சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, March 16, 2016

பரிதாபத்திற்குரிதொரு பல்லி


இன்று தார்சாலையின் நடுவே
நசுக்கப்பட்டதொரு பல்லியைக் கண்டேன்.
தலை நசுங்கி, குடல் பிதுங்கி, நாக்குத் தள்ளி
மிகவும் கோரமாய் நசுக்கப்படுக் கிடந்தது.
அது பூட்ஸ் கால்களால் மிதிபட்டோ,
உல்லாச உந்தின் சக்கரம் பாய்ந்தோ,
செத்துப் போயிருக்கலாம்.

இருந்த இடத்தில் இரைகிடைக்கப் பெற்றாலும்,
ஒய்யாரமாய் உலகை ரசிக்கக் கிளம்பி, நசுங்கிய
பல்லியின் வாழ்க்கை பரிதாபத்திற்குரியதே.
அந்தப் பல்லி உன்னிலும் என்னிலும்
செத்துக் கிடக்கிறதென்பது அதைவிட
பரிதாபத்துக்குரியது...

நசுக்கிய அந்தப் பூட்சுக் கால்களை
உறவுகளின் அகம்பாவமென்றோ,
அந்த உல்லாச உந்தின் சக்கரங்களை,
சமனிலையற்ற சமுதாயத்தின் சாபமென்றோ
இக்கவிதை படிக்கும் நீங்கள்,
உருவகப் படுத்திக் கொள்ளலாம், கவிஞனுக்கு
எல்லாவற்றையும் விளக்க வேண்டிய
அவசியம் இல்லை..

Thursday, May 14, 2015

சூடான் எனும் நான் மனிதனால் வஞ்சிக்கப்பட்டவன்

இந்த உலகத்தின் கடைசி ஆண் வெள்ளைக் காண்டாமிருகமாகிய சூடான், தன் தலையை தொங்கவிட்டு நிற்கிறான்.தனிமை அவன் கண்களை கவ்வி நிற்கிறது. பழுப்பேறிய அவன் வாய் இந்த உலகத்தின் முகத்தில் காறி உமிழத் துடிக்கிறது. தன் இனத்தின் கடைசி நம்பிக்கையான சூடானோடு இனம் சேர விலங்கியல் பூங்காவில் மேலும் இரண்டு வெண் காண்டாமிருகங்கள் இருக்கின்றனவாம், இருந்தும் 42 வயதான் சூடானால் இனப்பெருக்கும் செய்ய முடியுமா என்பது இன்றுவரை சந்தேகத்திற்குரிய கேள்வியாகவே விலங்கியல் ஆர்வலர்களிடையே நிலவுகிறது. அப்படி அவனால் முடியாவிட்டால், நீங்கள் இந்தப் புகைப்படத்தில் பார்க்கும் சோக முக சூடானே உலகின் கடைசி வெண் ஆண் காண்டாமிருகம். இவனுக்கு தான் தான் கடைசி என்று கூடத் தெரியுமோ? என்னவோ. கடந்த 2014 ஆண்டில் மட்டும் இவனுடைய இனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அவர்களின் கொம்பிற்காக வேட்டையாடப் பட்டிருக்கிறார்கள், அவர்களின் வெண்கொம்பு மருத்துவ குணம் வாய்ந்ததென்று, வியட்நாம் போன்ற தென்கிழக்காசிய நாடுகளில் நம்பப்படுகிறதாம். இவனுக்கும் பாதுகாப்புத்தராவிட்டால், கொடூரர்கள் இவனையும் வேட்டையாடி விடுவார்கள் என்பதானால் இவனுக்கு இப்போது ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அளிக்கிறது ராணுவம். தன்னைச் சுற்றி இருப்பவர்கள், தன்னை காக்க இருக்கிறார்களா, அழிக்க இருக்கிறார்களா என்று கூட அவன் ஆராய்ச்சி செய்ய விரும்பாதவனாய், இழந்த தன் இனத்தை நினைத்து , நிலம் நோக்கி தன் தலையத் தொங்க விட்டபடி நின்று கொண்டிருக்கிறான். தான் வாழ எதையும் அழிக்கலாம், எப்படியும் வியாபாரம் செய்யலாம் என்றொரு அரக்க குணம் மனிதனைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருப்பதன் விளைவே இந்தக் கடைசி சூடான். இவன் கடைசி என்று எழுதும் போதே எங்கோ வலிக்கிறது, இவன் இனம் பெருக பிரார்த்திப்போமாக.
வெறும் பிரார்த்தனை எதையும் செய்து விடப்போவத்தில்லைதான், ஆனால் அது மனத்தினுள் நல்ல உணர்ச்சிகளை உருவாக்க வல்லது. உணர்ச்சிகளற்ற ஒரு சமுதாயமாக உருவெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்தவனுக்காக, தன் பூமிக்காக, தன் இயற்கைக்காக பிரார்த்திக்கவாவது செய்வது, உங்களுக்குள் இருக்கும் மனிதத்தை எள் அளவாவது நிலைத்திருக்கச் செய்யும்.
மரமும், நதியும், விலங்கும், பறவையும், பூச்சியும் இல்லா ஒரு வெற்றுச் சாம்பல் தேசத்தில் கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு கூட்டம் உலாவும் நேரம் வெகு தொலைவில் இல்லை, அக்கூட்டத்தின் பெயர் மனிதன் என்பதிலிருந்து மருவி, பிணம் என்றாகியிருக்கும் அப்போது.
தகவல் நன்றி : http://www.theguardian.com/…/12/last-male-northern-white-rh…

Thursday, April 30, 2015

கல்யாண்ஜியின் கவிதைகளும் காற்றில் மிதந்த அனுபவங்களும்.


                                  பரபரக்கின்ற இந்த உலகத்தினூடே சைக்கிளில் ஒரு எளிய பயணம் செய்வதைப் போன்றது கல்யாண்ஜியின் கவிதை வாசிப்பது. நீங்கள் அன்றாடம் நடந்து போகும் தெருவில் நின்று தர்பூசணி விற்பவரையும், சப்புக்கொட்டி குச்சி ஐஸ் தின்னும் குழந்தையையும், உங்களின் பார்வை படவேண்டுமென்று கைவிட்டு சைக்கிள் ஓட்டிக் காட்டும் இளவட்டச் சிறுவனையும் என்றைக்காவது உன்னித்து கவனிதிருக்க்கீற்களா? கவலைகளால் நிரப்பப்பட்ட உங்கள் மனம், கண்டதை எண்ணியபடி, தினந்தோறும் நிகழும் இவ்வரிய ஆச்சரியங்களை தவரவிடிகிறது. கல்யாண்ஜி ஒரு குழந்தையின் பார்வையிலிருந்து உலகத்தை பார்க்கிறார். தான் கண்டதையெல்லாம் அப்படியே ஒரு குழந்தையின் வண்ணம் எழுதுகிறார்.
அவர் கவிதை நூலை வாசிக்க ஆரம்பிக்கையில் முகத்தை உர்ரென்று விரைப்பாக வைத்து, ஏதோ செயற்கரிய காரியதத்தை செய்ய முற்படும் சிந்தனையாளன் போல உட்கார்ந்தேன். வாசிக்க, வாசிக்க மெல்ல என்னை அவர் உலகிற்கு அழைத்துச் சென்றார், விரைப்பாக இருந்த என் முகம், நெருப்பு பட்டு உருகும் மெழுகு போல மெல்ல தன் நிலையை மாற்றி இதழ் விரித்து புன்னகைக்க ஆரம்பித்தது. எளிய வாழ்க்கையின் பேரானந்தத்தையும், சொற்ப விசயங்களில் சொர்க்கத்தையும் எனக்கு காட்டியது. தன்மை, இயல்பு இவற்றின் முழு அர்த்ததையும் அறிந்து ஒரு ஞானி போல உணர முடிந்தது.
என்னைக் கடந்து சென்றவர்கள் என்னுள் வீசிச்சென்ற குப்பையை மனதிற் சுமந்து ஒரு நடமாடும் குப்பைத் தொட்டி என வாழ்ந்த வாழ்க்கையை துகிலுரித்துக் காட்டியது. ஆக ஒரு குப்பைத் தொட்டி தன்னை சுத்தப் படுத்திக் கொண்டது கல்யாண்ஜியின் கவிதைகள் படித்து. ஒரு எறும்பை உற்றுக் கவனிக்கச் செய்தது, ஒரு புறாவின் ஒரு நாள் வாழ்க்கை எப்படி இருக்கும் என யோசிக்கச் செயத்தது. என் மனம் முழுக்க இறக்கைகள் உதிர்ந்து கிடக்கிறது இப்போது. அதை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறேன்.
கவிதை வாசிக்க புலமையோ, கவி ஞானமோ ஒரு பொருட்டே அல்ல, பிறக்கும் போது எனக்குள் இருந்த புனித ஆன்மா ஒன்றே போதுமானது. ஒரு குழந்தையின் பார்வையில் உலகைப் பார்க்க கற்றுக் கொடுத்தது. அந்தக் குழந்தைத் தனத்தை தக்கவைத்துக் கொள்ள சமூக வலைத்தளங்களிலிருந்தும், தற்கால தமிழ் சினிமாக்களிலிருந்தும், ஊடகங்களிலிருந்தும் கொஞ்சம் விலகி நிற்பது அவசியமான ஒன்றாகிறது.
மீனைப்போல இருக்கிற மீன் - கல்யாண்ஜி (சந்தியா பதிப்பகம்)
மணல் உள்ள ஆறு - கல்யாண்ஜி (சந்தியா பதிப்பகம்)

Some Observations on O.K Kanmani

                                Vairmathu Started reusing his lyrics I guess, in O.K Kanmani for the song "Theera Ula" , he wrote a line "Pirivondru nerum enru theriyum kanna , en piriyathai athanaal kuraikka maatten", the same line have already been used in "Megangal Ennaith Thottu" Song from Amarkalam. Not criticizing him, just observed this while watching the movie. By the way, the movie is too good, especially I’ve got attracted with the sequences of Ganapathy mama and Bavani aunty (Prakash Raj & Leela Samson) than the protagonist’s. Three main things I want you to observe in the movie, that may give you ecstasy,
1. A. R. Ameen’s debut song “maula wa sallim”, my soul started evaporating after hearing this and still I am not able to get in.
2. P.C. Sreeram’s Red Pixel cinematography, you can observe a dark Red color all over the movie, the color of Red is so dark and sometimes irritates eye, but P.C. Sir handled that color in a coolest way so that it made love with my retina.
3. Anand Krishnamoorthi’s Sound engineering, which is indeed for a cinema to make a viewer to travel with the characters. It is so natural.

P.S. Mani Ratnam presented it well, as I am not discussing any technical aspects of the movie, don’t consider this as a Review, these are just my opinions.

ஊர்தலும் ஊர்தல் நிமித்தமும்


என் தாடைக்கும், காது மடல்களுக்குமான
ஏகப்பட்ட எறும்புக் கிலோமீட்டர்களை
நடந்து கடந்து கொண்டிருந்தது ஒரு சிற்றெறும்பு.
தட்டிவிட கைகள் தொக்கி நின்றாலும்,
சிந்தனை மறத்து மறந்தது.
என் கன்னங்களில் அடிமேல் அடியெடுத்து,
ஆனந்தமாய் ஊர்ந்த்து கொண்டிருந்தது, எறும்பு.
என் கன்னக்குழிதாண்டி வருகையில்
சிறுதாடி மயிர் இடறி பாதைமாறியது,
சுற்றிச் சுழலி ஒரு வட்டமடித்து, மீண்டும்
காதுமடல் நோக்கி தன் பயணத்தை திருப்பியது.
ஊர்தலின் சுகத்தை எறும்பும்,
ஊரப்படும் பொருளின் ஏகாந்ததை நானும்
ஒரு சேர அனுபவிக்கையில் என் காதுமடல்
வந்து சேர்ந்தது அந்த்ச் சிவப்பு சிப்பாய்.
மெல்ல என் காதுகளில் அமர்ந்து
ரகசியம் சொல்வது போல் சொன்னது
கவிதைக்கு நடையென்றேதும் இல்லை
ஊர்தலும், ஊறித் திளைத்தலும் மட்டுமே உண்டென்றது.

Friday, March 6, 2015

மாதம் மூன்று புத்தகங்கள் -1

மாதம் 200 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்குவது மற்றும் அதைப் படித்து முடிப்பது என்ற சபதத்தை எடுத்தாயிற்று. அந்த வகையில், பிப்ரவரியில் படித்து கிழித்தவை,

1. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

நாகர்கோவிலின் தெற்கு மூலையில் ஒய்யாறமாய் வீற்றிருந்த ஒரு புளியமர்த்தை சுற்றி நடக்கும் கதையே இது. 1960 களில், அதாவது இன்றிலிருந்து 55 வருடங்களுக்கு முன்னால் மிகப் பெரும் தொலைநோக்கு பார்வையுடன் கதை எழுதப் பட்டிருக்கிறது. மனித மனத்தின் கோபம், வன்மம், காமம், பேராசை, ஒழுக்கம், அழுகை, சிரிப்பு, பொறாமை என அனைத்து உணர்வுகளையும் ஒரு புளியமரத்தை சுற்றிச் சுழல விடுகிறார். அந்தப் புளியமரத்தைச் சுற்றி நடக்கும் அரசியலையும் அண்மைச் சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆசிரியரை ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். இன்று வரை அரசியலின் நிலைமை அதே அறுபதுகளின் நிலையிலேயே உள்ளதென்பதே மறுக்க இயலாத உண்மை. கதையின் நடை மிகத்தீவிரம், எந்த இடத்தில் இது அறுபதுகளுக்கான கதை என்ற சலிப்பை ஏற்படுத்தவே இல்லை.

2. ஓஷோ , ஒரு வாழ்க்கை # பாலு சத்யா - கிழக்கு பதிப்பகம்

சுருக்கமாகச் சொல்லப்போனால் “Osho's Life in a Nutshell", தெளிவாக ஆராய்ந்து அறுக்காமல் எழுதியிருக்கிறார். அவரை ஒரு மகானாகக் காட்டி, ஓப்பனிங் சாங் வைத்து ஒரு கமர்சியல் படமாக எடுக்காமல், அழகியலோடு யதார்த்த நடையில் எழுதப்பட்ட புத்தகம். ஒஷோப் பற்றி படிப்பது, ஹோலிப் பண்டிகைக்கு பாங்கு அடிப்பதும் ஒன்றே. ஆனந்தம், பரம ஆனந்தம். அவரை ஒரு பைத்தியக்காரன் என்றே பாதி படித்து முடித்தபோது எண்ணத் தோன்றியது, ஆனால் முழுவதும் முடித்தபோது, இந்தியாவின் தலைசிறந்த சுய சிந்தனைக்காரர் என்பதை ஒத்துக் கொள்ளமுடிகிறது. மேலும் அவரைப் பற்றி புத்தகங்களையும் படிக்கத்தூண்டுகிறது. அவரைப் பற்றி அறிய முனைவோருக்கு , இது ஒரு “கற்றுக்குட்டியாளர்களுக்கான கையேடு”.

3. மூங்கில் மூச்சு - சுகா. ஆ. வி பதிப்பகம்

ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே படித்து முடித்தது என்றாலும், திருநவேலியயையும், மாஸ்ட்டரையும் நினைவு கூர்ந்து கொள்ள, வசதியான கனவுப் புத்தகம். தினசரி தூங்குமுன் ஒரு அத்தியாத்தைப் படித்து முடித்து அந்த நினைவுகளிலே தூங்கிப்போவது என்பது ஒரு அலாதி சுகம். திருநவேலியிலிருந்து தள்ளி இருக்கும் நெல்லைக் காரர்கள் அனைவரும் வைத்துக் கொள்ள வேண்டிய புனித நூல் “மூங்கில் மூச்சு”. நெல்லைப் பக்கமே வராதவர்கள், இதைப் படித்து நெல்லையைப் பற்றி சுகாவுடனும் , அவர் நண்பர் குஞ்ஞுவுடனும் வாழ்ந்து தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரிக்கான புத்தகமான அஞ்ஞாடியை ஆராய்ந்துகொண்டிருக்கிறேன், அதைப் படிப்பதைவிட அதில் மூழ்கி அந்த ஆயிரத்து இருநூறு பக்ங்களில் குளிக்கவே எனக்கு விருப்பம்.

மார்ச்சுக்கான புத்தகங்களும் வந்தடைந்துவிட்டன, அடுத்தமாதம் பார்க்கலாம். அதுவரை காற்றில் பறக்கிறேன் , கல்யாண்ஜியுடன் வருகிறேன்.

Thursday, November 6, 2014

தேவையா காதல் முத்தப் போராட்டம்?

              கொச்சியைத் தொடந்து கொல்கத்தாவிலும் பரவுகிறதாம் காதல் முத்தப் போராட்டம். பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துவதை எதிர்க்கும் சில மதச்சார்பு கட்சிகளுக்கு எதிராக, பொது இடத்தில் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டும், முத்தமிட்டுக் கொண்டும் போராட ஜாதவ்ப்பூர் மாணவர்கள் முடிவு. கலந்துகொள்ள விருப்பமுடைய அனைவருக்கும் அழைப்பு.
                       ஏன் போராடமாட்டீங்க, அடுத்த வேளை சோத்த பத்தி உங்களுக்கு கவலை இல்லை, காசு குடுக்க , காலேஜ் ஃபீஸ் கட்ட அப்பாவோட பணம் இருக்கு, சொகுசா வாழ்ற உங்களுக்கு அளவில்லாம ஹார்மோன் சுறக்குது, வேற வழியே இல்லாம எதிர் இனத்தால கவரப் படுறீங்க (அதைக் காதல்னு சொல்ல மாட்டேன்). அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போகுது, இந்த ஹார்மோன் சுரப்பீ, பொது இடத்துல, காலேஜுக்குள்ள கட்டி அணைக்கிறதும், முத்தம் கொடுக்குறதும்னு மேற்கத்திய வாழ்க்கைய வாழப் பழகுறீங்க.

            உங்க கல்லூரிலயே அடுத்த வேள சோத்துக்கும் வழியில்லாம, அடுத்த செமெஸ்ட்டருக்கு ஃபீஸ் எப்பிடிக் கட்டுறதுன்னு தெரியாம, கல்விக் கடனை எதிர்ப்பாத்து , வேலை கிடைச்சாத்தான் என் கஷ்டத்துக்கெல்லாம் தீர்வுன்னு ஒரு வித பயத்தோடயே படிச்சு, இந்தக் இனக்கவர்ச்சி எழவு ஹார்மோன்களலெல்லாம் சுரக்குதா, சுரக்கலையான்னே தெரியாம சொரண கெட்டு வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒரு ஏழப் பையனுக்காக என்றைக்காவது குரல் கொடுத்துருகீங்களா? சமீபத்தில கூட கல்விக்கடன் கிடைக்காம ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன் தற்கொலை.
                 அவன் முன்னாடி உங்க காம லீலைகளை நடத்தி அவனுக்குள்ள காழ்ப்பையும், தாழ்வு மனப்பான்மையையும், மனச்சிதைவையும் ஏற்படுத்தி அவனை காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி ஆக்கி, நீங்க என்னவோ இந்தியாவின் எதிர்காலத் தூண்கள்மாதிரி பேசிக்கிறீங்க.

            எல்லாத்துக்கும் அழைப்பு விடுத்திருக்கிற இந்தப் போராட்டத்துல, கொல்கத்தாவின் வீதிகளிலும், சாலைகளிலும் வாழ்கின்ற, அன்றாடம் சோத்துக்கு குப்பை பொறுக்கியும், பிச்சை எடுத்துகிட்டும் வாழ்ந்துகிட்டு இருக்கிற ஒருவனோ ஒருத்தியோ இந்தப் போரட்டதில கலந்துகிட்டா உங்க அரவணைப்பையும், முத்ததையும், அன்பையும் அவரிடத்தில வெளிப்படுத்துவீங்களா? அப்படி வெளிப்படுத்துனா ஒத்துக்கிறேன் அன்னை தெரசா வாழ்ந்த, அவரைப் பின்பற்றும் புண்ணிய பூமி கொல்கத்தான்னு.

           இது கொச்சியையோ, கொல்கத்தாவையோ சாடி எழுதப் பட்டதில்ல, பொதுவில எல்லாக் கல்லூரிகளும், பொது இடங்களிலும் நடக்கிறதுதான். இது போன்ற போராட்டங்களால் உருவாகப் போவதென்னவோ மனிதர் வாழ மனிதர் நோகும் ஒரு வேற்றுமை சமுதாயாமே.

Monday, November 3, 2014

அனைத்து ராசி நேயர்களுக்கும் சனிப்பெயர்ச்சி பலன்கள்

சனிப்பெயர்ச்சி பலன்கள்

அனைத்து ராசி நேயர்களே, கீழே சொல்லப் பட்டிருக்கும் வழிகளை வாஞ்சையுடன் பின்பற்றினால் ஏழரை சனியில் இருந்து மட்டுமல்ல, ஏகப்பட்ட சனியில் இருந்து தப்பிக்கலாம்.

1.வீண் விவதாம் கூடாது. (குறிப்பாக மேனேஜருடனும், மனைவி (அ) காதலியுடனும்)
2.செலைவக் குறைத்து சிக்கனத்தைக் கடைபிடிப்பது சாலச் சிறந்தது,
3.தேவையற்ற ஆடம்பரப் பொருட்களின் மீது சில விளம்பரச் சனிகள் ஆர்வத்தை தூண்டும் அவற்றை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.
4.கம்ப்யூட்டர் கம்பனிகளில் வேலை செய்வோர் ஆன்சைட்டுக்காக தேவுடு காக்காமல், செய்வன சிறப்பெனச் செய்தால் கிட்டுவது கிட்டும். சில விசச் சனிகளின் வீண் அறிவுரைகளைக் கேட்டு மனம் கலங்க வேண்டாம்
5. வாழ்க்கைத் துணையத் தேர்ந்தெடுப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும், அந்தஸ்த்து என்னும் சனியைத் தள்ளிவைத்து, எளிமையுடன் நடந்தால் நன்மை கூடம், நல்ல வரன் அமையும்.
6.இணைய தளத்தை முறையாக பயன்படுத்துவது மிக முக்கியமாகும், டுவிட்டர், ஃபேஸ்புக்கில் சண்டை என்னும் சனியை தவிர்த்து உருப்படியானவற்றை பகிர்ந்தால் சனிபகவான் மனம் குளிர்வார். அவரும் சமூக வலைத்தளங்களில் உள்ளார் என்பதை மனதில் கொள்க.
7.பணப் பறிமாற்ற விவகாரங்களில் நேர்மையுடன் நடந்து கொள்வது நல்லது. கொடுத்த கடனை திரும்பக் கேட்டால் கோபம் வரப் படாது.
8.குறுக்கு வழியில் பணம், புகழ் சம்பாதித்து வந்தால் அதைவிட மிகப் பெரிய சனி எதுவும் இல்லை. நேர்வழி நடப்பது நல்லது.
9.பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேலை வாய்ப்பை முன்வைத்து மட்டுமே படிக்காமல், உணர்ந்து அர்த்தம் புரிந்து எதற்காக இதை நான் படிக்க வேண்டும் என்று தங்களுக்குள்ளேயும், தங்கள் ஆசிரியரிடமும் விளக்கம் கேட்டு படித்தால் அறியாமைச் சனி விலகும்.
10. கோள்மூட்டிச் சனிகளின் பேச்சைக் கேட்டு , நண்பர்களின் மேல் சந்தேகம் அறமே கூடாது.
11. காதலியுடன் அதிக நேரம் தொலைபேசியில் உரையாடுபவர்கள், உடல் நலத்தை பேணிக்காப்பது நல்லது, அவர்கள் நடந்து கொண்டோ, ஒடிக் கொண்டோ தொலைபேசியில் பேசினால், தொப்பைச் சனி குறையும்.
12. அனைத்து தொழில் செய்பவர்களும் முழு மூச்சுடன் தரமான பொருட்களை தயாரித்து மக்களுக்கு தந்தால் லாபம் பெருகும். பேராசைச் சனி பீடித்து குறுக்கு வழியில் லாபம் தேட நினைப்பவர்கள் மன நிம்மதி கெட்டு எப்படியும் நடு ரோட்டிற்கு வருவர். அதற்கு சனிபகவான் எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்.
13.சினிமா, கலைத்துறையில் இருப்போர், மக்களின் நலனுக்கேற்ப நல்ல படைப்புகளை உருவாக்க வேண்டும். சில சீரழிவுச் சனிகள் மேல் மக்களுக்கு ஆர்வம் இருந்தாலும், அதை ஆதரித்து உங்கள் படைப்புகள் இருந்தால் நீங்கள் சீக்கிரம் ஃபீல்ட் அவுட் சனியால் ஆக்கிரமிக்கப் படுவீர்கள்.
14. பெற்றோர்களால் எப்போதும் பிள்ளைகளுக்கு நன்மையே உருவாகும்.

             கடைசியாக ஒன்று, எல்லா ராசி நேயர்களே, உங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஒற்றை வாழ்க்கையான இதை மற்றவர்க்கு உபத்திரம் கொடுக்காமல், முடிந்த அளவிற்கு சுற்றத்திற்கும் , வரும் சந்ததியற்கும் ஏதோனும் நனமை செய்து விட்டு சென்றீர்களானால், இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் சனி உங்களை அண்டாதிருக்கும்.

--தன்னம்பிக்கையுடன் நம்மைச் சுற்றியுள்ள சனிகளை எதிர்கொள்வோம்.

Saturday, October 25, 2014

பெயரில் என்ன இருக்கிறது?

                      பெயரில் என்ன இருக்கிறது ? பெயரில்தான் எல்லாமே இருக்கிறது எனலாம். நமக்கு பிடித்த ஒருவரின் பெயரைக் கொண்ட எல்லோருமே நமக்கு பிடித்தவர்களாகிறார்கள் என்கிறது உளவியல். அத்தைகய சிறப்பு மிக்கது பெயர். பெயர் சொல்லும் வாரிசே பெயரன் ,பேரன் என்றானது. கனிகளுக்கும், பூக்களுக்கும் , ஊர்களுக்கும், தெருக்களுக்கும் பண்டையத் தமிழன் வைத்த பெயரை உற்றி நோக்கி ஆராய்ந்தால் அதன் வரலாறே வெளிவரும். அவ்வகையில் பெயர், ஒரு வரலாற்றையே உள்ளடக்கி இருக்கிறது. 
              எனக்கு பிடித்தமானவர்களின் பெயரை அடிக்கடி மனதால் உச்சரித்துக் கொண்டும், யாரும் இல்லாத தனிமையில் சத்தமிட்டு உச்சரித்தும், அதை எழுதிப் பார்த்தும் குதூகலித்துக் கொண்டதுண்டு. பெயர் என்பது ஒரு நினைவு, ஒன்றை மறக்காமலிருக்க நம் மனதிற்குள் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் புக்மார்க். புத்தகங்களுக்கு இடையில் வைக்கப்படும் மயில் இறகைப் போல. பெயர்கள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை.
             இவ்வளவு ஏன் கணவனுக்கும், மனைவிக்குமான உறவில் முதல் ஊடலை ஏற்படுத்துவதே இந்தப் பெயர்தான். தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்பதிலிருந்து அது ஆரம்பிக்கிறது. அது என்னவோ தெரியவில்லை, தமிழுக்கு அந்நியமான ஷ, ஸ, வில் தற்போது பல தமிழ் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதை பார்க்க முடிகிறது. ஒரு மொழியை வாழ வைப்பத்தில் பெரும் பங்கு அம்மொழியில் வைக்கப் பட்ட, அம்மொழியைத் தாங்கி நிற்கும் மனிதர்களின் பெயர்களே என்பது என் கருத்து.
             பெருகி வரும் சமசுகிருத பெயர்கள் பெரும் அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. ஆட்டு மந்தையாய் தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறு பெயரிடுவது அடிமுட்டாள்த்தனமாய் படுகிறது. பெயர் ஒருவனுக்கு/ ஒருவளுக்கு கம்பீரத்தை தர வேண்டாமா? வடநாட்டு இனிப்புகளின் பெயரையெல்லாமா அர்த்தம் தெரியாமல் வைப்பது. உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைப்பது என்பது பற்றிச் சொல்ல எனக்கு தகுதியில்லை. ஆனால் அதைப் பற்றி யோசித்து செயல்பட உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. 
                    எனக்குத் தெரிந்த ஒரு சில வழிமுறைகளை சொல்கிறேன் முடிந்தால் பின்பற்றுங்கள்,
1. முடிந்தவரை தமிழில் வையுங்கள். 
2.அரசன், கவிஞர், புலவர்களென்று தனித்துவம் வாய்ந்தவர்கள் தமிழ்நாட்டில் பல்லாயிரக் கண்க்காணோர். அப்படி யாரேனும் ஒருவர் உங்களைக் கவர்ந்தால் அவரின் பெயரை வையுங்கள். 
3.இன்றைய காலகட்டத்திற்கு சீத்தலை சாத்தானார், ஆலங்குடி வங்கனார், மாற்பத்தி போன்ற பெயர் எடுபடாதுதான் ஆனால் அறிவுடை நம்பி , ஆண்டாள், இளவெயினி என்பனவை எக்காலத்துக்கும் இனிமையானவை.
4. இப்படித்தேடி கண்டுபிடிப்பதில் நீங்களும் சில நல்ல புலவர்களையும் அவர்கள் பாடல்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம், பிற்காலத்தில் உங்கள் குழந்தைக்கும் அதன் பெயர் காரணத்தைக் கூறி வளர்க்கலாம். எல்லாக் குழந்தைகளும் தன் பெயருக்கான காரணத்தை பெருமிதத்தோட மற்றவர்க்கு கூறி வளரவே ஆசைப்படுவார்கள். அவர்களின் தன்னம்பிக்கையும் பெருகும்.
5. பெண்குழந்தைகளுக்கு பூக்களின் பெயர்களை வைக்கலாம்,.
6. சரித்திர/ இதிகாச தலைவன்/ தலைவிகள் பெயர் ஏராளம். சீவகன், கோவலன், போன்றவை
7. அல்லது உங்கள் மூதாதையரின் பெயர் கலந்து குமார் கருப்பையா, தம்பி அண்ணாமலை , வெற்றி வாசகம், கோதைத் திருமகள் போன்றவையும் மிடுப்பானவையே.


கடைசியாக ஒன்று  பெயரும், அதன் அர்த்தங்களுமே ஒரு வரலாற்றை தாங்கி நிற்கும் தூண் என்பது என் கருத்து, உங்களது குழந்தைகளை எந்தவித எழுத்துப் பிழைகளும் இல்லாமல் வாயாற அழைக்க தாய்மொழிப் பெயரே சிறந்தது. அந்நிய மொழியில், அர்த்தமே தெரியாமல், எந்தவித பின்புலமும் இல்லாத, வெறும் ந்யூமாராலிஜிக்காக பெயர் வைப்பது கடைந்தெடுத்த மாங்காய்த் தனமென்றும், அப்படிப்பட்ட மாங்காய்களில் நீங்களும் ஒருவராகிவிடக் கூடாது என்பதற்கே இந்தப் பதிவு. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்போம், தன்மானம் காப்போம், தன்னம்பிக்கை மிக்க எதிர்காலத்தை உருவாக்குவோம்.

-- மகிழ்ச்சியுடன் கூடிய நன்றி

Wednesday, October 22, 2014

சமூக விரோதிகள்

                                தனக்கென்று லட்சியமென்று எதுவும் இல்லாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. அவர்களுக்கென்று இருக்கும் ஒரே லட்சியம், அடுத்தவர்க்கு கிடைக்கும் அனைத்தும் தனக்கும் கிடைத்து விட வேண்டுமென்பதே. தனக்கு அத்தியாவசியமற்ற பொருளே ஆயினும், தன்னைச் சுற்றி வாழும் அந்த லட்சிய கும்பல் அதை வாங்கிவிட்டால் தானும் அதைக் கடன் வாங்கியாவது வாங்கி விட வேண்டுமென துடிக்கிறார்கள்.

தாம் சந்தோசமாக இருக்கிறோம் என்பதை யார் யாருக்கோ நிருபிக்க துடிக்கிறார்கள், ஆனால் அதை தங்களிடம் நிரூபிக்க தவறிவிடுகிறார்கள். கவலைப் படுவதற்கென்றே அடுக்கடுக்காய் காரணம் வைத்துக் கொள்வார்கள். ஆன்சைட் கிடைக்காதது, அம்பதாயிரம் சம்பளம் போதவில்லை, எனக்கு பின்னாடி சேர்ந்தவன் என்னை விட அதிகம் வாங்குறான் எனப்படுவது இவர்களின் அதிகபட்ச கவலையாக இருக்கும். 
 
இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இவர்கள் எண்ணுவதைத்தான் உலக யதார்த்தம் என பிதற்ற ஆரம்பித்து விட்டார்கள். அடுத்தவனோடு தன்னை ஒப்பிட்டே தன்னை மதிப்பிட்டுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு பிறக்கப் போகின்ற/பிறந்த குழந்தையையும் அப்படியே வளர்க்க முயலுகிறார்கள். சீர்கெட்ட சமூகத்தை உருவாக்கும் சமூக விரோதிகள் இவர்களைத் தவிர வேறு எவரும் இல்லை. 
 
எல்லோருக்கும் கிடைக்கும் ஒன்று உங்களுக்கு கிடைக்காது போனால், நீங்கள் பாவம் செய்தவர்களல்ல, அவர்களிடத்து தள்ளி நிற்கும் தனித்துவம் வாய்ந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களோடு ஒப்பிட்டு உங்களின் தனித்துவத்தை இழக்காதீர்கள். பிடித்த வேலையை உயிர்ப்போடு செய்யுங்கள், அதில் கிடைக்கும் எதையும் முழு மனதோடு எடுத்துக் கொள்ளுங்கள். மிதமிஞ்சுவது எப்போதும் அனுபவம் மட்டுமே. அதை சேமிக்க பழகிக் கொள்ளுங்கள்.

இவர்களை இவ்வளவு சாடும் அளவிற்கு எனக்கு என்ன நடந்தென்று நீங்கள் கேட்கலாம்? எனக்குள் அவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எச்சம் என்னுள் வரமாலிருக்க இதைப் பதிகிறேன், இது எனக்காக பதியப் பட்டது, அவ்வப்போது அந்த இழி பிறவிகள் என்னுள் வரும்போது இதை மறுபடியும் மறுமபடியும் படித்து அவர்களை விரட்டுவேன்.

Tuesday, October 21, 2014

இனமெனப் படுவது இரண்டே பிரிவு

மனதிற்பட்ட சிலவற்றை வெளிப்படையாக எழுதுகிறேன். 

என்னளவில், இந்த மனித இனம் வெறும் இரண்டு பிரிவினரால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கிறது. ஒன்று பெரும்பான்மையினர், மற்றொன்று சிறுபான்மையினர். இந்த பெரும்பான்மையினர் எனப்படுபவர் சன/இனத்தொகையாலோ அல்லது பணத்தொகையாலோ உயர்ந்து இருப்பவர். இதற்கு நேர் எதிரான விளக்கத்தை சிறுபான்மையினருக்கான அர்த்தமாக கொள்ளலாம். பெரும்பான்மையினர் என்பதால் அவர் தங்களுக்கான சட்டதை வகுத்துக் கொள்கிறார், சிறுபான்மையினரும் அதற்கு உட்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இந்தப் பெரும்பான்மையினர் ஒன்று சேர்ந்து ஆட்சி செய்தால் அது அரசாங்கம் எனப்படுகிறது, அதையே சிறுபான்மையினர் செய்ய நினைத்தால் அதை தேசத் துரோக கலகக் குழு என்கிறது பெரும்பான்மைச் சமூகம். 

பெரும்பான்மையினர் ஆயுதம் தூக்கினால் அது தற்காப்பிற்கு எனவும், ஒடுக்கப்பட்ட இனம் ஆயுதம் தூக்கினால் அது அராஜ தீவிரவாதம் எனவும் சித்தரிக்கப்பட்டுவிட்டது. பெரும்பானமையினரின் மொழி, கலாச்சாரம் இன்னபிற அரசியல்கள் தொடர்ந்து சிறுபான்மையினரின் மீது இன்றைய நாள் வரை தொடர்ந்து திணிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து வந்து சிறுபான்மையினருக்காகப் போராடுபவன் தியாகி என்றும் தலைவனென்றும் போற்றப்படும் அதே நேரத்தில், சிறுபான்மைச் சமூகத்திலுருக்கும் ஒருவன் தன் அடிப்படை உரிமைக்காக குரல் கொடுப்பது கண்டுகொள்ளப் படாமலே போகிறது

எல்லாத் தெருவிலும், ஊரிலும், மாநிலத்திலும், நாட்டிலும் இவ்வகை சிறுபான்மையினரையும் பெரும்பான்மையினரையும் காணலாம். ஏதோ ஒருவகையில் நீங்களும் நானும் சிறுபான்மைச் சமூகதிலும் அதே நேரம் பெரும்பான்மைச் சமூகத்திலும் இருக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய ஒன்று, அவரவர் அடுத்தவர் தனித்துவதிற்கு மரியாதை கொடுத்து,  பெரும்பான்மையினனாக பிறந்ததற்காக எவ்விதத்திலும் மமதை கொள்ளாமலும், சிறுபான்மையினத்தினறாக பிறந்ததற்காக காழ்ப்பும், தாழ்வு மனப்பான்மையும் கொள்ளாமல் நல்ல கல்வி பெற்று, செய்வன திருந்தச் செய்து, நமக்குப் பின் வரும் சந்ததிகளிடம் அந்த வேற்றுமை உணர்வு வளராமல் பார்த்துக் கொள்வதே ஆகும்.

இது என்னளவில் உருவான கருத்து, மாற்றமென்பது ஒவ்வொரு மனிதனின் மனதின்  ஆழத்திலும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்திலே எழுதப்பட்டது. இதில் நான் யாரையும் தாழ்த்தியோ உயர்த்தியோ கூறியிருந்தால் மன்னிக்கவும்.

-- நன்றி

Tuesday, July 15, 2014

துகிலுறிப்பு

கருப்புக் கண்ணாடிக்குள்தான்
கண்கள் தன் சுயரூபத்தைக் காட்டுகின்றன
இருண்ட தனிமையில்தான்
மனம் தன் சேட்டையைக் காட்டுகிறது.
போதுமான தனிமையை வேண்டி எடுத்துக் கொள்ளுங்கள்
உங்கள் குற்றங்களை உங்களிடமாவது ஒப்புக்கொள்ளுங்கள்
உள்ளத்தின் காழ்ப்பை மனமுவந்து பகிர்ந்து கொள்ளுங்கள்
அந்த இருண்ட தனிமையில்
நீங்கள் உங்களுடன் இருக்கும்போது
உங்களின் மறுபக்கத்தை
பகிரங்கமாக கிழித்தெறியுங்கள்.
பகட்டு செய்வதை விட்டு தெரியாத விசயங்களைப் பற்றித்
தெரிந்து கொள்ள முனையுங்கள்.
உங்களின் அழுக்கை சலவை செய்ய அந்த
இருண்ட தனிமையை சலவைக் கல்லாய் பயன்படுத்துங்கள்.
மனம்தன் அழுக்குச் சட்டையை துகிலுறித்து
நிர்வாணப் படுத்துங்கள்.
அதிலொன்றும் தவறில்லை
ஆடைக்குள் அனைத்து மனிதனும் அம்மணமே.
அம்மனமும் அம்மணமே.

காலில் விழுந்த கடவுள்

கதறி அழுது கொண்டிருந்தேன்
கடவுள் வந்தார் அவ்வழியே,
கனிவாய் ஆறுதல் தந்து
கஷ்டங்களைப் போக்குவதாகச் சொன்னார்.
கையெடுத்துக் கும்பிட்டுச் சொன்னேன்
என்னிலும் ஏழைகள் ஆயிரம்,
தன்ன்னம்பிக்கை இல்லா தற்குறிகள் பலகோடி
அவரிடம் காட்டிக் கொள் உன் தயவை,
என்னை நான் பார்த்துக் கொள்கிறேன்.
காலில் விழுந்த கடவுள்
வந்தவழி சென்றார்.


Friday, April 25, 2014

Story of a Social Animal.

                                    அன்றோரு நாள் அதிகாலையில் ஏதோ ஒன்று பழுதாகி அந்தக் குடியிருப்பு முழுக்க மின்சாரம் தடைபட்டது, எல்லோருக்கும் முன் முதல் ஆளாய்ப் போய் புகார் பதிவு செய்தான். குடியிருப்பு நிர்வாகம் தடங்களுக்கு வருத்தம் தெரிவித்ததோடு அன்றிரவே எல்லோர் வீடுகளுக்கும் மின்சாரம் மீண்டு வர வழி செய்தது. இவன் போன சென்மம் செய்த பாவத்தின் பயனால் இவனுடைய வீட்டை மட்டும் எட்டவில்லை மின்சாரம். கடுங்கோபத்துடன் மீண்டுமொருமுறை நிர்வாகத்தை அணுகினான். 
தனியொருவருக்காக நள்ளிரவில் ஆள் அனுப்ப இயலாது, காலை வருவதாக சொல்லி நிர்வாகம் பின்வாங்கியது. கடுப்புடன் போய் படுத்துக் கொண்டான், அன்றிரவு அவன் உடலிலிருந்து ஆவியும், உடலே ஆவியாகவும் வெளியேறியது வெப்பத்தினால்.

இரண்டாம் நாள் நிர்வாகம் ஒரு ஏப்ப சாப்பையான ஆளை பழுது பார்க்க அனுப்பியது, அவன் எதையோ பார்ப்பதைப் போல் பார்த்து பின் வருவதாகக் கூறிச் சென்றான். போனவன் இரவாகியும் வரவில்லை. இரண்டாம் நாள் இரவும் இருட்டில். 
இப்போது இவனுக்கு தோன்றியது தீவிரவாத எண்ணம், தனி ஒருவனுடையவனின் பிரச்சனை யாராலும் கண்டு கொள்ளப் படுவதில்லை, அதுவே ஒரு சமூகத்தின் பிரச்சனையால் இவனுடன் சேர்ந்து குரல் உயர்த்த யாரேனும் வரலாம், ஆக மெல்ல சென்று அந்த குடியிருப்பின் மெயின் MCB யை அணைக்க முனைந்தான், ஆனால் அவனுக்கு தீவிரவாதம் செய்யத் தைரியம் இல்லை. ஆக இரண்டாம் இரவிலும் ஈரத்துணி கட்டிக் கொண்டு தூங்கிவிட்டான் (தாளாத வெப்பத்தின் காரணத்தால் மட்டுமே).

மூன்றாம் நாள் காலை சேதி வந்தது, ”பிரச்சனை அப்பார்ட்மண்ட்டின் உள்க்கட்டமைப்பில் இல்லை, உங்கள் வீட்டுக்குமட்டும் ஈ.பியிலிருந்து கரண்ட் வரல, நீங்க நேரா அங்க போய் ஒரு புகார் பதிவு பண்ணிடுங்க”. இவனுக்கு தலை சுத்திக் கொண்டு வந்தது, இப்பிறவி முழுக்க இவனுக்கு மின்சாரம் எட்டாக் கனியாய் தூரம் செல்லப் போவதைப் போல் ஒரு பதை பதைப்பு. ஈ.பி ஆபீஸில் புகார் பதிவி செய்து விட்டு திரும்பினான். 
மூன்றாம் நாள் இரவு, இப்போது இவனுக்கு தோன்றியது புரட்சிகர எண்ணம், அரசாங்கத்தின் மேல் கோபம் வந்தது, தான் நன்றாகப் படித்து ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகப் போவதாக சபதம் எடுத்துக் கொண்டான். ஆனபின் தன்னை அலைக்கழித்த நிர்வாகிகளையும், அரசாங்கத்தையும் ஒருகை பார்த்துவிட தீர்மானித்தான், அரசாங்கப் பணிகளை துரிதப் படுத்துவேன் என்று காரிருளில், கண்களில் தீப்பொறி பறக்க தீர்மானம் எடுத்துக் கொண்டான். எப்படியோ அப்படியே தூங்கிவிட்டான்.

நான்காம் நாள் காலை, இன்னும் மின்சாரம் வந்தபாடில்லை. இவனுடைய காலை பொலிவில்லாமல் புலர்ந்தது, அலுவலகம் சென்றான், 
இப்போது இவனுக்கு தோன்றியது, "Survival of the Fittest" மனநிலை, அன்று முழுக்க வேலை எதுவும் செய்யாமல், இணையத்தில், மின்சாரம் இல்லாமல் வாழ்வது எப்படி, எளிய முறையில் உடலை குளிர்வித்துக் கொள்வது எப்படி என்று படித்துத் தெரிந்து கொண்டான். இரவு வந்தது, பூட்டிய வீட்டைத்திறந்தான், எப்போதும் போல் கை தானாகச் சென்று விளக்கை ஆன் செய்யச் செல்லவில்லை. விரக்தி, பழகிவிட்டது. தலை கிண் கிண் என்றது, தனிமை மிகப் பெரும் பயத்தை ஏற்படுத்தியது. ஏதும் செய்ய முடியா கையாலாகா நிலை அவனை பின்னுக்கு தள்ளினாலும், ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவன் கைய இறுக்கமாக பற்றிக் கொண்டே இருந்தது. 

ஐந்தாம் நாள் காலை - ஆறு மணி, ”காலிங்பெல் அடிக்கும் சத்தம்”, கண் விழித்து கதவைத்திறந்தான், வெளியில் பால்க்காரன், “சார் கரண்ட் வந்துடுச்சு போல??”. முந்தைய இரவே மீண்ட மின்சாரத்தை இவன் கவனிக்க மறந்திருந்தாலும், அதிகாலையிலாவது அதைத் தெரிவித்த பால்காரன் தேவதூதனாகத் தெரிந்தான். மின்சாரம் இல்லாமலே அவன் முகம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அப்போது அவன் கோவம், புரட்சி, தீவிரவாத எண்ணம் எல்லாம் மறந்து, மீண்டும் ஒரு “Common Man" ஆக, சமூக விலங்காக மாறிக்கொண்டிருந்தான். 

முற்றும்.

Tuesday, January 28, 2014

முன்கதைச் சுருக்கம்

                                 
                             அவன் எது செய்தாலும் நான் அதில் ஒரு படி மேல் செய்ய வேண்டும், இல்லையென்றால் அன்றைக்கு எனக்கு தூக்கம் வராது. அவன் 90 மார்க் எடுத்தால் நான் 95 எடுத்தாக வேண்டும். அவன் 50 ரன்கள் அடித்தால் நான் 100 ரன்களாவது அடிக்க நினைப்பேன். என் பெற்றோர்களும் பெரும்பாலும் அவனோடு ஒப்பிட்டே என்னை வளர்த்தார்கள். இப்படி அவன் எது செய்தாலும் போட்டி போட்டு நானும் செய்து கொண்டிந்த அந்த காலகட்டங்களில், அவன் செய்த ஒரு விசயத்தை என்னால் செய்ய முடியவில்லை. அப்போது நாங்கள் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம், வகுப்பில் வாத்தியார் வர தாமதமான ஒரு நேரத்தில், அனைவரின் காது பிளக்க, கைகளை மடக்கி வாயில் வைத்து அவன் அடித்த விசிலில் சகமாணாக்கர்கள் மத்தியில் அவன் பெரிய பெயரை எடுத்துவிட்டான். என்னுடன் சுற்றித்திரிந்த சிலரும் இப்பொது அவன் பக்கம். இப்போது நான் எப்படியாவது விசில் அடிக்க கற்றுக் கொள்ள வேண்டும், அதுவும் அவனை விட சத்தமாகவும், ஸ்டைலாகவும். அப்போதுதான் வகுப்பில் இழந்த புகழை நான் பெற முடியும். 

அன்றிலிருந்து தீவிரமான பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். எப்போதும் எனது வாயில் எச்சில் அதிகமாக உமிழாதபடி வறட்சியாகவே வைத்துக் கொண்டேன். குளிக்கும் போது, கழிக்கும் போது, சாப்பிடும் போது, தூங்கும் போது கூட என எல்லா நேரத்திலும் விசில் பழகிய வண்ணமே இருந்தேன். ஒரு வாரம் ஆனது, என்னால் இன்னும் சரிவர விசில் அடிக்க வரவில்லை. அவன் அவ்வப்போது வகுப்பிலும், வெளியிலும் விசில் அடித்து தன் கெத்தை நிலை நிறுத்திக் கொண்டிருந்தான். வயித்தெரிச்சல் தாள முடியாத நான், காய்ச்சல் என்று பொய் சொல்லி வகுப்பிற்கு லீவு போட்டு விசில் கற்றுக் கொண்டிருந்தேன். என் இயலாமை எனக்கு பெரும் ஏமாற்றத்தையும் அழுகையையும் வர வழைத்தது. அழுதே விட்டேன். அடுத்த நாள் பள்ளியில் ப்ரேயர் நடந்து கொண்டிருந்தது, நீராடுங் கடலுடுத்தவில் ஆரம்பித்து, அனைவரும் கண் மூடி ஜன கண மன அதி பாடிக் கொண்டிருந்த சமயம், கடவுளின் கருணை எனக்கு கிட்டியது. ஓங்கி அடித்த என் விசிலின் சத்தம் அனைவரின் காதுகளின் கதவுகளைத்திறந்து உள்ளே நுழைந்தது. தாள முடியாத மகிழ்ச்சியில் துள்ளிக் குத்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், ப்ரேயரில் விசில் அடித்த குற்றத்திற்காக ஈ.பீ.கோ ஏதோ ஒரு செக்சனின் படி, தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப் பட்டேன்.

அவர் எனது இன்ன பிற விவரங்களை வாங்கிக் கொண்டு தேசிய கீதத்தை ஒரு முறை எனனை பாடச்சொன்னார். நான் பாடி முடித்தபின், நம்ம தேசிய கீதத்தை யார் எழுதுனது தெரியுமா?, என்றார். நான் தெரியாது என்பது போல் உதடு பிதுக்கினேன். என்ன மொழில எழுதப்பட்டதுன்னாவது ஒனக்கு தெரியுமா தம்பி?, மறுபடியும் உதடு பிதுக்கல். என்னைப் பொறுத்தவரை எனக்கு விசில் வந்து விட்ட சந்தோசம் எனக்கு. அவர் பேச ஆரம்பித்தார், நம்ம தேசிய கீதம், வங்க மொழியில் ரவீந்தரநாத் தாகூரால் எழுதப்பட்டது என்று ஆரம்பித்து, வங்க மாகாணத்தையும், கல்கத்தைவப் பற்றியும் கூறினார். அவர் பேசப் பேச எனக்கு வியப்பு மேலிட்டது. அதுவரை எனக்கு பேசத்தெரிந்த மொழி தமிழ், கொஞ்சம் கொஞ்சமாக படிக்கப் பழகிக் கொண்டிருந்த மொழி ஆங்கிலம், தூர்தர்சன் தொலைக் காட்சி புண்ணியத்தில் ”இருக்கு” என்று தெரிந்த மொழி இந்தி. இப்போது இவர் வங்க மொழியைப் பற்றியும், கல்கதாவைப் பற்றியும் கூறியது எனக்கு புதியதாகவும், திறக்கப் படாத ஒரு பரிசுப் பெட்டியின் கிளர்ச்சியையும் எனக்குள் எழுப்பியது. நான் பின்னோரு நாளில் கல்கத்தா செல்வேன் என்று அப்போது உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். இத்தோடு என் முன் கதைச்சுருக்கத்தை முடித்துக் கொள்கிறேன். அந்த திறக்கப்படாத பரிசுப் பெட்டியில் நான் திறந்தெடுத்தது என்ன என்பதை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, January 24, 2014

எலிகள் இழுக்கும் தேர்

பணம் படைத்த பரங்கி தேசத்தினர் அமர தேர் செய்யப்படுகிறது. கணிணியில் செய்த கயிறு கொண்டு வடம் உருவாக்கப்படுகிறது. வடமிழுக்க வளரும் நாடுகளின் வளங்கள் தேர்வு செய்யப்படுகின்றன. மனிதன் தேரை இழுக்க, மனிதனை குதிரைகள் இழுக்க, குதிரைகளை எருதுகள் இழுக்க, எருதுகளை எலிகள் இழுக்க மெல்ல நகர்கிறது தேர். வேகத்தை அதிகரிக்க உயர்ந்த நிலையில் இருந்து அடி கொடுக்கபடுகிறது. அடி அங்கிருந்து அடுக்கடுக்காய் கீழிறங்கி எக்கச்சக்கமாய் எலிகள் மேல் வந்து விழுகிறது. ஏரோப்ளேன் வேகத்தில் எலிகள் ஓட்டப்படுகின்றன. சேதம் தாங்க முடியாத சில எலிகள் செத்து விழுகின்றன. செத்த எலிகள் சீக்கிரம் அகற்றப்பட்டு, அவ்விடத்தை நிரப்ப அடுத்தடுத்து எலிகள் ரெக்ரூட் செய்யப் படுகின்றன. இப்படியாக நகர்ந்து கொண்டே இருக்கிறது அத்தேர்.

Sunday, October 20, 2013

சுயம்

நன்றாக நீந்திக் கொண்டிருந்த மீனை தூக்கி பரந்து விரிந்த பாலை வனத்தில் போட்டார்கள், அதுவும்  தட்டுத்தடுமாறி நடக்கப் பழகி கொண்டு சில நாட்களில் தன்னை ஒட்டகமாக மாற்றிக் கொண்டது. நன்றாகப் போய்க் கொண்டிருந்த வேளையில் அதை மரமேறச்சொல்லி வற்புறுத்தி குரங்காக்கினர், பின் பருந்து, சிலந்தி, பல்லி என பல உருவங்கள் எடுத்து தன்  சுயத்தை இழந்து சுண்ணாம்பாகிப் போனது.  அந்த சுண்ணாம்பு சுவருக்கு அடிப்பதற்காக நீரில் கரைக்கப்பட்டது, திடீரென சுயத்தை உணர்ந்த சுண்ணாம்பு கொதித்தெழுந்தது. ஆனால் வாளியைத்தாண்டி அதன் வீரியம் வெளிப்படவில்லை.

Thursday, September 5, 2013

இனி கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப்போவதில்லை.

                        நீங்க சவுத் இந்தியனா, உங்காளுங்க ரஜினிய கடவுளா பாப்பாங்களாமே? என்னா ராஸ்கலா? தமிழ் சினிமால எல்லாரும் இப்பிடித்தானா? இது போன்ற  அரை வேக்காட்டு கேள்விகளை கடந்த இரண்டு வருடங்களாக கேட்டுக் கேட்டு காது புளித்த நிலையில் இதை நான் எழுதத் தொடங்குகிறேன். தொடக்கத்தில் இந்தப் பொடியர்களுக்கு ரஜினியின் பெருமையை எடுத்துக் கூறிக் கொண்டுதான் இருந்தேன், ஆனால் இனி நான் கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப் போவதில்லை.  

கதைக்கு வருவோம்.
                                        நீங்க ரஜினிய தெய்வமா பாக்குறீங்களே, படிப்பறிவு இருக்கிற எவனாவது இப்பிடி செய்வானா? என்றான். சரி நீங்க யாரெல்லாம் தெய்வமா பாப்பீங்க என்றேன். ஒரு நமட்டுப் புன்னகையுடன் எங்களுக்கு காளி, ராம், சிவ்  இவங்க தான் தெய்வம் என்றான் புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு. காளி, ராம், சிவ் இவங்கல்லாம் எப்ப வாழ்ந்தாங்கன்னு சொல்ல முடியுமா? என்பது என் கேள்வி ? அவங்கள்லாம் இதிகாச நாயகர்கள், காலத்தால் அழிக்க முடியாதவங்க, அவங்க வாழவும் இல்லை சாகவும் இல்லை என்றான் பெருமிதம் பொங்க. ஆக, கதைகளில வர்ற  கதாப் பாத்திரங்கள, கார்ட்டூன் கேரக்டர்கள கடவுளா கும்பிடறீங்க அப்பிடித்தானே? உங்களைப் போல இல்லாத ஒரு விசயத்தை கடவுளா பாக்குறதுக்கு (சற்றே நிறுத்திக் கொண்டு), ஒரு பாமரன், உழைப்பாளி, சினிமாவை மட்டுமே தனது கேளிக்கையாக கொண்டிருப்பவன், தன்னை சந்தோசப் படுத்துபவனையும் தன்  மனக் குழப்பத்திற்கு வசன மருந்து தருபவனையும் கடவுளா பாக்குறதுல என்ன தப்பு? என்றவுடன் என்னை எரிச்சலுடன் பார்த்தான். 
                    மேலும் தொடர்ந்தேன், தமிழ் நாட்டுல மூணுவிதமான மக்கள், ஒரு சாரர், முகாலய படையெடுப்புக்குப் பின்னர் இசுலாமியர்களாக மாற்றப் பட்டவர்கள், மற்றொரு சாரர் ஆங்கிலேய வருகைக்குப் பின்னர் கிருத்தவர்களாக மாற்றப் பட்டவர்கள், மூன்றாமவர்கள் தங்களை மெஜாரிட்டி என்று சொல்லிக் கொள்ளும் ஆரிய வருகைக்குப்பின் இந்துக்களாக மாற்றப் பட்ட  கூட்டம். இதை கேட்டவுடன் அவனுக்கு சிறு குழப்பம், அப்படின்னா நீங்க மதமே இல்லாதவர்களா? என் கருத்தை அவனிடம் வைத்தேன், தன்னை உணர்ந்த எவனுக்கும் மதம் தேவைப் பட்டதில்லை. புத்தன் சொன்னதை, கீதை சொன்னதை, பைபிள்  சொன்னத்தை, திருக் குரான் சொன்னதை எங்கள் திருக்குறளும் பல்லாயிரம் வருடத்திற்கு முன்னரே சொல்லியிருக்கிறது. அந்த திருக்குறளைப் பற்றி உனக்கு தெரியுமா என்றென். மதங்களை கடந்த எங்கள் புனித  நூல், மனிதம் பேசிய முதல் நூல், கேள்வியாவது பட்டிருக்கிறாயா என்றேன். இல்லை என்றவாரு தலை அசைத்தான். அந்த திருக்குறள் உனது மொழியில் கூட மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது, படித்துப்பார், மதங்களை துறப்பாய், மனிதனாக உணர்வாய். உங்களது நோக்கம், நல்ல விசயங்களை அறிந்து கொள்வதில் இல்லை. உங்கள் நேரம் போவதற்காக யாரையாவது பற்றி புறணி  பேசுவது. உனக்கு விருப்பம் இருந்தால் எங்கள் ஊரைப் பற்றிய நல்ல விசயங்களை உன்னோடு பகிர்ந்துகொள்கிறேன், இல்லை என் நேரத்தை வீணாக்காமல் இங்கிருந்து போய்விடு என்றேன்.
                          இது ஒரு சாரரை தாக்கி எழுதப் பட்டதல்ல,நான் ஒன்றும் இனவெறியனும் அல்ல,  இவர்களைப் போன்றவர்கள் எல்லா விதமான இனத்திலும், மதத்திலும், மொழியிலும் இருக்கிறார்கள், இந்தப் பதிவு தமிழின் பெருமை பேசுவதற்காக போடப் பட்டதில்லை, இது போன்ற மாக்களை  கடந்து செல்வதற்கும், நல்லவர்தம் உறவு வளர்ப்பதற்கும் போடப் பட்டதே. 

இனி கழுதைகளுக்கு கற்பூர வாசனையை காட்டப்போவதில்லை. அந்த அவசியமும் இல்லை.

Sunday, July 28, 2013

தனிமை

அணைக்க ஆளில்லாத மெழுகு,
அழுது வடிந்து
தனிமைத்தீயில் உருகி
தன்னைத் தானே
அணைத்துக் கொள்கிறது

Friday, July 5, 2013

நான் யார்?

நான் யார்?

என் கண்ணாடியில்
தினம் தெரியும் பிம்பமா?

வெளிச்சத்தில் என்னுடன்
நடந்து வரும் நிழலா?

உணவுக்கு கவளங்கள்
என் வயிற்றை
நிரப்பிக் கொண்டே போயின!

என்னைப் பற்றிய
கேள்விகள் என் மனதை
நிரப்பிக் கொண்டே போயின!

புத்தனைப் படி
உன்னை அறிவாய் என்றார்கள்
புத்தனோ கண்மூடித்தனமாக
என்னை பின் தொடராதே
என்று கூறி விரட்டிவிட்டான்

நகுலன்தான் என்னில்
இப்படியெல்லாம்
கிளர்ச்சியேற்படுத்தியவன்

ஆக அவன் சொன்னதுபோல்
என்னிடம் நானே கேட்டுப் பார்த்தேன்
நான் யார்? என்று
அப்படியும் அறிந்தபாடில்லை!!!

நான் இறந்தபின்
என் சவக்குழியின் மேல்
எழுதிவைப்பார்கள்
நான் யாரென்று
அப்போது வந்து
பார்த்துக் கொள்கிறேன்!

Saturday, May 11, 2013

நல்ல ரசிகனின் கடமை


காலஞ்சென்ற விடுதலை போராட்டத்தியாகி திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாளை நான் அடிக்கடி சென்று சந்திப்பது, சில சமயம் பத்திரிக்கைக்காக பேட்டி எடுப்பதும் என் வழக்கம். என்னையும் அவர் தன் மகனைப் போலவே பாவித்து வந்தார். திரைப்படங்களையே தன் வாழ்நாளில் பார்த்திராத அவர், ஒருநாள் என்னை அழைத்து தான் திரைப்படம் பார்க்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரை அழைத்துக் கொண்டு என் விருப்பமான நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் ராஜபாட் ரங்கதுரை திரைப்படத்திற்கு சென்றோம். படத்தில் ஒருகாட்சியில் சிவாஜி திருப்பூர் குமரன் வேடமிட்டு வருவார். காட்சியின் முடிவில் காவலர்கள் அவரை தடியால் அடித்து அவர் கீழே விழுந்து இறப்பார். இக்காட்சியைப் பார்த்த ராமாயி அம்மாள் அக்கணமே திரையரங்கில் மயக்கம் போட்டு சாய்ந்தார். பின் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று காரணம் கேட்டபோது அவர் சொன்னதாவது, “என் கணவர் இறந்தபோது எனக்கு பன்னிரெண்டரை வயது, பக்குவப்படாத பருவம். என் கணவரின் நடை,உடை பாவனை கூட என் மனதில் சரியாக பதியாத வயது. அவர் இறந்த அன்று கூட அவ்வளவு துக்கப்படவில்லை. இன்று திரைப்படத்தில் அந்த நடிகர் நடித்தது என் கணவர் போலவே பட்டது, அவர் காட்சியில் இறந்து விழுந்த போது என்கணவர் இறந்த போது எழாத துக்கம் மேலெழுந்து கீழே சரிந்தேன்” என்றார். தான் உயிருடன் இருக்கும் வரை இதை எழுத வேண்டாம் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். பின்னாளின் அவர் காலமானபின் இதை நான் பத்திரிக்கையில் எழுதியிருந்தேன். எழுதிய சில மாதங்கள் கழித்து என்னை அலுவலகத்தில் இருந்து திரையரங்கத்திற்கு அனுப்பி அப்போது வெளியாகியிருந்த சிவாஜி கணேசனின் லாரி ட்ரைவர் ராஜாகண்ணு படத்தைப் பற்றி விமரிசனம் எழுதச்சொன்னார்கள். படத்தைப் பார்த்து ஒரு நல்ல சினிமா ரசிகன் என்ற முறையில் எழுத ஆரம்பித்தேன், ”இப்படத்தில் கதை இருக்கிறது என்று சொன்னால் என் பேனா சதை இருக்கிறது என்று எழுதுகிறது, இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் என் பேனா கடித்திருகிறார்கள் என்று எழுதுகிறது”, இப்படியாக தமிழ் சினிமா காணாத ஒரு மிக மோசமான படம் என்ற முறையில் விமரிசனம் எழுதி பிரசுரமும் ஆகிவிட்டது. தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்ட நடிகர் திலகம் என்னை யார் என்று விசாரித்தார், பின் நான் தான் ராமாயி அம்மாளைப் பற்றியும் எழுதியவன் என்று தெரிந்து கொண்டு, “என்னையா ஒன்னு ஒரேடியா தூக்கி வச்சி எழுதுறீங்க, இல்லை போட்டு ஒரேடியா கவுத்தீட்றீங்க” என்று சற்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டுக் கொண்டார். அவரிடம் மிகப் பணிவாக நான் ”ஐயா, நான் உங்க தீவிர ரசிகன், நீங்க இனிமே இதுபோன்ற படங்களில் நடிப்பதை தடுப்பதே என்னைப்போன்ற நேர்மையான ரசிகனின் கடமை, மன்னிக்கனும்” என்றேன். எனது விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொண்டார் நடிகர் திலகம்.

--ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் எழுத்தாளர்/சினிமா விமர்சகர்/பத்திரிக்கையாளர் திருப்பூர் கிருஷ்ணன் கூறியது.

----நமது விருப்பத்திற்குரிய நடிகர் நடிக்கும் நாராசமான படங்களைக் கூட தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் மூலம் சினிமாவை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்கிறோம். மண்டையில் ஊறுகாய் அளவுக்கு மூளையிருக்கிறவன் கூட அப்பிடி செய்ய மாட்டான். இதை நான் எழுதுறதுக்கு காரணம் நேத்து ரெண்டு வெ.மா.சூ.சொ இல்லாத பார்ட்டிங்க, ”பில்லா II” நல்லபடமா, ”சுறா” நல்ல படமான்னு சண்டைபோட்டுகிட்டானுங்க!!!

Thursday, December 27, 2012

நிற்க அதற்குத் தக!                                          என்றும் இல்லாத அளவுக்கு அன்று சற்று நெரிசலாகவே காணப்பட்டது அந்தச்சாலை. பொதுவாக அந்தச் சாலை நாய்களுகென்று குத்தகைக்கு விடப்பட்டது என்று சொல்லலாம். யார் யாரோ நடந்து சென்றாலும் கதைக்காக வேண்டி நாம் அந்த மூன்று பேரை மட்டும் உற்று நோக்க வேண்டும். அவர்களைப்  பார்க்க எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டே போவது போல் தெரிந்தது. அவர்களின் விவாதச் சத்தம் என் காதை கிழித்தது, ஆகவே நான் ஒட்டுக் கேட்டு வந்து உங்களிடம் சொல்வதாய் நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் விவாதம் இந்தியாவின் கல்வி முறையைப் பற்றி இருந்தது. அவர்களுடைய  பெயர் எல்லாம் தெரியாது, ஒருவன், மற்றொருவன், மூன்றாமவன் என்று வைத்துக் கொள்வோம். ஒருவன் சொன்னான், "இந்தியக் கல்விமுறை சுத்தமா சரியில்லை, நல்ல கல்வி என்பது ஒருத்தன முழு மனிதனா மாத்தி அவனுக்கு வாழ்க்கையல்ல சொல்லித் தரனும், ஆனா நம்ம கல்வி முறை பணம் பண்ற மெஷின்களத்தான உருவாக்கிட்டு இருக்கு". இன்னொருவன் பொங்கி, "அதெப்படி நீ சொல்லலாம், கல்வி முறையில எந்தக் குறையும் இல்ல, கற்பிக்கிறவன்ட்டதான் இருக்கு எல்லாக் குறையும். நல்லாப் படிச்சு வாத்தியாராப் போறவன் எத்தனை பேர் சொல்லு, பார்டர்ல பாஸ் ஆகி வேற வேலை எதுவும் கிடைக்காம வாத்தியார் ஆனவன்தான் அதிகமா இருக்கான்.அதுக்காக அவன நான் கொற சொல்லல, வேலைக்கு வந்த பின்னாவது நாம எடுத்திருப்பது புனிதமான கடம, இந்தியாவோட எதிர்காலமே நம்ம கையில்தான இருக்குன்னு நெனைச்சு அவன் பொறுப்போட நடந்துக்க வேணாமா". அதுவரைப் பொறுத்திருந்த மூன்றாமவன் "எல்லாக் ஸ்கூல்,காலேஜுலயும் இந்த நெலமை இல்ல. ஐஐடி எடுத்துக்கோங்க அங்க இல்லாத பெசிலிட்டீசா , வாத்தியாருங்களா, ஆனா அங்க படிக்குறவன்ல 90 சதவீதம் வெளிநாட்டுக்குத்தான போறான். எவனாவது இன்னோவேடிவா எதாவுது கண்டுபிடிச்சு இந்தியாவுக்கு பேர் வாங்கித் தந்தானா. இல்லையே. ஆக நம்ம education system is not teaching anything morally good to the students.என்று தன் பிரசங்கத்தை முடித்தான். தன் வேளை வருமென்று காத்திருந்த இரண்டாமவன், "நான் ஸ்கூல் படிக்கும்போது கேம்ஸ் பீரியட மேத்ஸ் வாத்தியார் எடுத்துப்பார், ஆர்ட் பீரியட சைன்ஸ் வாத்தியாரும், கிராஃப்ட் பீரியட இஸ்ட்ரி வாத்தியாரும் எடுத்துப்பாங்க. இவுங்க இப்பிடி இருக்க கல்வி முறைய குறை சொல்லி என்ன பிரயோஜனம்". முதலாமவன் ஆரம்பித்ததோடு சரி, பின் ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்களுடை பேச்சு நீண்டு கொண்டெ போனது. சட்டென்று அவர்களை கடந்து வேகமாக முன் சென்ற லாரி ஒரு குட்டி நாயின் காலில் ஏற்றிவிட்டு நில்லாமல் சென்றது. மூவரும் செய்வதறியாது நின்று, கதறியபடி மெல்ல மெல்ல சாலையக் கடக்க முயற்சி செய்த நாயை பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் சிறுதும் தாமதிக்காமல் சாலையின் மறுபக்கத்தில் இருந்து ஓடிவந்த, அந்த வறுத்தகோழி உணவகத்தின் காவலாளி லாவகமாக அக்குட்டியைத் தூக்கி சாலையின் மறுபக்கம் விட்டார். மூவரின் விவாதமும் தற்போது இந்தியாவில் தெரு நாய்களின் இன்றைய நிலையைப் பற்றித் திரும்பியது. நாயைக்  காப்பாற்றிய காவலாளி, வேலை நேரத்தில் வெளியில் சென்றதற்காகவும், வறுத்த கோழி உணவகத்தில் கோழி கொறிக்க வந்தவர்களுக்கு கதவை திறந்து விடாததற்கும் திட்டு வாங்கிக் கொண்டிருந்தார். கையாலாகாத நான் இதைக் கதையாய் எழுதத் தொடங்கினேன்.
"கற்க கசடற கற்பவை - கற்றபின், 
நிற்க அதற்குத் தக"

Tuesday, December 25, 2012

பாரதி இறந்த அடுத்த சில நிமிடங்கள்...

பிள்ளைங்களா இன்னிக்கு உங்களுக்கெல்லாம் பாரதிக் கதை சொல்லப் போறேன் என்று ஆரம்பித்தார் தாத்தா, குழந்தைகளும் ஆர்வமாய் கேட்க ஆரம்பித்தனர். 
காலா என் காலருகே வாடா உன்னை காலால் உதைக்கிறேன் போடா என்று கால்களை ஆட்டியபடி பாரதி மரணப் படுக்கையில் படுத்திருந்த வேளை, பாசக் கயிற்றுடன் பக்கம் வந்தான் எமன். பாரதியின் கால்களருகே வந்த சித்திர குப்தனுக்கு வசமாக ஒரு உதை கிடைக்க தாடை தெறிக்க எகிறி விழுந்தான். ஒருவழியாக எமனும் சித்திரகுப்தனும் பாரதியிடம் மன்றாடி அவனது ஆன்மாவை உடலில் இருந்து எடுத்துச் சென்றார்கள் . செல்லும் வழியில் தங்கப் பல்லக்கை தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் வான் வெளியில் இருந்து வந்து கொண்டிருந்தது. எமா, அந்தப் புனித ஆத்மாமை எங்களிட்ம கொடுத்துவிடு அது சுவர்க்கத்தை ஆள வேண்டியது என்று அக்கூடடத்தலைவன் கட்டளையிட பாரதியின் ஆத்மா அவனிடம் ஒப்படைக்கப் பட்டது. இவ்வேளையில்  கோபம் கொண்டு விழித்தெழுந்த பாரதியின் ஆத்மா! அடேய் மூடர்களே, எனது ஆன்மாவை பூமியிலேயே விட்டு விடுங்கள் என்றது. அய்யா உங்கள் உடல் இறந்து விட்டது, இனி உங்களால் பூமியில் வாழமுடியாது என்றது தங்கப் பல்லக்கு கூட்டம். அது எனக்கு தெரியும் என் உடல் சுமை தாளாததால் அதை நான் கழட்டி எறிந்து விட்டேன். என் ஆன்மாவை புவியில் எப்படி வாழ வைப்பது என்று எனக்கு தெரியும் என்றான் பாரதி. ஐயா உங்கள் ஆன்மாவை விடுவிக்க நாங்கள் யார், உங்களுக்கு இங்கு வரவிருப்பமில்லை என்றால் நீங்கள் பூமிக்குச் செல்லலாம், என்ற அடுத்த நிமிடம் பூமியை நோக்கி பாய்ந்தது பாரதியின் ஆன்மா. என்று கதையை முடித்தார் தாத்தா. உடனே சிறார்கள் தாத்தாவிடம், “அது சரி தாத்தா பாரதியோட ஆத்மா இப்போ பூமியில் எங்க இருக்கு?” என்று கேட்க. உடனே தாத்தா பக்கத்தில் இருந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடுத்துக் காட்டி இதுதான் பாரதியின் ஆத்மா என்றார். அத்துடன், “ இதை உணர்ந்து படித்து உள்ளத்தில் ஏற்றிக் கொள்ளும் ஒவ்வொருவனுக்குள்ளும் அவன் ஆத்மா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது” என்றார்.
   துள்ளி எழுந்த குழந்தைகள், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று உரக்கப் பாடியபடி விளையாடச் சென்றனர்.

Wednesday, November 21, 2012

அவ்வா அவ்வா - ஒரு ஆராய்ச்சி கட்டுரை

                                                சேரன் பாண்டியன் படத்தில் வரும் செந்திலின் அவ்வா அவ்வா ஹம்மிங்கை நம்மில் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த அவ்வா அவ்வா என்ற வார்த்தைக்குப் பின்னால் உலக இசையே மறைந்திருக்கிறது. இந்த அவ்வா அவ்வா என்ற பாடல் 80களில் ஆசியாவிலேயே மிகப் பிரபலமாக இருந்திருக்கிறது. அது பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாசன் ஜகாங்கீர் என்பவரின் புகழ்பெற்ற பாப் ஆல்பமாம்...


சரி இந்தப்பாடலைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால், இது ஒரு ஈரானியப் பாடலின் தாக்கத்தில் உருவானது என்று அறிய முடிகிறது. பின்வரும் அப்பாடல் ...


எது எப்படியோ உலக இசையை நமக்கு அறிமுகப்படுத்திய செந்திலுக்கே இப்பெருமை அனைத்தும் சேரும்!!!!

Saturday, October 6, 2012

எர்த் குவாக் இன் எக்கனாமிக் சோன்.

                                                 பி.எல்.லின் அரிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது, நான் எவ்வளவு முயற்சி செய்தும் அந்தப் ப்ரோக்ராமிற்கு அவுட்புட்டே வரவில்லை, அப்படியே அவுட்புட் வந்தாலும் ஏகப்பட்ட லொட்டு லொசுக்கு சொல்லி என்னை கடித்து கொண்டே இருப்பார் என்னுடைய மாண்புமிகு மேற்பார்வையாளர். சற்றே கோபமாக வந்தது பிழைப்பின் மேல், வெறுத்துப் போய் ஒரு கப் காஃபி பிடித்துக் கொண்டு வந்து என் மேஜையில் வைத்து, பிட்டத்தை நாற்காலியில் அமர்த்தி கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். என்னைத்தவிர எல்லோரும் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். நாங்களிருக்கும் பதினைந்தாவது மாடியில் திடீரென்று சின்ன நடுக்கம், என் காஃபிக் குவளையில் கல் எறிந்தது போல் அலை எழும்பியது. இது போன்ற காட்சிகளை நீங்கள் காட்ஜில்லா, 2012  போன்ற படங்களில் பார்த்திருந்தாலும் ஒரு பூகம்பத்தை விளக்க இதை விட உகந்த காட்சி என் மூளைக்கு கிட்டவில்லை. ஆக பூகம்பத்தை எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தோம். திடீரென்று அபாய ஒலிப் பெருக்கி ஆங்கிலத்திலும், தமிழிலும் மாறி, மாறி அலறியது, "எல்லோரும் மேடான திசைய நோக்கி ஓடுங்க..." என்பது போல. இதைக் கொஞ்சம் கூட சட்டை செய்யாத என் அணித் தலைவர், கணிணினுக்குள் தன் தலையை விட்டு தான் எழுதாத ப்ரோக்ராமை எடிட் செய்து கொண்டிருந்தார், ஆத்தர் எனும் இடத்தில் அவர் பெயரைப் போடுவதே அவர் செய்யும் மிகப் பெரிய மறுசீரமைப்பு. வந்த கோபத்தில் அவரிடம் சென்று இன்னும் கொஞ்ச நேரத்தில எல்லோரும் பூமிக்குள்ள போகப் போறோம், பூமிக்குள்ள போய் ப்ரோக்ராம் பண்ற உத்தேசமா வாங்க கீழ போகலாம் என்று அவரை அழைத்துக் கொண்டு கீழே இறங்கினோம். எங்கள் டெலிவரி மேனேஜர் இந்தியாவில் பூகம்பம் என்றும், ஒரு அரை மணிநேரத்திற்கு சப்போர்ட் தர இயலாது என்பதை தாழ்மையுடன் அமெரிக்காவிற்கும், இங்கிலாந்திற்கும் தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டிருந்தார். லிப்ட் ஆஃப் செய்யப் பட்டது. எல்லோரும் எமெர்ஜென்சி எக்சிட் வழியாக படிக்கட்டில் பூமிக்கு இறங்க ஆரம்பித்தோம். முகநூலிலும், டுவிட்டரிலும் மாறி மாறி தகவல் பரிமாறப்பட்டது.  கேண்டினில் இருந்து கழுவாத கையுடன் நண்பர் ஒருவர் இறங்கிக் கொண்டிருந்தார். அவரின் குரலில், "பகவான் மனுஷாள செத்த நேரம் நிம்மதியா சாப்ட விடறானா,ஆத்துக்காரி இன்னைக்கினி பாத்து உருளைகிழங்கு சாம்பார் பண்ணிருந்தா, இந்த பூகாம்பம் இப்பிடி சாப்பிட விடாம கெடுத்துடுத்து", என்றார். ஓய் உலகமே அழியபோவுது உமக்கு உருளைகிழங்கு சாம்பார்தான் முக்கியமா என்று வேறொருவர் சந்தானம் ஸ்டைலில் கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டிருந்தார். ஐ ஆம் சோ எக்சைட்டிங், திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் எர்த் குவேக் ஐ அம் பீலிங் என்று இரண்டு அம்மணிகள் கதைத்துக் கொண்டிருந்தார்கள். பதினைந்து படிகள் கீழிறங்கிய பின்னரும் சிலர் பூகம்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். டீக்கடைகள் நிரம்பி வழிந்தன. கட்டிட வாசலில் நின்று கொண்டிருந்தோம், கை கழுவாத மாமா, அம்பி செத்த தள்ளி நில்லுடா, திரும்ப பூகம்பம் வந்து பில்டிங் தலையில விழுந்துடப் போவுது என்றார். மாமாவின் மொக்கை தாள முடியாததால் அவ்விடம் விட்டு நகன்றேன்.  பிரிந்த காதலர்ககள் கூட கைகோர்த்து தத்தமது தவறுகளை ஒத்துக்கொண்டிருந்தார்கள். எல்லாத்  தொலைக்காட்சிகளிலும் பூகம்பத்தைப் பற்றிய தலைப்புச் செய்தியே, "நான் ஹால்ல படுத்திருந்தேனுங்க பூகம்பம் வந்ததுல உருண்டு உள் ரூம் போய்ட்டேனுங்க" என்று ஒருவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். நல்ல வேளையாக இது எதிர்க்கட்சியின் சதி என்று எந்தத் தலைவரும் அறிக்கை விடவில்லை. நிலநடுக்கம் ரிக்டர் என்று ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். நிலநடுக்கம் பீதியை கிளப்பியதோ இல்லையோ, நாம் இன்னும் பூமியில் மனிதர்களாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பலருக்கு நினைவுப் படுத்தியது.  மறுபடியும் எல்லோரும் பதினைந்தாவது மாடிக்கு போனோம், அழுவாத குறையாக கணிணியை ஆன் செய்து கடவுளிடம் வேண்டிக் கொண்டேன், மாதம் மூனுதடவையாவது நில நடுக்கம் வரணும் கடவுளே!!!!!!!!

எண்டு ஆஃப் த இசுடோரி -எர்த் குவாக் இன் எக்கனாமிக் சோன்.

Friday, August 24, 2012

உலகநாதன் தயிர் வாங்கப் போன கதை

        பாபநாசத்துல உலகநாதன்னு ஒருத்தன் இருந்தானாம், பேருதான் ’உலக’ நாதன் ஆனா தமிழ்நாட்டை விட்டு தாண்டிப்போனா பையனுக்கு டவுசர் கிழிஞ்சிடும். துரதிஷ்டவசமாக அவனுக்கு கல்கத்தாவில் வேலை கிடைத்தது. தட்டுத்தடுமாறி பாபநாசத்திலிருந்து கல்கத்தாவிற்கும் வந்துவிட்டான். கல்கத்தாவில் தன் ஊர்க்காரர் ஒருவரின் வீட்டில் தான் தங்கியிருந்தான். முதல் மூன்று நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். நான்காவது நாள் பையனுக்கு வந்தது கடும் சோதனை, அறையில் உள்ளவர்கள் அவனை அழைத்து தயிர் வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார்கள். தயிருக்கு இந்தியில் தாஹி என்று சொல்லியும் அனுப்பினார்கள். உலகநாயகனுக்கு இவ்விடத்திலுருந்தே கை நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது. வழியெங்கும் தாஹி தாஹி என்று பிதற்றிக்கொண்டே சென்றேன். சட்டென அவன் பின்னாள் பேரிரைச்சலுடன் ஒரு லாரி அவனை கடந்து சென்றது. அது உண்டாக்கிய பாஆஆஆம் என்ற ஒலியில் அதிர்ச்சி அடைந்தவன் சொல்லை மறந்துவிட்டான். கடைக்கும் வந்துவிட்டான். கடைக்காரர் அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்க முழிபிதுங்க விழித்தான். தயிர் பாக்கெட்டை சுட்டிக் காட்டி வாங்கிவிடலாம் என்றால், கருமம் அவன் கண் பார்வையில் படும் படி ஒரு தயிர் பாக்கெட் இல்லை. சரி தயிரை ஆங்கிலத்தில் சொல்லி வாங்கிவிடலாமே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் நமது நாயகனுக்கு சட்டென அதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. பட்டென அவன் தலையில் பல்பு ஒன்று எறிந்தது, அவன் ஒரு விஞ்ஞானியைப் போல் சிந்தித்தான், எட்டாவதில் அவன் படித்த அறிவியல் அவனுக்கு கைகொடுத்தது. கடைக்காரரைப் பார்த்து ஒரு விரலை நீட்டி, மில்க் மிங்கில்ட் வித் பேக்டீரியா ஒன் பாக்கெட் என்றான். கடைகாரருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை, பின் அவரும் தன் எட்டாம் வகுப்பு அறிவியல் ஞாபகம் வந்தவராய், “சாப் ஆப் கர்ட்(CURD) கோ பதாயா, டீகே டீகே” என்று சொல்லி சிரித்துக் கொண்டார். உலகநாதனும் பதிலுக்கு ஒரு டீகே டீகே சொல்லிவைத்துக் கொண்டான்.இதே போல் இன்னொருநாள் உலகநாதனை மண்ணெண்ணை வாங்கி வரச் சொன்னார்கள், அதற்கு அவன் மன்னிச்சுடுங்க அதுக்கு எனக்கு கெமிக்கல் ஈக்குவேசன் என்னானு தெரியாது என்று சொல்லிக் கொண்டே தயிர் வாங்கச் சென்றான். இப்பொதெல்லாம் உலகநாதன் வாலண்டியராகவே தயிர் வாங்க கிளம்பிவிடுகிறான். கடைக்காரரும் அவனைப் பார்த்தலே தயிரை எடுத்து கொடுத்துவிடுவார். 

PS:இந்த உலகநாதன் என்னும் கதாப்பாத்திரம் கற்பனையே, இப்பெயர் கொண்ட யாவரும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். 

Tuesday, August 21, 2012

இலக்கணம் - மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட தரம் வாய்ந்த தமிழ்த் திரைப்படம்

 2007   ஆம் ஆண்டு வெளியான இப்படியொரு திரைப்படத்தை இன்றுதான் பார்த்தேன் என்று நினைக்கும் போது வெட்கமாக இருந்தாலும் , இன்றையாவது காண நேர்ந்ததே என்றெண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இப்படம் முழுக்க வேற்று மொழி கலக்காத தமிழ் உரையாடல்கள். ஆதலால் இப்பதிவையும் முடிந்தவரை தமிழிலேயே எழுத முயல்கிறேன்.

கதைச் சுருக்கம்: சக மனிதர்கள் மேல் அளவு கடந்த அன்பு காட்டும் ஒரு பத்திரிக்கையாளனால் எந்த அளவிற்கு அவன் சுற்றம் நல்வழி அடைகிறது என்பதே!
                         படத்தின் கதையை விரிவாக விவரிக்க விரும்பவில்லை. என்னைக் கவர்ந்த சில இடங்களை குறிப்பிட்டு விடுகிறேன், முதலில் கவர்ந்தது படம் முழுக்க தமிழிலே உரையாடினாலும் கொஞ்சம் கூட மன அயர்வைத் தந்துவிடாத இயல்பான வசனங்கள். படம் முழுக்க பெரியாரின்  கருத்துத் தூவல்கள், வரிகளுக்கேற்ப இசை. எனக்குத் தெரிந்து இப்படத்தில் சில இடங்களில் சங்க இலக்கிய பாடல்களையும் ,பாரதியார் பாடல்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள், அதற்கேற்ப இசை அமைத்திருக்கிறார் பவதாரிணி. ஒரு இடத்தில் நாயகன் தமிழரசன், குடிக்க குவளையில் பால் சுமந்து வரும் தன் மனைவி கயல்விழியிடம் பெரியாரை படித்திருக்கிறாயா என்று கேட்கிறான், அதற்கு கயல்விழி, கடவுளே இல்லை என்று சொல்வாரே அவர்தானே என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுகிறாள். அதற்கு தமிழரசன் பால்ல சர்க்கரையே போடலையா என்று கேட்கிறான், அதற்கு கயல்விழி, இப்பிடி பால குடிக்காமலே சொன்னா என்ன அர்த்தம் என்கிறாள். உடனே தமிழரசன் நீயும் பெரியார படிக்காமலே சொன்னா என்ன அர்த்தம் என்று மடக்கி விடுகிறான். இப்படி பல இடங்களில் ரசிக்க வைக்க கூடிய அளவிற்கு காட்சிகளை செதுக்கியிடுக்கிறார் இயக்குநர். மனதை நெகிழ வைக்கிறது படத்தின் இறுதிக் காட்சி, யாரோ ஒரு தலைவர் இறந்து விடுகிறார் என்று ஊரெங்கும் கலவரம். அந்தக் கலவரத்தில் மாட்டிக்கொள்கிறாள் கயல்விழி. கலவரக்காரன் ஒருவன் எறிந்த கல் கயல்விழி தலையில் பட்டு மயக்கமடைகிறாள். கல்லெறிந்தவனை கயல்விழியின் மகள் பார்த்து விடுகிறாள். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறாள் கயல்விழி. ஆனால் சில நாட்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி அவள் மூளை முழுவதும்  செயல் இழந்துவிடுகிறது.அதனால் இறக்கும் தருவாயில் இருக்கும் அவளது  இதயத்தை வேறொரு இதய நோயாளிக்கு பொறுத்த தமிழரசனிடம் அனுமதி கேட்கிறார் மருத்துவர். அவனும் ஒத்துக் கொண்டு படிவத்தில் கையெழுத்து இடும் சமயத்தில் அந்த இதய நோயாளியில் கணவனும் அழைக்கப் படுகிறான், அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவன் கையெழுத்து இட வரும் நேரத்தில் தமிழரசனின் மகள் அவனைப் பார்த்து அவன்தான் தன் மீது கலவரத்தில் கல்லெறிந்தவன் என்று கூச்சலிடுகிறாள். தமிழரசனின் உறவினர்கள் அவனை வெறிகொண்டு தாக்கி, படிவத்தில் தமிழரசனிடம் கையெழுத்து இட வேண்டாம் என்கிறார்கள். தமிழரசன் அந்தக் கலவரக்காரனின் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து என் குழந்தைக்கு வந்த நிலைமை இவர்களுக்கு வர வேண்டும் என்று கையெழுத்துப் போட்டுவிடுகிறான். அந்த இரண்டு குழந்தைகளின் உச்சிதனை முகர்த்து உங்கம்மா உனக்கு கிடைச்சிடுவாங்க என்று கூறுவதுடன் படம் முடிவடைகிறது.
                          மேலும் இப்படத்தில் பழ.நெடுமாறன், தென்கச்சி கோ.சுவாமிநாதன், சுப.வீர பாண்டியன் போன்றோரும் நல்ல கதாப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கைக்கான,நல்ல படத்திற்கான,   இலக்கணம் இவ்விலக்கணம் ;-)
                            இந்தப்படத்தை தயவு செய்து இணையத்தில் தரவிறக்கம் செய்யாமல் கீழ்கண்ட இணைப்பை தொடர்பு கொண்டு வாங்கவும் 69  ரூபாய் மட்டுமே. இது போன்ற நல்ல படங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், பார்க்காமல் தவிர்ப்பதும் நாம் செய்து கொண்டிருக்கக் கூடிய அன்றாட பாவங்களில் ஒன்று. 
இப்படத்தின் இயக்குநர் சந்திரசெயன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அறிய முடியவில்லை. ஆனால் இப்படி ஒரு படம் எடுத்தவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். இவரைப் போன்ற ஆட்கள் தமிழ்த் திரையுலகிற்குத் தேவை.

Friday, August 17, 2012

வளையல்காரன்

சார் கண்ணாடி வளையல், கவரிங்  வளையல்,பெங்காலி வளையல், குஜராத்தி வளையல், எனப் பலப் பல டிசைன் இருக்கு சார் ஒரே ஒரு ஜோடி வாங்கிக்குங்க சார், நான் கண்டுகொள்ளாத  போதும் கூவிக்கொண்டே என் பின்னால் வந்து தொந்தரவு செய்தான் வளையல்காரன். சார் ஒரு ஜோடி வளையல் பதினஞ்சு ரூபாய் தான் சார், ஒரு ஜோடி வாங்கிக்குங்க சார், எரிச்சலுடன் அவனை முறைத்துவிட்டு முன்னே நகர்ந்தேன். அவனும் விடுவதாயில்லை, வளைகாப்பு வளையல், கல்யாண வளையல், சதுர வளையல், ஜிகினா வளையல் என சகல விதம் இருக்கு சார் நின்னு பாருங்க சார்; யோவ் இத்தினி பேர் இருக்கும்போது என்ன ஏன் சொரன்டுற, 24  வயசாகியும் ஒரு ஃபிகர் கூட மடியல நான் வளையல் வாங்கி என்ன செய்ய? வட்டம் போடவா? என்று வெடித்தே விட்டேன். சிறுதும் இடைவெளி   விடாமல் மெல்லிய புன்னகையுடன் சொன்னான், சார் அம்மாவுக்கோ தங்கச்சிக்கோ வாங்கிட்டுப் போங்களேன் சார். வளையல் போன்றொதொரு வட்டம் தெரிந்தது  அவன் தலைக்குப் பின்னால்.

கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் 1,2 - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

                            இங்கே நான் குறிப்பிடப்போவது படத்தைப் பற்றிய கதை அல்ல, ஆக கதை படிக்கும் எண்ணத்துடன் இப்பதிவை படிக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். அனுராக் இப்படங்களை சுப்பிரமணியபுரம், போன்ற படங்களைப் பார்த்த தாக்கத்தில் எடுத்ததாக ஒத்துக் கொண்டாலும் நாம் பாராட்ட வேண்டிய சில தனித்துவமான விஷயங்கள் ஏக இருக்கின்றன. முக்கியமாக, மிக முக்கியமாக சினேகா கன்வாக்கரின் இசை, இரு படங்களும் சேர்த்து சர்தார் கானின் பிறப்பிலிருந்து அவன் குடும்பமே வன்முறையால் அழியும் வரையிலான கால அளவிற்கு எடுக்கப்பட்டிருக்கிறது (1955-2006). ஆக அந்த அந்த காலத்திற்கு ஏற்றார்போல் இசை அமைத்தற்காக அவரை எப்படி வேண்டுமென்றாலும் போற்றாலும், மேற்கத்திய இசை கொஞ்சமும் கலக்காமால் போஜ்பூரிய பாணியில் ஆர்மோனிய இசை சேர்த்து அவர் போட்டிருக்கும் தார் பிஜிலி பாடலும், பூஸுக்கே டேரிமே பாடலும், உமெனியா பாடலும் வெகுவாக ரசிக்க வைத்தது. இவை  முழுக்க முழுக்க இந்திய இசைக்கருவிகளை வைத்து இசை அமைத்தது என்று அடித்து சொல்லலாம். முதல் பாகத்தில் வரும் ஹிப்பிகள் வகை இசைக் கோர்வையான  I am a hunter பற்றி சொல்லியே ஆக வேண்டும், அந்தக் காலத்து பாப் மார்லே பாடல்கள் போன்று ஜமைக்கன் ஸ்லாங்கில் இதை ஒலிப்பதிவு செய்திருப்பது இசையமைப்பாளரின் நுண்ணறிவைக் காட்டுகிறது. 
                          இவையெல்லாம் போக குண்டர் பரம்பரையின் குலக் கொழுந்துகளான பெர்பெண்டிகுலர், டிஃபனைட் (பேரப் பாரு) போன்றோருக்கு போட்டிருக்க கூடிய வெஸ்டெர்ன் ஸ்டைல் ஓபனிங் இசைக் கோர்வைகளும் அற்புதம். இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே ரோட்டில் நடந்து சென்றால் எவைனயாவது தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு வெறியுடன் தட்டி இருக்கிறார்கள் (ஆக இதை வீட்டில் தனியாக இருக்கும் போது மட்டும் கேட்கவும்). படம் முழுக்க கெட்ட வார்த்தை என்றால் பாடல்களிலும் ஒரே வசை தான். கே கே லூங்கா என்றொரு பாடல் இரு படங்களில் பிண்ணனி இசையாக தழுவி வருகிறது, அதற்கு அர்த்தம் தேடி கூகுளிட்டால் கூகுள் கழுவி கழுவி ஊத்துகிறது. இப்படி படத்தின் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். ட, டா, டி,டீ வரிசையில் ஆரம்பித்து வார்த்தைளே இல்லாமல் இந்தியில் உள்ள அனைத்து எழுத்துகளும் கொண்ட ஒருபாடல், படத்துடன் கேட்காமல் தனியாக கேட்க அருமையாக உள்ளது. மொத்தத்தில் இப்படத்தை "A Musical Gangster film with  a lot of humor" என்று சொல்லிவிடலாம். மேலும் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார், உதாரணமாக இருவர் புகை பிடித்துக் கொண்டிருப்பது போல் காட்சி, கேமெரா புகைக்கு நடுவில் புகுந்து செல்லும் போது நமது மூக்கில் புகை ஏறுகிறது, அவ்வளவு துல்லியம். 
                                     இப்படங்களுக்கு பேக்ரெளண்ட் ஸ்கோர் நம்மூர் ஜீவி.பிரகாசு. இந்தியில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். கதையில் சிறப்பாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே இட்ட பதிவை வைத்து கதையை தெரிந்து கொள்ளுங்கள். இப்படங்களைப் பார்க்கச் சொல்லி நான் உங்களை வற்புறுத்தப் போவதில்லை. ஆனால் கண்டிப்பாக பாடல்கள் எல்லாத்தையும் கேட்டுவிடுங்கள். 

Tuesday, July 24, 2012

இருட்டின் நிறம் இளமஞ்சள் சிவப்பு

எல்லோரும் துயிலச் செல்லும்
இரவு வேளைகளில் நாங்கள்
கண் விழிக்கிறோம்
எங்களது இருட்டு
எங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு
வெளிச்சம் நிரப்பி
அனுப்படுகிறது!
நள்ளிரவில் இங்கிருந்து
வெள்ளைக்காரனுக்கு கூச்சமில்லாமல்
குட் மார்னிங் சொல்கிறோம்!
தினந்தோறும் வானத்தில் மட்டுமே
விடியலைப் பார்க்கிறோம்
இரவையும் பகலையும்
இருட்டையும்  வெளிச்சத்தையும்
தரம்பிரிக்கத்தெரியாது தவிக்கிறோம்.  
கண்மூடித் தூங்கும் பொழுது
எங்கள் கண்களிலும் 
ஒரு இருட்டு தெரிகிறது
ஆனால் எங்களின் இருட்டு மட்டும்
ஏன் இளமஞ்சள் நிறத்தில் இருக்கிறது?

Tuesday, July 17, 2012

In which annie gives it those ones - அருந்ததி ராய்’s Film

     அருந்ததி ராய் கதை, திரைக்கதையில் அவரே ஒரு முன்னணிக் கதாபாத்திரத்தில் நடித்து 1989 வெளிவந்த ஒரு தொலைக் காட்சித் திரைப்படம். தூர்தர்சன் வெளியீடு.  அருந்ததிராயின் கல்லூரி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப் பட்ட படம். அருந்ததிராயை படிக்க விரும்புபவர்கள் இப்படத்தைப் பார்த்தால் அவரைப் பற்றி முழுமையாக புரிந்து கொள்ளலாம். 
                                           1970களின் தொடக்கத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. National institute of Architecture விடுதியில் மாணவர்களின் அன்றாட காட்சிகளை காட்டுவ்திலிருந்து காட்சி தொடங்குகிறது. கதையின் நாயகன் ஆனந்த் எல்லோராலும் அன்னி என்று அழைக்கப் படுகிறான். ஐந்து வருடங்கள் படிக்க வேண்டிய கட்டிடக்கலை படிப்பை எட்டு வருடங்களாக படித்துக் கொண்டிருப்பவன். புத்திசாலிதான், ஆனால் ஒரு ஆசிரியரிடம் சேட்டையைக் கொடுத்ததால், ஒவ்வொரு வருடமும் இறுதியாண்டு தீஸிஸ் ப்ரெசண்ட் செய்யும் போதும் அந்த ஆசிரியர் அவனை தோல்வி அடையச் செய்கிறார். அவனுடன் சக மாணவியாக இறுதி ஆண்டு படிக்கிறார் ராதா (அருந்ததி ராய்). பேச்சிலும் , செயலிலும் பயங்கரத்துடிப்பு. 1970 களில் நடப்பது போல் காட்டியிருப்பதால் அந்தக் கால கட்டதில் ட்ரெண்டாக இருந்த ஹிப்பி கலாச்சாரத்தை அதாவது நடை, உடை பாவனை எல்லாம், பாப் மார்லேவை போல் இருக்கிறது கல்லூரி மாணவர்களின் நடவடிக்கை. 
                                                ஒரு காட்சியில் ஆசிரியர் சமையலறை கட்டமைப்பை பற்றிய பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார், அப்போது பெண் மாணவர்களைப் பார்த்து, சமையலறையைப் பற்றிய சிறு முன்னுரை கொடுக்குமாறு கேட்கிறார். அதற்கு ராதா எழுந்து சமையல் அறையைப் பற்றிப் பெண்கள் தான் தெரிந்த கொள்ள வேண்டுமா, நீங்க ஏன் இத ஆம்பளப் பசங்ககிட்டக் கேட்கக் கூடாது, என்று கேட்கிறார். ஆசிரியர் உடனே கோபப் பட்டு, இது கட்டிடக் கலையப் பற்றிய படிப்பு, பெண்கள் விடுதலையைப் பற்றியதல்ல என்று கூறி ராதாவை வகுப்பை விட்டு வெளியேற்றுகிறார். இப்படி பல காட்சிகளில் ராதா அவுட் ஸ்டேண்டிங் ஸ்டூடண்டாகவே இருக்கிறார். மேலும் ஒரு காட்சியில் ராதாவின் காதலன் அர்ஜூன், ஆசிரியர் சொன்னது சரிதானே, A Women should be in the kitchen right? என்று கிண்டல் செய்கிறான், அதற்கு ராதா சிரித்துக் கொண்டே, No a woman should be on  top.  என்கிறார். இப்படி இலைமறைகாயாக பல இடங்களில் இளமை ததும்பும் அருந்ததி ராயின் வசனம் தெறிக்கிறது. 
                                       இறுதியாண்டு ஆயவறிக்கை மாதிரி சோதனை நடக்கிறது, ஆனந்த் (அன்னி)  தன் ப்ளானை ஆசிரியரிடம் (அவனைப் பார்த்தாலே எரிச்சலாவாறே அவர்தான்). காட்டுகிறான், அவனுடைய ப்ளான் என்னவென்றால், தண்டவாளங்களின் ஓரத்தில் எல்லாம் மாமரங்கள் நடுவது, அதற்கு தண்ணீர் ஊற்றுவது போல ரயில் வண்டியின் கட்டமைப்பை மாற்றி டிசைன் செய்திருந்தான், மேலும் பல கிராமங்களில் தண்டவாளங்களில் தான் மக்கள் வெளிக்கி போவார்கள் என்றும், அவனது இந்த யோசனையை செயல் படுத்தினால், மக்கள் அந்த மரத்தடிகளில் போக வசதியாக இருக்குமென்றும், அதன் மூலம், மரத்திற்கு இயற்கை உரம் கிடைக்கும் என்கிறான். இதைக் கேட்டு விழுந்து, விழுந்து சிரித்த ஆசிரியர் இதெல்லாம் என்னய்யா தீஸிஸ், உங்க ஆயா காலத்துல பண்ண வேண்டியத இப்போ பண்ணிருக்க என்று சதாய்த்து விடுகிறார். மற்றவர்களின் ப்ளான்களுக்கெல்லாம் ஓகே சொல்லிவிட்டு அன்னியின் தீஸிஸை மாற்ற சொல்லி விடுகிறார். இறுதி ஆய்வறிக்கை சமர்ப்பிக்க இன்னும் இரண்டே வாரங்கள் இருக்கும் நிலையில் பேராசிரியர் இவ்வாறு சொன்னது கண்டு இந்த ஆண்டும் கோட்டு தான் என்று நினைக்கிறான் அன்னி.
                     இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருக்கிறது. அர்ஜூனும், ராதாவும், அன்னியை இந்த வருடம் எப்படியாவது அன்னியை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று அவனுக்காக புதிய ப்ளான் தயார் செய்கிறார்கள். இரண்டு வாரங்கள் கடக்கிறது, மாணவர்கள் எல்லோரும் தங்கள் ப்ளான்களையும், மாதிரிகளையும் ட்ராயிங் ரூமில் வந்து வைக்கிறார்கள். மறுநாள் Viva voce. அந்த அறை பூட்டப்பட்டு அரக்கினால் சீல் செய்யப் படுகிறது. அன்றைய இரவு அன்னியும், அர்ஜூனும் சீலை லாவகமாக உடைத்து திருட்டுத்தனமாக உள்ளே நுழைந்து,  அன்னியின் ப்ளானையும்,  கட்டிட மாதிரியையும் வைத்து திரும்பும் போது, யாரோ டார்ச்சு அடித்துக் கொண்டு வருவது போல் தெரிகிறது, பதறி இருவரும் ஒளிந்து கொள்கிறார்கள், அப்போது ஒளியின் மறுபக்கத்தில் இருந்து ஒரு குரல் வருகிறது “Hey Annie Great minds think Alike". என்று சொல்லிக் கொண்டே இன்னொரு மாண்வன் தன் ப்ளானை சமர்பிக்க வந்திருக்கிறான். அட நீயும் தெள்ளவாரிதானா என்று நாம் ஆச்சர்யப் படும் அளவிற்கு அந்த காட்சியைப் படம் பிடித்திருப்பார்கள். 
                                   மறுநாள் முன்னணி கட்டிக்கலை நிபுணர்கள் மாணவர்களின் படைப்புகளை பார்வையிட வருகிறார்கள். ஒவ்வொரு மாணவனாக தனியே அழைக்கப்பட்டு கேள்வி கேட்க்கப் படுகிறான். ராதாவின் முறை வருகிறது. அவள் தன் ப்ளானை பற்றி விளக்குகிறாள். விலங்குகள் தங்கள் எல்லையை வரையறுத்துக் கொள்ள மூத்திரத்தையோ அல்லது அதன் வாசனையையோ பயன்படுத்துகிறது, மனிதன் தான் நிலத்திற்கு வேலி போடுகிறான், இது உன்னது, இது என்னது என்று நிலத்தை பிரித்து வைத்திருக்கிறான், ஆக என்னுடைய ப்ளானை விலங்குகள் வசிக்க தனி இடம், மனிதன் வசிக்க தனியிடம் என்ற முறையில், காடுகளை அழிக்காமல், பழங்குடியினருக்கும், வனவிலங்குகளுக்கும் பாதுகாப்பான வகையில் அமைத்திருக்கிறேன் என்கிறார். அதற்கு நடுவராக வந்த ஒருவர், இந்த மாதிரி டிசைன எல்லாம் க்ளைண்ட் ஏத்துக்க மாட்டாங்க என்கிறார். அதற்கு ராதா, நான் க்ளைண்டுகளுக்காக இதையெல்லாம் டிசைன் செய்யலையே என்கிறார். அதற்கு நடுவர்கள், க்ளைண்ட திருப்தி படுத்த முடியலேன்னா நீ பெரிய ஆர்கிடெக்ட் ஆக முடியாது என்கிறார்கள், நான் அப்பிடி ஒரு ஆர்க்கிடெக்ட் ஆக விரும்பலைங்றார் ராதா. இதன் மூலம் அருந்ததி ராய் படிக்கும் காலத்திலிருந்தே மிகுந்த சமூக அக்கறை கொண்டவராக இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.
                                  கடைசியாக Viva voce ற்கு அன்னியை அழைக்கிறார்கள், தயங்கியபடி உள்ளே நுழைகிறான் அன்னி. அவனைப் பார்த்த ஆசிரியர் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார். அர்ஜூன் ஒரு மாணவனை கூப்பிட்டு, டேய் நீ வெளியே போய்  யம் தூதிற்கு(அந்த ஆசிரியரின் பட்டப் பெயர்) கால் பண்ணுடா என்கிறான். வைவை வோசை அந்த ஆசிரியர் குழப்பிவிடாமல் இருக்க இப்படி ஒரு ஏற்பாடு செய்கிறார்கள். அதற்கேற்றார்ப் போலவே தகுந்த நேரத்திலில் ஆசிரியரின் அம்மா போல குரலை மாற்றிப் பேசி ஆசிரியரை திசை திருப்பும் நேரத்தில், அன்னி தன் ப்ரெசெண்டேசனை நல்லபடியாக முடித்து விடுகிறான். ஓரிரு நாட்கள் கழித்து ரிசல்ட் வருகிறது, ஒரு சிலர் தேர்ச்சி அடைகிறார்கள், ஒரு சிலர் படுதோல்வியைச் சந்திக்கிறார்கள். அன்னி நல்ல மதிப் பெண்கொண்டு தேர்ச்சி அடைகிறான். எல்லோரும் அன்னிக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில் அன்னி கையில் புத்தகத்துடன் எங்கிருந்தோ வருகிறான். என்னவென்று கேட்கையில் தான் பகுதி நேரத்தில் சட்டம் படிப்பதாகவும், வழக்கறிஞறியராய் மாறிப் போராடி தன் தண்டவாள ஓர மாமரத் திட்டத்தை செயல் படுத்தப் போகிறேன் என்று சொல்வதோடு படம் முடிகிறது. 
                                             1989லேயே கல்வி முறை எப்படி இருக்கவேண்டும் என்று ஆராய்ந்து பல விசயங்களை இப்படம் சொல்கிறது. இப்படத்தைப் பார்த்த பாதிப்ப்பினாலேயே சேத்தன் பகத் த்ரீ இடியட்ஸ் எழுதியிருக்க கூடும். என்னுடைய கல்லூரி வாழ்க்கை இப்படம் என் கண் முன்னே கொண்டு வந்தது என்னவோ உண்மைதான். இப்படத்தில் வரும் ஆசிரியரின் கதாப்பாத்திரம் 3 இடியட்ஸின் போமன் இரானியின் கதாப் பாத்திரத்தை ஒட்டியே இருக்கிறது. கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தவர்கள் இந்தப் படத்தை வெகுவாக ரசிக்க முடியும். கண்டிப்பா பாருங்க. நல்ல சினிமா பார்ப்பது ஒர் நல்ல இலக்கியத்தை வாசிப்பதை ஒத்தது. அருந்ததிராயை அறிய இப்படம் 200% உபயோகப் படும்.

சுட்டி : In which Annie gives it those ones 

கூடுதல் தகவல்:  இப்படத்தில் ஷாருக் கான் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். பெரும்பாலும் இதுவே அவரின் முதலோ அல்லது இரண்டாவது படம் என்று நினைக்கிறேன். அருந்ததி ராய் வங்காள த்தந்தைக்கும் , மலையாளி தாய்க்கு பிறந்ததாலோ என்னவோ கம்யூனிசக் கோட்ப்பாடு அவர் ரத்ததிலேயே இயற்கையாக கலந்திருக்கிறது. 
                                                                                                                       END

Wednesday, July 11, 2012

ஆதாமிண்டே மகன் அபு ആദാമിന്റെ മകൻ അബു -2011

               அப்பாவிற்கு பணம் அனுப்பி நாளாகிறது, வீட்டிற்கு ஃபோன் பேசி மாதங்களாகிறது. இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என்று இயந்திரத்தனமாக  வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நேரத்தில், ஒரு மழை இரவில் இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. விருப்பமில்லாமல்தான் திரையிட்டேன், ஆனால் படம் முடிந்தவேளையில் என்னுள் பீறிட்டு எழுந்த கண்ணீரை பாத்தி கட்டி எழுத்தாக மாற்றி இப்படத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன்.

Premise: எழுபதைக் கடந்த ஒரு ஏழை இசுலாமிய தம்பதியினர் ஹஜ் புனித யாத்திரை செல்லப் படும் பாடு!

சில குறிப்புகள் : அபு ஒரு ஏழை வாசனைத்திரவிய விற்பனையாளர், அவருக்கு ஒரு மனைவி ஆயிஷா. அவளுக்குப் பேச்சுத்துணை, அவர்கள் வீட்டில் வளரும் பசுக்களும், ஒரு பலா மரமுமே. ப்சுமையும், குளிர்ச்சியும் நிறைந்த கிராமத்தின் நடுவே அவர்கள் வீடு. எல்லாம் இருந்தும் அவர்களுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு ஏக்கம், ஹஜ் யாத்திரை செல்ல சீக்கிரம் பண்ம் சேர்த்து விட வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு, பெற்றவர்களைப் பற்றி கவைப்படாமல் துபாயில் தன் சம்பாத்யம், தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்பவன். அவனை நினைத்து அடிக்கடி ஆயிஷா அழுவதுண்டு. 
                           அந்த ஊரின் ஹாஜியார் அடிக்கடி மெக்கா, மதினா போய் வந்தவர். அந்த ஊரிலே பணக்காரரும் கூட. அவரிடம் சென்று அபு மக்கா செல்வதற்கான வழிமுறைகளை (Procedures) கேட்கிறார். ஹாஜியார் அடிக்கடி துபாயில் இருக்கும் தன் மகனைப் பற்றி பெருமை பேசிக் கொள்(ல்)வார். தன் மகன் தனக்கு கார் வாங்கித் தந்தான், மூன்று முறை மக்கா கூட்டி சென்றான், இப்படிப் பல. இதையெல்லாம் முகத்தில் புன்னகையோடும், கண்களில் சிறு கலக்கத்தோடும் கேட்டுக் கொள்வார் அபு. அபுவின் கண்கள் இப்படி பல இடங்களில் கலங்கியபோதெல்லாம் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி பீறிட்டு எழும். அது ஏன் என்று நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஹாஜியார் அபுவிடம் தனக்கு தெரிந்த ஒரு ட்ராவல் ஏஜென்சியின் விலாசத்தைக் கொடுத்து தான் அனுப்பியதாக கூறச்சொல்கிறார். 
                                   இங்கிருந்து ஆரம்பிக்கிறது ஆதாமின் ஹஜ் ஆயத்தப் பணிகள், மறுநாள் வெள்ளன எழுந்து கோழிக்கோட்டில் இருக்கும் அந்த மக்கா, மதினா ட்ராவல் ஏஜென்சியின் அஷ்ரஃபை சென்று பார்க்கிறார். அவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லாததை அறிந்து அவருக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான வழிமுறைகளை சொல்கிறான் அஷ்ரஃப். அவருக்கும், அவர் மனைவிக்கும் பாஸ்போர்ட் அப்ளை செய்யும் பணிகளில் துரிதமாக இறங்குகிறார் அபு. ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரைத் தேடிப் போலீஸ் வந்ததென ஆயிசா அவரிடம் அழுதுகொண்டே சொல்கிறார். பதறிப்போன அவர் தான் எந்த ஒரு தவறும் செய்துவிடவில்லையே என்று அல்லாவை பிரார்த்திக்கிறார். மறுநாள் காலை ஊரில் அதிகம் படித்தவரான கோவிந்தன் மாஸ்டரின் துணையுடன் போலீஸ் ஸ்டேசன் செல்கிறார். அங்கு போலீஸ் அவரைக் கேள்விகளால் துளைத்து எடுக்கிறது. நமக்குள்ளும் ஒரு பதற்றம் பீறிடும் வேளையில் அந்தப் போலீஸ்காரர் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காகத்தான் அபுவை அழைத்ததாக கூறுகிறார். அந்தக் காட்சியில் அபுவின் அறியாமையை இயக்குநர் அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார். 
                              கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கிறார் ஒரு ட்ரெங்குப் பெட்டியில், பெரும்பாலும் கடுஞ்சாயாவும், ரொட்டியுமே அவரின் உணவாகிப் போகிறது. தாகத்திற்கு சோடா குடிக்க பலமுறை யோசித்து பின் கிணற்றுத்தண்ணீரை பருகுகிறார். இப்படியெல்லாம் சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். ஆடு மாடுகளை விற்று விடுகிறார், அப்போது ஆயிசாவின் கண்கள் லேசாக கலங்குகிறது, நம் கண்களும்தான். மர வியாபாரியான ஜான்சனிடம் பலா மரத்தை ஐம்பதாயிரத்திற்கு விலை பேசிவிட்டார். ஒரு வாரத்தில் பணம் தருவதற்காக ஜான்சன் வாக்கு கொடுத்துவிட்டான். பணமும் சேர்த்துவிட்டார், தான் கொஞ்சநாளில் மக்கா செல்வதாகவும், தங்களுக்கு ஏதாவது கெடுதல் செய்தால் மன்னித்து விடுமாறும் சுற்றத்தார்களிடம் சென்று விருந்தோம்பல் செய்கிறார். அவர்கள் இவரை ஆரத்தழுவி கண்ணீர் மல்குகிறார்கள். குறிப்பாக கோவிந்தன் மாஸ்ட்டர் இவரைத்தன் அண்ணன் போலவே பாவிக்கிறார். முன்பொரு காலத்தில் இவரிடம் நிலத்தகரறில் சண்டையிட்ட சுலைமான் வாதம் வந்து படுத்துக் கிடக்கிறான். அவனிடம் சென்று தன்னை மன்னிக்குமாறு கேட்கும் காட்சியில் நம்மில் புதைந்து கிடக்கும் ஈகோ என்னும் அரக்கனின் கழுத்தை கத்தி கொண்டு அறுக்கிறார். சுலைமான் இவரின் கைகளை பிடித்துக் கொண்டு அழுகிறான். 
                                          ஒரு வாரம் கடந்தது. ஜான்சனின் மரக்கடைக்கு செல்கிறார். ஜான்சன் சிரித்த முகத்துடன் அவருக்கு ஐம்பதாயிரத்தைக் கொடுக்கிறார். அதை கைகள் நடுங்க ஒரு வெற்றிக் களிப்புடன் வாங்கிக் கொள்கிறார் அபு. மெல்லத்தயங்கியவாறே ஜான்சன் அவரிடம் தான் பலா மரத்தை வெட்டி விட்டதாகவும், மரம் உள்ளீடற்று(hollow) இருப்பதாகவும், அது பலகை செய்ய பயன்படாது, விறகாகத்தான் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறான். அதிர்ச்சியில் உறைந்த அபு, ஜான்சனிடம் பின் ஏன் எனக்கு பணம் தந்தாய் என்று கேட்கிறார். அதற்கு ஜான்சன், நீங்கள் நல்லபடியாக மக்கா போக வேண்டும் என்றுதான் என்கிறான்.ஆனால் அபு அதை வாங்க மறுத்துவிடுகிறார். விஷயம் கேள்விப் பட்டி கோவிந்தன் மாஸ்ட்டர் தயங்கியவாறே அபுவிற்கு ஒரு ஐம்பதாயிரம் கொடுக்க முற்படுகிறார். ஆனால் கடன் வாங்கி தான் ஹஜ் செல்ல விரும்பவில்லை என்று மறுத்துவிடுகிறார். இந்த இரண்டு இடத்திலும் தன் தன்மானத்தை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் அபு. 
                                                இரவில் ஆயிஷாவிடம் அடுத்த வருடம் நாம் ஹஜ்  போய்க் கொள்ளலாம் என்கிறார். அதற்கு ஆயிசா, அபுவை மட்டும் ஹஜ் போய் வருமாறு கேட்கிறாள். அதற்கும் அபு மறுத்து விடுகிறார். காலையில் சீக்கிரம் எழுந்து ட்ராவல் ஏஜெண்ட் அஷ்ரஃபை சந்திது தாங்கள் இந்த வருடம் ஹஜ் பயணம் வரவில்லை என்று கூறுகிறார். அதற்கு அஷ்ரஃப் ஐம்பதாயிரம் தான் தருவதாகவும், இறந்து போன தன் பெற்றோர்களை பணத்தட்டுப் பாடினால் ஹஜ் அனுப்ப முடியாத குறையை உங்களை அனுப்பி தீர்த்துக் கொள்கிறேன் என்கிறான். அதற்கு வெடித்து அழும் அபு, உங்களைப் போல ஒரு மகன் பெற்றதனால் அவர்கள் ஆயிரம் முறை ஹஜ் சென்ற பலனை அடைந்து விட்டதாக கூறி அஷ்ரஃபின் உதவியையும் மறுத்து விடுகிறார். அவர் ஒவ்வொருவரின் உதவியை மறுக்கும் போதும் ஒரு விசயத்தை நாம் உணர முடிகிறது. பெற்று வளர்த்த மகன் தனக்கு எதுவும் செய்யாத விரக்தியிலேயே மற்றவர்களின் உதவிகளையெல்லாம் மறுத்து, ஹஜ் போனால் தன் சொந்தச் செலவிலேயே போவேன் என்று உறுதியோடிருக்கிறார்.
                                                    இரவு உண்விவின் போது ஆயிசாவிடம் , தாங்கள் விற்ற கால்நடைகளை திரும்ப வாங்க வேண்டும் என்று சொல்கிறார். இரவு விடிகிறது, எழுந்து போய் வெட்டப் பட்ட பலா மரத்தின் அருகில் சிறு குழி தோண்டி மரக் கன்றை நடுவதோடு படம் நிறைவடைகிறது. அந்த நடுதல் நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது.


நான் பல மாதங்களுக்கு பின் ஊருக்கு செல்ல முடிவெடுத்து விட்டேன்,  ஆதாமின் மகன் அபுவிற்கும் ,கருப்பையாவின் மகன் குமரேசனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவர் ஹஜ் போக வேண்டும், இவருக்கு ஒரு வீடு கட்ட வேண்டும்.

Tuesday, July 10, 2012

இசைப் பிரியர்கள்இதைத் தவறவிடாதீர்கள்

                                       வெகு நாட்களாக மனதை உறுத்தி வந்த ஒரு விஷயம், இன்று கொட்டித் தீர்த்து விடுகிறேன். முகநூலிலும், துவிட்டரிலும் கீழ்க்கண்ட ஒரு பாடலை முன்பொரு காலத்தில் பகிர்ந்திருந்தேன், லயா ப்ராஜக்ட் என்ற இசைக்குழுவினரால் கம்போஸ் செய்யப் பட்ட ஒரு பாடல், 2004 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப் பட்ட மக்களைக் கொண்டு அவர்கள் நல் வாழ்வுக்காக தொடங்கப் பட்ட ஒரு இசைக் குழு. அவர்கள் இந்திய இசைக் குழு அல்ல, ஆயினும் தமிழக மீனவ வாழ்க்கையை மையமாக வைத்து அய் ல சா என்று ஒரு பாடலும், நாகூர் இசுலாமிய குருமார்களை வைத்து ‘யா அல்லா’ என்றொரு பாடலும் தமிழில் வெளிவந்திருந்தது. வெளிவந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆனபின்ன்னும் நம்மில் பலருக்கு இந்தப் பாடல் தெரியாமல் இருப்பது வெட்கக் கேடான ஒரு விசயம். அப்படி ஒன்றும் மோசமான பாடலை அவர்கள் கொடுத்துவிடவில்லை. இந்தப் பாடலை மூன்று வருடங்களுக்கு முன் கேட்க நேர்ந்தது, அன்றிலிருந்து இன்று வரை தினம் ஒருமுறையாவது என்னைக் கேட்கத்தூண்டிவிடும் இப்பாடல்.இந்தியாவின் பாரம்பரிய இசையை மையமாக வைத்து ஐலசா பாடலை கம்போஸ் செய்திருப்பார்கள். இப்பாடலை நீங்கள் முன்னமே கேட்டிருந்தால் தயவு செய்து பகிருங்கள், இல்லாவிடில் தயை கூர்ந்து ஒரு முறை கேளுங்கள். ஒரு நல்ல இசைக் கோர்வையை இசை ஆர்வலர்கள் தவறவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப்பதிவு . உங்களுக்கு பிடிக்காமல் போகாது என்ற நம்பிக்கையுடன் பகிர்கிறேன்,

பாடல் : ஐ ல சா


பாடல் : யா அல்லா

Monday, July 9, 2012

மனம் எனும் மாயக் குரங்கு

என் கண்கள் 
இறுக்கமாக கட்டப்பட்டன
நான் தீயதையே பார்க்கிறேனாம்....

என் காதுகள்
பஞ்சால் அடைக்கப்பட்டன
நான் தீயதையே கேட்கிறேனாம்....

என் வாய்
துணிகள் கொண்டு பொத்தப்பட்டன
நான் தீயதையே பேசுகிறேனாம்....

என் உடல் 
யாருமற்ற தீவில்
தூக்கி வீசப்பட்டது

என் மனம் 
தன் கோரைப் பல் கொண்டு
என் உடலை கிழித்து வெளிவந்து
அவர்கள் தீயது என்று சொன்னதை 
தேடிச் சென்றது!!!

Saturday, July 7, 2012

தமிழ் சினிமாவின் பசலைப் பாடல்கள்

இது சத்தியமா இலக்கியப் பதிவு அல்ல தொடர்ந்து படிக்கவும்

               சங்க கால இலக்கியங்களில் பசலை நோய் என்ற ஒன்றை அடிக்கடி குறிப்பிடுவார்கள். திருக்குறளில் கூட காமத்துப்பாலில் ஒரு அதிகாரத்தில் தலைவனைக் காணாத தலைவியின் அழகு சுருங்கி பசலை நோய் பீடித்தது போல் ஆனாள் என்று கூறுவார்.ஆக பசலை நோய் என்பது தலைவனைப் பிரிந்த சோகத்தில் தலைவிக்கு வருவது. 
                 என்னுடைய விருப்ப பாடல்களின் ஒரு பெண் தனியாக பாடிய பாடல்களே அதிகமாக இருக்கும். அதாவது ஆண் காதல் தோல்வியில் பாடும் சோகப் பாடல்கள் போல பெண் ஆணை நினைத்துப் பாடும் மோகப் பாடல்கள், நன்றாக கவனியுங்கள் சோகம் அல்ல மோகம். இவ்வகையான பாடல்கள் தமிழ் சினிமாவில் மிகக் குறைவாகவே வந்துள்ளன. சமீபகாலமாக தமிழ் இளைஞர்கள் சோகப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தருவதால் இவ்வகையான பாடல்கள் வருவதே இல்லை. இவ்வகையான பாடல்களுக்கு என்னபெயர் என்று தெரியாமல் நானே தாந்தோன்றித்தனமாக பசலைப் பாடல்கள் என்று வைத்துவிட்டேன். இலக்கியவாதிகள் மன்னிக்க. 
                          எனக்கு விருப்பமான சில பசலைப் பாடல்களைக் காணலாம், இந்த பாடல்களின் வீடியோக்களை ஆவென்று பாராமல் உன்னிப்பாக வரிகளை கேளுங்கள், அனைத்தையும் கேளுங்கள் ஆண்மகனென்ற வீரியம் கொள்ளுங்கள்.

1) படம் - அரசாட்சி 
    பாடல் - இருபது வயசு ஆர்வக்கோளாறு
   பிடித்த வரிகள் - எல்லாமே
                                     
   
   
2) படம் - காதல் கவிதை 
    பாடல் - தத்தோம் தக்திமி தோம் இசை - இளையராஜா
 பிடித்த வரிகள் -யுத்தம் செய்யாத தேகம், நீ மோகம் கொண்டு போராடு,முத்தம் என்றாலே யாகம் வாய் நீரில் நீயும்  நீராடு

3)  படம்:  ஆயுதம் 
     பாடல்: ஆலகால விஷம் சிவனே இசை: தீனா
     பிடித்த வரிகள்: தப்பே இல்லா தப்பு, இது தசைகள் செய்யும் நட்பு 

4) படம் : சாமுராய் 
    பாடல் : ஒரு நதி ஒரு பெளர்ண்மி
   பிடித்த வரிகள் : என் தேகக் கதவு ஜன்னல் எல்லம் திறந்து வைக்கும் 
   ஒருவன், மேலும் பல


5) படம் : காதல் கோட்டை
    பாடல் : மொட்டு மொட்டு மலராத மொட்டு
    

6)படம்: கலாபக் காதலா
   பாடல் : தோகை விரித்தொரு ஆண்மயில்
   பிடித்த வரிகள்: நூறு பெண்களை நீயும் ஏற்றால் நூறில் ஒன்றென நானும்   வாழ்வேன்

Not but not least 
7) படம்: புதுப்பட்டி பொன்னுத்தாயி 
    பாடல் : ஊரடங்கும் சாமத்திலே இசை: இளையராஜா
    பிடித்த வரிகள் : எல்லாமே


பின்குறிப்புகள் : 1) இந்த வகையான பாடல்கள் போல் பல வந்தாலும் இப்பாடல் வரிகளுக்காக நான் இதை திரும்பத் திரும்ப கேட்பதுண்டு. இலை மறை காயாக ஒரு பெண் ஆண் மகன் மீதுள்ள ஆசையை, காதலை, காமத்தை வெளிப்படுத்தும் படியான பாடல்கள், எந்த இடத்திலும் பச்சையான அர்த்தம் வராமல் கவனமாக எழுதிய பாடலாசிரியர்க்ளுக்கு நன்றி
   2) இந்தியா இருக்குற நிலைமையில இப்பிடி ஒரு பதிவு தேவையாடா கோமுட்டினு நீங்க வினவலாம், இருபத்திநாலு மணி நேரமுமா இந்தியா வல்லரசாகிறதப் பத்தி யோசிக்கிறது, அப்பப்போ இப்பிடி எண்டெர்டெயினும் பண்ணனும்ணே!!!;-))

சொலவடை