சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Saturday, October 25, 2014

பெயரில் என்ன இருக்கிறது?

                      பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில்தான் எல்லாமே இருக்கிறது எனலாம். நமக்கு பிடித்த ஒருவரின் பெயரைக் கொண்ட எல்லோருமே நமக்கு பிடித்தவர்களாகிறார்கள் என்கிறது உளவியல். அத்தைகய சிறப்பு மிக்கது பெயர். பெயர் சொல்லும் வாரிசே பெயரன் ,பேரன் என்றானது. கனிகளுக்கும், பூக்களுக்கும் , ஊர்களுக்கும், தெருக்களுக்கும் பண்டையத் தமிழன் வைத்த பெயரை உற்றி நோக்கி ஆராய்ந்தால் அதன் வரலாறே வெளிவரும். அவ்வகையில் பெயர், ஒரு வரலாற்றையே உள்ளடக்கி இருக்கிறது. 
              எனக்கு பிடித்தமானவர்களின் பெயரை அடிக்கடி மனதால் உச்சரித்துக் கொண்டும், யாரும் இல்லாத தனிமையில் சத்தமிட்டு உச்சரித்தும், அதை எழுதிப் பார்த்தும் குதூகலித்துக் கொண்டதுண்டு. பெயர் என்பது ஒரு நினைவு, ஒன்றை மறக்காமலிருக்க நம் மனதிற்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் புக்மார்க். புத்தகங்களுக்கு இடையில் வைக்கப்படும் மயில் இறகைப் போல. பெயர்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை.
             இவ்வளவு ஏன் கணவனுக்கும், மனைவிக்குமான உறவில் முதல் ஊடலை ஏற்படுத்துவதே இந்தப் பெயர்தான். தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதிலிருந்து அது ஆரம்பிக்கிறது. அது என்னவோ தெரியவில்லை, தமிழுக்கு அந்நியமான ஷ, ஸ, வில் தற்போது பல தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை பார்க்க முடிகிறது. ஒரு மொழியை வாழ வைப்பத்தில் பெரும் பங்கு அம்மொழியில் வைக்கப் பட்ட, அம்மொழியைத் தாங்கி நிற்கும் மனிதர்களின் பெயர்களே என்பது என் கருத்து.
             பெருகி வரும் சமசுகிருத பெயர்கள் பெரும் அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. ஆட்டு மந்தையாய் தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு பெயரிடுவது அடிமுட்டாள்த்தனமாய் படுகிறது. பெயர் ஒருவனுக்கு/ ஒருவளுக்கு கம்பீரத்தை தர வேண்டாமா? வடநாட்டு இனிப்புகளின் பெயரையெல்லாமா அர்த்தம் தெரியாமல் வைப்பது. உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைப்பது என்பது பற்றிச் சொல்ல எனக்கு தகுதியில்லை. ஆனால் அதைப் பற்றி யோசித்து செயல்பட உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. 
                    எனக்குத் தெரிந்த ஒரு சில வழிமுறைகளை சொல்கிறேன் முடிந்தால் பின்பற்றுங்கள்,
1. முடிந்தவரை தமிழில் வையுங்கள். 
2.அரசன், கவிஞர், புலவர்களென்று தனித்துவம் வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டில் பல்லாயிரக் கண்க்காணோர். அப்படி யாரேனும் ஒருவர் உங்களைக் கவர்ந்தால் அவரின் பெயரை வையுங்கள். 
3.இன்றைய காலகட்டத்திற்கு சீத்தலை சாத்தானார், ஆலங்குடி வங்கனார், மாற்பத்தி போன்ற பெயர் எடுபடாதுதான் ஆனால் அறிவுடை நம்பி , ஆண்டாள், இளவெயினி என்பனவை எக்காலத்துக்கும் இனிமையானவை.
4. இப்படித்தேடி கண்டுபிடிப்பதில் நீங்களும் சில நல்ல புலவர்களையும் அவர்கள் பாடல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம், பிற்காலத்தில் உங்கள் குழந்தைக்கும் அதன் பெயர் காரணத்தைக் கூறி வளர்க்கலாம். எல்லாக் குழந்தைகளும் தன் பெயருக்கான காரணத்தை பெருமிதத்தோட மற்றவர்க்கு கூறி வளரவே ஆசைப்படுவார்கள். அவர்களின் தன்னம்பிக்கையும் பெருகும்.
5. பெண்குழந்தைகளுக்கு பூக்களின் பெயர்களை வைக்கலாம்,.
6. சரித்திர/ இதிகாச தலைவன்/ தலைவிகள் பெயர் ஏராளம். சீவகன், கோவலன், போன்றவை
7. அல்லது உங்கள் மூதாதையரின் பெயர் கலந்து குமார் கருப்பையா, தம்பி அண்ணாமலை , வெற்றி வாசகம், கோதைத் திருமகள் போன்றவையும் மிடுப்பானவையே.


கடைசியாக ஒன்று  பெயரும், அதன் அர்த்தங்களுமே ஒரு வரலாற்றை தாங்கி நிற்கும் தூண் என்பது என் கருத்து, உங்களது குழந்தைகளை எந்தவித எழுத்துப் பிழைகளும் இல்லாமல் வாயாற அழைக்க தாய்மொழிப் பெயரே சிறந்தது. அந்நிய மொழியில், அர்த்தமே தெரியாமல், எந்தவித பின்புலமும் இல்லாத, வெறும் ந்யூமாராலிஜிக்காக பெயர் வைப்பது கடைந்தெடுத்த மாங்காய்த் தனமென்றும், அப்படிப்பட்ட மாங்காய்களில் நீங்களும் ஒருவராகிவிடக் கூடாது என்பதற்கே இந்தப் பதிவு. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போம், தன்மானம் காப்போம், தன்னம்பிக்கை மிக்க எதிர்காலத்தை உருவாக்குவோம்.

-- மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி

Wednesday, October 22, 2014

சமூக விரோதிகள்

                                தனக்கென்று லட்சியமென்று எதுவும் இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அவர்களுக்கென்று இருக்கும் ஒரே லட்சியம், அடுத்தவர்க்கு கிடைக்கும் அனைத்தும் தனக்கும் கிடைத்து விட வேண்டுமென்பதே. தனக்கு அத்தியாவசியமற்ற பொருளே ஆயினும், தன்னைச் சுற்றி வாழும் அந்த லட்சிய கும்பல் அதை வாங்கிவிட்டால் தானும் அதைக் கடன் வாங்கியாவது வாங்கி விட வேண்டுமென துடிக்கிறார்கள்.

தாம் சந்தோசமாக இருக்கிறோம் என்பதை யார் யாருக்கோ நிருபிக்க துடிக்கிறார்கள், ஆனால் அதை தங்களிடம் நிரூபிக்க தவறிவிடுகிறார்கள். கவலைப் படுவதற்கென்றே அடுக்கடுக்காய் காரணம் வைத்துக் கொள்வார்கள். ஆன்சைட் கிடைக்காதது, அம்பதாயிரம் சம்பளம் போதவில்லை, எனக்கு பின்னாடி சேர்ந்தவன் என்னை விட அதிகம் வாங்குறான் எனப்படுவது இவர்களின் அதிகபட்ச கவலையாக இருக்கும். 
 
இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இவர்கள் எண்ணுவதைத்தான் உலக யதார்த்தம் என பிதற்ற ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தவனோடு தன்னை ஒப்பிட்டே தன்னை மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு பிறக்கப் போகின்ற/பிறந்த குழந்தையையும் அப்படியே வளர்க்க முயலுகிறார்கள். சீர்கெட்ட சமூகத்தை உருவாக்கும் சமூக விரோதிகள் இவர்களைத் தவிர வேறு எவரும் இல்லை. 
 
எல்லோருக்கும் கிடைக்கும் ஒன்று உங்களுக்கு கிடைக்காது போனால், நீங்கள் பாவம் செய்தவர்களல்ல, அவர்களிடத்து தள்ளி நிற்கும் தனித்துவம் வாய்ந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களோடு ஒப்பிட்டு உங்களின் தனித்துவத்தை இழக்காதீர்கள். பிடித்த வேலையை உயிர்ப்போடு செய்யுங்கள், அதில் கிடைக்கும் எதையும் முழு மனதோடு எடுத்துக் கொள்ளுங்கள். மிதமிஞ்சுவது எப்போதும் அனுபவம் மட்டுமே. அதை சேமிக்க பழகிக் கொள்ளுங்கள்.

இவர்களை இவ்வளவு சாடும் அளவிற்கு எனக்கு என்ன நடந்தென்று நீங்கள் கேட்கலாம்? எனக்குள் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எச்சம் என்னுள் வரமாலிருக்க இதைப் பதிகிறேன், இது எனக்காக பதியப் பட்டது, அவ்வப்போது அந்த இழி பிறவிகள் என்னுள் வரும்போது இதை மறுபடியும் மறுமபடியும் படித்து அவர்களை விரட்டுவேன்.

Tuesday, October 21, 2014

இனமெனப் படுவது இரண்டே பிரிவு

மனதிற்பட்ட சிலவற்றை வெளிப்படையாக எழுதுகிறேன். 

என்னளவில், இந்த மனித இனம் வெறும் இரண்டு பிரிவினரால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கிறது. ஒன்று பெரும்பான்மையினர், மற்றொன்று சிறுபான்மையினர். இந்த பெரும்பான்மையினர் எனப்படுபவர் சன/இனத்தொகையாலோ அல்லது பணத்தொகையாலோ உயர்ந்து இருப்பவர். இதற்கு நேர் எதிரான விளக்கத்தை சிறுபான்மையினருக்கான அர்த்தமாக கொள்ளலாம். பெரும்பான்மையினர் என்பதால் அவர் தங்களுக்கான சட்டதை வகுத்துக் கொள்கிறார், சிறுபான்மையினரும் அதற்கு உட்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்தப் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்தால் அது அரசாங்கம் எனப்படுகிறது, அதையே சிறுபான்மையினர் செய்ய நினைத்தால் அதை தேசத் துரோக கலகக் குழு என்கிறது பெரும்பான்மைச் சமூகம். 

பெரும்பான்மையினர் ஆயுதம் தூக்கினால் அது தற்காப்பிற்கு எனவும், ஒடுக்கப்பட்ட இனம் ஆயுதம் தூக்கினால் அது அராஜ தீவிரவாதம் எனவும் சித்தரிக்கப்பட்டுவிட்டது. பெரும்பானமையினரின் மொழி, கலாச்சாரம் இன்னபிற அரசியல்கள் தொடர்ந்து சிறுபான்மையினரின் மீது இன்றைய நாள் வரை தொடர்ந்து திணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து வந்து சிறுபான்மையினருக்காகப் போராடுபவன் தியாகி என்றும் தலைவனென்றும் போற்றப்படும் அதே நேரத்தில், சிறுபான்மைச் சமூகத்திலுருக்கும் ஒருவன் தன் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுப்பது கண்டுகொள்ளப் படாமலே போகிறது

எல்லாத் தெருவிலும், ஊரிலும், மாநிலத்திலும், நாட்டிலும் இவ்வகை சிறுபான்மையினரையும் பெரும்பான்மையினரையும் காணலாம். ஏதோ ஒருவகையில் நீங்களும் நானும் சிறுபான்மைச் சமூகதிலும் அதே நேரம் பெரும்பான்மைச் சமூகத்திலும் இருக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய ஒன்று, அவரவர் அடுத்தவர் தனித்துவதிற்கு மரியாதை கொடுத்து,  பெரும்பான்மையினனாக பிறந்ததற்காக எவ்விதத்திலும் மமதை கொள்ளாமலும், சிறுபான்மையினத்தினறாக பிறந்ததற்காக காழ்ப்பும், தாழ்வு மனப்பான்மையும் கொள்ளாமல் நல்ல கல்வி பெற்று, செய்வன திருந்தச் செய்து, நமக்குப் பின் வரும் சந்ததிகளிடம் அந்த வேற்றுமை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்வதே ஆகும்.

இது என்னளவில் உருவான கருத்து, மாற்றமென்பது ஒவ்வொரு மனிதனின் மனதின்  ஆழத்திலும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்திலே எழுதப்பட்டது. இதில் நான் யாரையும் தாழ்த்தியோ உயர்த்தியோ கூறியிருந்தால் மன்னிக்கவும்.

-- நன்றி

சொலவடை