42 - அமெரிக்க வரலாற்றிலேயெ , வெள்ளை நிறத்தவர்கள் மட்டுமே விளையாடிக் கொண்டிருந்த Major League Baseball என்னும் மட்டை பந்து போட்டியில் முதன்முதலாக ஆடிய கருப்பர் இனத்தவரான ஜாக்கி ராபின்சன் என்பரின் ஜெர்சி எண்.
1947 ஆம் ஆண்டு, பொருளாதாரப் புரட்சி ஏற்பட்டு அமெரிக்கா உலக வல்லரசுகளில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. இருந்தும் அங்கு தீண்டாமை ஒழிக்கப் படவில்லை , சினிமா தியேட்டர்கள், விளையாட்டு ஆடிடோரியம், இவ்வளவு ஏன் கழிவறைகளில் கூட வெள்ளையர்கென்று, கருப்பர்கென்று இரு பிரிவுகளில் பிரித்தே அனுமதி வழங்கப்படுகிறது. இத்தகைய காலகட்டத்தில்தான், ஜாக்கிக்கு வெள்ளையர்களுடன் விளையாட வாய்ப்பு வழங்கபடுகிறது. அத்தகைய வாய்ப்பை வழங்கியவர் Brooklyn Dodgers அணியை நிர்வகிக்கும் Branch Rickey. அத்தகைய முடிவை எடுக்கும்பொதே அவருடைய சக ஊழியர்களால் பலத்த எதிர்ப்புக்குள்ளாகிறார். சட்டத்தை மீறாவிடினும், வழக்கத்தை மீறுகிறீர் என்று பலத்த எச்சரிப்புக்கு உள்ளாக்கபடுகிறார்.
எல்லா தடைகளையும் மீறி அவர் ஜாக்கியை அணிக்குள் சேர்த்தாகி விட்டது. அணியில் சேர்த்த பின் ஜாக்கியிடம் சொல்லுகிறார், மற்ற விளையாட்டு வீரர்கள் உன்னை மிகவும் தரங்கெட்ட வார்த்தையில் ஏசுவார்கள், உன்னை நாய்க்கு பிறந்தவனென்றும், வேசியின் மகனென்றும் கூட சொல்லுவார்கள், உன்னை ஒதுக்கியே வைப்பார்கள், உன்னுடன் சேர்ந்து பொதுக் குளியலறையில் குளிக்கக் கூடத் தயங்குவார்கள், இதையெல்லாம் நீ முதலில் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று.
ஜாக்கி அவரிடம் கேட்கிறான், எதிர்வினையாற்றக் கூட தைரியமில்லாத வீரனா உங்கள் அணிக்கு வெண்டும்?, அவர் அமைதியாக சொல்கிறார், உணர்ச்சி வயப்பட்டு எதிர்வினை ஆற்றாத அளவிற்கு தைரியம் உள்ளவர் என் அணிக்கு வேண்டும் என்று. Jackie asks, "Do you need a player who don't have guts to defend? , He replies , I need a player who have guts not to defend." எல்லாவற்றிற்கும் சம்மதித்து ஜாக்கி அணியில் சேர்கிறான். அவனுடைய முதல் போட்டியில் , ஒரு கருப்பர் இனத்தவன் , வெள்ளை நிறத்தவருடன் சேர்ந்து விளையாடுவதைக் கண்ட வெள்ளை நிற ரசிகர்கள் அவனை ஏளனப்படுத்துகிறார்கள், மிகவும் கொச்சையான வார்த்தையில் அவனை மைதானத்தை விட்டு வெளியேற சொல்லி கத்துகிறார்கள். சக விளையாட்டு வீரர்கள் அவனிடம் உற்சாகபடுத்துவதற்கு கூட ஒரு வார்த்தை பேசுவதில்லை. எல்லாவற்றையும் ஜாக்கி பொறுத்துக் கொள்கிறான். முதல் போட்டியில் , முழுக்கவனத்துடன் சிறப்பாக விளையாடுகிறான். அடுத்து அடுத்து வரும் போட்டிகளில் அவன் மென்மேலும் அவமானப் படுத்தப் படுகிறான், அவன் தலையில் வேண்டுமென்றே பந்தை எறிகிறார்கள், அவன் காலை ஓடும்போது வாறிவிட்டு சிரிக்கிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேல் ஒரு போட்டியில், எதிரணியின் பயிற்சியாளன், ஜாக்கி விளையாடிக் கொண்டிருக்கும் போதே, அவன் பிறப்பைப் பற்றியும் , அவன் தாய் , தந்தை என அனைவரையும் மிகக் கேவலமாக பேசுகிறான். கருப்பர்களை குரங்கு கூட்டம் என்கிறான். வெள்ளையர் வயலில் விவசாயக் கூலிகளாகவும் , அடிமைகளாகவும், கழிவறைகளை கழுவுபவர்களாகவும் இருக்கும் கருப்பர் கூட்டம் வெள்ளையருக்கு சமமாக எப்படி விளையாடலாம் என்று கேட்கிறான்.
ஜாக்கிக்காக அவன் அணியில் இருக்கும் வேறு ஒரு வெள்ளை நிறத்தவன் , எதிரணியின் பயிற்சியாளனை கண்டிக்கிறான். ஜாக்கி அவனுக்கு நன்றி கூறுகிறான், ஆனால் அவனோ, நீ எங்கள் அணியில் சேர்ந்து தொலைந்து விட்டாயே, வேறு என்ன செய்து தொலைய என்று வெறுப்பை உமிழ்கிறான்.அன்றைய போட்டியை அவனால் சிறப்பாக ஆட முடியவில்லை, மிகுந்த மனவேதனையில் உடை மாற்றும் அறையில் தன் மட்டையை போட்டு உடைக்கிறான். அவனுக்கு ஆறுதலுக்கு என்று ஒருவர் கூட வரவில்லை, அந்த அணியின் நிர்வாகியைத் தவிர. அவன் நேசிக்கும் விளையாட்டுக்காக அவன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறான். அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக ஆடுகிறான்.
பத்திரிக்கைகள் அவன் விளையாட்டை கவனிக்க தொடங்கின. கருப்பர் இன சிறுவர்கள் மட்டுமல்லாது, வெள்ளை இன சிறுவர்கள் கூட அவன் விளையாட்டை வெகுவாக ரசித்தனர். ஆனாலும் கருப்பரின சிறுவர்களுக்கு அவன் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தான். இருந்தும், வெள்ளை நிறத்தவர்க்கு அவன் மேல் இருந்த வெறுப்பு குறையவில்லை. வெளியூர் பயணங்களில் அவன் அணிக்கு தங்குமிடம் தர மறுக்கப் படுகிறது. அவன் அணியை அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எவ்வளவோ திட்டம் போடுகிறார்கள். எல்லாத் தடைகளையும் மீறி ஜாக்கி வளர்கிறான். கொஞ்சம் , கொஞ்சமாக அவன் அணிக்குள் இருப்போர்க்குள்ளும் மாற்றம் ஏற்படுகிறது, அவனை சக மனிதனாக ஏற்றுக் கொள்கிறார்கள். வெற்றிகள் குவிகிறது. World Series வெற்றி பெற்று கொடுக்கும் அளவிற்கு உயர்கிறான். பல விருதுகள் குவிகிறது.
சக மனிதானாகவே மதிக்கபடாதவன், ஒரு விளையாட்டு வீரனாக உயர்கிறான், அவரைப் பின்பற்றி ஆப்பிரிக்க அமெரிக்கர் சமுதாயமே எழுச்சி அடைகிறது. கருப்பர் இனத்திற்கு மட்டுமல்லாது, பேஸ் பால் விளையாட்டை விரும்புவோர் அனைவராலும் நேசிக்கபடுகிறான், பின்பற்றப்படுகிறான். எல்லோருக்குமானவராக கொண்டாடப் படுகிறார். இவர் போன்றவர்களின் வாழ்க்கை நமக்கு பாடம். இவர் கதையை படிக்கும் போது எனக்கு ஞாபகம் வந்து போனவர், அண்ணல் அம்பேத்கர், சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்க்காக , சில சக உறுப்பினர்களால் ஒதுக்கப்பட்டாலும், தன் விடா முயற்சியால் இந்திய அரசியலைமைப்பு சட்டத்தை முன் நின்று எழுதி முடித்தவர். சமூக நீதிப் போராளியான அவரை , வெறும் தலித் இன தலைவராக மட்டுமே நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருப்பது நம் அறிவின்மையே அன்றி வேறொன்றும் இல்லை.
இன்றைக்கும் , சாதியின் பெயரால், தீண்டாமையும் , பச்சைப் படுகொலைகளும் தொடர்ந்தாலும், இன்றைய கால கட்டத்தை விட பல மடங்கு சாதிக் கொடுமைகள் உச்சத்தில் இருந்த, ஒடுக்கபட்ட சாதி பெண்கள் முலைக்கு கூட வரி செலுத்தும் நிலை இருந்த காலத்தில், சகிப்பு தன்மையுடன் , பலபோராட்டங்களை முன்னெடுத்து, தனக்கான சமூக நீதியை, தன் தலைமுறைகளுக்காகவும் பெற்றுத் தந்த நம் முன்னோர்களை நாம் நினைவு கூர்ந்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்த வகையான நினைவு கூறலை வெளிநாட்டவர், நல்ல திரைப் படங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் போன்றோர் வாழ்க்கை நல்ல திரைப் படமாக ஆவணப்படுத்தப் பட வேண்டும். அத்தகை மாற்றத்தை நோக்கி தமிழ் சினிமா பயணப்ப்ட வேண்டும்.
Reference :
https://en.wikipedia.org/wiki/Jackie_Robinson
https://en.wikipedia.org/wiki/Baseball_color_line
https://en.wikipedia.org/wiki/Branch_Rickey
https://en.wikipedia.org/wiki/Racial_segregation
https://en.wikipedia.org/wiki/42_(film)