இங்கே நான் குறிப்பிடப்போவது படத்தைப் பற்றிய கதை அல்ல, ஆக கதை படிக்கும் எண்ணத்துடன் இப்பதிவை படிக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறேன். அனுராக் இப்படங்களை சுப்பிரமணியபுரம், போன்ற படங்களைப் பார்த்த தாக்கத்தில் எடுத்ததாக ஒத்துக் கொண்டாலும் நாம் பாராட்ட வேண்டிய சில தனித்துவமான விஷயங்கள் ஏக இருக்கின்றன. முக்கியமாக, மிக முக்கியமாக சினேகா கன்வாக்கரின் இசை, இரு படங்களும் சேர்த்து சர்தார் கானின் பிறப்பிலிருந்து அவன் குடும்பமே வன்முறையால் அழியும் வரையிலான கால அளவிற்கு எடுக்கப்பட்டிருக்கிறது (1955-2006). ஆக அந்த அந்த காலத்திற்கு ஏற்றார்போல் இசை அமைத்தற்காக அவரை எப்படி வேண்டுமென்றாலும் போற்றாலும், மேற்கத்திய இசை கொஞ்சமும் கலக்காமால் போஜ்பூரிய பாணியில் ஆர்மோனிய இசை சேர்த்து அவர் போட்டிருக்கும் தார் பிஜிலி பாடலும், பூஸுக்கே டேரிமே பாடலும், உமெனியா பாடலும் வெகுவாக ரசிக்க வைத்தது. இவை முழுக்க முழுக்க இந்திய இசைக்கருவிகளை வைத்து இசை அமைத்தது என்று அடித்து சொல்லலாம். முதல் பாகத்தில் வரும் ஹிப்பிகள் வகை இசைக் கோர்வையான I am a hunter பற்றி சொல்லியே ஆக வேண்டும், அந்தக் காலத்து பாப் மார்லே பாடல்கள் போன்று ஜமைக்கன் ஸ்லாங்கில் இதை ஒலிப்பதிவு செய்திருப்பது இசையமைப்பாளரின் நுண்ணறிவைக் காட்டுகிறது.
இவையெல்லாம் போக குண்டர் பரம்பரையின் குலக் கொழுந்துகளான பெர்பெண்டிகுலர், டிஃபனைட் (பேரப் பாரு) போன்றோருக்கு போட்டிருக்க கூடிய வெஸ்டெர்ன் ஸ்டைல் ஓபனிங் இசைக் கோர்வைகளும் அற்புதம். இந்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே ரோட்டில் நடந்து சென்றால் எவைனயாவது தூக்கிப் போட்டு மிதிக்க வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு வெறியுடன் தட்டி இருக்கிறார்கள் (ஆக இதை வீட்டில் தனியாக இருக்கும் போது மட்டும் கேட்கவும்). படம் முழுக்க கெட்ட வார்த்தை என்றால் பாடல்களிலும் ஒரே வசை தான். கே கே லூங்கா என்றொரு பாடல் இரு படங்களில் பிண்ணனி இசையாக தழுவி வருகிறது, அதற்கு அர்த்தம் தேடி கூகுளிட்டால் கூகுள் கழுவி கழுவி ஊத்துகிறது. இப்படி படத்தின் ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். ட, டா, டி,டீ வரிசையில் ஆரம்பித்து வார்த்தைளே இல்லாமல் இந்தியில் உள்ள அனைத்து எழுத்துகளும் கொண்ட ஒருபாடல், படத்துடன் கேட்காமல் தனியாக கேட்க அருமையாக உள்ளது. மொத்தத்தில் இப்படத்தை "A Musical Gangster film with a lot of humor" என்று சொல்லிவிடலாம். மேலும் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார், உதாரணமாக இருவர் புகை பிடித்துக் கொண்டிருப்பது போல் காட்சி, கேமெரா புகைக்கு நடுவில் புகுந்து செல்லும் போது நமது மூக்கில் புகை ஏறுகிறது, அவ்வளவு துல்லியம்.

No comments:
Post a Comment