி கொடுக்கபடுகிறது. அடி அங்கிருந்து அடுக்கடுக்காய் கீழிறங்கி எக்கச்சக்கமாய் எலிகள் மேல் வந்து விழுகிறது. ஏரோப்ளேன் வேகத்தில் எலிகள் ஓட்டப்படுகின்றன. சேதம் தாங்க முடியாத சில எலிகள் செத்து விழுகின்றன. செத்த எலிகள் சீக்கிரம் அகற்றப்பட்டு, அவ்விடத்தை நிரப்ப அடுத்தடுத்து எலிகள் ரெக்ரூட் செய்யப் படுகின்றன. இப்படியாக நகர்ந்து கொண்டே இருக்கிறது அத்தேர்.

Sunday, October 20, 2013

சுயம்

நன்றாக நீந்திக் கொண்டிருந்த மீனை தூக்கி பரந்து விரிந்த பாலை வனத்தில் போட்டார்கள், அதுவும்  தட்டுத்தடுமாறி நடக்கப் பழகி கொண்டு சில நாட்களில் தன்னை ஒட்டகமாக மாற்றிக் கொண்டது. நன்றாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் அதை மரமேறச்சொல்லி வற்புறுத்தி குரங்காக்கினர், பின் பருந்து, சிலந்தி, பல்லி என பல உருவங்கள் எடுத்து தன்  சுயத்தை இழந்து சுண்ணாம்பாகிப் போனது.  அந்த சுண்ணாம்பு சுவருக்கு அடிப்பதற்காக நீரில் கரைக்கப்பட்டது, திடீரென சுயத்தை உணர்ந்த சுண்ணாம்பு கொதித்தெழுந்தது. ஆனால் வாளியைத்தாண்டி அதன் வீரியம் வெளிப்படவில்லை.

Thursday, September 5, 2013

இனி கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப்போவதில்லை.

                        நீங்க சவுத் இந்தியனா, உங்காளுங்க ரஜினிய கடவுளா பாப்பாங்களாமே? என்னா ராஸ்கலா? தமிழ் சினிமால எல்லாரும் இப்பிடித்தானா? இது போன்ற  அரை வேக்காட்டு கேள்விகளை கடந்த இரண்டு வருடங்களாக கேட்டுக் கேட்டு காது புளித்த நிலையில் இதை நான் எழுதத் தொடங்குகிறேன். தொடக்கத்தில் இந்தப் பொடியர்களுக்கு ரஜினியின் பெருமையை எடுத்துக் கூறிக் கொண்டுதான் இருந்தேன், ஆனால் இனி நான் கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப் போவதில்லை.  

கதைக்கு வருவோம்.
                                        நீங்க ரஜினிய தெய்வமா பாக்குறீங்களே, படிப்பறிவு இருக்கிற எவனாவது இப்பிடி செய்வானா? என்றான். சரி நீங்க யாரெல்லாம் தெய்வமா பாப்பீங்க என்றேன். ஒரு நமட்டுப் புன்னகையுடன் எங்களுக்கு காளி, ராம், சிவ்  இவங்க தான் தெய்வம் என்றான் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு. காளி, ராம், சிவ் இவங்கல்லாம் எப்ப வாழ்ந்தாங்கன்னு சொல்ல முடியுமா? என்பது என் கேள்வி ? அவங்கள்லாம் இதிகாச நாயகர்கள், காலத்தால் அழிக்க முடியாதவங்க, அவங்க வாழவும் இல்லை சாகவும் இல்லை என்றான் பெருமிதம் பொங்க. ஆக, கதைகளில வர்ற  கதாப் பாத்திரங்கள, கார்ட்டூன் கேரக்டர்கள கடவுளா கும்பிடறீங்க அப்பிடித்தானே? உங்களைப் போல இல்லாத ஒரு விசயத்தை கடவுளா பாக்குறதுக்கு (சற்றே நிறுத்திக் கொண்டு), ஒரு பாமரன், உழைப்பாளி, சினிமாவை மட்டுமே தனது கேளிக்கையாக கொண்டிருப்பவன், தன்னை சந்தோசப் படுத்துபவனையும் தன்  மனக் குழப்பத்திற்கு வசன மருந்து தருபவனையும் கடவுளா பாக்குறதுல என்ன தப்பு? என்றவுடன் என்னை எரிச்சலுடன் பார்த்தான். 
                    மேலும் தொடர்ந்தேன், தமிழ் நாட்டுல மூணுவிதமான மக்கள், ஒரு சாரர், முகாலய படையெடுப்புக்குப் பின்னர் இசுலாமியர்களாக மாற்றப் பட்டவர்கள், மற்றொரு சாரர் ஆங்கிலேய வருகைக்குப் பின்னர் கிருத்தவர்களாக மாற்றப் பட்டவர்கள், மூன்றாமவர்கள் தங்களை மெஜாரிட்டி என்று சொல்லிக் கொள்ளும் ஆரிய வருகைக்குப்பின் இந்துக்களாக மாற்றப் பட்ட  கூட்டம். இதை கேட்டவுடன் அவனுக்கு சிறு குழப்பம், அப்படின்னா நீங்க மதமே இல்லாதவர்களா? என் கருத்தை அவனிடம் வைத்தேன், தன்னை உணர்ந்த எவனுக்கும் மதம் தேவைப் பட்டதில்லை. புத்தன் சொன்னதை, கீதை சொன்னதை, பைபிள்  சொன்னத்தை, திருக் குரான் சொன்னதை எங்கள் திருக்குறளும் பல்லாயிரம் வருடத்திற்கு முன்னரே சொல்லியிருக்கிறது. அந்த திருக்குறளைப் பற்றி உனக்கு தெரியுமா என்றென். மதங்களை கடந்த எங்கள் புனித  நூல், மனிதம் பேசிய முதல் நூல், கேள்வியாவது பட்டிருக்கிறாயா என்றேன். இல்லை என்றவாரு தலை அசைத்தான். அந்த திருக்குறள் உனது மொழியில் கூட மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது, படித்துப்பார், மதங்களை துறப்பாய், மனிதனாக உணர்வாய். உங்களது நோக்கம், நல்ல விசயங்களை அறிந்து கொள்வதில் இல்லை. உங்கள் நேரம் போவதற்காக யாரையாவது பற்றி புறணி  பேசுவது. உனக்கு விருப்பம் இருந்தால் எங்கள் ஊரைப் பற்றிய நல்ல விசயங்களை உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன், இல்லை என் நேரத்தை வீணாக்காமல் இங்கிருந்து போய்விடு என்றேன்.
                          இது ஒரு சாரரை தாக்கி எழுதப் பட்டதல்ல,நான் ஒன்றும் இனவெறியனும் அல்ல,  இவர்களைப் போன்றவர்கள் எல்லா விதமான இனத்திலும், மதத்திலும், மொழியிலும் இருக்கிறார்கள், இந்தப் பதிவு தமிழின் பெருமை பேசுவதற்காக போடப் பட்டதில்லை, இது போன்ற மாக்களை  கடந்து செல்வதற்கும், நல்லவர்தம் உறவு வளர்ப்பதற்கும் போடப் பட்டதே. 

இனி கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப்போவதில்லை. அந்த அவசியமும் இல்லை.

Thursday, December 27, 2012

நிற்க அதற்குத் தக!



                                          என்றும் இல்லாத அளவுக்கு அன்று சற்று நெரிசலாகவே காணப்பட்டது அந்தச்சாலை. பொதுவாக அந்தச் சாலை நாய்களுகென்று குத்தகைக்கு விடப்பட்டது என்று சொல்லலாம். யார் யாரோ நடந்து சென்றாலும் கதைக்காக வேண்டி நாம் அந்த மூன்று பேரை மட்டும் உற்று நோக்க வேண்டும். அவர்களைப்  பார்க்க எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டே போவது போல் தெரிந்தது. அவர்களின் விவாதச் சத்தம் என் காதை கிழித்தது, ஆகவே நான் ஒட்டுக் கேட்டு வந்து உங்களிடம் சொல்வதாய் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் விவாதம் இந்தியாவின் கல்வி முறையைப் பற்றி இருந்தது. அவர்களுடைய  பெயர் எல்லாம் தெரியாது, ஒருவன், மற்றொருவன், மூன்றாமவன் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் சொன்னான், "இந்தியக் கல்விமுறை சுத்தமா சரியில்லை, நல்ல கல்வி என்பது ஒருத்தன முழு மனிதனா மாத்தி அவனுக்கு வாழ்க்கையல்ல சொல்லித் தரனும், ஆனா நம்ம கல்வி முறை பணம் பண்ற மெஷின்களத்தான உருவாக்கிட்டு இருக்கு". இன்னொருவன் பொங்கி, "அதெப்படி நீ சொல்லலாம், கல்வி முறையில எந்தக் குறையும் இல்ல, கற்பிக்கிறவன்ட்டதான் இருக்கு எல்லாக் குறையும். நல்லாப் படிச்சு வாத்தியாராப் போறவன் எத்தனை பேர் சொல்லு, பார்டர்ல பாஸ் ஆகி வேற வேலை எதுவும் கிடைக்காம வாத்தியார் ஆனவன்தான் அதிகமா இருக்கான்.அதுக்காக அவன நான் கொற சொல்லல, வேலைக்கு வந்த பின்னாவது நாம எடுத்திருப்பது புனிதமான கடம, இந்தியாவோட எதிர்காலமே நம்ம கையில்தான இருக்குன்னு நெனைச்சு அவன் பொறுப்போட நடந்துக்க வேணாமா". அதுவரைப் பொறுத்திருந்த மூன்றாமவன் "எல்லாக் ஸ்கூல்,காலேஜுலயும் இந்த நெலமை இல்ல. ஐஐடி எடுத்துக்கோங்க அங்க இல்லாத பெசிலிட்டீசா , வாத்தியாருங்களா, ஆனா அங்க படிக்குறவன்ல 90 சதவீதம் வெளிநாட்டுக்குத்தான போறான். எவனாவது இன்னோவேடிவா எதாவுது கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பேர் வாங்கித் தந்தானா. இல்லையே. ஆக நம்ம education system is not teaching anything morally good to the students.என்று தன் பிரசங்கத்தை முடித்தான். தன் வேளை வருமென்று காத்திருந்த இரண்டாமவன், "நான் ஸ்கூல் படிக்கும்போது கேம்ஸ் பீரியட மேத்ஸ் வாத்தியார் எடுத்துப்பார், ஆர்ட் பீரியட சைன்ஸ் வாத்தியாரும், கிராஃப்ட் பீரியட இஸ்ட்ரி வாத்தியாரும் எடுத்துப்பாங்க. இவுங்க இப்பிடி இருக்க கல்வி முறைய குறை சொல்லி என்ன பிரயோஜனம்". முதலாமவன் ஆரம்பித்ததோடு சரி, பின் ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்களுடை பேச்சு நீண்டு கொண்டெ போனது. சட்டென்று அவர்களை கடந்து வேகமாக முன் சென்ற லாரி ஒரு குட்டி நாயின் காலில் ஏற்றிவிட்டு நில்லாமல் சென்றது. மூவரும் செய்வதறியாது நின்று, கதறியபடி மெல்ல மெல்ல சாலையக் கடக்க முயற்சி செய்த நாயை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் சிறுதும் தாமதிக்காமல் சாலையின் மறுபக்கத்தில் இருந்து ஓடிவந்த, அந்த வறுத்தகோழி உணவகத்தின் காவலாளி லாவகமாக அக்குட்டியைத் தூக்கி சாலையின் மறுபக்கம் விட்டார். மூவரின் விவாதமும் தற்போது இந்தியாவில் தெரு நாய்களின் இன்றைய நிலையைப் பற்றித் திரும்பியது. நாயைக்  காப்பாற்றிய காவலாளி, வேலை நேரத்தில் வெளியில் சென்றதற்காகவும், வறுத்த கோழி உணவகத்தில் கோழி கொறிக்க வந்தவர்களுக்கு கதவை திறந்து விடாததற்கும் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். கையாலாகாத நான் இதைக் கதையாய் எழுதத் தொடங்கினேன்.
"கற்க கசடற கற்பவை - கற்றபின், 
நிற்க அதற்குத் தக"

Tuesday, December 25, 2012

பாரதி இறந்த அடுத்த சில நிமிடங்கள்...

பிள்ளைங்களா இன்னிக்கு உங்களுக்கெல்லாம் பாரதிக் கதை சொல்லப் போறேன் என்று ஆரம்பித்தார் தாத்தா, குழந்தைகளும் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தனர். 
காலா என் காலருகே வாடா உன்னை காலால் உதைக்கிறேன் போடா என்று கால்களை ஆட்டியபடி பாரதி மரணப் படுக்கையில் படுத்திருந்த வேளை, பாசக் கயிற்றுடன் பக்கம் வந்தான் எமன். பாரதியின் கால்களருகே வந்த சித்திர குப்தனுக்கு வசமாக ஒரு உதை கிடைக்க தாடை தெறிக்க எகிறி விழுந்தான். ஒருவழியாக எமனும் சித்திரகுப்தனும் பாரதியிடம் மன்றாடி அவனது ஆன்மாவை உடலில் இருந்து எடுத்துச் சென்றார்கள் . செல்லும் வழியில் தங்கப் பல்லக்கை தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் வான் வெளியில் இருந்து வந்து கொண்டிருந்தது. எமா, அந்தப் புனித ஆத்மாமை எங்களிட்ம கொடுத்துவிடு அது சுவர்க்கத்தை ஆள வேண்டியது என்று அக்கூடடத்தலைவன் கட்டளையிட பாரதியின் ஆத்மா அவனிடம் ஒப்படைக்கப் பட்டது. இவ்வேளையில்  கோபம் கொண்டு விழித்தெழுந்த பாரதியின் ஆத்மா! அடேய் மூடர்களே, எனது ஆன்மாவை பூமியிலேயே விட்டு விடுங்கள் என்றது. அய்யா உங்கள் உடல் இறந்து விட்டது, இனி உங்களால் பூமியில் வாழமுடியாது என்றது தங்கப் பல்லக்கு கூட்டம். அது எனக்கு தெரியும் என் உடல் சுமை தாளாததால் அதை நான் கழட்டி எறிந்து விட்டேன். என் ஆன்மாவை புவியில் எப்படி வாழ வைப்பது என்று எனக்கு தெரியும் என்றான் பாரதி. ஐயா உங்கள் ஆன்மாவை விடுவிக்க நாங்கள் யார், உங்களுக்கு இங்கு வரவிருப்பமில்லை என்றால் நீங்கள் பூமிக்குச் செல்லலாம், என்ற அடுத்த நிமிடம் பூமியை நோக்கி பாய்ந்தது பாரதியின் ஆன்மா. என்று கதையை முடித்தார் தாத்தா. உடனே சிறார்கள் தாத்தாவிடம், “அது சரி தாத்தா பாரதியோட ஆத்மா இப்போ பூமியில் எங்க இருக்கு?” என்று கேட்க. உடனே தாத்தா பக்கத்தில் இருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்துக் காட்டி இதுதான் பாரதியின் ஆத்மா என்றார். அத்துடன், “ இதை உணர்ந்து படித்து உள்ளத்தில் ஏற்றிக் கொள்ளும் ஒவ்வொருவனுக்குள்ளும் அவன் ஆத்மா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது” என்றார்.
   துள்ளி எழுந்த குழந்தைகள், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று உரக்கப் பாடியபடி விளையாடச் சென்றனர்.

Saturday, October 6, 2012

எர்த் குவாக் இன் எக்கனாமிக் சோன்.

                                                 பி.எல்.லின் அரிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது, நான் எவ்வளவு முயற்சி செய்தும் அந்தப் ப்ரோக்ராமிற்கு அவுட்புட்டே வரவில்லை, அப்படியே அவுட்புட் வந்தாலும் ஏகப்பட்ட லொட்டு லொசுக்கு சொல்லி என்னை கடித்து கொண்டே இருப்பார் என்னுடைய மாண்புமிகு மேற்பார்வையாளர். சற்றே கோபமாக வந்தது பிழைப்பின் மேல், வெறுத்துப் போய் ஒரு கப் காஃபி பிடித்துக் கொண்டு வந்து என் மேஜையில் வைத்து, பிட்டத்தை நாற்காலியில் அமர்த்தி கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். என்னைத்தவிர எல்லோரும் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். நாங்களிருக்கும் பதினைந்தாவது மாடியில் திடீரென்று சின்ன நடுக்கம், என் காஃபிக் குவளையில் கல் எறிந்தது போல் அலை எழும்பியது. இது போன்ற காட்சிகளை நீங்கள் காட்ஜில்லா, 2012  போன்ற படங்களில் பார்த்திருந்தாலும் ஒரு பூகம்பத்தை விளக்க இதை விட உகந்த காட்சி என் மூளைக்கு கிட்டவில்லை. ஆக பூகம்பத்தை எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தோம். திடீரென்று அபாய ஒலிப் பெருக்கி ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி, மாறி அலறியது, "எல்லோரும் மேடான திசைய நோக்கி ஓடுங்க..." என்பது போல. இதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாத என் அணித் தலைவர், கணிணினுக்குள் தன் தலையை விட்டு தான் எழுதாத ப்ரோக்ராமை எடிட் செய்து கொண்டிருந்தார், ஆத்தர் எனும் இடத்தில் அவர் பெயரைப் போடுவதே அவர் செய்யும் மிகப் பெரிய மறுசீரமைப்பு. வந்த கோபத்தில் அவரிடம் சென்று இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லோரும் பூமிக்குள்ள போகப் போறோம், பூமிக்குள்ள போய் ப்ரோக்ராம் பண்ற உத்தேசமா வாங்க கீழ போகலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினோம். எங்கள் டெலிவரி மேனேஜர் இந்தியாவில் பூகம்பம் என்றும், ஒரு அரை மணிநேரத்திற்கு சப்போர்ட் தர இயலாது என்பதை தாழ்மையுடன் அமெரிக்காவிற்கும், இங்கிலாந்திற்கும் தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்தார். லிப்ட் ஆஃப் செய்யப் பட்டது. எல்லோரும் எமெர்ஜென்சி எக்சிட் வழியாக படிக்கட்டில் பூமிக்கு இறங்க ஆரம்பித்தோம். முகநூலிலும், டுவிட்டரிலும் மாறி மாறி தகவல் பரிமாறப்பட்டது.  கேண்டினில் இருந்து கழுவாத கையுடன் நண்பர் ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார். அவரின் குரலில், "பகவான் மனுஷாள செத்த நேரம் நிம்மதியா சாப்ட விடறானா,ஆத்துக்காரி இன்னைக்கினி பாத்து உருளைகிழங்கு சாம்பார் பண்ணிருந்தா, இந்த பூகாம்பம் இப்பிடி சாப்பிட விடாம கெடுத்துடுத்து", என்றார். ஓய் உலகமே அழியபோவுது உமக்கு உருளைகிழங்கு சாம்பார்தான் முக்கியமா என்று வேறொருவர் சந்தானம் ஸ்டைலில் கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்தார். ஐ ஆம் சோ எக்சைட்டிங், திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் எர்த் குவேக் ஐ அம் பீலிங் என்று இரண்டு அம்மணிகள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். பதினைந்து படிகள் கீழிறங்கிய பின்னரும் சிலர் பூகம்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். டீக்கடைகள் நிரம்பி வழிந்தன. கட்டிட வாசலில் நின்று கொண்டிருந்தோம், கை கழுவாத மாமா, அம்பி செத்த தள்ளி நில்லுடா, திரும்ப பூகம்பம் வந்து பில்டிங் தலையில விழுந்துடப் போவுது என்றார். மாமாவின் மொக்கை தாள முடியாததால் அவ்விடம் விட்டு நகன்றேன்.  பிரிந்த காதலர்ககள் கூட கைகோர்த்து தத்தமது தவறுகளை ஒத்துக்கொண்டிருந்தார்கள். எல்லாத்  தொலைக்காட்சிகளிலும் பூகம்பத்தைப் பற்றிய தலைப்புச் செய்தியே, "நான் ஹால்ல படுத்திருந்தேனுங்க பூகம்பம் வந்ததுல உருண்டு உள் ரூம் போய்ட்டேனுங்க" என்று ஒருவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக இது எதிர்க்கட்சியின் சதி என்று எந்தத் தலைவரும் அறிக்கை விடவில்லை. நிலநடுக்கம் ரிக்டர் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். நிலநடுக்கம் பீதியை கிளப்பியதோ இல்லையோ, நாம் இன்னும் பூமியில் மனிதர்களாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பலருக்கு நினைவுப் படுத்தியது.  மறுபடியும் எல்லோரும் பதினைந்தாவது மாடிக்கு போனோம், அழுவாத குறையாக கணிணியை ஆன் செய்து கடவுளிடம் வேண்டிக் கொண்டேன், மாதம் மூனுதடவையாவது நில நடுக்கம் வரணும் கடவுளே!!!!!!!!

எண்டு ஆஃப் த இசுடோரி -எர்த் குவாக் இன் எக்கனாமிக் சோன்.

Friday, August 24, 2012

உலகநாதன் தயிர் வாங்கப் போன கதை

        பாபநாசத்துல உலகநாதன்னு ஒருத்தன் இருந்தானாம், பேருதான் ’உலக’ நாதன் ஆனா தமிழ்நாட்டை விட்டு தாண்டிப்போனா பையனுக்கு டவுசர் கிழிஞ்சிடும். துரதிஷ்டவசமாக அவனுக்கு கல்கத்தாவில் வேலை கிடைத்தது. தட்டுத்தடுமாறி பாபநாசத்திலிருந்து கல்கத்தாவிற்கும் வந்துவிட்டான். கல்கத்தாவில் தன் ஊர்க்காரர் ஒருவரின் வீட்டில் தான் தங்கியிருந்தான். முதல் மூன்று நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். நான்காவது நாள் பையனுக்கு வந்தது கடும் சோதனை, அறையில் உள்ளவர்கள் அவனை அழைத்து தயிர் வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார்கள். தயிருக்கு இந்தியில் தாஹி என்று சொல்லியும் அனுப்பினார்கள். உலகநாயகனுக்கு இவ்விடத்திலுருந்தே கை நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது. வழியெங்கும் தாஹி தாஹி என்று பிதற்றிக்கொண்டே சென்றேன். சட்டென அவன் பின்னாள் பேரிரைச்சலுடன் ஒரு லாரி அவனை கடந்து சென்றது. அது உண்டாக்கிய பாஆஆஆம் என்ற ஒலியில் அதிர்ச்சி அடைந்தவன் சொல்லை மறந்துவிட்டான். கடைக்கும் வந்துவிட்டான். கடைக்காரர் அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்க முழிபிதுங்க விழித்தான். தயிர் பாக்கெட்டை சுட்டிக் காட்டி வாங்கிவிடலாம் என்றால், கருமம் அவன் கண் பார்வையில் படும் படி ஒரு தயிர் பாக்கெட் இல்லை. சரி தயிரை ஆங்கிலத்தில் சொல்லி வாங்கிவிடலாமே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் நமது நாயகனுக்கு சட்டென அதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. பட்டென அவன் தலையில் பல்பு ஒன்று எறிந்தது, அவன் ஒரு விஞ்ஞானியைப் போல் சிந்தித்தான், எட்டாவதில் அவன் படித்த அறிவியல் அவனுக்கு கைகொடுத்தது. கடைக்காரரைப் பார்த்து ஒரு விரலை நீட்டி, மில்க் மிங்கில்ட் வித் பேக்டீரியா ஒன் பாக்கெட் என்றான். கடைகாரருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை, பின் அவரும் தன் எட்டாம் வகுப்பு அறிவியல் ஞாபகம் வந்தவராய், “சாப் ஆப் கர்ட்(CURD) கோ பதாயா, டீகே டீகே” என்று சொல்லி சிரித்துக் கொண்டார். உலகநாதனும் பதிலுக்கு ஒரு டீகே டீகே சொல்லிவைத்துக் கொண்டான்.இதே போல் இன்னொருநாள் உலகநாதனை மண்ணெண்ணை வாங்கி வரச் சொன்னார்கள், அதற்கு அவன் மன்னிச்சுடுங்க அதுக்கு எனக்கு கெமிக்கல் ஈக்குவேசன் என்னானு தெரியாது என்று சொல்லிக் கொண்டே தயிர் வாங்கச் சென்றான். இப்பொதெல்லாம் உலகநாதன் வாலண்டியராகவே தயிர் வாங்க கிளம்பிவிடுகிறான். கடைக்காரரும் அவனைப் பார்த்தலே தயிரை எடுத்து கொடுத்துவிடுவார். 

PS:இந்த உலகநாதன் என்னும் கதாப்பாத்திரம் கற்பனையே, இப்பெயர் கொண்ட யாவரும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். 

Tuesday, August 21, 2012

இலக்கணம் - மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட தரம் வாய்ந்த தமிழ்த் திரைப்படம்

 2007   ஆம் ஆண்டு வெளியான இப்படியொரு திரைப்படத்தை இன்றுதான் பார்த்தேன் என்று நினைக்கும் போது வெட்கமாக இருந்தாலும் , இன்றையாவது காண நேர்ந்ததே என்றெண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இப்படம் முழுக்க வேற்று மொழி கலக்காத தமிழ் உரையாடல்கள். ஆதலால் இப்பதிவையும் முடிந்தவரை தமிழிலேயே எழுத முயல்கிறேன்.

கதைச் சுருக்கம்: சக மனிதர்கள் மேல் அளவு கடந்த அன்பு காட்டும் ஒரு பத்திரிக்கையாளனால் எந்த அளவிற்கு அவன் சுற்றம் நல்வழி அடைகிறது என்பதே!
                         படத்தின் கதையை விரிவாக விவரிக்க விரும்பவில்லை. என்னைக் கவர்ந்த சில இடங்களை குறிப்பிட்டு விடுகிறேன், முதலில் கவர்ந்தது படம் முழுக்க தமிழிலே உரையாடினாலும் கொஞ்சம் கூட மன அயர்வைத் தந்துவிடாத இயல்பான வசனங்கள். படம் முழுக்க பெரியாரின்  கருத்துத் தூவல்கள், வரிகளுக்கேற்ப இசை. எனக்குத் தெரிந்து இப்படத்தில் சில இடங்களில் சங்க இலக்கிய பாடல்களையும் ,பாரதியார் பாடல்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள், அதற்கேற்ப இசை அமைத்திருக்கிறார் பவதாரிணி. ஒரு இடத்தில் நாயகன் தமிழரசன், குடிக்க குவளையில் பால் சுமந்து வரும் தன் மனைவி கயல்விழியிடம் பெரியாரை படித்திருக்கிறாயா என்று கேட்கிறான், அதற்கு கயல்விழி, கடவுளே இல்லை என்று சொல்வாரே அவர்தானே என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுகிறாள். அதற்கு தமிழரசன் பால்ல சர்க்கரையே போடலையா என்று கேட்கிறான், அதற்கு கயல்விழி, இப்பிடி பால குடிக்காமலே சொன்னா என்ன அர்த்தம் என்கிறாள். உடனே தமிழரசன் நீயும் பெரியார படிக்காமலே சொன்னா என்ன அர்த்தம் என்று மடக்கி விடுகிறான். இப்படி பல இடங்களில் ரசிக்க வைக்க கூடிய அளவிற்கு காட்சிகளை செதுக்கியிடுக்கிறார் இயக்குநர். மனதை நெகிழ வைக்கிறது படத்தின் இறுதிக் காட்சி, யாரோ ஒரு தலைவர் இறந்து விடுகிறார் என்று ஊரெங்கும் கலவரம். அந்தக் கலவரத்தில் மாட்டிக்கொள்கிறாள் கயல்விழி. கலவரக்காரன் ஒருவன் எறிந்த கல் கயல்விழி தலையில் பட்டு மயக்கமடைகிறாள். கல்லெறிந்தவனை கயல்விழியின் மகள் பார்த்து விடுகிறாள். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறாள் கயல்விழி. ஆனால் சில நாட்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி அவள் மூளை முழுவதும்  செயல் இழந்துவிடுகிறது.அதனால் இறக்கும் தருவாயில் இருக்கும் அவளது  இதயத்தை வேறொரு இதய நோயாளிக்கு பொறுத்த தமிழரசனிடம் அனுமதி கேட்கிறார் மருத்துவர். அவனும் ஒத்துக் கொண்டு படிவத்தில் கையெழுத்து இடும் சமயத்தில் அந்த இதய நோயாளியில் கணவனும் அழைக்கப் படுகிறான், அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவன் கையெழுத்து இட வரும் நேரத்தில் தமிழரசனின் மகள் அவனைப் பார்த்து அவன்தான் தன் மீது கலவரத்தில் கல்லெறிந்தவன் என்று கூச்சலிடுகிறாள். தமிழரசனின் உறவினர்கள் அவனை வெறிகொண்டு தாக்கி, படிவத்தில் தமிழரசனிடம் கையெழுத்து இட வேண்டாம் என்கிறார்கள். தமிழரசன் அந்தக் கலவரக்காரனின் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து என் குழந்தைக்கு வந்த நிலைமை இவர்களுக்கு வர வேண்டும் என்று கையெழுத்துப் போட்டுவிடுகிறான். அந்த இரண்டு குழந்தைகளின் உச்சிதனை முகர்த்து உங்கம்மா உனக்கு கிடைச்சிடுவாங்க என்று கூறுவதுடன் படம் முடிவடைகிறது.
                          மேலும் இப்படத்தில் பழ.நெடுமாறன், தென்கச்சி கோ.சுவாமிநாதன், சுப.வீர பாண்டியன் போன்றோரும் நல்ல கதாப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கைக்கான,நல்ல படத்திற்கான,   இலக்கணம் இவ்விலக்கணம் ;-)
                            இந்தப்படத்தை தயவு செய்து இணையத்தில் தரவிறக்கம் செய்யாமல் கீழ்கண்ட இணைப்பை தொடர்பு கொண்டு வாங்கவும் 69  ரூபாய் மட்டுமே. இது போன்ற நல்ல படங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், பார்க்காமல் தவிர்ப்பதும் நாம் செய்து கொண்டிருக்கக் கூடிய அன்றாட பாவங்களில் ஒன்று. 
இப்படத்தின் இயக்குநர் சந்திரசெயன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அறிய முடியவில்லை. ஆனால் இப்படி ஒரு படம் எடுத்தவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். இவரைப் போன்ற ஆட்கள் தமிழ்த் திரையுலகிற்குத் தேவை.

Friday, August 17, 2012

வளையல்காரன்

சார் கண்ணாடி வளையல், கவரிங்  வளையல்,பெங்காலி வளையல், குஜராத்தி வளையல், எனப் பலப் பல டிசைன் இருக்கு சார் ஒரே ஒரு ஜோடி வாங்கிக்குங்க சார், நான் கண்டுகொள்ளாத  போதும் கூவிக்கொண்டே என் பின்னால் வந்து தொந்தரவு செய்தான் வளையல்காரன். சார் ஒரு ஜோடி வளையல் பதினஞ்சு ரூபாய் தான் சார், ஒரு ஜோடி வாங்கிக்குங்க சார், எரிச்சலுடன் அவனை முறைத்துவிட்டு முன்னே நகர்ந்தேன். அவனும் விடுவதாயில்லை, வளைகாப்பு வளையல், கல்யாண வளையல், சதுர வளையல், ஜிகினா வளையல் என சகல விதம் இருக்கு சார் நின்னு பாருங்க சார்; யோவ் இத்தினி பேர் இருக்கும்போது என்ன ஏன் சொரன்டுற, 24  வயசாகியும் ஒரு ஃபிகர் கூட மடியல நான் வளையல் வாங்கி என்ன செய்ய? வட்டம் போடவா? என்று வெடித்தே விட்டேன். சிறுதும் இடைவெளி   விடாமல் மெல்லிய புன்னகையுடன் சொன்னான், சார் அம்மாவுக்கோ தங்கச்சிக்கோ வாங்கிட்டுப் போங்களேன் சார். வளையல் போன்றொதொரு வட்டம் தெரிந்தது  அவன் தலைக்குப் பின்னால்.

Thursday, May 10, 2012

காறித் துப்பாம என் கதைய படிங்க :-)

நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது, என்னிடம் நேராக வந்தவள் தனியாக பேச வேண்டும் என்றாள். தூண்டிலில் சிக்கிய மீனாய் மறு பேச்சு பேசாது அவள் பின்னே சென்றேன். தனிமையான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே நின்றவள், என்னை நோக்கி திரும்பினாள். உன்கிட்ட நிறையா பேசணும், இப்போ டைம் இல்ல, நிறையா பேசணும் போல இருக்கு, இன்னிக்கி ராத்திரி எங்க வீட்டுல எல்லோரும் திருச்செந்தூர் போறாங்க, நான் ஆபீஸ்ல வேலையிருக்குன்னு பொய் சொல்லிட்டேன். உன்கிட்ட நிறையா பேசணும், கண்டிப்பா நீ வரணும் என்று சொன்னவள் என் பதிலுக்கு காத்திராமல் வந்த திசை நோக்கி நடந்தாள். இதற்கு சராசரியான ஒரு ஆண் என்ன பதில் சொல்லியிருப்பானோ அதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன். ஆனால் பெண்களுக்கு நுண்ணறிவு அதிகம். அதனால் நான் சொல்ல நினைத்ததை அசடு வழிந்த  என் கண்களிலே  அவள் அறிந்து கொண்டாள். அவளுக்கும் எனக்கும் அதிகமாக பழக்கமில்லை, ஆனாலும் என் ஓரக்கண்ணும் அவளின் ஓரக்கண்ணும் அவ்வப்போது முட்டிக் கொள்ளும். சற்று முன் நடந்த நிகழ்வுகளை ஒன்று விடாமல் நண்பர்களிடம் ஒப்பு வித்தேன். நண்பனுக்கு ஒரு நல்லது நடக்கப் போவுதுன்னா நம்ம பயலுக உயிரையே கொடுப்பாய்ங்களே, ஆளாளுக்கு ஒண்ணு ஏத்தி விட்டானுக. அதுல ஒருத்தன் சொன்னான் "தம்ப் க்ளவுஸ்(thumb glouse)" வாங்கிட்டு போ மச்சினு, நான் ஒரு தத்தி எனக்கு முதல்ல புரியல, அப்புறம் தெளிவா விளக்கினான் அந்த அனுபவசாலி. ஆனால் உங்களிடம் அதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையிலேயே இப்போதான் முதன் முதல்ல தம்ப் க்ளவுஸ் வாங்கப போறேன். நான் செய்வது சரியா தவறா என்ற விவாதம் என் மனதில் ஓடினாலும் ஒரு தற்க்காபிற்காகவே இந்த தம்ப் க்ளவுஸ். சூப்பர் மார்கெடிற்குள் நுழைந்து தம்ப் க்ளவுஸ் அடுக்கப்பட்டிருக்கும் ரேக்கை நோக்கி நடந்தேன். ஆகா எத்தனை விதம், என்னென்ன டிசைன். அட்டைப் படத்தை பார்த்து புல்லரித்து நின்றேன். நம்ம வாழ்க்கையிலையும் இவ்வளவு சீக்கிரத்துல இதெல்லாம் நட்டக்கப் போவுதா? ஆர்ப்பரித்தது மனம். அங்கு இருந்ததிலேயே விலை அதிகம் உள்ள ஒன்றை எடுத்துக் கொண்டேன். நினைவெல்லாம் அவளின் முகம். மனமெல்லாம் ஏக கற்பனைகள். கையில் எடுத்த தம்ப் க்ளவுசை பில் போடவரிசையில் நின்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ யாரோ சத்தமாக என் பெயரை அழைப்பது போல ஒரு உணர்வு. சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினேன். "ஐயோ இவனா, இவன் லவுட் ஸ்பீக்கர் வாயனாச்சே, என் கையில இருக்கிறதப் பார்த்தான்னா பேஸ்புக்குல ஸ்டேடஸ் அப்டேட்டே போட்டுருவனே" என்று நினைத்துக் கொண்டே அவனிடம் இருந்து நழுவப் பார்த்தேன். அவன் விடுவதாயில்லை, நான் பில் போடும் வரை என்னுடன் இருப்பதாகக் சொன்னான். அவனை எப்படியோ சமாளித்து விட்டேன். எப்படி என்று விளக்க விரும்பவில்லை. ஒரு வழியாக பொருளை பத்திரமாக வாங்கி வெளியேறினேன். அவசரமாக பஸ்ஸில் ஏறி அமர்ந்து, ஒரு நூறு ரூபாயை நீட்டி டிக்கெட் கேட்டேன். ஏன்யா உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? சில்ரையே வச்சிருக்க மாட்டீங்களா என்று அன்பாக சொன்னார் மாண்புமிகு நடத்துனர். எவ்வளவு போராடியும் அவரிடம் சமாளிக்க முடியவில்லை.கடவுளே என்ன சோதனை , நேரம் ஆக ஆக என் முகம் வேர்த்து, சட்டை நனைந்து, வெறி கூடி அப்பப்பா!!! எல்லாத் தடைகளையும் தாண்டி அவள் வீட்டை அடைந்தேன். காலிங் பெல்லை அழுத்தினேன். வெள்ளை நைட்டி அணிந்து ஒரு தேவதை போல அவள் வருவது என் மனக்கண்ணில் தெரிந்தது. நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது. இரண்டாம் முறை காலிங் பெல்லை அழுத்தியதும் என்னை சுற்றிலும் மணியோசை கேட்கத் தொடங்கியது. அது காலிங் பெல்லின் ஓசை போல இல்லை. என் தலை எங்கும் அதே சத்தம். "அச்சம்  தவிர். நைய்யப் புடை, ஆண்மை தவறேல் , மானம் போற்று" என்று மாறி மாறி ஒலித்துக் கொண்டு இருந்தது. சட்டென நினைவு வந்தவனாய் செல்பேசியை காதில் வைத்து என்ன என்றேன். மறுமுனையில் இருந்து "என்ன மச்சி தூங்கிகிட்டு இருக்கியா?" என்று குரல். ”டேய் நாயே கனவில கூட என்னை கன்னி கழிய விடமாட்டீங்களா? அப்பிடி என்னடா என் மேல உங்களுக்கு கடுப்பு” என்று சொல்லியவாறே போனை அணைத்தேன். மறுபடியும் தூங்க நினைத்து தோற்றுப் போனேன். இப்பொழுதெல்லாம் செல்போனை அணைத்து விட்டே தூங்கச் செல்கிறேன், பையில் சில சில்லறைகளையும் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு.


Wednesday, April 4, 2012

ஒரு கல்லூரி - ஒரு தற்கொலை - நான்கு மர்மங்கள்


                               பூட்டிய கதவு உடைக்கப்படும் சத்தம் ,நண்பர்களின் அலறல் சத்தம், ஆம்புலன்சின் சைரென் சத்தம் , அந்த விடுதியின் ஓர் அறையில் ஒரே கூட்டம், கண் பிதுங்கிய நிலையிலும், நாக்குத் தள்ளிய நிலையில் கிடந்தான் அவன். போலீசுக்கு தகவல் சொல்லப் பட்டது. கூடியவர்கள் ஒவ்வொருவரும் ,ஒருவாறு பேசிக் கொண்டனர். சிலர் லவ் பெயில்யர் என்றனர், மேலு சிலர் வயிற்று வலிக் கூட காரணமாக இருக்கலாம் என்றனர், அவனுடன் படிக்கும் மாணவர்கள் அழுது கொண்டிருந்தனர். இது நடந்து ஒரு மாதம் ஆகியும் காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை. அந்த கேஸ் இன்ஸ்பெக்டர் துரைசிங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டது. மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கத் தொடங்கினார் சிங்கம், முதல் மாணவன் "சார் அவனுக்கு இன்டெர்னல் மார்க் கம்மியா இருந்தது,புலம்பிக் கிட்டே இருப்பான் வேற எதவும் எனக்கு தெரியாது சார் " என்றான். பலரை அழைத்து விசாரித்த துரை சிங்கம். முடிவாக , அந்த பையன்  யாரை கடைசியாக சந்தித்தானோ அந்த பையனிடம் சென்றார். சிங்கம்," அந்த பையன் சாகுறதுக்கு நாலு மணி நேரம் முன்னாடி உங்க ரூமுக்கு தான் வந்தான் இல்லையா", பையன்," ஆமா சார், ரொம்பநேரம் பேசிக்கிட்டு இருந்தோம் சந்தோசமா தான் இருந்தான், ஏன் இப்டி பண்ணினான்னு தெரில சார், " பையன் சொல்லும் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டே வந்தார் சிங்கம். பையனை பார்த்து சிங்கம் ,"  பைய்யன் உன் ரூமுக்கு பேசுறதுக்காக வந்தானா இல்ல வேற ஏதாவது விஷயமா வந்தானா?" , "சார் அக்சுவலா அன்னிக்கி ரொம்ப குஷியா இருந்தான் , பென்டிரைவ்ல ஏதாவது படம் காப்பி பண்ணி தர சொன்னான்" சிங்கம் குறிப்பெடுத்துக் கொண்டார் ," சோ பைய்யன் சாகுறதுக்கு முன்னாடி படம் பாத்து இருக்கான், உன்கிட்ட என்ன படம் வாங்கிட்டு போனான்னு சொல்ல முடியுமா தம்பி" , பையன்," ஸ்யுர் , சார் நாலு படம் குடுத்து விட்டேன், சுறா, விண்ணைத் தாண்டி வருவாயா?, அசல், அப்புறம் சூர்யா நடிச்ச சிங்கம்னு நினைக்கிறேன் சார்", துரை சிங்கம் தன் கேஸ் முடிவுக்கு வந்தது என்று குறிபெடுத்துக் கொண்டு அந்த முன்னணி நடிகரின் வீட்டை நோக்கி தன் காரை செலுத்தினார்.

சிங்கம் யார் வீட்டுக்கு போயிருப்பார்? ,நீங்களே இந்த மிஸ்ட்ரிய சால்வ் பண்ணிக்குங்க

ஒரு 'ஈ' இன் ஆவி - - - அதிரவைக்கும் உண்மைச் சம்பவம்


                       இரவு ஒன்பது மணி இருக்கும், லேசாக முழிப்பு தட்டியது, நன்றாக தூங்கி விட்டதால் ஹாஸ்ட்டலில் இரவு உணவை தவற விட்டேன்.
பசி வயிற்றை கிள்ளியது. மெஸ்சுக்கு போனா ஒண்ணுமே இருக்காதே, நைட்டு தோசை போட்ருப்பாங்க, அது முடிஞ்சிருக்கும் ஆனா தயிர் சாதம் மிச்சம் இருக்கும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன். முகத்தை கழுவி விட்டு மெஸ்சுக்கு விரைந்தேன். மெஸ் அறைக் கதவுகளை திறந்து, இருட்டை விரட்ட விளக்குகளை ஆன் செய்தேன்.
                           சுமார் 30 செ.மீ விட்டம் கொண்ட அந்த வட்டத் தட்டை எடுத்து கழுவுவதற்காக சென்றேன். மெல்ல குழாயை திறந்தேன்.  யாருமில்லாத மெஸ்ஸில் குழாயில் இருந்து வரும் தண்ணீர் அருவி போல இரையத் தொடங்கியது. அந்த இரைச்சலைக் காட்டிலும் பேரிரைச்சலாய் என் காதுகளில் அந்த ரீங்காரம் கேட்கத் தொடங்கியது. அது ஒரு ஈ எழுப்பும் ஓசையை போலிருந்தது. என் தலையை சுற்றும் முற்றும் திருப்பிப் பார்த்தேன், அங்கு ஈ போல ஏதும் காணப் படவில்லை. என் காதுகளை நன்றாக குடைந்து எடுத்தும், ரீங்காரம் விடுவதாயில்லை. பசியோடு இருந்ததால் அந்த ரீங்காரத்தை பொருட் படுத்தாமல் , தட்டு நிறைய தயிர் சாதத்தை அள்ளிப் போட்டு , நான்காவது டேபிளில் போய் அமர்ந்தேன். நான், என் தயிர் சாதம், மின்னி மின்னி எரியும் ட்யூப் லைட் தவிர வேறு யாரும் இல்லை, இருந்தாலும் அந்த ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது ஈக்களின் பேரிரைச்சல் அல்ல. பேயிரைச்சல் போல இருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் தயிர் சாதத்தை தின்னத் தொடங்கினேன். தட்டை வழித்துத் தின்ற பின் மெல்ல தலையை உயர்த்தினேன். என் தட்டிற்கு மிக அருகில் ஒரு ஈ செத்துக் கிடந்தது , அது எப்படி இறந்திருக்கும் என்று ஆராய்ச்சி செய்ய விரும்பாமல் இன்னொரு தட்டு தயிர் சாதத்தை அள்ளிப் போட்டுக் கொள்ள கிளம்பினேன். "ஆமா , இந்த செத்த ஈக்கும் , நம்ம காதுல கேக்குற சத்தத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ ? அடச்சே, மனுசப்பயலுக பேயுக்கே அசரமாட்டோம், இது சாதாரண ஈ பேய்தான " என்று நினைத்துக்கொண்டே தயிர் சாதத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு மறுபடியும் அதே டேபிளில் அமர்ந்தேன்.
                         சற்று முன் அங்கே செத்துக் கிடந்த ஈயின் சடலத்தை காணவில்லை, இருந்தாலும் நான் தயிர் சாதத்தை விடாதவனாய் அள்ளி வாயில் வைக்கப் போனேன், இப்போது ஈக்கள் என் மூளையிலே உக்காந்து கத்துவது போல பேரிரைச்சல். அப்போது தான் அந்த கோரக் காட்சி என் கண்களில் பட்டது. என் வாய்க்கு மிக அருகில் தயிர் சாதக் கவளம், அதனுள்ளே நான்கைந்து செத்த ஈக்கள். அந்த கவளத்தை எறிந்து விட்டு தயிர் சாத சட்டியை நோக்கி ஓடினேன் கரண்டியை எடுத்து தயிர் சாதத்தின் ஆழம் வரை நோண்டினேன், என் கண்கள் மிரண்டன, ரத்தம் உறைந்தது. தோண்டத் தோண்ட ஈக்களின் சடலங்கள்.
                           பின் ஒரு மாத காலத்துக்கு எங்கே போனாலும் தயிர் சாதத்தை தவிர்த்தேன். எங்கள் மெஸ் தயிர் சாதத்தை முற்றிலும் நிறுத்தி விட்டேன்..

பணம் தின்னும் பிணங்கள்


                       வணக்கம், வெல்கம் அண்ட் ஹாய், ஹலோ டூ த வியூவர்ஸ் ஆஃப் அதிரடி டி.வி. வாரா வாரம் பல வித்தியாசமான ஈவண்ட்ஸோட தில் இருந்தா பண்ணு நிகழ்ச்சி மூலமா நான் உங்கள சந்திதிச்சுகிட்டு இருக்கேன் , என்று சொல்லிக் கொண்டே போனான் அந்த அறிவிப்பாளன். ”அதிரடி டி.வி”, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி. மக்கள் தங்களால் நிறைவேற்ற முடியாத சில குரூர ஆசைகளை இத்தொலைக் காட்சியை பார்ப்பதன் மூலம் போக்கிக் கொள்வார்கள். அதிலும் முக்கியமாக நமது அறிவிப்பாளன் நடத்தும் ”தில் இருந்தா பண்ணு” நிகழ்ச்சி குரூரத்தின் எல்லை. அதாவது அறுவறுப்பான, செய்யக்கூசக் கூடிய வேலையை எவன் செய்கிறானோ அவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு. இந்த ஒரு லட்ச ரூபாயை ஜெயிப்பதற்காக மலையில் இருந்து தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று குதித்தவர்கள், மூக்கின் வழியாக கம்பியை விட்டு வாயின் வழியாக எடுத்தவர்கள் என்று ஒரு பெரிய அட்டவணையே போடலாம். 
                    அது போல இந்த வாரமும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நான்கு பேர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தான் நமது அறிவிப்பாளன். இதில் உன்னிப்பாக கவனிக்கப் பட வேண்டியவன் நான்காவதாக நின்ற நமது கதையின் முக்கிய கதாபாத்திரம். அவனை கதையின் நாயகன் என்று அறிமுகப் படுத்த முடியாது ஏனென்றால் கதையின் முடிவில் அவனை நீங்கள் காறித் துப்பும் நிலை வரலாம். சரி நாம் போட்டிக்குள் செல்லலாம். முதலாவதாக வந்தவனிடம் நம் தொகுப்பாளன் விதிமுறைகளையும் ஆட்டமுறைகளையும் விவரித்துக் கொண்டிருந்தான். அதாவது முதலில் 1,2,3 ஸ்டார்ட் என்று கூறியவுடன் வேகமாக முள் நிறைந்த பாதையக் கடந்து, அப்பால் உள்ள எருமை சாணி நிரம்பிய ஊற்றில் மூழ்கி எழுந்து பின் கட்டெறும்புகள் நிறைந்த குகைக்குள் நுழைந்து அங்கே வைக்கப் பட்டிருக்கும் சட்டியில் நெளிந்து கொண்டிருக்கக் கூடிய மண்புழுக்களை பிசைந்து மென்று விழுங்க வேண்டும். இவை அனைத்தையும் 150 விநாடிகளுக்குள் முடிக்க வேண்டும்.
                             போட்டி ஆரம்பமானது, மக்கள் ஆரவாரமுடன் போட்டியாளனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதலாமவன் ஸ்டார்ட் என்ற வார்த்தையை கேட்டவுடன் வெறி கொண்ட வேங்கை என முள்ளில் பாய்ந்து அந்தப் பக்கம் சென்றான். முள் நிறைந்த பாதை அவனை வெகுவாக பாதிக்கவில்லை, ஏனென்றால் அவனும் முள் நிரம்பிய ஸ்பைக் ஷூ என்றழைக்கப்படும் காலணியை அணிந்திருந்தான். முள்ளை முள்ளால் வென்றுவிட்டான். எப்படியோ எருமை சாணி ஊற்றிலும் கஷ்ட்டப்பட்டு மூழ்கி அக்கறை சென்றான்.
 சாணி நிறைந்த அவன் மேனியை பார்த்த பார்வையாளர்கள் பலர் அங்கேயே வாந்தி எடுத்துக் கொண்டிருந்தனர். டி.ஆர்.பி புள்ளிகளை அதிகரிப்பதற்காக ஒளிப்பதிவாளன் இவையெல்லாவற்றையும் அண்மைக் காட்சியில் படம் பிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் லாவகமாக செய்ய முடிந்த முதலாவது போட்டியாளனால் மண்புழுக்களை மட்டும் தின்ன முடியவில்லை. அவன் அவ்ற்றை கையில் பிடித்து ஒரு அருவருப்பு உணர்வுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நேரம் முடிந்து விட்டதென அறிவிப்பாளன் அறிவித்துவிட்டான். பின் வந்த இரண்டாவது போட்டியாளன் நாத்தம் தாங்காமல் ,எருமை சாணி ஊற்றில் மூழ்க முடியாமல் வெளியேறி விட்டான். 
                               ”ஹாய் வியூவர்ஸ் ஐ வில் மீட் யூ ஆஃப்ட்டர் ய ஷார்ட் கமெர்சியல் ப்ரேக், எங்கயும் போய்டாதீங்க அங்கயே இருங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தான் அந்த தொகுப்பாளன். ஒரு வேளை அவன் வெளிநாடாக இருக்கலாம், ஏனென்றால் என் நாட்டு மக்கள் பல காலமாக எங்கேயும் போகாமல் அங்கேயேதான் இருக்கிறார்கள் டி.வி நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டு. ஆக ,அப்படிச்சொன்னதற்காக நாம் அவனை மன்னித்து விடலாம். விளம்பர இடைவேளையின் போது ஒரு நடிகை வந்தார் தன் பளபளப்பான மேனி அழகிற்கு அந்த சோப்புதான் காரணம் என்றார். பின் அதே நடிகை இன்னொரு விளம்பரத்திற்கு வந்து தன் மேனி அழகிற்கு இன்னொரு சோப்பை காரணமாகச் சொன்னார். அதிலும் தலையில் கைவத்து சொன்னார். பின் ஒரு விளம்பரத்தில் ஒரு நடிகர் தென்னை மரத்தில் இருந்து இளநி பறித்த களைப்பில் இறங்கிக் கொண்டிருந்தார், இறங்கிய பின் அவரது கூடையில் வைத்திருந்த வெளிநாட்டு குளிர் பானத்தை கையில் எடுத்து, “புதிய கக்கா சோடா இப்போது இளநி ஃப்லேவரில், இயற்கையான இளநியை விட வேகமாக எனது தாகத்தை தணிக்கிறது “ என்று அந்த குளிர்பானத்தை மடக் மடக் என்று ஒரே மூச்சில் குடித்து முடித்தார். 
                              ஒரு வழியாக விளம்பரங்கள் முடிந்து மறுபடியும் நிகழ்ச்சி தொடங்கியது. மூன்றாவது போட்டியாளனும் அவ்வளவாக சோபிக்கவில்லை. தான் தோற்று விட்ட காரணத்தினால் எழுந்த கட்டுப்படுத்த முடியாத அழுகையை வெடித்து சிதறச் செய்தான். லட்ச ரூபாய் கனவு அவனுக்கு பொசுங்கிப்போனது. கேமராவை மிக அண்மைக் காட்சியில் காட்டிக் கொண்டிருந்தனர். உடன் போட்டியிட்ட போட்டியாளர்கள் அவனை தேற்றிக் கொண்டிருந்தார்கள், நம் நான்காவதாக போட்டியாளனை தவிர. உள்ளூர அவனுக்கு இதில் சந்தோசமே. பார்வையாள்ர்களில் சிலரும் அழுதுக்கொண்டிருப்பதை கேமரா பதிவு செய்து கொண்டது. 
                              கடைசியாக வந்தான் நமது போட்டியாளன், ஆரவார ஒலிகளுக்கிடையில் அலட்சியமாக தன் லட்சிய பயணத்தை மேற்கொண்டான். முள் நிறைந்த பாதை, சாணி ஊற்று இவை யாவற்றையும் துச்சமாக கடந்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் ஜெயித்தால் கிடைக்கும் லட்ச ரூபாய். கடைசியாக அவன் எறும்புக் குகைக்குள் நுழைந்தான். கடித்த எறும்புகளை துச்சமெனத் தள்ளி முன்னேறினான், மண்புழு நிறைந்த சட்டியை நோக்கி. சட்டியை கையில் எடுத்து மண் புழுக்களை லாவகமாக கையில் அள்ளி மென்று தின்னத் தொடங்கினான். கேமரா மெள்ளும் அவன் வாயை குறி வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த்தது. தின்று முடித்து அவ்வளவுதானா என்பது போல் கூட்டத்தை நோக்கி பார்வை வீசினான். அவனுடலில் ஒட்டியிருந்த சாணியைக் கூட பொருட்படுத்தாமல் தொகுப்பாளன் ஓடிவந்து அவனை கட்டிப் பிடித்து “ கன்ங்ராஜுலேஸன்ஸ்” என்றான். பின் அவனிடம் எப்படி நெளியும் புழுக்களை உங்களால் வாயில் வைத்து மெள்ள முடிகிறது என்று பேட்டி எடுக்கப்பட்டது. அதற்கு போட்டியாளன் ”லட்ச ரூபாய் கொடுப்பதென்றால் தான் எதையும் தின்னத்தயார்” என்றான். ”எதையும்” என்ற வார்த்தையை அவன் அழுத்தமாகக் கூறினான். மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு தினமும் இரவில் ஃபாஸ்ட் ஃபுட் வகை உணவகங்களுக்குச் சென்று நூடுல்ஸ் சாப்பிட்டு பழக்கப் படுத்திக் கொண்டதாகவும் கூறினான்.
                              வெற்றி களைப்புடன் தன் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டிற்குள் நுழைந்து தன் மனைவியிடம் சூடாக ஒரு கப் காஃபி போட்டுத் தருமாறு கேட்டான். அவன் மனைவி ஆவி பறக்க காஃபி போட்டுக் கொண்டு வந்து நீட்டினாள். அதை டேபிளின் மேல் வைக்கச் சொல்லிவிட்டு , பீரோவை நோக்கி நடந்தான். பீரோவை திறந்து தனக்கு பரிசாக கிடைத்த லட்ச ரூபாய்க்கான காசோலையை பத்திரமாக வைத்தான். இதற்கிடையில் ஒரு ஈ பறந்து வந்து அவனது காஃபி கோப்பைக்குள் விழுந்து இறந்தது. பின் மெல்ல காஃபி கோப்பை வைக்கப்பட்டிருந்த மேஜையை நோக்கி வந்தான். கோப்பையை கையில் எடுத்து முதலில் ஒரு உறிஞ்சு உறிஞ்சினான். இரண்டாவது உறிஞ்சு உறியும் போதுதான் காஃபியில் செத்து மிதந்த ’ஈ’யை பார்த்தான். அவனது முகம் அஷ்டகோணல் ஆகிப்போனது. உறிஞ்சிய காப்பியை துப்பினான். அறுவறுப்புடன் காப்பி கோப்பையை எறிந்து விட்டு, தன் மனைவியிடம் “அப்பிடி எவன் நெனப்புல ஈ வுழுந்ததுகூடத் தெரியாம காஃபி போட்ட சனியனே” என்று அவளை ஓங்கி அறைந்து விட்டு வெளியேறினான். அந்த அறை முழுதிலும் துற்நாற்றம் பரவிற்று. அது அவன் உடலில் இருந்து வந்ததா, மனதில் இருந்து வந்ததா என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

அழகான அமுல்யாவின் கதை



எல்லாக் குழந்தைகளையும் போல் நம் கதையின் நாயகி அமுல்யாவும் பத்து மாதத்தில்தான் பிறந்தாள். என்ன செய்ய இந்த அவசரமான உலகத்திலும் தன் குழந்தையை அமுல்யாவின் தாய் பெற்றெடுக்க பத்து மாதம் காத்திருக்க வேண்டியிருந்த்து. தாயின் வயிற்றில் இருக்கும் போதே அமுல்யா மடிக்கணினியின் சூட்டை உணர்ந்திருக்கிறாள். அவள் தாயின் மடி மேல் கணிணி, வயிறுக்குள் அமுல்யா.
     அமுல்யா பிறந்துவிட்டாள். பச்சிளங்குழந்தையின் மேல் வீசும் பால் வாடை நம் அமுல்யாவின் மீதும் வீசியது. ஆனால் அமுல்யா குடித்த்து அவல் தாயின் மாரில் அல்ல, தாய் பாலுக்கென்று நியமிக்கப் பட்ட அவள் பணிப்பெண்ணின் மாரில். தாய்ப்பால் கொடுத்தால் மாரழகு கெட்டுவிடும் என்று அமுல்யாவின் தாய் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் படித்திருக்கிறாள்.
அமுல்யாவிற்க்கு இப்போது இரண்டரை வயது. அமுல்யா பேசத் தொடங்கினாள். அவள் மழலை மொழி கூட ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று அவள் வீட்டார் நினைத்தனர். என்ன செய்ய அமல்யா வாயில் இருந்தோ ம்மா ம்மா என்று தமிழில் தான் வந்த்து. அவர்கள் அதை மாம் மாம் என்று ஆங்கிலமாக் எடுத்துக் கொண்டார்கள். அமுல்யா தூங்கிய பின் ஒருவர் வீட்டுக்கு வருவதும் , அவ்ள் காலையில் விழிக்கும் முன்னரே செல்வதுமாக ஒருவர் இருந்தார், அவர் பெரும்பாலும் அமுல்யாவின் தந்தையாகவே இருக்க்க் கூடும். அமுல்யாவைக் கொஞ்சுவதற்கு இயந்திர பொம்மைகளும், பஞ்சினால் ஆன கரடிகளும் நியமிக்கப்பட்டன. ஆனால் அவை செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதால் அமுல்யா அவைகளை அப்பால் தள்ளிவிடுவாள்.
அமுல்யாவிற்கு ஊட்டச்சத்து மிக்க பானங்கள் கொடுக்கப்பட்ட்து. உடல் அளவில் அமுல்யா வளர்க்கப்பட்டாள். சராசரியாக ஒரு நான்கு வயது குழந்தை என்ன செய்யும், பஞ்சுக் கரடிகளுடன் கொஞ்சி விளையாடும். பலூனை பல்லால்கடித்து உடைக்கச் செய்யும். கண்ணை கட்டி கண்ணாமூச்சி விளையாடும். ஆனால் அமுல்யாவோ கணிணி விளையாட்டு விளையாட பழக்குவிக்கப் பட்டிருந்தாள்.
 இதோ அமுல்யாவிற்கு ஐந்து வயதாகி விட்ட்து. மேற்குடியில் பிறந்த எல்லாக் குழந்தையையும் போல் அமுலயாவும் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு கான்வென்ட்டில் சேர்க்கப் பட்டாள். அவள் பெற்றோருக்கு அவள் எதை கற்றாலும் கற்காவிடிலும் கவலை இல்லை ஆனால் அவள் மெமரியில் இருந்து தமிழ் துப்பரவாக ஃபார்மட் செய்ய்ப் படவேண்டும். நண்பர்களே கவனியுங்கள் மெமரி, ஃபார்மட் என்பது கணிணி மொழி.  அவர்கள் பேச்சில் கணிணி மொழி பெரும்பாலும் கலந்தே இருக்கும்.
அமுல்யா மற்ற குழந்தைகளுடன் அவ்வளவாக நெருங்கிப் பழகாமலே இருந்தாள். அவளை சுற்றி வீசும் காற்றில் ஈரப்பதம் கலந்திருந்த்து. அது அவளின் கண்ணீரில் இருந்து எழுந்தாக இருக்கலாம். அமுல்யாவிற்கு அந்த கான்வெண்ட் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அமுல்யாவின் கான்வெண்ட்டில் இருந்து ஒரு நாள் இனபச்சுற்றுலா அழைத்து சென்றார்கள். அமுல்யாவை பொறுத்தவரை அது ஒரு சுற்றுலா அவ்வளவே. குழந்தைகள் சொகுசுப் பேருந்தில் ஏற்றபட்டார்கள். சில குழந்தைகள் சன்னலோர இருக்கையை தேடி ஓடி உக்காந்துகொண்டார்கள். அமுல்யாவோ கிடைத்த இருக்கையின் நுனியில் உட்கார்ந்து கொண்டாள்.
மலையின் உச்சிக்கு செல்ல செல்ல குளிரும், குழந்தைகளிடம் குதூகலமும் அதிகரித்த்து. அமுல்யா இப்போதும் தலை குனிந்தே உட்கார்ந்து வந்தாள். குழந்தைகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு சாரை சாரையாக அழைத்துச் செல்லப் பட்டார்கள். ஒரு மணி நேரம் சுற்றி பார்த்த பின் குழ்ந்தைகளை எண்ணியபடி ஆசிரியர் பேருந்துக்குள் ஏற்றுகிரார். குழந்தைகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைய அது அமுல்யாதான் என்று அறியப்படுகிறது.
பல நேர தேடுதலுக்குப்பின் ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப் படுத்துகிறார். பள்ளி நிர்வாகம் காவல் துறைக்கு புகார் செய்துவிட்டு அமுல்யாவின் பெற்றோருக்கும் தெரியப்படுத்துகிறது. அமுல்யாவின் தந்தையின் தொலைபேசிக்கு அழைத்த போது அவர் மிகவும் பிஸியாக இருப்பதாகவும், தலை போற காரியமாக இருந்தாலும், சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளுமாறும் சொன்னது ஒரு இயந்திரக் குரல்.
 அமுல்யாவின் தாய்க்கும் தகவல் சொல்லப்பட்ட்து. அவள் மிகவும் நிதானமானவள். மேலாண்மையில் மேற்படிப்பு படித்தவள். பொறுமையாக விஷயத்தை கேட்டுக் கொண்டாள். இந்த விஷயத்தை தன் நண்பர்களுக்கும் தெரிவிப்பதுதான் முறை என்று, தன் குழந்தை அமுல் குட்டியை காணவில்லை என்று ஃபேஸ்புக்கில் தன் ஸ்டேட்டஸ் ஆக அப்டேட் செய்தாள். அதற்கும் சில ஜீவன்கள் விளையாடாதே என்றும், கவலைப் படாதே என் குழந்தையும் அவ்வப்ப்போது இது போல காணாமல் போய் பின் வீடு திரும்பிவிடுவாள் என்று கம்மெண்ட் செய்திருந்தனர்.
இரண்டு நாட்களாகியும் அமுலயா இன்னும் தொலைந்து போனவளாகவே இருந்தாள். அமுல்யாவின் காண்வெண்ட் வாசலில் ஒரு சிகப்பு நிற மேல்நாட்டு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பெண்மணிக்கு அப்படியே அமுல்யாவின் ஜாடை. ஆனால் அவளுடன் வந்தவனுக்கு அமுல்யாவின் ஜாடை சுத்தமாக இல்லை. அவனின் தோள் மேல் சாய்ந்து கொண்டே அவள் கலங்கிய கண்களுடன் பள்ளி அலுவலகத்தை நோக்கி நடந்தாள்.
இது நடந்து கொண்டிருந்த அதே வேளையில் மேலும் ஒரு வெள்ளை நிற கார் வந்து நின்றது. அதில் இருந்து அலைபேசியை காதில் வைத்து வியாபாரம் பேசியவாறே ஒருவர் இறங்கினார். அவர் தான் அமுல்யா தன் தாயின் வயிற்றில் கருவாக உருவாக காரணமானவர், தந்தை என்றும் வைத்துக் கொள்ளலாம். அவ்ருடன் வந்த பெண்மணி தன் உடையையும், சிகையையும் சரி செய்தவாறே அவர் கைகோர்த்துக் கொண்டாள். அமுல்யாவின் தந்தையும் தாயும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர். ஆனால் சண்டை போடவில்லை. பொது இடத்தில் சண்டை போடுவது அநாகரீகம் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் பலமுறை அமுல்யாமுன் சண்டை போட்டதுண்டு.  



அமுல்யாவின் தந்தையும் தாயும் வெகுநேரம் பள்ளி நிர்வாகத்துடன் வழக்காடிவிட்டு தங்கள் துணையுடன் திரும்பிச் சென்றனர். அமுல்யாவின் தந்தை சற்று கோபமாகவே இருந்தார். இங்கு வந்ததினால் அவருக்கு முக்கியமான ஒரு மீட்டிங் ரத்தாகிவிட்டதாம். அவருடன் வந்தவள் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள்.  
அது சரி நம்ம அமுல்யா எங்க போனா? காலத்தால் கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம் வாங்க. இனபச்சுற்றுலா அன்று ஒரு குட்டி நாய் அமுல்யாவின் குதி காலை நுகர்ந்த்து. அதை பிடிக்க முயன்ற அமுல்யா அந்த நாயின் பின்னாலேயே சென்று வழி தவறி காட்டுப் பாதைக்குள் நுழைந்தாள். அந்த காட்டினுள் அமையப் பெற்றிருந்த மலைவாழ் வேடர்களின் குடிசைக்குள் நுழைந்தாள். அங்கே இருந்த மலைசாதி குழைந்தைகள் அவளுக்கு தேன் தந்தனர். அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டினர். அங்கிருந்த எல்லோருக்கும் அமுல்யாவைப் பிடித்துவிட்டது. அமுல்யாவை தூக்கிக் கொஞ்சினர். சிலர் முத்தமும் தந்தனர். அநேகமாக இதுதான் அமுலயாவின் முதல் முத்தம் என்று நினைக்கிறேன். அமுல்யாவிற்கு முத்தம் என்றால் என்ன என்று இப்போது தெரியும். இபோதெல்லாம் அவள் பட்டாம் பூச்சியை விரட்டிப் பிடிக்கிறாள். அதன் வண்ணம் அவள் கைகளில் ஒட்டிக்கொள்ளும்போது அது கலையாமல் பார்த்துக் கொள்கிறாள். பூக்களின் வாசனை அமுல்யாவிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அமுல்யா ஓடுகிறாள், குதிக்கிறாள், சிரிக்கிறாள். மலைவாழ் குழந்தைகளுடன் கண்ணாமூச்சி கூட விளையாடுகிறாள். மழையில் நனைகிறாள். மண் வாசனை அவளுக்கு குதூகலத்தை தருகிறது. வானவில் அவளுக்கு வியப்பைத் தருகிறது. அமுல்யா சிரிக்கும்போது அவள் கன்னத்தில் குழி விழுவது எனக்கே இப்போதுதான் தெரியும்.
இது ஒருபுறமிருக்க அமுல்யாவின் தந்தை தன் வழக்கறிஞருடன் பள்ளி மீது நஷ்ட ஈடு தொடுப்பது எப்படி என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார். அமுல்யாவின் தாய் முகநூலில் மூழ்கி தன் சோகத்தை தீர்த்துக் கொள்கிறாள். காவல் துறையோ சட்டம் தன் கடமையை செய்யும் என்று தொலைகாட்சிகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிற்து.

நினைவிருக்கும் வரை மறக்க முடியுமா?


                                      கல்லூரி நாட்களின் ஏதோ ஒரு இரவில் நானும் , நம்ம சித்தப்பு சிந்து பாண்டியனும், ருசி டீகடயில இருந்து காலேஜுக்கு நடந்து போயிட்டு இருந்தோம். பின்னாடி மேக்ஸ்வெல்லும் பர்மாவும் வந்துகிட்டு இருதாய்ங்க. சித்தப்பு சாதாரணமா இருக்கும் போதே அசாதரணமா சேட்டை பண்ணுவாரு. அன்னிக்கி கொஞ்சம் அசாதாரண நிலையில வேற இருந்தாரா, கேக்கவா வேணும். பயங்கர அலம்பல குடுத்துட்டு வந்துகிட்டு இருந்தாரு. அப்போ காலேஜ் காம்பெளண்ட் சுவர் கட்டுரதுக்காக ரோட்டு ஓரமா செங்கல் அடிக்கி இருந்தாங்க. சொல்ல சொல்ல கேக்காம சித்தப்பு ஒரு கல்ல எடுத்து ரோட்டுல வீசி எறிஞ்சார். கல்லு ஒரு அரை நீள் வட்டப் பாதையில் காற்றில் பயணித்து சாலையில் விழுந்து நொறுங்கியது. செங்கல் சிதறி விழுந்த மறுகணமே ஒரு போலீஸ் ஜீப்பு எங்களை கடந்து எங்களுக்கு முன்னாடி போயி நின்னுச்சு. எனக்கு இதய துடிப்பே நின்னுருச்சி. யோவ் சித்தப்பு கூட்டிட்டு போயி கழட்டி விட்டு நொங்க கழட்ட போறானுவ, ஐயோ இன்னிக்கீனு பாத்து நான் ஜட்டி வேற போடலியே. எல்லாம் உன்னாலதாம்யானு நான் அவர திட்டிக்கிட்டு நின்னுகிட்டு இருந்தேன். அந்த ஜீப்பு மெல்ல ரிவர்சுல வந்துகிட்டு இருந்தது. எனக்கு வயிரோட சேந்து குடலு, குந்தானி எல்லாம் கலங்கிட்டு இருக்கு. பின்னாடி வந்த அந்த ரெண்டு பன்னாடைங்க எந்த பொதருக்குள்ள பாஞ்சானுவன்னு தெரில. ஜீப்பு எங்க பக்கத்துல வந்து நின்னுருச்சி. அதுல ட்ரைவர் சீட்டுல இருந்த போலீஸ் தலய வெளிய நீட்டி, ஏலே இந்த சாத்தான்குளம் விலக்கு எப்பிடி போகனும் வழிய சொல்லுத்தீகளா? னு கேட்டாரு. எனக்கு வாயவே திறக்க முடியல. ஆனா சித்தப்பு எதுவுமே நடக்காத மாதிரி, அந்த போலீசுக்கு வழிய சொல்லிட்டு அவன் போனதுக்கப்புறம் இன்னொரு செங்கல்ல கயில எடுத்தாரு, நான் எடுதேம்பாருங்க ஓட்டம், சாமி சத்தியமா இனிமே உங்க கூட சேந்து குடிக்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டெ.....

முள்ளில்லாத கடிகாரம்


                     பரீட்ச்சை அன்னிக்கி கையில வாட்சு கட்டிட்டு எழுதப் போறது என்னோட வழக்கம். அதும் காலேஜுல சேரும் போது எங்கப்பா எனக்கு குடுத்த, அவங்கப்பா அவருக்கு குடுத்த பழைய கோல்டன் வாட்ச்ச கட்டிட்டு போனா கண்டிப்பா பாஸ் ஆஹிடலாம்னு ஒரு நப்பாசை. அப்பிடித்தான் அன்னிக்கி எக்ஸாமுக்கு அவசரமா கிளம்பிட்டு இருக்கும் போது கைதவறி கீழ விழுந்து வாட்ச்சு கண்ணாடி சுக்கு நூறாயிடுச்சு. நாம வாட்ச்சு கெட்டாம போயி, கொஸ்டின் கஷ்டமா வந்து நம்மளால நாலு பேரு ஃபெயிலா போயிட்டா என்ன பண்றது, அதனால உடைந்த வாட்ச்சயே கட்டிட்டு போயிட்டேன். நாலு எக்ஸாம் முடிஞ்சிறுச்சு, எல்லாம் நல்லா எழுதிட்டேன். ஆனா எக்சாமுக்கு ஒரு முள்ளா கழண்டு விழுந்ததுல , இப்போ வாட்ச்சுல முள்ளே இல்ல. கடைசி எக்ஸாம், வாட்ச்ச சரி பண்றதுக்கும் அப்போ கயில காசு இல்ல. என்ன பண்றது கடைசி எக்ஸாமுக்கு முள்ளே இல்லத வாட்ச்ச கையில கட்டி மறச்சி கிட்டே போனேன். எக்சாம் எழுதும்போது ஒரு எக்ஸாம் சூப்பர் வைசர் என்னையே சுத்திகிட்டு இருந்தாரு. எக்சாம் முடிஞ்சி வெளிய போம்போது அவர் எங்கிட்ட வந்து. தம்பி இது என்ன மாடல் வாட்ச்சு, முள்ளே இல்லியே , இதுல எப்பிடி மணி பாப்பனு கேட்டுட்டாரு. சார் இது மணி பாக்குற வாட்ச்சு இல்ல செண்டிமெண்ட் வாட்ச்சுனு சொன்னதும், தலயில அடிச்சுகிட்டே போயிட்டார். இந்த மொக்கயில இருந்து உங்களுக்கு என்ன தெரியுது? கடிகாரம் எதுக்கு வெறும் மணி பாக்குறதுக்கு மட்டுமா?

மூக்கு


மூன்றாம் வகுப்பின் தொடக்கத்தில் இருந்து சில வருடங்களுக்கு எனக்கு மூக்கின் மேல் சரியான வெறுப்பு இருந்தது. மனிதனுக்கு ஏன் மூக்கைப் படைத்தாய் என்று ஆண்டவனை கோபப் படும் அளவிற்கு. காரணம் மூன்றாம் வகுப்பில் என் பக்கத்தில் அமர வைக்கப் பட்ட ஊளை மூக்கு சுந்தரபாண்டியன். வற்றாத ஜீவநதிகூட வத்திப்போகலாம். ஆனா நம்ம சுந்தரம் மூக்குல ஒடுற காட்டாறு மட்டும் வற்றாமல் ஓடிகிட்டே இருக்கும். அவன் என் பக்கத்தில் உட்காரவைக்கப் பட்ட அன்று முதல் சுந்தரத்தயும், எல்லோருடய மூக்கயும் வெறுக்க ஆரம்பித்தேன். தினந்தோறும் பள்ளி செல்லவே வெறுப்பாகத் தோன்றும், வேறு பெஞ்சு மாறி உக்காந்தாலும் முதுகுல பல கோடுகளுடன் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை வரலாம். சுந்தரம் எப்போது தும்முவான் என்று மனம் பதை பதைத்துக் கொண்டெ இருக்கும். அவன் தும்மிவிட்டால் சில வேளைகளில் ஒரு துளி சளி பறந்து வந்து என் மேல் கோந்து போல் ஒட்டிக் கொள்ளும். அது மாதிரியான நாட்களில் குளிப்பதயே வெறுக்கும் நான், வீட்டுக்குப் போய் ஐந்தாறு முறை குளித்து விடுவேன்.
இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு நான் ஏன் மூக்கை வெறுத்தேன் என்று. சில நேரங்களில் சுந்தரம் விளையாட்டுக்கு என்று சொல்லி தன் மூக்கினுள் கை விட்டு எடுத்து என் மேல் அப்பி விடுவான். அப்போதெல்லாம் அவன் மூக்கை மட்டும் அல்ல , உலகத்தில் உள்ள எல்லோர் மூக்கையும் கத்தி கொண்டு அறுத்தால் என்ன என்று தோன்றும். அந்த காலகட்டங்களில் எல்லாச் சிறுவர்களையும் போல நானும் ரஜினி ரசிகன்.  தலைவருக்கு மூக்கு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருப்பாரோ என்று கூட தோன்றும். இப்படியே என் வாழ்க்கை மூக்கோடு விரோதத்தை நாளுக்கு நாள் வளர்த்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. மூன்றாம் வகுப்பு முடிந்து நான்காம் வகுப்பிற்க்கு மாறிச் செல்ல காத்திருந்த வேளையில் மனம், இந்த ஆண்டு சுந்தரத்தின் பக்கத்தில் என் எதிரியான பரமசிவனை உக்காரவைக்க வேண்டும் என்று எல்லாக் கடவுளையும் வேண்டிக் கொண்டிருந்தது. வெகு நேரம் ஆகியும் சுந்தரம் பள்ளிக்கு வரவே இல்லை. அவன் குடும்பத்துடன் மெட்ராஸுக்கு போய் விட்டதாக பேசிக் கொண்டார்கள். காலங்கள் உருண்டோடியது. மூக்கு தான் சுவாசிக்கப் பயன் படும் உறுப்பு என்றும், வாசனைகளை நாம் உணர மூக்கு தான் பயன்படுவதாகவும் பின் வரும் வகுப்புகளில் எனக்கு பாடம் கற்பிக்கப் பட்டது. மூக்கின் மேல் உள்ள வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. கல்லூரி நாட்களில் காதலியின் மூக்கு சவிழ்த்துப் போட்ட ஏழு போன்று அழகாக இருப்பதாகக் கூட மனம் கவிதை பாடியது. கல்லூரி வாழ்க்கை முடிந்து சென்னையில் வேலை தேடிக் கொணடிருந்த ஒரு நாள், சுந்தரம் என்னிடம் விட்டுச் சென்ற நாற்றம் கலந்த ஒரு வாசனை மூக்கைத் துளைத்தது. மெல்ல திரும்பி பார்த்தேன். மூன்றாம் வகுப்பில் என்னுடன் படித்த அதே சுந்தரபாண்டியன் தான். யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். தான் இப்போது அமெரிக்காவின் ஆப்பிள் என்னும் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மாதம் ஐம்பதாயிரத்துக் மேல் சம்பளம் என்றும் ஆங்கிலத்தில் பீத்திக் கொண்டிருந்தான். நான் அவனை பார்த்து மெல்ல புன்னகைத்து ,டேய் சுந்தரபாண்டி எப்பிடிலே இருக்க ஆளே மாறிட்டியேடே என்றேன். அவன் என்னை மேலும் கீழும் பார்த்தபடியே “சாரி ஐ காண்ட் ரிமெம்பர் யு, அனிவே ஐ யம் ஷுயாம் சுந்தர் நைஸ் டூ மீட் யூ” என்று சொல்லியவாறே எனக்கு கை கொடுக்க வந்தவன், என் உள்ளங்கையின் வியர்வையைப் பார்த்து அன்று நான் அவனிடம் காட்டிய அதே அருவருப்பை என்னிடமே கொடுத்து விட்டுச் சென்றான்.

உடல்


கவலைகள் நீக்கப்பட்ட என் மனம் மிக லேசாக்கப் பட்டதாக உணர்ந்தேன். மெல்லிய மனங்கொண்ட என்னால் சதை நிரம்பிய என் உடலை தூக்கி சுமக்க முடியவில்லை. இந்த உடலை ஏதேனும் ஆற்றில் கடாசிவிடலாம் என்று நினைத்து ஆற்றுப் படுகைக்கு விரைந்தேன். ஆற்றில் போட்டால் இந்த சதை ஊறி யாருக்கும் உபயோகப் படாமல் போய் விடுமே. அதனால் பக்கத்தில் இருந்த அந்த கொடிய மிருகங்கள் வசிக்கக் கூடிய காட்டிற்குள் நுழைந்தேன். என் உள்ளங்கையை முள்ளால் கீறி ரத்தத்தை வட்டமாக பீய்ச்சி நடுவில் அமர்ந்தேன். அரைமணி நேரம் கண் மூடி இருளில் பயணித்தேன். என் நெற்றிப் பொட்டில் என் மனத்தை ஏற்றினேன். சட்டென்று பின்னாலிருந்து ஒரு புலி என்னை தாக்கியது. கன நேரத்தில் என்னை மூன்று புலிகள் சூழ்ந்து கொண்டன. என் சதைகளை அவை தின்னத் தொடங்கின. என் குரல் வளையை முதலில் குதறி விட்டதால் என்னால் கத்த முடியவில்லை. புலிகள் என் நெஞ்சை கீறி இதயத்தை சுவைக்கத் தொடங்கிய போது என் உயிர் வெளியேறியது. என் மனம் காற்றில் கலந்துவிட்டது. புலிகள் விட்டுச் சென்ற என் மிச்சத்தை நரிகள் வந்து சுவைக்க தொடங்கின. பின் வந்த காட்டு நாய்கள் என் எலும்பை கவ்விச் சென்றன. இவை அனைத்தயும் தின்ன ஆளில்லாத என் ஆன்மா அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தது. பின் மரக் கிளைகளில் தாவி காட்டை சுற்றிப் பார்க்க கிளம்பியது.

சொலவடை