சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Tuesday, August 21, 2012

இலக்கணம் - மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட தரம் வாய்ந்த தமிழ்த் திரைப்படம்

 2007   ஆம் ஆண்டு வெளியான இப்படியொரு திரைப்படத்தை இன்றுதான் பார்த்தேன் என்று நினைக்கும் போது வெட்கமாக இருந்தாலும் , இன்றையாவது காண நேர்ந்ததே என்றெண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இப்படம் முழுக்க வேற்று மொழி கலக்காத தமிழ் உரையாடல்கள். ஆதலால் இப்பதிவையும் முடிந்தவரை தமிழிலேயே எழுத முயல்கிறேன்.

கதைச் சுருக்கம்: சக மனிதர்கள் மேல் அளவு கடந்த அன்பு காட்டும் ஒரு பத்திரிக்கையாளனால் எந்த அளவிற்கு அவன் சுற்றம் நல்வழி அடைகிறது என்பதே!
                         படத்தின் கதையை விரிவாக விவரிக்க விரும்பவில்லை. என்னைக் கவர்ந்த சில இடங்களை குறிப்பிட்டு விடுகிறேன், முதலில் கவர்ந்தது படம் முழுக்க தமிழிலே உரையாடினாலும் கொஞ்சம் கூட மன அயர்வைத் தந்துவிடாத இயல்பான வசனங்கள். படம் முழுக்க பெரியாரின்  கருத்துத் தூவல்கள், வரிகளுக்கேற்ப இசை. எனக்குத் தெரிந்து இப்படத்தில் சில இடங்களில் சங்க இலக்கிய பாடல்களையும் ,பாரதியார் பாடல்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள், அதற்கேற்ப இசை அமைத்திருக்கிறார் பவதாரிணி. ஒரு இடத்தில் நாயகன் தமிழரசன், குடிக்க குவளையில் பால் சுமந்து வரும் தன் மனைவி கயல்விழியிடம் பெரியாரை படித்திருக்கிறாயா என்று கேட்கிறான், அதற்கு கயல்விழி, கடவுளே இல்லை என்று சொல்வாரே அவர்தானே என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிடுகிறாள். அதற்கு தமிழரசன் பால்ல சர்க்கரையே போடலையா என்று கேட்கிறான், அதற்கு கயல்விழி, இப்பிடி பால குடிக்காமலே சொன்னா என்ன அர்த்தம் என்கிறாள். உடனே தமிழரசன் நீயும் பெரியார படிக்காமலே சொன்னா என்ன அர்த்தம் என்று மடக்கி விடுகிறான். இப்படி பல இடங்களில் ரசிக்க வைக்க கூடிய அளவிற்கு காட்சிகளை செதுக்கியிடுக்கிறார் இயக்குநர். மனதை நெகிழ வைக்கிறது படத்தின் இறுதிக் காட்சி, யாரோ ஒரு தலைவர் இறந்து விடுகிறார் என்று ஊரெங்கும் கலவரம். அந்தக் கலவரத்தில் மாட்டிக்கொள்கிறாள் கயல்விழி. கலவரக்காரன் ஒருவன் எறிந்த கல் கயல்விழி தலையில் பட்டு மயக்கமடைகிறாள். கல்லெறிந்தவனை கயல்விழியின் மகள் பார்த்து விடுகிறாள். மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறாள் கயல்விழி. ஆனால் சில நாட்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி அவள் மூளை முழுவதும்  செயல் இழந்துவிடுகிறது.அதனால் இறக்கும் தருவாயில் இருக்கும் அவளது  இதயத்தை வேறொரு இதய நோயாளிக்கு பொறுத்த தமிழரசனிடம் அனுமதி கேட்கிறார் மருத்துவர். அவனும் ஒத்துக் கொண்டு படிவத்தில் கையெழுத்து இடும் சமயத்தில் அந்த இதய நோயாளியில் கணவனும் அழைக்கப் படுகிறான், அவனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவன் கையெழுத்து இட வரும் நேரத்தில் தமிழரசனின் மகள் அவனைப் பார்த்து அவன்தான் தன் மீது கலவரத்தில் கல்லெறிந்தவன் என்று கூச்சலிடுகிறாள். தமிழரசனின் உறவினர்கள் அவனை வெறிகொண்டு தாக்கி, படிவத்தில் தமிழரசனிடம் கையெழுத்து இட வேண்டாம் என்கிறார்கள். தமிழரசன் அந்தக் கலவரக்காரனின் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து என் குழந்தைக்கு வந்த நிலைமை இவர்களுக்கு வர வேண்டும் என்று கையெழுத்துப் போட்டுவிடுகிறான். அந்த இரண்டு குழந்தைகளின் உச்சிதனை முகர்த்து உங்கம்மா உனக்கு கிடைச்சிடுவாங்க என்று கூறுவதுடன் படம் முடிவடைகிறது.
                          மேலும் இப்படத்தில் பழ.நெடுமாறன், தென்கச்சி கோ.சுவாமிநாதன், சுப.வீர பாண்டியன் போன்றோரும் நல்ல கதாப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு மனிதன் வாழ வேண்டிய வாழ்க்கைக்கான,நல்ல படத்திற்கான,   இலக்கணம் இவ்விலக்கணம் ;-)
                            இந்தப்படத்தை தயவு செய்து இணையத்தில் தரவிறக்கம் செய்யாமல் கீழ்கண்ட இணைப்பை தொடர்பு கொண்டு வாங்கவும் 69  ரூபாய் மட்டுமே. இது போன்ற நல்ல படங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதும், பார்க்காமல் தவிர்ப்பதும் நாம் செய்து கொண்டிருக்கக் கூடிய அன்றாட பாவங்களில் ஒன்று. 
இப்படத்தின் இயக்குநர் சந்திரசெயன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அறிய முடியவில்லை. ஆனால் இப்படி ஒரு படம் எடுத்தவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். இவரைப் போன்ற ஆட்கள் தமிழ்த் திரையுலகிற்குத் தேவை.

3 comments:

  1. இந்தப் பெயருள்ள படம் வெளிவந்ததே எனக்கும் தெரியாது. பல நல்ல படங்கள் சரியான விளம்பரம் இல்லாமலோ,அல்லது மக்களின் ஆதரவு இல்லாமலோ காணாமல் போய் விடுகின்றன. பிறகு தரமான படம் எடுக்க யார் முன்வருவர்? நல்ல பதிவு!

    amas32

    ReplyDelete
  2. படத்தின் விமர்சனத்தின் படித்தால், படத்தை பார்க்க வேண்டும் என்னும் ஆவல் கூடுகிறது...

    இணைப்பு கொண்டுத்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  3. மிக அருமையான விமர்சனம்

    ReplyDelete

சொலவடை