சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Friday, August 24, 2012

உலகநாதன் தயிர் வாங்கப் போன கதை

        பாபநாசத்துல உலகநாதன்னு ஒருத்தன் இருந்தானாம், பேருதான் ’உலக’ நாதன் ஆனா தமிழ்நாட்டை விட்டு தாண்டிப்போனா பையனுக்கு டவுசர் கிழிஞ்சிடும். துரதிஷ்டவசமாக அவனுக்கு கல்கத்தாவில் வேலை கிடைத்தது. தட்டுத்தடுமாறி பாபநாசத்திலிருந்து கல்கத்தாவிற்கும் வந்துவிட்டான். கல்கத்தாவில் தன் ஊர்க்காரர் ஒருவரின் வீட்டில் தான் தங்கியிருந்தான். முதல் மூன்று நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தான். நான்காவது நாள் பையனுக்கு வந்தது கடும் சோதனை, அறையில் உள்ளவர்கள் அவனை அழைத்து தயிர் வாங்கி வருமாறு கேட்டுக் கொண்டார்கள். தயிருக்கு இந்தியில் தாஹி என்று சொல்லியும் அனுப்பினார்கள். உலகநாயகனுக்கு இவ்விடத்திலுருந்தே கை நடுக்கம் ஏற்பட ஆரம்பித்தது. வழியெங்கும் தாஹி தாஹி என்று பிதற்றிக்கொண்டே சென்றேன். சட்டென அவன் பின்னாள் பேரிரைச்சலுடன் ஒரு லாரி அவனை கடந்து சென்றது. அது உண்டாக்கிய பாஆஆஆம் என்ற ஒலியில் அதிர்ச்சி அடைந்தவன் சொல்லை மறந்துவிட்டான். கடைக்கும் வந்துவிட்டான். கடைக்காரர் அவனிடம் என்ன வேண்டும் என்று கேட்க முழிபிதுங்க விழித்தான். தயிர் பாக்கெட்டை சுட்டிக் காட்டி வாங்கிவிடலாம் என்றால், கருமம் அவன் கண் பார்வையில் படும் படி ஒரு தயிர் பாக்கெட் இல்லை. சரி தயிரை ஆங்கிலத்தில் சொல்லி வாங்கிவிடலாமே என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் நமது நாயகனுக்கு சட்டென அதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. பட்டென அவன் தலையில் பல்பு ஒன்று எறிந்தது, அவன் ஒரு விஞ்ஞானியைப் போல் சிந்தித்தான், எட்டாவதில் அவன் படித்த அறிவியல் அவனுக்கு கைகொடுத்தது. கடைக்காரரைப் பார்த்து ஒரு விரலை நீட்டி, மில்க் மிங்கில்ட் வித் பேக்டீரியா ஒன் பாக்கெட் என்றான். கடைகாரருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை, பின் அவரும் தன் எட்டாம் வகுப்பு அறிவியல் ஞாபகம் வந்தவராய், “சாப் ஆப் கர்ட்(CURD) கோ பதாயா, டீகே டீகே” என்று சொல்லி சிரித்துக் கொண்டார். உலகநாதனும் பதிலுக்கு ஒரு டீகே டீகே சொல்லிவைத்துக் கொண்டான்.இதே போல் இன்னொருநாள் உலகநாதனை மண்ணெண்ணை வாங்கி வரச் சொன்னார்கள், அதற்கு அவன் மன்னிச்சுடுங்க அதுக்கு எனக்கு கெமிக்கல் ஈக்குவேசன் என்னானு தெரியாது என்று சொல்லிக் கொண்டே தயிர் வாங்கச் சென்றான். இப்பொதெல்லாம் உலகநாதன் வாலண்டியராகவே தயிர் வாங்க கிளம்பிவிடுகிறான். கடைக்காரரும் அவனைப் பார்த்தலே தயிரை எடுத்து கொடுத்துவிடுவார். 

PS:இந்த உலகநாதன் என்னும் கதாப்பாத்திரம் கற்பனையே, இப்பெயர் கொண்ட யாவரும் தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம். 

Tuesday, August 21, 2012

இலக்கணம் - மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட தரம் வாய்ந்த தமிழ்த் திரைப்படம்

 2007   ஆம் ஆண்டு வெளியான இப்படியொரு திரைப்படத்தை இன்றுதான் பார்த்தேன் என்று நினைக்கும் போது வெட்கமாக இருந்தாலும் , இன்றையாவது காண நேர்ந்ததே என்றெண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இப்படம் முழுக்க வேற்று மொழி கலக்காத தமிழ் உரையாடல்கள். ஆதலால் இப்பதிவையும் முடிந்தவரை தமிழிலேயே எழுத முயல்கிறேன்.

கதைச் சுருக்கம்: சக மனிதர்கள் மேல் அளவு கடந்த அன்பு காட்டும் ஒரு பத்திரிக்கையாளனால் எந்த அளவிற்கு அவன் சுற்றம் நல்வழி அடைகிறது என்பதே!
                         படத்தின் கதையை விரிவாக விவரிக்க விரும்பவில்லை. என்னைக் கவர்ந்த சில இடங்களை குறிப்பிட்டு விடுகிறேன், முதலில் கவர்ந்தது படம் முழுக்க தமிழிலே உரையாடினாலும் கொஞ்சம் கூட மன அயர்வைத் தந்துவிடாத இயல்பான வசனங்கள். படம் முழுக்க பெரியாரின்  கருத்துத் தூவல்கள், வரிகளுக்கேற்ப இசை. எனக்குத் தெரிந்து இப்படத்தில் சில இடங்களில் சங்க இலக்கிய பாடல்களையும் ,பாரதியார் பாடல்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள், அதற்கேற்ப இசை அமைத்திருக்கிறார் பவதாரிணி. ஒரு இடத்தில் நாயகன் தமிழரசன், குடிக்க குவளையில் பால் சுமந்து வரும் தன் மனைவி கயல்விழியிடம் பெரியாரை படித்திருக்கிறாயா என்று கேட்கிறான், அதற்கு கயல்விழி, கடவுளே இல்லை என்று சொல்வாரே அவர்தானே என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுகிறாள். அதற்கு தமிழரசன் பால்ல சர்க்கரையே போடலையா என்று கேட்கிறான், அதற்கு கயல்விழி, இப்பிடி பால குடிக்காமலே சொன்னா என்ன அர்த்தம் என்கிறாள். உடனே தமிழரசன் நீயும் பெரியார படிக்காமலே சொன்னா என்ன அர்த்தம் என்று மடக்கி விடுகிறான். இப்படி பல இடங்களில் ரசிக்க வைக்க கூடிய அளவிற்கு காட்சிகளை செதுக்கியிடுக்கிறார் இயக்குநர். மனதை நெகிழ வைக்கிறது படத்தின் இறுதிக் காட்சி, யாரோ ஒரு தலைவர் இறந்து விடுகிறார் என்று ஊரெங்கும் கலவரம். அந்தக் கலவரத்தில் மாட்டிக்கொள்கிறாள் கயல்விழி. கலவரக்காரன் ஒருவன் எறிந்த கல் கயல்விழி தலையில் பட்டு மயக்கமடைகிறாள். கல்லெறிந்தவனை கயல்விழியின் மகள் பார்த்து விடுகிறாள். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறாள் கயல்விழி. ஆனால் சில நாட்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி அவள் மூளை முழுவதும்  செயல் இழந்துவிடுகிறது.அதனால் இறக்கும் தருவாயில் இருக்கும் அவளது  இதயத்தை வேறொரு இதய நோயாளிக்கு பொறுத்த தமிழரசனிடம் அனுமதி கேட்கிறார் மருத்துவர். அவனும் ஒத்துக் கொண்டு படிவத்தில் கையெழுத்து இடும் சமயத்தில் அந்த இதய நோயாளியில் கணவனும் அழைக்கப் படுகிறான், அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவன் கையெழுத்து இட வரும் நேரத்தில் தமிழரசனின் மகள் அவனைப் பார்த்து அவன்தான் தன் மீது கலவரத்தில் கல்லெறிந்தவன் என்று கூச்சலிடுகிறாள். தமிழரசனின் உறவினர்கள் அவனை வெறிகொண்டு தாக்கி, படிவத்தில் தமிழரசனிடம் கையெழுத்து இட வேண்டாம் என்கிறார்கள். தமிழரசன் அந்தக் கலவரக்காரனின் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து என் குழந்தைக்கு வந்த நிலைமை இவர்களுக்கு வர வேண்டும் என்று கையெழுத்துப் போட்டுவிடுகிறான். அந்த இரண்டு குழந்தைகளின் உச்சிதனை முகர்த்து உங்கம்மா உனக்கு கிடைச்சிடுவாங்க என்று கூறுவதுடன் படம் முடிவடைகிறது.
                          மேலும் இப்படத்தில் பழ.நெடுமாறன், தென்கச்சி கோ.சுவாமிநாதன், சுப.வீர பாண்டியன் போன்றோரும் நல்ல கதாப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கைக்கான,நல்ல படத்திற்கான,   இலக்கணம் இவ்விலக்கணம் ;-)
                            இந்தப்படத்தை தயவு செய்து இணையத்தில் தரவிறக்கம் செய்யாமல் கீழ்கண்ட இணைப்பை தொடர்பு கொண்டு வாங்கவும் 69  ரூபாய் மட்டுமே. இது போன்ற நல்ல படங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், பார்க்காமல் தவிர்ப்பதும் நாம் செய்து கொண்டிருக்கக் கூடிய அன்றாட பாவங்களில் ஒன்று. 
இப்படத்தின் இயக்குநர் சந்திரசெயன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அறிய முடியவில்லை. ஆனால் இப்படி ஒரு படம் எடுத்தவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். இவரைப் போன்ற ஆட்கள் தமிழ்த் திரையுலகிற்குத் தேவை.

Friday, August 17, 2012

வளையல்காரன்

சார் கண்ணாடி வளையல், கவரிங்  வளையல்,பெங்காலி வளையல், குஜராத்தி வளையல், எனப் பலப் பல டிசைன் இருக்கு சார் ஒரே ஒரு ஜோடி வாங்கிக்குங்க சார், நான் கண்டுகொள்ளாத  போதும் கூவிக்கொண்டே என் பின்னால் வந்து தொந்தரவு செய்தான் வளையல்காரன். சார் ஒரு ஜோடி வளையல் பதினஞ்சு ரூபாய் தான் சார், ஒரு ஜோடி வாங்கிக்குங்க சார், எரிச்சலுடன் அவனை முறைத்துவிட்டு முன்னே நகர்ந்தேன். அவனும் விடுவதாயில்லை, வளைகாப்பு வளையல், கல்யாண வளையல், சதுர வளையல், ஜிகினா வளையல் என சகல விதம் இருக்கு சார் நின்னு பாருங்க சார்; யோவ் இத்தினி பேர் இருக்கும்போது என்ன ஏன் சொரன்டுற, 24  வயசாகியும் ஒரு ஃபிகர் கூட மடியல நான் வளையல் வாங்கி என்ன செய்ய? வட்டம் போடவா? என்று வெடித்தே விட்டேன். சிறுதும் இடைவெளி   விடாமல் மெல்லிய புன்னகையுடன் சொன்னான், சார் அம்மாவுக்கோ தங்கச்சிக்கோ வாங்கிட்டுப் போங்களேன் சார். வளையல் போன்றொதொரு வட்டம் தெரிந்தது  அவன் தலைக்குப் பின்னால்.

கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் 1,2 - கவனிக்க வேண்டிய விஷயங்கள்

                            இங்கே நான் குறிப்பிடப்போவது படத்தைப் பற்றிய கதை அல்ல, ஆக கதை படிக்கும் எண்ணத்துடன் இப்பதிவை படிக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். அனுராக் இப்படங்களை சுப்பிரமணியபுரம், போன்ற படங்களைப் பார்த்த தாக்கத்தில் எடுத்ததாக ஒத்துக் கொண்டாலும் நாம் பாராட்ட வேண்டிய சில தனித்துவமான விஷயங்கள் ஏக இருக்கின்றன. முக்கியமாக, மிக முக்கியமாக சினேகா கன்வாக்கரின் இசை, இரு படங்களும் சேர்த்து சர்தார் கானின் பிறப்பிலிருந்து அவன் குடும்பமே வன்முறையால் அழியும் வரையிலான கால அளவிற்கு எடுக்கப்பட்டிருக்கிறது (1955-2006). ஆக அந்த அந்த காலத்திற்கு ஏற்றார்போல் இசை அமைத்தற்காக அவரை எப்படி வேண்டுமென்றாலும் போற்றாலும், மேற்கத்திய இசை கொஞ்சமும் கலக்காமால் போஜ்பூரிய பாணியில் ஆர்மோனிய இசை சேர்த்து அவர் போட்டிருக்கும் தார் பிஜிலி பாடலும், பூஸுக்கே டேரிமே பாடலும், உமெனியா பாடலும் வெகுவாக ரசிக்க வைத்தது. இவை  முழுக்க முழுக்க இந்திய இசைக்கருவிகளை வைத்து இசை அமைத்தது என்று அடித்து சொல்லலாம். முதல் பாகத்தில் வரும் ஹிப்பிகள் வகை இசைக் கோர்வையான  I am a hunter பற்றி சொல்லியே ஆக வேண்டும், அந்தக் காலத்து பாப் மார்லே பாடல்கள் போன்று ஜமைக்கன் ஸ்லாங்கில் இதை ஒலிப்பதிவு செய்திருப்பது இசையமைப்பாளரின் நுண்ணறிவைக் காட்டுகிறது. 
                          இவையெல்லாம் போக குண்டர் பரம்பரையின் குலக் கொழுந்துகளான பெர்பெண்டிகுலர், டிஃபனைட் (பேரப் பாரு) போன்றோருக்கு போட்டிருக்க கூடிய வெஸ்டெர்ன் ஸ்டைல் ஓபனிங் இசைக் கோர்வைகளும் அற்புதம். இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே ரோட்டில் நடந்து சென்றால் எவைனயாவது தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு வெறியுடன் தட்டி இருக்கிறார்கள் (ஆக இதை வீட்டில் தனியாக இருக்கும் போது மட்டும் கேட்கவும்). படம் முழுக்க கெட்ட வார்த்தை என்றால் பாடல்களிலும் ஒரே வசை தான். கே கே லூங்கா என்றொரு பாடல் இரு படங்களில் பிண்ணனி இசையாக தழுவி வருகிறது, அதற்கு அர்த்தம் தேடி கூகுளிட்டால் கூகுள் கழுவி கழுவி ஊத்துகிறது. இப்படி படத்தின் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். ட, டா, டி,டீ வரிசையில் ஆரம்பித்து வார்த்தைளே இல்லாமல் இந்தியில் உள்ள அனைத்து எழுத்துகளும் கொண்ட ஒருபாடல், படத்துடன் கேட்காமல் தனியாக கேட்க அருமையாக உள்ளது. மொத்தத்தில் இப்படத்தை "A Musical Gangster film with  a lot of humor" என்று சொல்லிவிடலாம். மேலும் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார், உதாரணமாக இருவர் புகை பிடித்துக் கொண்டிருப்பது போல் காட்சி, கேமெரா புகைக்கு நடுவில் புகுந்து செல்லும் போது நமது மூக்கில் புகை ஏறுகிறது, அவ்வளவு துல்லியம். 
                                     இப்படங்களுக்கு பேக்ரெளண்ட் ஸ்கோர் நம்மூர் ஜீவி.பிரகாசு. இந்தியில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம். கதையில் சிறப்பாக ஒன்றும் இல்லை. ஏற்கனவே இட்ட பதிவை வைத்து கதையை தெரிந்து கொள்ளுங்கள். இப்படங்களைப் பார்க்கச் சொல்லி நான் உங்களை வற்புறுத்தப் போவதில்லை. ஆனால் கண்டிப்பாக பாடல்கள் எல்லாத்தையும் கேட்டுவிடுங்கள். 

சொலவடை