சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Thursday, May 31, 2012

அனைவருக்கும் ஒரு அதிர்ச்சித் தகவல்

இன்று உலக புகையிலை தினம், இன்று மட்டும் புகை பிடிக்க வேண்டாம் என்று டிவிட்டரிலும், முகநூலிலும் மாறி மாறி மக்கள் தகவல் பரிமாறிக் கொண்டிந்தார்கள் மக்கள். எனக்கொன்றும் அவசியம் இல்லை அதை கடைபிடிக்க. உச்சி வெயில் மத்தியம இரண்டு மணியளவில் கடைக்கு சென்று ஒரு கிங்க்ஸ் வாங்கி பத்த வைத்துக் கொண்டேன். தணலென எறிந்த வெயிலை மேலும் சூடாக்கியது என் புகை. என்னைக் கண்டு ஒரு நாய் விலகிச்  சென்றது. கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு பிச்சை கேட்கும் பிச்சைக்காரி என்னை மட்டும் தவிர்த்துச்   சென்றாள். நான் எதையும் கண்டு கொள்ளாதவனாய் வானத்தை நோக்கி வட்டமாய் புகை விட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு என்ன ஆனதென தெரியவில்லை, சட்டென நான் ஏன் புகை பிடிக்கிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் சமுதாய நோக்கத்தோடு சில கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியதுண்டு. ஆனால் என்னைக்குமே நான் அதை பின்தொடந்து நடந்ததில்லை. என்னால் இதுவரை இந்த உலகத்திற்கு எந்த பயனும் கிடைத்ததில்லை, மாறாக நான் ஊதி தள்ளிக் கொண்டிருக்கும் இந்தப புகை சுற்று சூழலை மாசுபடுத்துவதாகவே அமைகிறது. என் தனிமை என்னை இவ்வாறெல்லாம் யோசிக்கக் செய்தது. ஊருக்கு மட்டும்தாண்டா நீங்கெல்லாம் உபதேசம் பண்ணுவீங்க என்று எள்ளி நகையாடியது என் மனசாட்சி. அடித்துக் கொண்டிருந்த சிகரட்டை அப்படியே கீழே போட்டேன், பாதி மீதம் இருந்தது. இனிமேல் சிகரெட் பிடிக்கப் போவதில்லை என்றும் அப்படி பிடித்தால் எழுதவே போவதில்லை என்றும் உறுதி எடுத்துக் கொண்டேன். நீங்கள் கேட்கலாம் ஏண்டா நாயே நீ எழுதலேன்னா பெட்ரோல் விலை கொறஞ்சிடப் போகுதா இல்ல இந்தியாதான் வல்லரசாகிடப் போகுதான்னு?. உண்மைதான் நான் எழுதாமல் இருந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும்  ஏற்படப் போவதில்லை. ஆனால் அது என்னை பாதிக்கும் . ஒருவேளை என் மனநிலை கூட பாதிப்படையலாம். ஆகவே நான் எடுத்த முடிவு முழுக்க சுயநலமானதே. நான் இதை எழுதுவது என் உணர்ச்சியின் வெளிப்பாடே தவிர யாரையும் திருத்துவதற்காகவோ கருத்து சொல்வதற்காகவோ அல்ல. உலகத்தை திருத்த நான் ஒன்றும் ஏசுவோ புத்தனோ அல்ல. என்னை நானே திருத்த ,உலகத்திற்கு பயனுள்ளவனாக மாற முயற்சிக்கும் மனிதன், மிக மிக மிக சாதாரணமான மனிதன்.  நான் அடித்துப் போட்ட அந்த சிகரெட்டே என் கடைசிப் பாதி சிகரெட்டாக இருக்க கடவதாக. இதுவரை நான் ஏதாவது மரம் நட்டிருப்பேனா? ஒரு சாதாரண பறவையின் எச்சம் கூட விதை தூவி இந்த மண்ணிற்கு உபயோகம் உள்ளதாக இருக்கிறது. ஆறறிவு படைத்த நான் அந்த பறவையின் எச்சத்தை விட கேவலமானவனே. என்ன செஞ்சிருக்கிறேன் இதுவைரைக்கும். பூமி ஏளனமாக என்னைப் பார்த்து சொன்னது நாயே நீ எதுவுமே செய்யாம இருந்திருந்தாலே பூமி நல்லா இருந்திருக்கும். மனிதக் கழிவை மிதிக்கும் போது மேலெழும் அதே அறுவறுப்பு என்னிலும் இப்போது.

அதுசரி அதிர்ச்சி தகவல்னு சொன்னியே அது என்ன? இன்னுமாயா உங்களுக்கு புரியல நான் சிகரெட்ட விட்டுட்டேன்.

பின் குறிப்பு : இது எனக்காக நான் எழுதிய பதிவு. நான் என்று வரும் இடங்களிலெல்லாம் நீங்கள் உங்களை நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல

Monday, May 28, 2012

நாங்கள் கண்ட ராபின் ஹுட் : கல்லூரி நினவுகள் Part - 2

உலகநாதா உனக்கு ஞாபகம் இருக்கா, செகண்ட் இயர் படிக்கும்போது சீனியர் ப்ரவீண் ரூம்ல இருந்து ஃபாரின் ஷாம்ப்பூனு சொல்லிகிட்டு என்னத்தையோ எடுத்துட்டு வந்து தந்த. நாங்களும் அதப்போட்டு குளிக்க, எவ்வளவு போட்டும் கொஞ்சம் கூட நுறையே வராம நாங்க என்னனு கேக்க, நீ உடனே அத தைரியமா பிரவீண் ரூமுக்கு தூக்கிட்டுப்போய் நியாயம் கேக்க, நாயே இது தலைக்கி தேக்கிற ஜெல்லுடானு அவர் சொல்ல. ஒரு வாரத்துக்கு எங்கள மங்கூஸ் மண்டையனாட்டம் சுத்த விட்டியே அத மறக்க முடியுமா?  இப்பிடி ஹாஸ்ட்டல்ல எங்கெங்க இருந்தோ தேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்ப்பூ, பவுடர் டப்பானு ஆட்டயப் போட்டு எங்களுக்காக எடுத்து வந்து தருவியே நீதாண்டா நாங்கள் கண்ட ராபின் ஹுட். அலிபாபா குகைக்கு இணையான பொக்கிஷங்கள் நிறைந்த திலிபனோட பெட்டிய ஓப்பன் பண்ணி முந்திரி பருப்பு, ஒயின், ஃபேர் அண்ட் லவ்லி எடுத்து எங்களுக்கும் தருவியே உனக்குதான் எவ்வளவு பெரிய மனசு. இதையெல்லாம் விட உச்சகட்டமா ஒரு காரியம் பண்ணியே அத மறக்க முடியுமா? பரமசிவன் அண்ணிக்கு பிறந்த குழந்தைய பாக்க நம்மையெல்லாம் ஆஸ்பத்திரிக்கி கூட்டுபோனான். அங்க குழந்தைக்கு போட வச்சிருந்த ஜான்சன் பேபி பவுடர தூக்கிட்டு வந்து, உன் அக்குள்ல போட்டு சுத்துனியே குழந்த பையன் டா நீ. நைட்டு ஒரு மணிக்கு கைலியும், கருப்பு சட்டயும் போட்டு ஹாஸ்ட்டல்ல இருந்து கிளம்பி ப்ராஜகட் பண்ண கெளம்பி போவோமே அத மறக்க முடியுமா. காலேஜுல நம்மலால பாதிக்கபட்ட கன்ஸ்ட்ரக்‌ஷன் ஏராளம். இரும்பையெல்லாம் ஒத்த ஆளா தூக்கி வந்த இரும்பு மனிதன்டா நீ. உனக்கு ஞாபகம் இருக்கா ஒருநாள் இரும்பு தூக்க போன எடத்துல , கொத்தனார் குடிசையில ரேடியோல ஏ.ஆர் ரஹ்மான் பாட்டு ஓடிக்கிட்டு இருந்தது. அதகேட்டு காக்காவடி மெய் மறந்து அங்குனகுள்லயே நின்னுட்டான். அவன் பொறடில அடிச்சு ப்ராஜக்ட் பண்ண வந்த எடத்துல என்ன நாயே பாட்டு வேண்டிகிடக்கு, வேலைய கவனினு சொல்லுவியே, இர்ந்தாலும் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபீஸர்பா நீ.  நாம வெளியில வந்ததுக்கப்புறம் காலேஜுல நிறையா புல்டிங் எழுப்பிட்டாங்களாம்.
ஊர்ல இருக்கிற தீப்பட்டியெல்லாம் தூக்கிட்டு வந்து ரூம்ல வச்சிருவ. பத்த வைக்கிறதுக்கு ரூமுக்கு வற்ரவங்கிட்டெல்லாம் ரெண்டு பஃப் வாங்கி இழுப்பியே. ராஜ தந்திரிடா நீ. உனக்கு ராபின்ஹுட் அட்த ரேட் ஜிமெயில் டாட் காம்னு ஒண்ணு ஆரம்பிச்சு தந்தோம் , எங்களுக்கு தேவையானத மெயில் பண்ண அடுத்த செகண்ட் தூக்கிட்டு தருவியே நீ ஒரு ஏபிடி டா மச்சன். உன்னைய ஏன் இப்பிடி புகழ்றேங்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு. ரெண்டு வருஷமா நான் காணோம்னு தேடிகிட்டு இருந்த பீட்டர் இங்கிலாந்து சட்டைய போன வாரம் பெருந்தன்மையா ரிட்டர்ன் பண்ணியே. நீ போட்டு சுத்துனதினால மீடியம் சைஸ் சட்ட XXXXL சைஸுக்கு மாறிடுச்சு. இருந்தாலும் பரவாயில்ல உன்னோட பெருந்தன்மை அப்பிடியே புல்லரிக்க வச்சுடுச்சு. அப்பிடியே உன் பங்காளி காட்டுப் பூச்சி கருப்பு மணிகிட்ட சொல்லி என்னோட ரெண்டு ஃபாரின் சட்டய வாங்கி குடுத்தேன்னா உனக்கு புண்ணியமா போகும். இப்போ எல்லாரும் ஏதோ ஒரு மூளையில கம்ப்யூட்டர் கம்பெனில உக்காந்து பொட்டி தட்டினு இருக்கோம். போன வாரம் நீ ஆபீஸ்ல மௌஸ் தூக்கிட்டேனு கேள்விப் பட்டேன். அப்பிடியெல்லாம் பண்ணாத நாதஸ் நவ் வீ ஆர் ப்ரொஃபஷனல்ஸ் (அப்பிடினு நமக்கு நாமளே முகமுடி போட்டுகிட்டு இருக்கோம் வெங்காயம்). 
                இப்பிடி எல்லோருடைய கல்லூரி வாழ்க்கையிலயும் ஒரு ராபின் ஹுட் இருப்பார், நேரம் இருந்தா அவங்களப் பத்தியும் நெனச்சு பாருங்க. சிரிக்க மறந்து கிடக்கிறோம் நம்மை அறியாமலே நம்மை புன்னகை செய்ய வைக்கிறது நம்முள் புதைந்து கிடக்கும் கல்லூரி.

Thursday, May 10, 2012

காறித் துப்பாம என் கதைய படிங்க :-)

நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது, என்னிடம் நேராக வந்தவள் தனியாக பேச வேண்டும் என்றாள். தூண்டிலில் சிக்கிய மீனாய் மறு பேச்சு பேசாது அவள் பின்னே சென்றேன். தனிமையான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே நின்றவள், என்னை நோக்கி திரும்பினாள். உன்கிட்ட நிறையா பேசணும், இப்போ டைம் இல்ல, நிறையா பேசணும் போல இருக்கு, இன்னிக்கி ராத்திரி எங்க வீட்டுல எல்லோரும் திருச்செந்தூர் போறாங்க, நான் ஆபீஸ்ல வேலையிருக்குன்னு பொய் சொல்லிட்டேன். உன்கிட்ட நிறையா பேசணும், கண்டிப்பா நீ வரணும் என்று சொன்னவள் என் பதிலுக்கு காத்திராமல் வந்த திசை நோக்கி நடந்தாள். இதற்கு சராசரியான ஒரு ஆண் என்ன பதில் சொல்லியிருப்பானோ அதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன். ஆனால் பெண்களுக்கு நுண்ணறிவு அதிகம். அதனால் நான் சொல்ல நினைத்ததை அசடு வழிந்த  என் கண்களிலே  அவள் அறிந்து கொண்டாள். அவளுக்கும் எனக்கும் அதிகமாக பழக்கமில்லை, ஆனாலும் என் ஓரக்கண்ணும் அவளின் ஓரக்கண்ணும் அவ்வப்போது முட்டிக் கொள்ளும். சற்று முன் நடந்த நிகழ்வுகளை ஒன்று விடாமல் நண்பர்களிடம் ஒப்பு வித்தேன். நண்பனுக்கு ஒரு நல்லது நடக்கப் போவுதுன்னா நம்ம பயலுக உயிரையே கொடுப்பாய்ங்களே, ஆளாளுக்கு ஒண்ணு ஏத்தி விட்டானுக. அதுல ஒருத்தன் சொன்னான் "தம்ப் க்ளவுஸ்(thumb glouse)" வாங்கிட்டு போ மச்சினு, நான் ஒரு தத்தி எனக்கு முதல்ல புரியல, அப்புறம் தெளிவா விளக்கினான் அந்த அனுபவசாலி. ஆனால் உங்களிடம் அதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையிலேயே இப்போதான் முதன் முதல்ல தம்ப் க்ளவுஸ் வாங்கப போறேன். நான் செய்வது சரியா தவறா என்ற விவாதம் என் மனதில் ஓடினாலும் ஒரு தற்க்காபிற்காகவே இந்த தம்ப் க்ளவுஸ். சூப்பர் மார்கெடிற்குள் நுழைந்து தம்ப் க்ளவுஸ் அடுக்கப்பட்டிருக்கும் ரேக்கை நோக்கி நடந்தேன். ஆகா எத்தனை விதம், என்னென்ன டிசைன். அட்டைப் படத்தை பார்த்து புல்லரித்து நின்றேன். நம்ம வாழ்க்கையிலையும் இவ்வளவு சீக்கிரத்துல இதெல்லாம் நட்டக்கப் போவுதா? ஆர்ப்பரித்தது மனம். அங்கு இருந்ததிலேயே விலை அதிகம் உள்ள ஒன்றை எடுத்துக் கொண்டேன். நினைவெல்லாம் அவளின் முகம். மனமெல்லாம் ஏக கற்பனைகள். கையில் எடுத்த தம்ப் க்ளவுசை பில் போடவரிசையில் நின்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ யாரோ சத்தமாக என் பெயரை அழைப்பது போல ஒரு உணர்வு. சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினேன். "ஐயோ இவனா, இவன் லவுட் ஸ்பீக்கர் வாயனாச்சே, என் கையில இருக்கிறதப் பார்த்தான்னா பேஸ்புக்குல ஸ்டேடஸ் அப்டேட்டே போட்டுருவனே" என்று நினைத்துக் கொண்டே அவனிடம் இருந்து நழுவப் பார்த்தேன். அவன் விடுவதாயில்லை, நான் பில் போடும் வரை என்னுடன் இருப்பதாகக் சொன்னான். அவனை எப்படியோ சமாளித்து விட்டேன். எப்படி என்று விளக்க விரும்பவில்லை. ஒரு வழியாக பொருளை பத்திரமாக வாங்கி வெளியேறினேன். அவசரமாக பஸ்ஸில் ஏறி அமர்ந்து, ஒரு நூறு ரூபாயை நீட்டி டிக்கெட் கேட்டேன். ஏன்யா உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? சில்ரையே வச்சிருக்க மாட்டீங்களா என்று அன்பாக சொன்னார் மாண்புமிகு நடத்துனர். எவ்வளவு போராடியும் அவரிடம் சமாளிக்க முடியவில்லை.கடவுளே என்ன சோதனை , நேரம் ஆக ஆக என் முகம் வேர்த்து, சட்டை நனைந்து, வெறி கூடி அப்பப்பா!!! எல்லாத் தடைகளையும் தாண்டி அவள் வீட்டை அடைந்தேன். காலிங் பெல்லை அழுத்தினேன். வெள்ளை நைட்டி அணிந்து ஒரு தேவதை போல அவள் வருவது என் மனக்கண்ணில் தெரிந்தது. நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது. இரண்டாம் முறை காலிங் பெல்லை அழுத்தியதும் என்னை சுற்றிலும் மணியோசை கேட்கத் தொடங்கியது. அது காலிங் பெல்லின் ஓசை போல இல்லை. என் தலை எங்கும் அதே சத்தம். "அச்சம்  தவிர். நைய்யப் புடை, ஆண்மை தவறேல் , மானம் போற்று" என்று மாறி மாறி ஒலித்துக் கொண்டு இருந்தது. சட்டென நினைவு வந்தவனாய் செல்பேசியை காதில் வைத்து என்ன என்றேன். மறுமுனையில் இருந்து "என்ன மச்சி தூங்கிகிட்டு இருக்கியா?" என்று குரல். ”டேய் நாயே கனவில கூட என்னை கன்னி கழிய விடமாட்டீங்களா? அப்பிடி என்னடா என் மேல உங்களுக்கு கடுப்பு” என்று சொல்லியவாறே போனை அணைத்தேன். மறுபடியும் தூங்க நினைத்து தோற்றுப் போனேன். இப்பொழுதெல்லாம் செல்போனை அணைத்து விட்டே தூங்கச் செல்கிறேன், பையில் சில சில்லறைகளையும் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு.


சொலவடை