சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Friday, April 25, 2014

Story of a Social Animal.

                                    அன்றோரு நாள் அதிகாலையில் ஏதோ ஒன்று பழுதாகி அந்தக் குடியிருப்பு முழுக்க மின்சாரம் தடைபட்டது, எல்லோருக்கும் முன் முதல் ஆளாய்ப் போய் புகார் பதிவு செய்தான். குடியிருப்பு நிர்வாகம் தடங்களுக்கு வருத்தம் தெரிவித்ததோடு அன்றிரவே எல்லோர் வீடுகளுக்கும் மின்சாரம் மீண்டு வர வழி செய்தது. இவன் போன சென்மம் செய்த பாவத்தின் பயனால் இவனுடைய வீட்டை மட்டும் எட்டவில்லை மின்சாரம். கடுங்கோபத்துடன் மீண்டுமொருமுறை நிர்வாகத்தை அணுகினான். 
தனியொருவருக்காக நள்ளிரவில் ஆள் அனுப்ப இயலாது, காலை வருவதாக சொல்லி நிர்வாகம் பின்வாங்கியது. கடுப்புடன் போய் படுத்துக் கொண்டான், அன்றிரவு அவன் உடலிலிருந்து ஆவியும், உடலே ஆவியாகவும் வெளியேறியது வெப்பத்தினால்.

இரண்டாம் நாள் நிர்வாகம் ஒரு ஏப்ப சாப்பையான ஆளை பழுது பார்க்க அனுப்பியது, அவன் எதையோ பார்ப்பதைப் போல் பார்த்து பின் வருவதாகக் கூறிச் சென்றான். போனவன் இரவாகியும் வரவில்லை. இரண்டாம் நாள் இரவும் இருட்டில். 
இப்போது இவனுக்கு தோன்றியது தீவிரவாத எண்ணம், தனி ஒருவனுடையவனின் பிரச்சனை யாராலும் கண்டு கொள்ளப் படுவதில்லை, அதுவே ஒரு சமூகத்தின் பிரச்சனையால் இவனுடன் சேர்ந்து குரல் உயர்த்த யாரேனும் வரலாம், ஆக மெல்ல சென்று அந்த குடியிருப்பின் மெயின் MCB யை அணைக்க முனைந்தான், ஆனால் அவனுக்கு தீவிரவாதம் செய்யத் தைரியம் இல்லை. ஆக இரண்டாம் இரவிலும் ஈரத்துணி கட்டிக் கொண்டு தூங்கிவிட்டான் (தாளாத வெப்பத்தின் காரணத்தால் மட்டுமே).

மூன்றாம் நாள் காலை சேதி வந்தது, ”பிரச்சனை அப்பார்ட்மண்ட்டின் உள்க்கட்டமைப்பில் இல்லை, உங்கள் வீட்டுக்குமட்டும் ஈ.பியிலிருந்து கரண்ட் வரல, நீங்க நேரா அங்க போய் ஒரு புகார் பதிவு பண்ணிடுங்க”. இவனுக்கு தலை சுத்திக் கொண்டு வந்தது, இப்பிறவி முழுக்க இவனுக்கு மின்சாரம் எட்டாக் கனியாய் தூரம் செல்லப் போவதைப் போல் ஒரு பதை பதைப்பு. ஈ.பி ஆபீஸில் புகார் பதிவி செய்து விட்டு திரும்பினான். 
மூன்றாம் நாள் இரவு, இப்போது இவனுக்கு தோன்றியது புரட்சிகர எண்ணம், அரசாங்கத்தின் மேல் கோபம் வந்தது, தான் நன்றாகப் படித்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகப் போவதாக சபதம் எடுத்துக் கொண்டான். ஆனபின் தன்னை அலைக்கழித்த நிர்வாகிகளையும், அரசாங்கத்தையும் ஒருகை பார்த்துவிட தீர்மானித்தான், அரசாங்கப் பணிகளை துரிதப் படுத்துவேன் என்று காரிருளில், கண்களில் தீப்பொறி பறக்க தீர்மானம் எடுத்துக் கொண்டான். எப்படியோ அப்படியே தூங்கிவிட்டான்.

நான்காம் நாள் காலை, இன்னும் மின்சாரம் வந்தபாடில்லை. இவனுடைய காலை பொலிவில்லாமல் புலர்ந்தது, அலுவலகம் சென்றான், 
இப்போது இவனுக்கு தோன்றியது, "Survival of the Fittest" மனநிலை, அன்று முழுக்க வேலை எதுவும் செய்யாமல், இணையத்தில், மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி, எளிய முறையில் உடலை குளிர்வித்துக் கொள்வது எப்படி என்று படித்துத் தெரிந்து கொண்டான். இரவு வந்தது, பூட்டிய வீட்டைத்திறந்தான், எப்போதும் போல் கை தானாகச் சென்று விளக்கை ஆன் செய்யச் செல்லவில்லை. விரக்தி, பழகிவிட்டது. தலை கிண் கிண் என்றது, தனிமை மிகப் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. ஏதும் செய்ய முடியா கையாலாகா நிலை அவனை பின்னுக்கு தள்ளினாலும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவன் கைய இறுக்கமாக பற்றிக் கொண்டே இருந்தது. 

ஐந்தாம் நாள் காலை - ஆறு மணி, ”காலிங்பெல் அடிக்கும் சத்தம்”, கண் விழித்து கதவைத்திறந்தான், வெளியில் பால்க்காரன், “சார் கரண்ட் வந்துடுச்சு போல??”. முந்தைய இரவே மீண்ட மின்சாரத்தை இவன் கவனிக்க மறந்திருந்தாலும், அதிகாலையிலாவது அதைத் தெரிவித்த பால்காரன் தேவதூதனாகத் தெரிந்தான். மின்சாரம் இல்லாமலே அவன் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அப்போது அவன் கோவம், புரட்சி, தீவிரவாத எண்ணம் எல்லாம் மறந்து, மீண்டும் ஒரு “Common Man" ஆக, சமூக விலங்காக மாறிக்கொண்டிருந்தான். 

முற்றும்.

2 comments:

சொலவடை