இன்று தார்சாலையின் நடுவே
நசுக்கப்பட்டதொரு பல்லியைக் கண்டேன்.
தலை நசுங்கி, குடல் பிதுங்கி, நாக்குத் தள்ளி
மிகவும் கோரமாய் நசுக்கப்படுக் கிடந்தது.
அது பூட்ஸ் கால்களால் மிதிபட்டோ,
உல்லாச உந்தின் சக்கரம் பாய்ந்தோ,
செத்துப் போயிருக்கலாம்.
இருந்த இடத்தில் இரைகிடைக்கப் பெற்றாலும்,
ஒய்யாரமாய் உலகை ரசிக்கக் கிளம்பி, நசுங்கிய
பல்லியின் வாழ்க்கை பரிதாபத்திற்குரியதே.
அந்தப் பல்லி உன்னிலும் என்னிலும்
செத்துக் கிடக்கிறதென்பது அதைவிட
பரிதாபத்துக்குரியது...
நசுக்கிய அந்தப் பூட்சுக் கால்களை
உறவுகளின் அகம்பாவமென்றோ,
அந்த உல்லாச உந்தின் சக்கரங்களை,
சமனிலையற்ற சமுதாயத்தின் சாபமென்றோ
இக்கவிதை படிக்கும் நீங்கள்,
உருவகப் படுத்திக் கொள்ளலாம், கவிஞனுக்கு
எல்லாவற்றையும் விளக்க வேண்டிய
அவசியம் இல்லை..
No comments:
Post a Comment