சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......
திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Wednesday, July 11, 2012

ஆதாமிண்டே மகன் அபு ആദാമിന്റെ മകൻ അബു -2011

               அப்பாவிற்கு பணம் அனுப்பி நாளாகிறது, வீட்டிற்கு ஃபோன் பேசி மாதங்களாகிறது. இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லாமல் வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு என்று இயந்திரத்தனமாக  வாழ்க்கை போய்க்கொண்டிருந்த நேரத்தில், ஒரு மழை இரவில் இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. விருப்பமில்லாமல்தான் திரையிட்டேன், ஆனால் படம் முடிந்தவேளையில் என்னுள் பீறிட்டு எழுந்த கண்ணீரை பாத்தி கட்டி எழுத்தாக மாற்றி இப்படத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன்.

Premise: எழுபதைக் கடந்த ஒரு ஏழை இசுலாமிய தம்பதியினர் ஹஜ் புனித யாத்திரை செல்லப் படும் பாடு!

சில குறிப்புகள் : அபு ஒரு ஏழை வாசனைத்திரவிய விற்பனையாளர், அவருக்கு ஒரு மனைவி ஆயிஷா. அவளுக்குப் பேச்சுத்துணை, அவர்கள் வீட்டில் வளரும் பசுக்களும், ஒரு பலா மரமுமே. ப்சுமையும், குளிர்ச்சியும் நிறைந்த கிராமத்தின் நடுவே அவர்கள் வீடு. எல்லாம் இருந்தும் அவர்களுக்குள் எப்போதும் இருக்கும் ஒரு ஏக்கம், ஹஜ் யாத்திரை செல்ல சீக்கிரம் பண்ம் சேர்த்து விட வேண்டும் என்பதுதான். அவர்களுக்கு ஒரு மகன் உண்டு, பெற்றவர்களைப் பற்றி கவைப்படாமல் துபாயில் தன் சம்பாத்யம், தன் குடும்பம் என்று சுயநலமாக வாழ்பவன். அவனை நினைத்து அடிக்கடி ஆயிஷா அழுவதுண்டு. 
                           அந்த ஊரின் ஹாஜியார் அடிக்கடி மெக்கா, மதினா போய் வந்தவர். அந்த ஊரிலே பணக்காரரும் கூட. அவரிடம் சென்று அபு மக்கா செல்வதற்கான வழிமுறைகளை (Procedures) கேட்கிறார். ஹாஜியார் அடிக்கடி துபாயில் இருக்கும் தன் மகனைப் பற்றி பெருமை பேசிக் கொள்(ல்)வார். தன் மகன் தனக்கு கார் வாங்கித் தந்தான், மூன்று முறை மக்கா கூட்டி சென்றான், இப்படிப் பல. இதையெல்லாம் முகத்தில் புன்னகையோடும், கண்களில் சிறு கலக்கத்தோடும் கேட்டுக் கொள்வார் அபு. அபுவின் கண்கள் இப்படி பல இடங்களில் கலங்கியபோதெல்லாம் எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி பீறிட்டு எழும். அது ஏன் என்று நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஹாஜியார் அபுவிடம் தனக்கு தெரிந்த ஒரு ட்ராவல் ஏஜென்சியின் விலாசத்தைக் கொடுத்து தான் அனுப்பியதாக கூறச்சொல்கிறார். 
                                   இங்கிருந்து ஆரம்பிக்கிறது ஆதாமின் ஹஜ் ஆயத்தப் பணிகள், மறுநாள் வெள்ளன எழுந்து கோழிக்கோட்டில் இருக்கும் அந்த மக்கா, மதினா ட்ராவல் ஏஜென்சியின் அஷ்ரஃபை சென்று பார்க்கிறார். அவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லாததை அறிந்து அவருக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான வழிமுறைகளை சொல்கிறான் அஷ்ரஃப். அவருக்கும், அவர் மனைவிக்கும் பாஸ்போர்ட் அப்ளை செய்யும் பணிகளில் துரிதமாக இறங்குகிறார் அபு. ஒரு நாள் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரைத் தேடிப் போலீஸ் வந்ததென ஆயிசா அவரிடம் அழுதுகொண்டே சொல்கிறார். பதறிப்போன அவர் தான் எந்த ஒரு தவறும் செய்துவிடவில்லையே என்று அல்லாவை பிரார்த்திக்கிறார். மறுநாள் காலை ஊரில் அதிகம் படித்தவரான கோவிந்தன் மாஸ்டரின் துணையுடன் போலீஸ் ஸ்டேசன் செல்கிறார். அங்கு போலீஸ் அவரைக் கேள்விகளால் துளைத்து எடுக்கிறது. நமக்குள்ளும் ஒரு பதற்றம் பீறிடும் வேளையில் அந்தப் போலீஸ்காரர் பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காகத்தான் அபுவை அழைத்ததாக கூறுகிறார். அந்தக் காட்சியில் அபுவின் அறியாமையை இயக்குநர் அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார். 
                              கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்கிறார் ஒரு ட்ரெங்குப் பெட்டியில், பெரும்பாலும் கடுஞ்சாயாவும், ரொட்டியுமே அவரின் உணவாகிப் போகிறது. தாகத்திற்கு சோடா குடிக்க பலமுறை யோசித்து பின் கிணற்றுத்தண்ணீரை பருகுகிறார். இப்படியெல்லாம் சிறுக சிறுக பணம் சேர்க்கிறார். ஆடு மாடுகளை விற்று விடுகிறார், அப்போது ஆயிசாவின் கண்கள் லேசாக கலங்குகிறது, நம் கண்களும்தான். மர வியாபாரியான ஜான்சனிடம் பலா மரத்தை ஐம்பதாயிரத்திற்கு விலை பேசிவிட்டார். ஒரு வாரத்தில் பணம் தருவதற்காக ஜான்சன் வாக்கு கொடுத்துவிட்டான். பணமும் சேர்த்துவிட்டார், தான் கொஞ்சநாளில் மக்கா செல்வதாகவும், தங்களுக்கு ஏதாவது கெடுதல் செய்தால் மன்னித்து விடுமாறும் சுற்றத்தார்களிடம் சென்று விருந்தோம்பல் செய்கிறார். அவர்கள் இவரை ஆரத்தழுவி கண்ணீர் மல்குகிறார்கள். குறிப்பாக கோவிந்தன் மாஸ்ட்டர் இவரைத்தன் அண்ணன் போலவே பாவிக்கிறார். முன்பொரு காலத்தில் இவரிடம் நிலத்தகரறில் சண்டையிட்ட சுலைமான் வாதம் வந்து படுத்துக் கிடக்கிறான். அவனிடம் சென்று தன்னை மன்னிக்குமாறு கேட்கும் காட்சியில் நம்மில் புதைந்து கிடக்கும் ஈகோ என்னும் அரக்கனின் கழுத்தை கத்தி கொண்டு அறுக்கிறார். சுலைமான் இவரின் கைகளை பிடித்துக் கொண்டு அழுகிறான். 
                                          ஒரு வாரம் கடந்தது. ஜான்சனின் மரக்கடைக்கு செல்கிறார். ஜான்சன் சிரித்த முகத்துடன் அவருக்கு ஐம்பதாயிரத்தைக் கொடுக்கிறார். அதை கைகள் நடுங்க ஒரு வெற்றிக் களிப்புடன் வாங்கிக் கொள்கிறார் அபு. மெல்லத்தயங்கியவாறே ஜான்சன் அவரிடம் தான் பலா மரத்தை வெட்டி விட்டதாகவும், மரம் உள்ளீடற்று(hollow) இருப்பதாகவும், அது பலகை செய்ய பயன்படாது, விறகாகத்தான் பயன்படுத்த முடியும் என்று கூறுகிறான். அதிர்ச்சியில் உறைந்த அபு, ஜான்சனிடம் பின் ஏன் எனக்கு பணம் தந்தாய் என்று கேட்கிறார். அதற்கு ஜான்சன், நீங்கள் நல்லபடியாக மக்கா போக வேண்டும் என்றுதான் என்கிறான்.ஆனால் அபு அதை வாங்க மறுத்துவிடுகிறார். விஷயம் கேள்விப் பட்டி கோவிந்தன் மாஸ்ட்டர் தயங்கியவாறே அபுவிற்கு ஒரு ஐம்பதாயிரம் கொடுக்க முற்படுகிறார். ஆனால் கடன் வாங்கி தான் ஹஜ் செல்ல விரும்பவில்லை என்று மறுத்துவிடுகிறார். இந்த இரண்டு இடத்திலும் தன் தன்மானத்தை கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார் அபு. 
                                                இரவில் ஆயிஷாவிடம் அடுத்த வருடம் நாம் ஹஜ்  போய்க் கொள்ளலாம் என்கிறார். அதற்கு ஆயிசா, அபுவை மட்டும் ஹஜ் போய் வருமாறு கேட்கிறாள். அதற்கும் அபு மறுத்து விடுகிறார். காலையில் சீக்கிரம் எழுந்து ட்ராவல் ஏஜெண்ட் அஷ்ரஃபை சந்திது தாங்கள் இந்த வருடம் ஹஜ் பயணம் வரவில்லை என்று கூறுகிறார். அதற்கு அஷ்ரஃப் ஐம்பதாயிரம் தான் தருவதாகவும், இறந்து போன தன் பெற்றோர்களை பணத்தட்டுப் பாடினால் ஹஜ் அனுப்ப முடியாத குறையை உங்களை அனுப்பி தீர்த்துக் கொள்கிறேன் என்கிறான். அதற்கு வெடித்து அழும் அபு, உங்களைப் போல ஒரு மகன் பெற்றதனால் அவர்கள் ஆயிரம் முறை ஹஜ் சென்ற பலனை அடைந்து விட்டதாக கூறி அஷ்ரஃபின் உதவியையும் மறுத்து விடுகிறார். அவர் ஒவ்வொருவரின் உதவியை மறுக்கும் போதும் ஒரு விசயத்தை நாம் உணர முடிகிறது. பெற்று வளர்த்த மகன் தனக்கு எதுவும் செய்யாத விரக்தியிலேயே மற்றவர்களின் உதவிகளையெல்லாம் மறுத்து, ஹஜ் போனால் தன் சொந்தச் செலவிலேயே போவேன் என்று உறுதியோடிருக்கிறார்.
                                                    இரவு உண்விவின் போது ஆயிசாவிடம் , தாங்கள் விற்ற கால்நடைகளை திரும்ப வாங்க வேண்டும் என்று சொல்கிறார். இரவு விடிகிறது, எழுந்து போய் வெட்டப் பட்ட பலா மரத்தின் அருகில் சிறு குழி தோண்டி மரக் கன்றை நடுவதோடு படம் நிறைவடைகிறது. அந்த நடுதல் நமக்கு பல பாடங்களை கற்றுத்தருகிறது.


நான் பல மாதங்களுக்கு பின் ஊருக்கு செல்ல முடிவெடுத்து விட்டேன்,  ஆதாமின் மகன் அபுவிற்கும் ,கருப்பையாவின் மகன் குமரேசனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அவர் ஹஜ் போக வேண்டும், இவருக்கு ஒரு வீடு கட்ட வேண்டும்.

12 comments:

 1. என்ன நெகிழ்ச்சியான ஒரு கதை! என்ன நெகிழ்ச்சியான ஒரு பதிவு! அற்புதம்.

  amas32

  ReplyDelete
 2. நெகிழ்கிறேன்.... வீடு கட்ட வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 3. இந்த படத்திற்காக நடிகர் சலீமிற்கு தேசியவிருது கிடைத்தது கிடைத்தது குறிப்பிடத்தக்கது... ரொம்பநாளாகவே பார்க்கணும் நினைச்ச படம் ... அருமையா எழுதியிருக்கீங்க... பதிவிற்கு நன்றி

  ReplyDelete
 4. நானும்... "நெகிழ்கிறேன்.... வீடு கட்ட வாழ்த்துக்கள்....."

  ReplyDelete
 5. நெகிழ்ச்சியான விமர்சனம்.பார்க்கணும்னு ஆவல் தூண்டுகிறது,,

  ReplyDelete
 6. சத்தியமாக புல்லரித்து விட்டது.... அருமையான பதிவு/விமர்சனம் தம்பி.... அப்படியே கண் முன்னாடி பாக்குறா மாதிரி இருந்தது உன்னுடைய விவரணை... வீடு கட்ட வாழ்த்துகள்..

  ReplyDelete
 7. அருமையான விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. அருமையா விமர்சனம் எழுதியிருக்கீங்க... பதிவிற்கு நன்றி

   Delete
 8. ungalin varthaiyal en kadamaiyai unarthaen.... ninaivutiyatharku nandri......

  ReplyDelete
 9. வீடு கட்டுவது கிடக்கட்டும்.கருப்பையா புரிந்து கொள்வார்.கருப்ப்(ஐ)யாவை பார்த்துட்டு வந்துட்டியளா?.இல்ல கூடவே தங்கிட்டியளா?.

  ReplyDelete
 10. அருமையானதொரு படத்திற்கு அழகான விமர்சனம்!

  ReplyDelete

சொலவடை