இந்த உலகத்தின் கடைசி ஆண் வெள்ளைக் காண்டாமிருகமாகிய சூடான், தன் தலையை
தொங்கவிட்டு நிற்கிறான்.தனிமை அவன் கண்களை கவ்வி நிற்கிறது. பழுப்பேறிய அவன்
வாய் இந்த உலகத்தின் முகத்தில் காறி உமிழத் துடிக்கிறது. தன் இனத்தின்
கடைசி நம்பிக்கையான சூடானோடு இனம் சேர விலங்கியல் பூங்காவில் மேலும் இரண்டு
வெண் காண்டாமிருகங்கள் இருக்கின்றனவாம், இருந்தும் 42 வயதான் சூடானால்
இனப்பெருக்கும் செய்ய முடியுமா என்பது இன்றுவரை சந்தேகத்திற்குரிய
கேள்வியாகவே விலங்கியல் ஆர்வலர்களிடையே நிலவுகிறது. அப்படி அவனால் முடியாவிட்டால்,
நீங்கள் இந்தப் புகைப்படத்தில் பார்க்கும் சோக முக சூடானே உலகின் கடைசி
வெண் ஆண் காண்டாமிருகம். இவனுக்கு தான் தான் கடைசி என்று கூடத் தெரியுமோ?
என்னவோ. கடந்த 2014 ஆண்டில் மட்டும் இவனுடைய இனத்தில் ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர், அவர்களின் கொம்பிற்காக வேட்டையாடப் பட்டிருக்கிறார்கள்,
அவர்களின் வெண்கொம்பு மருத்துவ குணம் வாய்ந்ததென்று, வியட்நாம் போன்ற
தென்கிழக்காசிய நாடுகளில் நம்பப்படுகிறதாம். இவனுக்கும்
பாதுகாப்புத்தராவிட்டால், கொடூரர்கள் இவனையும் வேட்டையாடி விடுவார்கள்
என்பதானால் இவனுக்கு இப்போது ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கிறது ராணுவம்.
தன்னைச் சுற்றி இருப்பவர்கள், தன்னை காக்க இருக்கிறார்களா, அழிக்க
இருக்கிறார்களா என்று கூட அவன் ஆராய்ச்சி செய்ய விரும்பாதவனாய், இழந்த தன்
இனத்தை நினைத்து , நிலம் நோக்கி தன் தலையத் தொங்க விட்டபடி நின்று
கொண்டிருக்கிறான். தான் வாழ எதையும் அழிக்கலாம், எப்படியும் வியாபாரம்
செய்யலாம் என்றொரு அரக்க குணம் மனிதனைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பதன்
விளைவே இந்தக் கடைசி சூடான். இவன் கடைசி என்று எழுதும் போதே எங்கோ
வலிக்கிறது, இவன் இனம் பெருக பிரார்த்திப்போமாக.
வெறும் பிரார்த்தனை எதையும் செய்து விடப்போவத்தில்லைதான், ஆனால் அது
மனத்தினுள் நல்ல உணர்ச்சிகளை உருவாக்க வல்லது. உணர்ச்சிகளற்ற ஒரு சமுதாயமாக
உருவெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்தவனுக்காக, தன் பூமிக்காக,
தன் இயற்கைக்காக பிரார்த்திக்கவாவது செய்வது, உங்களுக்குள் இருக்கும்
மனிதத்தை எள் அளவாவது நிலைத்திருக்கச் செய்யும்.
மரமும், நதியும், விலங்கும், பறவையும், பூச்சியும் இல்லா ஒரு வெற்றுச் சாம்பல் தேசத்தில் கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு கூட்டம் உலாவும் நேரம் வெகு தொலைவில் இல்லை, அக்கூட்டத்தின் பெயர் மனிதன் என்பதிலிருந்து மருவி, பிணம் என்றாகியிருக்கும் அப்போது.
தகவல் நன்றி : http://www.theguardian.com/…/12/last-male-northern-white-rh…
மரமும், நதியும், விலங்கும், பறவையும், பூச்சியும் இல்லா ஒரு வெற்றுச் சாம்பல் தேசத்தில் கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு கூட்டம் உலாவும் நேரம் வெகு தொலைவில் இல்லை, அக்கூட்டத்தின் பெயர் மனிதன் என்பதிலிருந்து மருவி, பிணம் என்றாகியிருக்கும் அப்போது.
தகவல் நன்றி : http://www.theguardian.com/…/12/last-male-northern-white-rh…