சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

வாக்குச்சாவடி எண் -195

அணு அளவு அரசியல் அல்லாத ஒரு அரசியல் கதை 
தமிழகம் மொத்தமும் ஆவலோடோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சட்டமன்றத் தேர்தலின் முந்தைய நாள் , ஏப்ரல் 12  காலை பதினோரு  மணி இருக்கும் . வழக்கம் போல் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன் , என் கனவுகளுக்கு சாவு மணி அடிப்பது போல எனது செல்பேசி ஒலித்துக்கொண்டிருந்தது. கனவு கலைந்தவனாய் போனை எடுத்து ஹலோ என்றேன் . எதிர்முனையில் அவன் பேசிய வார்த்தைகளில் இந்த ஐந்து வார்த்தைகள் தான் தெளிவாக கேட்டது, "மச்சி ,எலெக்சன் ட்யுட்டி, வெப்காம் ஆப்பரேட்டர் , 750 ரூபாய் பணம் , ஆள் பத்தல வர்றியா", தண்ணீரில் விழுந்த நாய் உடம்பை சிலுப்பிக் கொண்டு எழுவது போல எழுந்து , நசுங்கிப் போன அந்த டூத் பேஸ்ட்டை மேலும் நசுக்கி பேஸ்டே வராமல் வெறும் வாயை மட்டு கொப்பளித்து விட்டு,கசங்கிய  கந்தல்களின் இடையில்  இருந்த அந்த அழுக்கு குறைவான சட்டையை எடுத்துப போட்டுக் கிளம்பினேன்.
                                           கல்லூரிப் படிப்பின் கடைசி வருட மாணவன் நான் , வில்லில் இருந்து கிளம்பி இலக்கை நோக்கி வேகத்துடன் செல்லும் அம்பை போன்ற  மாணவர்கள் மத்தியில் , காற்றவிழ்த்து விடப்பட்ட பலூனை போல் திக்குத் தெரியால் சுற்றித் திரிபவன் நான். எனக்கு இலட்சியங்கள்   கிடையாது , தேசபக்தி கிடையாது , ஓட்டுப் போட  வேண்டும் என்ற எண்ணம் துளி கூட கிடையாது. தற்போதைய லட்சியம் அந்த 750 ரூபாய் மட்டுமே.எங்கள் கல்லூரியின் பொதுக்கூடத்தில் மாணவர்கள் கூடியிருந்தனர். என்னை அழைத்தவனருகில் போய் அமர்ந்து கொண்டேன். எல்லோருக்கும் தொகுதி ஒதுக்கப் பட்டது. எனக்கு ஒதுக்கப் பட்ட தொகுதி பொள்ளாச்சி . பூத் நம்பர் -195. என்னை போன்று தொகுதி ஒதுக்கப் பட்டவர்களுக்கு ஒரு லேப்டாப்பும் வேப்காமும் தரப்பட்டது. வாங்கிக் கொண்டு, எனது ரோல் நம்பரை எழுதி கையொப்பமிட்டு வந்தேன்.
                                            எங்களை  அழைத்துச் செல்ல ஒரு வண்டி வந்தது. அன்று மதியம் சாப்பிடுவதற்கு ரொட்டிகள் சில தந்தனர். மாலை ஐந்து மணி அளவில் எங்கள் பூத்தை அடைந்தோம். அது ஒரு அரசினர் நடுநிலைப் பள்ளி.கரும்பலகைகளில் திருக்குறள்.  இரவு எல்லோருக்கும் சாப்பாடு வரவழைக்கப் பட்டது. எனக்கு தரப்பட்ட சாப்பாட்டை அந்த பள்ளியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த ஆயாவிடம் கொடுத்து விட்டேன் . அதுக்காக என்னை வள்ளல் வீட்டு வாரிசுன்னு நினச்சிட வேண்டாம். பொதுவாகவே வெளி இடங்கள்ள தங்குற நிலைமை வந்தா நான் திட உணவுகள சாப்புடுரதில்ல. காரணம் என் மலச்சிக்கல். சிலருக்கு காலைக்கடன் கழிப்பது மோட்டார் ஓடுவது போல, சுவிட்சை போட்டதும் தண்ணி வர்ற மாதிரி , சிலருக்கோ கிணத்துல தண்ணி இறைக்கிற மாதிரி கொஞ்சம் முக்க வேண்டியிருக்கும். என்னை மாதிரி ஆளுங்களுக்கு காலைக் கடன் கழிப்பது கார்பரேசன் குழாயில் தண்ணி வர்ற மாதிரி , எப்ப வரும் எப்டி வரும்னெல்லாம் தெரியாது திடீர்னு வந்துடும் . அதுனால வெளி இடங்கள்ள நான் பெரும்பாலும் ஜூஸ் தான் குடிப்பேன். இரவு பள்ளியிலே தூங்கி விட்டோம் . கொசுக்கடி தாங்க முடியல , காலை கண்விழித்துப் பார்த்த போது ஒன்னரை கிலோ குறைந்த்ததாய் உணர்வு.கொசு ஒழிக.
                                         குளித்து விட்டு வந்து எங்கள் பூத்தின் ஒரு மூலையில் கேமராவை செட் செய்து , லேப்டாப்புடன் இணைத்து அருகிலேயே அமர்ந்தேன். பூத் ஏஜன்ட்டுகளுக்கு , பூலிங் ஆபீசர் , ஓட்டு எந்திரத்தை பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். காலை சரியாக எட்டு மணி, வெளியில் அஞ்சா நெஞ்சன் வாழ்க என்னும் கோசம் , உள்ளே தனது சகாக்களுடன் நுழைந்தார் அந்த ஊரின்  எக்ஸ்-எம்எல்ஏ . எங்கள் பிரேசிடிங் ஆபிசர் அவரிடம் சென்று ,"சார் உங்க ஆளுங்களை  வெளிய போகச் சொலுங்க , சத்தம் போடாம இருக்கச சொல்லுங்க , கேமரா செட் பண்ணி இருக்காங்க , எல்லாத்தையும் டெல்லில இருந்து பாத்துக் கிட்டு இருப்பாங்க என்று ஏமாற்றினார்" . அந்த எக்ஸ்-எம்எல்ஏ கூப்பிய கரங்களுடன் என் முன் வந்து அதாவது கேமரா முன் வந்து அம்மா வணக்கம் என்றார். அந்த வணக்கம் எனக்கில்ல , டெல்லில இருக்குற அந்த அன்னைக்காம். நிமர்ந்து வந்தவர் கேமராவின் பார்வையில் குனிந்து  கொண்டே  ஓட்டளித்து விட்டு வெளியே சென்றார். காலை ஒன்பது மணி அளவில் மக்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. கணவன்-மனைவி, மாமியார்-மருமகள், காதலன்-காதலி என்று ஜோடியாக வந்து தனித் தனியாக ஓட்டளித்து விட்டு சென்றனர். ஒரு அப்பா தன ஐந்து வயது குழந்தையை கூட்டிக் கொண்டு வந்திருந்தார், அது தன பிஞ்சு விரல்களால் மெல்ல அப்பா சொன்ன பட்டனை அழுத்தியது. இப்போவே ஓட்டுப் போட்டுடானே  உன் பைய்யன் , சீக்கிரமா அவனுக்கு கல்யாணத்தையும் முடிச்சிரு என்று அந்த ஊர்க்காரர்கள் அவரை கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள் .
                                     சரியாக பதினோரு மணி அளவில் நடுங்கிய கைகளுடன் ஒரு தாத்தாவை அவர் பேரன் கைத் தாங்கலாக கூட்டிக் கொண்டு வந்தான், மை வைக்கும் டீச்சர் சற்று அழகாக இருப்பார். அவர் தாத்தாவின் கையை பிடித்து மை வைத்த போது தாத்தா  முருக்கேரியவ்ர் போல நிமிர்ந்து உடலை விறைப்பாக வைத்துக் கொண்டே சொன்னார், "எத்தனை நாளாச்சு?ம்ஹும்" ,தாத்தாவுக்கு இன்னும் கொஞ்சங்கூட குசும்பு குறையிலடா என்று அவ்வூர் இளவட்டங்கள் பேசிக் கொண்டனர். அவரின் உடல் ஆடாவிட்டாலும். அவரது கால்கள் "பில்டிங் ஸ்ட்ராங்  பேஸ்மென்ட் வீக் " என்பதை போல ஆடிக் கொண்டே இருந்தது. அவர் போன பின் ஒரு கண் பார்வை மங்கிய பாட்டியை ஒரு அரசியல்வாதி கைத்தாங்கலாக கூட்டிக் கொண்டு வந்தார். இந்த முதியவர்களைஎல்லாம் பார்த்தவுடன் பழைய கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது
 "எங்கள் வீட்டில்
பாயைக் கூட அவ்வப்போது
விரித்து வைப்பார்கள் ஆனால்
எங்கள் பாட்டியை எப்போதும்
சுருட்டியே வைத்திருப்பார்கள்"

கடைசிக் காலத்தில் ஆறுதலான வர்ர்தைகளுக்காக மட்டுமே ஏங்கி தவிக்கும் அவர்களை, இந்த அரசியல்வாதிகள் தேர்தல் அன்று மட்டும் தங்கள் சுயநலத்திற்காக அன்பாகப் பேசி அழைத்து வருவார்கள்.பாட்டியும் வந்து ஓட்டு போடு போய்டுவாங்க. பாட்டிகளும் ,குழைந்தகளும் ஒண்ணுதான். அதுக்காக கொஞ்சுங்கனு சொல்லல, அவங்களுக்கு அன்பான பேச்சுக் கூட தேவையில்லை , உங்களின் பரிவான பார்வை ஒன்றே போதும். 
                                                                   மதியம் மூன்று மணி இருக்கும் , ஒரு வேன் வரும் சத்தம் கேட்டது, பூத் ஏஜெண்டுகள் எழுந்து நின்ற கொண்டார்கள், வந்தது பெரும் புள்ளி ஒன்றும் அல்ல, கால் உடைந்து கட்டுப் போட்ட நிலையில் கைகள் இரண்டையும் தன் மகன்களின் தோள் மேல் போட்ட படி , ஒருகாலை கிழே ஊனி இருந்தார். மறு காலை அவர் மனைவி நிலத்திற்கு செங்குத்தாக தூக்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார். எல்லோரும்  எழுந்து நின்றோம். முன்னே கூறினேனே அந்த எக்ஸ்-எம்எல்ஏ வந்தபோது கூட யாரும் எழவில்லை. என் கண்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன,தழும்பி நின்றது கண்ணீர், காலை விம்மி விம்மி, தானே ஓட்டுப் போடவேண்டும் என்ற வைராக்கியத்தோடு தன் குடும்பம் மொத்தமும் புடை சூழ முன்னேறினார். அவர் கைகள் பட்டனை அழுத்தியவுடன் கேட்ட அந்த பீப் ஓசை, அவர் முகத்தில் தெரிந்த வலியை மீறிய மகிழ்ச்சி ,என் கண்ணில் இருந்து உடைந்து விழுந்த நீர் எல்லாம் ஒரே நேரத்தில் -ஆங்கிலத்தில் Coincidence என்று சொல்வார்களே அதை போல நடந்து முடித்து. பூத் ஏஜென்ட்டுகள் கட்சி பேதம் இன்றி அவரை தூக்கிச் சென்று வேனில் அமர வைத்தனர். மனிதனின் ஆறாவது அறிவு மனித நேயம் என்பது எனது கருத்து.
                                                    ஐந்து மணி, எல்லாம் முடிந்தது.கொடுக்கப் பட்ட குறுந்தகட்டில் நடந்தவற்றை பதிய வேண்டும்.
  1. எக்ஸ்-எம்எல்ஏ
  2. நடுக்கத் தாத்தா
  3. பார்வை போன பாட்டி
  4. ஓட்டுப்போட்ட குழந்தை
  5. கால் உடைந்தவர்
என்று எல்லோரையும் மறு முறை நினைத்துப் பார்த்தேன் , உள்ளே குறுந்தகட்டில் இவையெல்லாம் பதிவாகிக்க் கொண்டு இருந்தது. அது அழிந்து போகலாம் ஆனால் என் மனம் என்னும் மாயத்தகட்டில் பதிந்த இந்த சம்பவங்கள் எப்படி அழிந்து போகும். இப்பொழுது எனது கைகள் தபால் ஓட்டுப் படிவத்தை நிரப்பி கொண்டிருக்கின்றன எதையோ மாற்றத் துடிக்கும் லட்சிய வெறியில் ......

3 comments:

சொலவடை