சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Friday, June 15, 2012

பல நாள் சந்தேகங்களின் பட்டியல்

  • என்னுடைய சந்தேகம் எனக்கு தமிழ் எந்த அளவிற்கு தெரியுமென்பதில் இருந்து ஆரம்பிக்கிறது.இதற்கு விடை காண இங்கு சில வினாக்களை வைக்கிறேன் .
  • தமிழென்ற மொழிக்கு தமிழ் என்ற பெயர் எப்போது வைக்கப் பட்டது. எந்த சங்க கால இலக்கியத்தில் முதன் முதலில் தமிழ் என்ற சொல் பயன் படுத்தப் பட்டது.
  • உதாரணமாக திருக்குறளில் தமிழ் என்ற சொல் ஒரு இடத்தில் கூட பயன் படுத்தப் படவில்லை. அதற்காக அது தமிழில் எழுதப் படவில்லை என்று சொல்லவில்லை,தமிழைப் பற்றி எழுதவில்லை.
  • கேரளத்தை ஆண்டவர்கள் சேரர்கள் என்றால் தமிழ் சங்க கால இலக்கியங்களில் அவர்களின் பங்கு என்ன?
  • பழந்தமிழ் இலக்கியமான பழமொழியில் வரும் ஒரு வாசகம் இது "நாய் பெற்ற தெங்கம்பழம்" ,மலையாளத்தில் தெங் என்றால் தேங்காய்.
  • அப்படியானால் பழந்தமிழ் நூல்கள் பல தென்னிந்தியாவிற்கு பொதுவான ஒரு திராவிட மொழியில் எழுதப் பட்டது என்று வைத்துக் கொள்ளலாமா?.
  • நம் சங்க இலக்கியங்களை மலையாளிகள் ஆர்வம்கொண்டு படிக்கிறார்களா?
  • திருக்குறள், புறநானூறு,கலிங்கத்துப் பரணி முதலிய சங்க இலக்கியங்களை என்னால் உரை இல்லாமல்படிக்க முடிவதில்லை. அப்படிஎன்றால் நான் தமிழில் தான் பேசுகிறேனா இல்லை நான் பேசுவதை தமிழ் என்று சொல்லி கொள்கிறேனா?
  • தமிழக கேரள எல்லைப் பகுதியான பொதிகை மலையில்  வாழ்ந்த அகத்தியர் தமிழுக்கு முதன் முதலில் வரி வடிவம் தந்தார் என்று சொல்லப் படுகிறது,ஆகவேதான் நமது  வரிவடிவமும் மலையாள வரி வரிவடிவமும் மிகுந்த அளவிற்கு ஒற்றுமையாக காணப்படுகிறதா?
  • அப்படியெனில் நமக்கும் அவர்களுக்கும் பொதுவில் ஏதும்சங்க இலக்கியங்கள் எழுதப் பட்டிருக்கிறதா?   
  • சமஸ்க்ருதம் , தெலுகு, கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகளின் சங்க இலக்கியங்கள் என்னென்ன? 
  • கம்பருக்கு வால்மீகியின்  ராமாயணம் எப்படி கிடைத்தது?
  • நவீனத்துவம்,பின் நவீனத்துவம்  என்று பேசியே நாம் பழங்கால இலக்கிய பாதையில் இருந்து சிதறிவிட்டோமா?
தமிழன் என்ற கர்வத்தை என் தலையில் இருந்து சற்று இறக்கி வைத்து இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டு பிடிக்க வேண்டும்.

Saturday, June 9, 2012

குறுங்கவிதைகள் - நிழலின் பிம்பம்

                               மலையாள கவிஞர் குஞ்நுண்ணி மற்றும் மறைந்த தமிழ் எழுத்தாளர் நகுலனின் கவிதைகளை படிக்க நேர்ந்தது. இருவரின் கவிதைகளும் நம்மை எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்துகிறது. இருவரின் எழுத்து நுட்பமும் மிகவும் புத்திசாலித்தனமானது. படித்தவுடன் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பதில்லை. அவர்களது கவிதைகள். வாசிப்பாளரை மிகுந்த சிந்தனைக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையும் உண்மையையும் உணர்த்துகிறது. இவர்களது கவிதைகளுக்கென்று தனி விளக்கம் எதுவும் கிடையாது. அது வாசிப்பாளரை பொறுத்து மாறுகிறது.பெரும்பாலும் அவர்களது கவிதைகள் ஐந்து அல்லது ஆறு வரிக்குள்ளாகவே அமைந்து விடுகிறது 
அவர்களது கவிதைகள் சிலவற்றை படிக்க கீழே சொடுக்கவும்

குஞ்நுண்ணி கவிதைகள்.

நகுலனின் பத்துக் கவிதைகள்

நகுலன் சொன்னது : ஒரு எழுத்தாளன் என்பவன் வாசிப்பவனுக்குள் சென்று அவனையும் எழுத தூண்ட வேண்டும்.
அதுனால நானும் சில குறுங்கவிதைகள் எழுத முயற்சி செய்தேன். அவற்றின் விளைவு கீழே,
   
நிழலின் பிம்பம் 

(1)அந்த வெளிர் மஞ்சள் நிறம் 
மெல்ல இறங்கி 
ஒரு மின்சார விளக்கின் 
அடியில் சென்று ஒளிந்துகொண்டது


(2) சில நேரங்களில் 
என் நிழல் கூட 
என்னுடன் சேர்ந்து கொள்கிறது 
ஆனால் என் பிம்பம் 
எப்பொழுதும் 
எனக்கெதிராகவே உள்ளது.
 (3) தொலைந்ததை தேடினேன் 
தொலைத்ததெல்லாம் கிடைத்தது 
தொலைந்ததை தவிர!!!
 (4) சிட்டுக்குருவி பழத்தை 
பங்கிட்டுக் கொள்கிறது, 
பூச்சிகள் என்னை 
ஒரு பொருட்டாக 
நினைக்காமல்
ஏறி விளையாடுகின்றன
பெருமையாக இருக்கிறது
 (5)ஊருக்கு தெரிந்து
புகைப்பதை நிறுத்தி

ஐந்து நாட்களாகி விட்டது
எல்லாமும் சரியாய்தான்
போய் கொண்டிருந்தது
ஆறாம் நாளில் கையரிப்பு
யாருமில்லா ஓர் இரவில்
ஊருக்குத் தெரியாமல்
கிளம்பி விட்டேன்
கையில் சிகரட்டுடன்
பற்ற வைத்தேன்
பார்த்து விட்டார்
கடவுள்.

 (6) வானிலையை
 பொறுத்தே 
அமைகிறது
 பலரின் மனநிலை

Monday, June 4, 2012

ஏக் காவ் மேம் ஏக் கிசான் ரகதாத்தா -சைக்கிள்காரன் கோயிங் டூ கொல்கத்தா



  ஏக் காவ் மேம் ஏக் கிசான் ரகதாத்தா பெரும்பாலான தமிழர்களுக்கு தெரிந்த ஒரே இந்தி வார்த்தை. நான் கொல்கத்தா சென்றடைந்தபோது எனக்கும் அந்த வார்த்தையை தவிர இந்தியில் வேறொன்றும் தெரியாது. இப்பிடித்தான் ஒருநாள் ஓட்டலுக்கு போகச்ச வாசல்ல இருந்த செக்யுரிடி ஆவோஜினு சொன்னான் , அது நான் இல்லீங்கனு  நான் சொல்ல. உடனே என் நண்பன் டே ஆவோஜினா உள்ள வாங்கனு அர்த்தம்டா.ஓ அப்பிடியா நான் ஏதோ ராம்ஜி பிரேம்ஜி மாதிரி பேருன்னுல நெனைச்சேன். இப்பிடியே கேவலமா போயிட்டு இருந்தது வாழ்க்கை. ஏதோ டீகே , அச்சான்னு ரொம்ப சிம்பிளான வார்த்தைகள மட்டும் கத்துக்கிட்டேன்.அழகான பொண்ணுங்ககிட்ட அட்ரெஸ் கேக்குற அளவுக்காவுது இந்தி கத்துக்கணும்னு ஒரு ஆசை. ஊர்ல இருந்தப் போது ஓயாம வாயடிகிட்டு இருந்தேன். இங்க வந்து பெரும்பாலும் தனியாதான் பேசிருக்கேன். இந்தில யாராவது பேசுனாக் கூட பெரும்பாலும் தமிழ்ல தான் பதில் சொல்றது. இந்த ஊர் பயபக்கிக சில பேருக்கு தமிழ் சொல்லிக்குடுத்தும் இருக்கேன். ஆனா எக்காரணம் கொண்டும் அவிங்களுக்கு கெட்ட வார்த்தை சொல்லிக் குடுக்குறது இல்ல. பின்னாடி நம்மளையே திட்டினாலும் திட்டிருவானுக. மாதங்கள் கடந்தன நல்ல சாப்பாடு சாப்டாம நாக்கும், நல்ல தமிழ் கேட்க முடியாம காதும் சாகத் தொடங்கின.எங்க ஊட்ல தோசை கொஞ்சம் முருகலா இல்லைன்னாலும தோசை தட்டோட பறக்கும். இங்க வந்து ஒரு தோசை திங்கிறதுக்கு கட கடையாய் ஏறி எறங்கி கடசியா ஒரு பீத்த கடையில் அம்பது ரூபா குடுத்து தோசைங்கிற பேர்ல ஏதோ ஒன்ன தின்னுட்டு வந்தேன்.இந்த வெளி மாநில வாசம் எனக்குச் செய்த மிகப்பெரிய புண்ணியம் என் மாநிலத்தின் அருமையை எனக்கு எடுத்துரைத்ததே. இந்த ஊர் சாப்பாடு ஒவ்வொரு நாளும் சொல்லிக் குடுத்த பாடம் என் அம்மாவின் சமையலே சிறந்ததென்று. 
                                 இந்த ஊரிடம் நான் கற்றுக் கொண்டது நிறையவே.ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் சத்யஜித் ரே, விவேகானந்தர்,ரபீந்திரநாத் தாகூர்,பங்கிம் சந்திரா சட்டர்ஜியின் புகைப்படங்கள். பழைமையை மிகவும் மதிக்கத் தெரிந்தவர்கள். உதாரணத்திற்கு இவர்கள் விவாசய நிலம் எதையும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கொடுக்கவில்லை. மாறாக ஊருக்கு வெளியே குப்பை கொட்டும் பீக்காடாய் இருந்த நிலப்பரப்பை கம்ப்யூட்டர் கம்பெனிக்கு கொடுத்துவிட்டார்கள். ஒருவேள ரெண்டும் ஒண்ணுதான்னு நெனைச்சிருப்பாய்ங்களோ அதுபோகட்டும்.இங்கே விவசாயம் எந்த அளவிற்கும் பாதிக்கப்படவில்லை. உருளை கிழங்கு கிலோ ஏழு ரூபாய். சாத்துக்குடி கிலோ ஐந்து ரூபாய். நான் கற்றுக் கொள்ள நிறையவே இருந்தது அந்த மக்களிடம்.
                              எனக்குள் அடிக்கடி எழும் ஒரு கேள்வி. நாம எல்லாம் நல்ல படிச்சி வேலைக்கு சேந்துட்டோம். அப்பிடியே சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வாங்கிசெட்டில் ஆக வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கனவும்கூட. சரி சென்னையில வீடு வாங்கி செட்டிலும் ஆயிட்டோம்.நம்ம புள்ளைங்கள சென்னையில சிறந்ததா ஒரு பள்ளிக் கூடத்துல சேத்தும் விடுவோம். எப்பவாது தாத்தா ஊருக்கு போவோம்னு அவனை நம்ம சொந்த ஊருக்கு கூட்டிபோவோம். அவனுக்கு அங்க விளையாட வீடியோ கேம் கூட இல்லாம போரடிக்கும். அவனும் வளந்து பெரியாளா ஆயிடுவான்,நாம சென்னையில செட்டில் ஆக ஆசைப்பட்ட மாதிரி அவனும் வெளிநாட்டுல செட்டில் ஆக  ஆசைப் படலாம்.அப்புறம் நம்ம பேரனக் கூட்டிட்டு அவனும் எப்பவாவது தாத்தா நாட்டுக்கு வருவான். நல்லா கவனிங்க இன்னும் அம்பது வருசத்துல பல பேருக்கு இந்தியா தாத்தா நாடு ஆயிடும்.இப்பவே பாதி பேருக்கு ஆயிடுச்சு.அப்போ தென் தமிழகத்தில ஏதோ ஒரு மூலையில இருக்கிற என் ஊர் என்னவாயிருக்கும் அங்க யார் இருப்பாங்க. இது தான் என்னுள் எழுந்த கேள்வி. கொஞ்சம் பெரிய கேள்விதான். ஆனால் என்னால் இதற்கு விடை கண்டு பிடிக்க முடியும். இதையெல்லாம் ஒரு பெரு நகரத்தில் வாழ்ந்து இல்லை பிழைத்துக் கொண்டிருக்கும் எனக்கு சொல்ல கொஞ்சம் கூட தகுதி இல்லை. ஆனால் என்னுடைய பயணம் என் சொந்த ஊரை நோக்கியே இருக்கும்.இது கூட இந்த பெரு நகரங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்த பாடமே. 
 
தினங்காலையில்
பள்ளிக்குக் செல்லும்முன்
பெட்டிக்கடை பாட்டியிடம்
வாங்கி தின்னும்
புளிப்பு மிட்டாயின் சுவை
வந்து மறைகிறது
அடிநாக்கில்
என் ஊரின் ஞாபகம்
வரும்போதெல்லாம்

Thursday, May 31, 2012

அனைவருக்கும் ஒரு அதிர்ச்சித் தகவல்

இன்று உலக புகையிலை தினம், இன்று மட்டும் புகை பிடிக்க வேண்டாம் என்று டிவிட்டரிலும், முகநூலிலும் மாறி மாறி மக்கள் தகவல் பரிமாறிக் கொண்டிந்தார்கள் மக்கள். எனக்கொன்றும் அவசியம் இல்லை அதை கடைபிடிக்க. உச்சி வெயில் மத்தியம இரண்டு மணியளவில் கடைக்கு சென்று ஒரு கிங்க்ஸ் வாங்கி பத்த வைத்துக் கொண்டேன். தணலென எறிந்த வெயிலை மேலும் சூடாக்கியது என் புகை. என்னைக் கண்டு ஒரு நாய் விலகிச்  சென்றது. கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு பிச்சை கேட்கும் பிச்சைக்காரி என்னை மட்டும் தவிர்த்துச்   சென்றாள். நான் எதையும் கண்டு கொள்ளாதவனாய் வானத்தை நோக்கி வட்டமாய் புகை விட்டுக் கொண்டிருந்தேன். எனக்கு என்ன ஆனதென தெரியவில்லை, சட்டென நான் ஏன் புகை பிடிக்கிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். நான் சமுதாய நோக்கத்தோடு சில கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியதுண்டு. ஆனால் என்னைக்குமே நான் அதை பின்தொடந்து நடந்ததில்லை. என்னால் இதுவரை இந்த உலகத்திற்கு எந்த பயனும் கிடைத்ததில்லை, மாறாக நான் ஊதி தள்ளிக் கொண்டிருக்கும் இந்தப புகை சுற்று சூழலை மாசுபடுத்துவதாகவே அமைகிறது. என் தனிமை என்னை இவ்வாறெல்லாம் யோசிக்கக் செய்தது. ஊருக்கு மட்டும்தாண்டா நீங்கெல்லாம் உபதேசம் பண்ணுவீங்க என்று எள்ளி நகையாடியது என் மனசாட்சி. அடித்துக் கொண்டிருந்த சிகரட்டை அப்படியே கீழே போட்டேன், பாதி மீதம் இருந்தது. இனிமேல் சிகரெட் பிடிக்கப் போவதில்லை என்றும் அப்படி பிடித்தால் எழுதவே போவதில்லை என்றும் உறுதி எடுத்துக் கொண்டேன். நீங்கள் கேட்கலாம் ஏண்டா நாயே நீ எழுதலேன்னா பெட்ரோல் விலை கொறஞ்சிடப் போகுதா இல்ல இந்தியாதான் வல்லரசாகிடப் போகுதான்னு?. உண்மைதான் நான் எழுதாமல் இருந்தால் யாருக்கும் எந்த பாதிப்பும்  ஏற்படப் போவதில்லை. ஆனால் அது என்னை பாதிக்கும் . ஒருவேளை என் மனநிலை கூட பாதிப்படையலாம். ஆகவே நான் எடுத்த முடிவு முழுக்க சுயநலமானதே. நான் இதை எழுதுவது என் உணர்ச்சியின் வெளிப்பாடே தவிர யாரையும் திருத்துவதற்காகவோ கருத்து சொல்வதற்காகவோ அல்ல. உலகத்தை திருத்த நான் ஒன்றும் ஏசுவோ புத்தனோ அல்ல. என்னை நானே திருத்த ,உலகத்திற்கு பயனுள்ளவனாக மாற முயற்சிக்கும் மனிதன், மிக மிக மிக சாதாரணமான மனிதன்.  நான் அடித்துப் போட்ட அந்த சிகரெட்டே என் கடைசிப் பாதி சிகரெட்டாக இருக்க கடவதாக. இதுவரை நான் ஏதாவது மரம் நட்டிருப்பேனா? ஒரு சாதாரண பறவையின் எச்சம் கூட விதை தூவி இந்த மண்ணிற்கு உபயோகம் உள்ளதாக இருக்கிறது. ஆறறிவு படைத்த நான் அந்த பறவையின் எச்சத்தை விட கேவலமானவனே. என்ன செஞ்சிருக்கிறேன் இதுவைரைக்கும். பூமி ஏளனமாக என்னைப் பார்த்து சொன்னது நாயே நீ எதுவுமே செய்யாம இருந்திருந்தாலே பூமி நல்லா இருந்திருக்கும். மனிதக் கழிவை மிதிக்கும் போது மேலெழும் அதே அறுவறுப்பு என்னிலும் இப்போது.

அதுசரி அதிர்ச்சி தகவல்னு சொன்னியே அது என்ன? இன்னுமாயா உங்களுக்கு புரியல நான் சிகரெட்ட விட்டுட்டேன்.

பின் குறிப்பு : இது எனக்காக நான் எழுதிய பதிவு. நான் என்று வரும் இடங்களிலெல்லாம் நீங்கள் உங்களை நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல

Monday, May 28, 2012

நாங்கள் கண்ட ராபின் ஹுட் : கல்லூரி நினவுகள் Part - 2

உலகநாதா உனக்கு ஞாபகம் இருக்கா, செகண்ட் இயர் படிக்கும்போது சீனியர் ப்ரவீண் ரூம்ல இருந்து ஃபாரின் ஷாம்ப்பூனு சொல்லிகிட்டு என்னத்தையோ எடுத்துட்டு வந்து தந்த. நாங்களும் அதப்போட்டு குளிக்க, எவ்வளவு போட்டும் கொஞ்சம் கூட நுறையே வராம நாங்க என்னனு கேக்க, நீ உடனே அத தைரியமா பிரவீண் ரூமுக்கு தூக்கிட்டுப்போய் நியாயம் கேக்க, நாயே இது தலைக்கி தேக்கிற ஜெல்லுடானு அவர் சொல்ல. ஒரு வாரத்துக்கு எங்கள மங்கூஸ் மண்டையனாட்டம் சுத்த விட்டியே அத மறக்க முடியுமா?  இப்பிடி ஹாஸ்ட்டல்ல எங்கெங்க இருந்தோ தேங்காய் எண்ணெய், சோப்பு, ஷாம்ப்பூ, பவுடர் டப்பானு ஆட்டயப் போட்டு எங்களுக்காக எடுத்து வந்து தருவியே நீதாண்டா நாங்கள் கண்ட ராபின் ஹுட். அலிபாபா குகைக்கு இணையான பொக்கிஷங்கள் நிறைந்த திலிபனோட பெட்டிய ஓப்பன் பண்ணி முந்திரி பருப்பு, ஒயின், ஃபேர் அண்ட் லவ்லி எடுத்து எங்களுக்கும் தருவியே உனக்குதான் எவ்வளவு பெரிய மனசு. இதையெல்லாம் விட உச்சகட்டமா ஒரு காரியம் பண்ணியே அத மறக்க முடியுமா? பரமசிவன் அண்ணிக்கு பிறந்த குழந்தைய பாக்க நம்மையெல்லாம் ஆஸ்பத்திரிக்கி கூட்டுபோனான். அங்க குழந்தைக்கு போட வச்சிருந்த ஜான்சன் பேபி பவுடர தூக்கிட்டு வந்து, உன் அக்குள்ல போட்டு சுத்துனியே குழந்த பையன் டா நீ. நைட்டு ஒரு மணிக்கு கைலியும், கருப்பு சட்டயும் போட்டு ஹாஸ்ட்டல்ல இருந்து கிளம்பி ப்ராஜகட் பண்ண கெளம்பி போவோமே அத மறக்க முடியுமா. காலேஜுல நம்மலால பாதிக்கபட்ட கன்ஸ்ட்ரக்‌ஷன் ஏராளம். இரும்பையெல்லாம் ஒத்த ஆளா தூக்கி வந்த இரும்பு மனிதன்டா நீ. உனக்கு ஞாபகம் இருக்கா ஒருநாள் இரும்பு தூக்க போன எடத்துல , கொத்தனார் குடிசையில ரேடியோல ஏ.ஆர் ரஹ்மான் பாட்டு ஓடிக்கிட்டு இருந்தது. அதகேட்டு காக்காவடி மெய் மறந்து அங்குனகுள்லயே நின்னுட்டான். அவன் பொறடில அடிச்சு ப்ராஜக்ட் பண்ண வந்த எடத்துல என்ன நாயே பாட்டு வேண்டிகிடக்கு, வேலைய கவனினு சொல்லுவியே, இர்ந்தாலும் ரொம்ப ஸ்டிரிக்ட் ஆபீஸர்பா நீ.  நாம வெளியில வந்ததுக்கப்புறம் காலேஜுல நிறையா புல்டிங் எழுப்பிட்டாங்களாம்.
ஊர்ல இருக்கிற தீப்பட்டியெல்லாம் தூக்கிட்டு வந்து ரூம்ல வச்சிருவ. பத்த வைக்கிறதுக்கு ரூமுக்கு வற்ரவங்கிட்டெல்லாம் ரெண்டு பஃப் வாங்கி இழுப்பியே. ராஜ தந்திரிடா நீ. உனக்கு ராபின்ஹுட் அட்த ரேட் ஜிமெயில் டாட் காம்னு ஒண்ணு ஆரம்பிச்சு தந்தோம் , எங்களுக்கு தேவையானத மெயில் பண்ண அடுத்த செகண்ட் தூக்கிட்டு தருவியே நீ ஒரு ஏபிடி டா மச்சன். உன்னைய ஏன் இப்பிடி புகழ்றேங்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு. ரெண்டு வருஷமா நான் காணோம்னு தேடிகிட்டு இருந்த பீட்டர் இங்கிலாந்து சட்டைய போன வாரம் பெருந்தன்மையா ரிட்டர்ன் பண்ணியே. நீ போட்டு சுத்துனதினால மீடியம் சைஸ் சட்ட XXXXL சைஸுக்கு மாறிடுச்சு. இருந்தாலும் பரவாயில்ல உன்னோட பெருந்தன்மை அப்பிடியே புல்லரிக்க வச்சுடுச்சு. அப்பிடியே உன் பங்காளி காட்டுப் பூச்சி கருப்பு மணிகிட்ட சொல்லி என்னோட ரெண்டு ஃபாரின் சட்டய வாங்கி குடுத்தேன்னா உனக்கு புண்ணியமா போகும். இப்போ எல்லாரும் ஏதோ ஒரு மூளையில கம்ப்யூட்டர் கம்பெனில உக்காந்து பொட்டி தட்டினு இருக்கோம். போன வாரம் நீ ஆபீஸ்ல மௌஸ் தூக்கிட்டேனு கேள்விப் பட்டேன். அப்பிடியெல்லாம் பண்ணாத நாதஸ் நவ் வீ ஆர் ப்ரொஃபஷனல்ஸ் (அப்பிடினு நமக்கு நாமளே முகமுடி போட்டுகிட்டு இருக்கோம் வெங்காயம்). 
                இப்பிடி எல்லோருடைய கல்லூரி வாழ்க்கையிலயும் ஒரு ராபின் ஹுட் இருப்பார், நேரம் இருந்தா அவங்களப் பத்தியும் நெனச்சு பாருங்க. சிரிக்க மறந்து கிடக்கிறோம் நம்மை அறியாமலே நம்மை புன்னகை செய்ய வைக்கிறது நம்முள் புதைந்து கிடக்கும் கல்லூரி.

Thursday, May 10, 2012

காறித் துப்பாம என் கதைய படிங்க :-)

நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது, என்னிடம் நேராக வந்தவள் தனியாக பேச வேண்டும் என்றாள். தூண்டிலில் சிக்கிய மீனாய் மறு பேச்சு பேசாது அவள் பின்னே சென்றேன். தனிமையான ஒரு இடத்தை தேர்வு செய்து அங்கே நின்றவள், என்னை நோக்கி திரும்பினாள். உன்கிட்ட நிறையா பேசணும், இப்போ டைம் இல்ல, நிறையா பேசணும் போல இருக்கு, இன்னிக்கி ராத்திரி எங்க வீட்டுல எல்லோரும் திருச்செந்தூர் போறாங்க, நான் ஆபீஸ்ல வேலையிருக்குன்னு பொய் சொல்லிட்டேன். உன்கிட்ட நிறையா பேசணும், கண்டிப்பா நீ வரணும் என்று சொன்னவள் என் பதிலுக்கு காத்திராமல் வந்த திசை நோக்கி நடந்தாள். இதற்கு சராசரியான ஒரு ஆண் என்ன பதில் சொல்லியிருப்பானோ அதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன். ஆனால் பெண்களுக்கு நுண்ணறிவு அதிகம். அதனால் நான் சொல்ல நினைத்ததை அசடு வழிந்த  என் கண்களிலே  அவள் அறிந்து கொண்டாள். அவளுக்கும் எனக்கும் அதிகமாக பழக்கமில்லை, ஆனாலும் என் ஓரக்கண்ணும் அவளின் ஓரக்கண்ணும் அவ்வப்போது முட்டிக் கொள்ளும். சற்று முன் நடந்த நிகழ்வுகளை ஒன்று விடாமல் நண்பர்களிடம் ஒப்பு வித்தேன். நண்பனுக்கு ஒரு நல்லது நடக்கப் போவுதுன்னா நம்ம பயலுக உயிரையே கொடுப்பாய்ங்களே, ஆளாளுக்கு ஒண்ணு ஏத்தி விட்டானுக. அதுல ஒருத்தன் சொன்னான் "தம்ப் க்ளவுஸ்(thumb glouse)" வாங்கிட்டு போ மச்சினு, நான் ஒரு தத்தி எனக்கு முதல்ல புரியல, அப்புறம் தெளிவா விளக்கினான் அந்த அனுபவசாலி. ஆனால் உங்களிடம் அதை நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. வாழ்க்கையிலேயே இப்போதான் முதன் முதல்ல தம்ப் க்ளவுஸ் வாங்கப போறேன். நான் செய்வது சரியா தவறா என்ற விவாதம் என் மனதில் ஓடினாலும் ஒரு தற்க்காபிற்காகவே இந்த தம்ப் க்ளவுஸ். சூப்பர் மார்கெடிற்குள் நுழைந்து தம்ப் க்ளவுஸ் அடுக்கப்பட்டிருக்கும் ரேக்கை நோக்கி நடந்தேன். ஆகா எத்தனை விதம், என்னென்ன டிசைன். அட்டைப் படத்தை பார்த்து புல்லரித்து நின்றேன். நம்ம வாழ்க்கையிலையும் இவ்வளவு சீக்கிரத்துல இதெல்லாம் நட்டக்கப் போவுதா? ஆர்ப்பரித்தது மனம். அங்கு இருந்ததிலேயே விலை அதிகம் உள்ள ஒன்றை எடுத்துக் கொண்டேன். நினைவெல்லாம் அவளின் முகம். மனமெல்லாம் ஏக கற்பனைகள். கையில் எடுத்த தம்ப் க்ளவுசை பில் போடவரிசையில் நின்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ யாரோ சத்தமாக என் பெயரை அழைப்பது போல ஒரு உணர்வு. சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பினேன். "ஐயோ இவனா, இவன் லவுட் ஸ்பீக்கர் வாயனாச்சே, என் கையில இருக்கிறதப் பார்த்தான்னா பேஸ்புக்குல ஸ்டேடஸ் அப்டேட்டே போட்டுருவனே" என்று நினைத்துக் கொண்டே அவனிடம் இருந்து நழுவப் பார்த்தேன். அவன் விடுவதாயில்லை, நான் பில் போடும் வரை என்னுடன் இருப்பதாகக் சொன்னான். அவனை எப்படியோ சமாளித்து விட்டேன். எப்படி என்று விளக்க விரும்பவில்லை. ஒரு வழியாக பொருளை பத்திரமாக வாங்கி வெளியேறினேன். அவசரமாக பஸ்ஸில் ஏறி அமர்ந்து, ஒரு நூறு ரூபாயை நீட்டி டிக்கெட் கேட்டேன். ஏன்யா உங்களுக்கெல்லாம் அறிவே கிடையாதா? சில்ரையே வச்சிருக்க மாட்டீங்களா என்று அன்பாக சொன்னார் மாண்புமிகு நடத்துனர். எவ்வளவு போராடியும் அவரிடம் சமாளிக்க முடியவில்லை.கடவுளே என்ன சோதனை , நேரம் ஆக ஆக என் முகம் வேர்த்து, சட்டை நனைந்து, வெறி கூடி அப்பப்பா!!! எல்லாத் தடைகளையும் தாண்டி அவள் வீட்டை அடைந்தேன். காலிங் பெல்லை அழுத்தினேன். வெள்ளை நைட்டி அணிந்து ஒரு தேவதை போல அவள் வருவது என் மனக்கண்ணில் தெரிந்தது. நடப்பதெல்லாம் கனவு போலவே இருந்தது. இரண்டாம் முறை காலிங் பெல்லை அழுத்தியதும் என்னை சுற்றிலும் மணியோசை கேட்கத் தொடங்கியது. அது காலிங் பெல்லின் ஓசை போல இல்லை. என் தலை எங்கும் அதே சத்தம். "அச்சம்  தவிர். நைய்யப் புடை, ஆண்மை தவறேல் , மானம் போற்று" என்று மாறி மாறி ஒலித்துக் கொண்டு இருந்தது. சட்டென நினைவு வந்தவனாய் செல்பேசியை காதில் வைத்து என்ன என்றேன். மறுமுனையில் இருந்து "என்ன மச்சி தூங்கிகிட்டு இருக்கியா?" என்று குரல். ”டேய் நாயே கனவில கூட என்னை கன்னி கழிய விடமாட்டீங்களா? அப்பிடி என்னடா என் மேல உங்களுக்கு கடுப்பு” என்று சொல்லியவாறே போனை அணைத்தேன். மறுபடியும் தூங்க நினைத்து தோற்றுப் போனேன். இப்பொழுதெல்லாம் செல்போனை அணைத்து விட்டே தூங்கச் செல்கிறேன், பையில் சில சில்லறைகளையும் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டு.


Wednesday, April 4, 2012

தமிழ்


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
   இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
   இகழ்ச்சி சொல்லப் பான்மை கெட்டு,
நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
   வாழ்ந்திடல் நன்றோ? சொல்வீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
   பரவும் வகை செய்திடல் வேண்டும்

யாமறிந்த புலவரிலே கம்பமைப் போல்
   வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;
    உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை;
ஊமையராய் செவிடராய் குருடர்களாய்
   வாழ்கின்றோம் ஒருசொல் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
   தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
   தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
   தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
   சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
    அதை வணங்கச்செய்தல் வேண்டும்.


உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
   வாக்கினிலே ஒளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
   கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வாழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
   இங்கமரர் சிறப்புக் கண்டார்.

                                                      - மகாகவி பாரதி

இதைப்பற்றி எழுதியே ஆக வேண்டும்


                        நான் இதைப் பற்றி எழுதியே ஆகவேண்டும். ஆனால் இதைப் பற்றி படிக்க வேண்டிய கட்டயாம் உங்களுக்கு இல்லை. 
                              நாங்கள் வாழும் வாழ்க்கை பெரும்பாலும் இருட்டில் ஆரம்பித்து அதிகாலையில் முடிந்து விடுகிறது.  நிலா எங்களுக்கு சூரியனாகவும், சூரியன் எங்களுக்கு நிலாவாகவும் செயல் படுகிறது. அதிகாலை நேரத்தில் களைப்புடனும் கொட்டாவியுடனும் உறங்கச்செல்வோம். அந்தி வேளையில் தான் எங்கள் காலை உணவு. நடு இரவில் பேய் கூட உறங்கச் செல்லும் நேரத்தில் தான் எங்கள் மதிய உணவு. அதிகாலையில் இரவு உணவு உண்ணும் ஒரே ஜீவராசிகள் அதாவது பிராணிகள் நாங்கள் தான்.
                      எங்களது வார இறுதி நாட்கள் பெரும்பாலும் தூக்கத்திலேயே கழிந்து விடும். வார நாட்கள் துக்கத்திலேயே கழிந்துவிடும். எங்கள் கண்கள் பெரும்பாலும் ரத்த சிவப்பு நிறத்திலேயே காணப்படும். எங்களது இதயத்தில் எப்பொழுதும் ஒரு வலி இருந்து கொண்டே இருக்கும். மயான அமைதிக்கு நடுவில் நாங்கள் வேலை பார்ப்பதால் எங்கள் இதயம் துடிப்பது கூட பெரும் இரைச்சலாகவே தோன்றும்.
                         நாங்கள் யார்? இரவு நேர கோட்டான்களா? கள்ளர்களா? இல்லை மயான வெட்டியான்களா?   இது எங்கள் பொருளாதாரக் கோளாறு மட்டும் இல்லை பூலோகத்தின் கோளாரும் கூட. இந்தியாவில் இரவையும் அமெரிக்கவில் பகலையும் வைத்த இறைவனின் கோளாரும் கூட. நான் இதைப் பற்றி எழுதியே ஆகவேண்டும். ஆனால் இதைப் பற்றி படிக்க வேண்டிய கட்டயாம் உங்களுக்கு இல்லை.
                                                                                         இப்படிக்கு  இங்கிருந்தே அமெரிக்காவிற்கு வேலை பார்க்கும் கையாளாகத கணிப்பொறி விஞ்ஞானி.

கஹானி: कहानी : என் பார்வையில்


                           வெளிமாநிலம் சென்றதிலிருந்து தியேட்டருக்கு சென்று பார்த்த முதல் ஹிந்திப் படம்.
                           மிகவும் அருமையாக எடுக்கப்பட்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். கதையை வெகுவாக விவரிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். கொல்கத்தாவை மிக்க அழகாக காட்டியுள்ள ஒரே படம் (எனக்கு தெரிந்த வரை). தன் கணவனை தேடி வெளிநாட்டில் இருந்து கொல்கத்தா வரும் புள்ளத்தாச்சி தமிழ் பெண் வித்யா பாலன்(அங்கதாம்ல வச்சுருக்காய்ங்க ட்விஸ்ட்டு).  ஒரே வரியில் கதையைப் பற்றி சொல்லப்போனால் இந்தப்படம் ஒரு பெண்கதாப்பாத்திரம் நடித்த உன்னைப் போல் ஒருவன் (ஒருத்தினு கூட வச்சுக்கலாம்).
                      படத்தில் தமிழ்ப்பெண்ணாக நடித்திருப்பதால் வித்யாபாலன் ஒரு காட்சியில் “இதுதான், இதுதான்” என்று அவசரத்தில் பேசுவது போல ஒரு வசனம் வரும். தியேட்டர்ல மத்த எவனுக்கும் புரியாத எனக்கு மட்டும் புரிஞ்ச ஒரே டயாலக் அதுதான். ஆனா இந்தப் படம் பாக்குறத்துக்கு இந்தி தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியம் இல்லை. காட்சிகள் அவ்வளவு கோர்வையாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
                     தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியா சென்று வித்யாபாலன் பல அருமையான திரைப்படங்கள் நடித்துவிட்டார். குறிப்பாக சொல்லப் போனால் உமன் சென்ட்ரிக் என்று சொல்லக்கூடிய பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து எடுக்க கூடிய படங்கள் இனறையளவில் வெகுவாக குறைந்து வருகிறது. அவ்வகை படங்களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியாக வித்யாபாலன் நடித்துவருவது மகிழ்ச்சியான விஷயம். நம்ம தமிழ் நாட்டுலயும் இதுபோன்ற பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து நிறைய படங்கள் வந்து இருக்கின்றன. குறிப்பாக பாலச்சந்தர், பாலு மஹேந்திரா, மஹேந்திரன் மற்றும் மணிரத்னம் படங்கள். (வேணும்னா விஜயசாந்தி படத்தையும் சேத்துக்குங்க). ஆனா இப்போ பெருமளவில் இம்மாதிரி படங்கள் குறைந்து விட்டன. கஹானி நமக்கு சொல்லும் பாடம் நாமும் இதுபோல் படங்கள் எடுக்க முன் வர வேண்டும் என்பதே.
              இந்த விமரிசனத்தப் பற்றிய உங்கள் விமரிசனங்கள் வரவேற்கப் படுகின்றன.

59 ஆவது தேசிய விருதுகள்



கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் இந்திய நாட்டின் ஆஸ்கர் விருதான தேசிய விருதுகளை தமிழ் சினிமா உலகம் அள்ளி இருக்கிறது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதும், சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் ஆரண்ய காண்டம் பட்த்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சிறந்த துணைநடிகருக்கான விருதுகளை அழகர்சாமியின் குதிரை படம் அள்ளியிருக்கிறது.
தமிழில் சிறந்த படத்திற்கான விருதை வாகை சூடவா எதிர்பார்த்தபடியே வாங்கிவிட்டது.

ஒவ்வொரு தேசிய விருதின் போதும் தமிழ் சினிமா விருதுகளை அள்ளிக் குவிக்கும் போது தமிழன் என்ற முறையில் புல்லரிக்கிறது. ஆனால் மேற்குறிப்பிட்ட படங்களில் எத்த்னை படங்களை நாம தியேட்டர் போய் பார்த்திருக்கோம். ஏன் ஆரண்ய காண்டம்னு ஒரு படம் வந்த்தே பல பேருக்கு தெரியாதே. தமிழில் உள்ள பல நல்ல ரசிகர்களும் திரை விமர்சகர்களும் இந்த மூன்று படங்களையும் தூக்கி கொண்டாடிய போதிலும் இப்படங்கள் வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றியை அடையவில்லை. இப்போக் கூட இந்த புல்லரிப்பு நமக்கு ஒரு வாரம் இருக்குமா? அதுக்கப்புறம் சிங்கம், சிறுத்தை, கரடி, யானை போன்ற விலங்கீனப் படங்களே நம்ம பாக்ஸ் ஆபீஸ்ல இடம் பிடிக்கும்.

ஆக இந்த வருடத்திலிருந்தாவது கொஞ்சம் பகுத்தறிவுடன் நல்ல படங்களை தியேட்டர் சென்று பார்ப்போம். ஃபேஸ்புக் ட்விட்டர் மூலமாக மற்றவர்களுக்கும் நல்ல படங்களை பார்க்க பரிந்துரை செய்வோம்.

சிறகு முளைத்த கூட்டுப் புழு


என் உலகம் உருண்டையானதல்ல
அது கன சதுர வடிவமுடையது

அதில் காற்று இல்லை
மின்விசிறி இருக்கிறது

அதில் சூரியன் இல்லை
மின்விளக்கு இருக்கிறது

அங்கே குயிலோசை கேட்பதில்லை
அவ்வப்போது தொலைக்காட்சி இரைகிறது

என் உலகில் பக்கத்து தெரு மாமவின்
குழந்தையை இருந்த இடத்திலே
முகநூல் மூலமாக முத்தமிட வசதி இருக்கிறது

செயற்கையாய் செங்கலில் கட்டிய
என் உலகில் எல்லாம் இருக்கிறது.

இருந்தும் சில நாட்களாய்
அங்கே மின்சாரம் இல்லை.
எங்கும் ஒரே இருட்டு

வெறுத்து கண் அயர்கையில்
என் உலகின் கதவு திறக்கிறது
வெளியே ஓர் உருண்டையான
உலகம் எனக்காக காத்திருந்தது
அது மின்சாரத்தின் உதவி இல்லாமல்
இயங்கும் சக்தி பெற்றது

நல்லது செய்ய எதுக்கு கூச்சம் ...


                                         அப்போ நான் திருநெல்வேலில படிச்க்கிட்டு இருந்த சமயம் , ஊருக்கு போறதுக்காக பஸ் ஏறி உக்காந்தேன் . நான் ஏறின அதே பஸ்சுல அழுக்கு டிரஸ் போட்ட  பெரியவர் ஒருத்தர்  மூணு பேர் உக்காரவேண்டிய ஒரு சீட்டுல படுத்துக்கிடந்தார் . பஸ்சில் கூட்டம் சேர்ந்தவுடனே எழுந்து உக்காந்துட்டாரு ஆனா அவரு பக்கத்துல உக்காரதுக்கு யாருக்குமே மனசு வரல , கடைசியா கூட்டம் அதிகமாகி அவர் பக்கத்துல ரெண்டு பேரு உக்காந்துட்டாங்க . நான் கடைசி சீட்டுல உக்காந்து இருந்தேன் . அவரு எனக்கு ஒரு ரெண்டு சீட்டு தள்ளி உக்காந்து இருந்தாரு, மதுரைக்கி அவர் டிக்கெட் கேட்டது என் காதில் நன்றாகவே விழுந்தது . அருவருப்பை மீறிய பரிதாபத்துடன் அவரை எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க அவரோ ஒரு சின்னக் குழந்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த ரொட்டித் துண்டையே பார்த்துக் கொண்டிருந்தார். பஸ் ஒரு மணி நேரம் கழித்து கேண்டீனில் நின்றது , அவரர் தாங்கள் சாப்பிட ஏதாவது வாங்கிக் கொண்டு பஸ்ஸில் ஏறினார்கள் , என்னிடம் இருந்த கடைசி பத்து ரூபாயை கொண்டு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறினேன் . எல்லோரும்  தாங்கள் வாங்கிய தின் பண்டங்களை கொறிக்க தொடங்கினார்கள் . எங்கேயாவது ஒரு பாக்கெட்  பிரிக்கும் சத்தம் கேட்டால் ,அந்த சத்தம் வந்த திசையை நோக்கி தலை திருப்பி கையை நீட்டுவார் அந்த பெரியவர் , அவர்களும் பெரியவருக்கு  தின்ன கொஞ்சம் தருவார்கள் . என் பக்கத்தில் சுமார் முப்பது வயது இருக்கக் கூடிய ஒருவன் தான் வாங்கி வந்த கடலை பொட்டலத்தை மிகவும் நுட்பமாக யாருக்கும் சத்தம் கேட்டகாமல் மெல்ல திறந்து அந்த பெரியவருக்கு தெரியாமல் சாப்பிட்டு  முடித்து விட்டான் . இன்னொருவனோ அந்த பெரியவர் கை நீட்ட , அதை கவனிக்காதவன் போல சாப்பிட்டுக் கொண்டே இருந்தான் . இவர்களுக்கு மத்தியில் கையில் பிஸ்கட் பாக்கெட்டுடன் என்ன செய்வதென தெரியாமல் நான் உக்கார்ந்து கொண்டிருந்தேன் . பெரியவரின் கவனம் பிரிக்கப் படாத என் ரொட்டி பாக்கெட்டின் மேல் திரும்பியது ,
அவருக்கு அப்படியே கொடுத்து விடலாம் என்று எண்ணிக்கொண்டே இருக்கையில் என்னுடைய நிறுத்தம் வர இறங்கி விட்டேன் கையில் அந்த பாக்கெட்டுடன். என் பக்கத்தில்  உக்காந்திருந்த அந்த இரண்டு பேரை விட என்னை நான் கேவலமாய் உணர்ந்தேன்.

வாழைப்பழமும் வழிப்போக்கர்களும் ...

ஒரு முறை ஒரு நகரத்தின் வழியே ஒரு தமிழன், ஒரு ஆங்கிலேயன், ஒரு வட இந்தியன் , ஒரு சீனாக்காரன் பயணித்துக்கொண்டிருந்தார்கள் , அவர்களுக்கு  பசி ஏற்பட்டது , ஆகவே தாங்கள் கொண்டுவந்திருந்த காசுகளை ஒன்றாக போட்டு ஏதாவது பழம் வாங்க முடிவு செய்தனர் , அவர்களுக்கு தங்கள் தாய் மொழி தவிர வேறு ஏதும் தெரியாது ... தமிழன் எனக்கு வாழைப்பழம் தான் வேண்டும் என்றான் , ஆங்கிலேயன் I want banana என்றான் , வட இந்தியன் எனக்கு kēlē(கேளே) வேணும் என்றான், சீனன் எனக்கு Xiāngjiāo(சியஞ்சியோ) வேண்டும் என்றான் , அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மொழியில் தாங்கள் கேட்ட பழம் தான் வேண்டும் என்று சண்டை இட்டுக்கொண்டனர் . அவ்வழியே வந்த ஒரு பெரியவர் இவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பழக் கடைக்குப்  போய் , ஒரு சீப்பு வாழைப்பழம் வாங்கிக் கொண்டு வந்தார், அதைப் பார்த்த தமிழன் இது தான் நான் கேட்ட வாழை என்று ஒன்றை எடுத்துக் கொண்டான் ,ஆங்கிலேயனும் this is banana what I asked என்று ஒன்றை எடுத்துக் கொண்டான், வட இந்தியன் இது தான் நான் கேட்ட பழம் kēlē(கேளே) , என்று ஒன்றை எடுத்துக் கொண்டான் , சீனனும் இது தான் நான் கேட்ட பழம் Xiāngjiāo(சியஞ்சியோ) என்று ஒன்றை எடுத்துக் கொண்டான். அவர்கள் அனைவரும் பின் பயணத்தை தொடர்ந்தனர் .

இப்பிடித்தான் நாமளும் ஒரே கடவுளை பல மதங்களின் வழியாக கரெட்டா தப்பா புரிஞ்சிக்கிட்டு சண்ட போட்டுக்கிட்டே இருக்கோம் ......

ஒரு சூபி கதையை தழுவி எழுதப்பட்டது

உலக GCE PIRATES தினம்


உலக GCE  PIRATES தினம்

மேக்ஸ்வெல் இன்று உனக்கு பிறந்த நாள்
1988 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் பதினாலாம் நாள் ஒருவேளை நீ பிறக்காமல் போயிருந்தால் ,


உலகநாதனுக்கு லேப் எக்சாமில் யார் பிட் கொடுத்து உதவியிருப்பார்?
பர்மா எனும் பன்னிக்கு யார் போர்வை கொடுத்திருப்பார் ?
வாங்கி என்னும் எனக்கு லேப்டாப்பை யார்  அறிமுகப்படுத்தியிருப்பார் ?
காக்காவிடம் யார் கரிசனம் காட்டியிருப்பார் ?
நந்தாவிருக்கு யார் ஓசி  சட்டை தந்திருப்பார் ?
கப்பு வாயனுக்கு யார் கடன் கொடுத்திருப்பார்?(திரும்பக் கிடைக்காதென்று தெரிந்தும்)
வாரம் ஒருமுறை நாய்வாயனுக்கு கரி சோறு யார்  போட்டிருப்பார்?
சப்பிக்கு குளிக்க சோப்பு யார் கொடுத்திருப்பார் ?
கரும் பல்லுக்கு யார் பதிலடி கொடுத்திருப்பார் ?
ஆபோவிடம் யார் அன்பாயிருந்திருப்பார் ?

இந்த தினம் நீ கொண்டாட வேண்டிய தினம் அல்ல
இது நாங்கள் கொண்டாட வேண்டிய தினம் ......



ஆக இந்த திருநாளை நாங்கள் உலக GCE  PIRATES தினம்
என்றறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்

                                                                         அன்புடன் குமார் கருப்பையா....

தேர்தல் நேரத்து காமெடி செய்திகள்

  1. கேப்டேன் என்கின்ற விஜயகாந்த் தேர்தல் அன்று  குடிபோதையில் திமுகவிற்கு வாக்களித்து விட்டார் -- "வட போச்சே  "
  2. விஜய டி.ராஜேந்தர் இந்த தேர்தலை புறக்கணித்ததால், மக்கள் தைரியமாக ஓட்டு  போட வந்தனர் --
  3. கலைஞர் வசனத்தில் படங்கள் வருவதை தடுக்க உங்கள் பொன்னான ஓட்டை எங்களுக்கே போடுங்கள் என்று "ஸ்டாலினே" பிரச்சாரம் செய்தார்
  4. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காலைக் கடனைக் கூட தள்ளுபடி செய்வோம் - "நடிகர் சரத்குமார்" ---அம்மா இரண்டு விரலை காட்டுவதை தப்பாக புரிந்துகொண்டார் போல
  5. மதுரையில் ஓட்டுப் பெட்டிகளில் திமுக பட்டனை தவிர வேறு எதை அழுத்தினாலும் பாம்  வெடிக்குமாறு செட் செய்துள்ளோம் - மு. க .அழகிரி  --என்னா வில்லத்தனம் 
  6. தலையில் துண்டை போட்டுக் கொண்டு ஓட்டளிக்க வந்த நபர் வைக்கோ என்று தெளிவாக கேமெராவில் தெரிகிறது -- நாட்டாமை ஊர வுட்டு தள்ளி வச்சுட்ட்டரோ ?
  7. பொன்னர் - சங்கர் கண்டிப்பாக ஆஸ்கரை அள்ளும் --ஜே.கே.ரித்தீஸ் (அதென்ன அவார்டா ? கருவாடா ?)

என் தேசம் என்னும் எவர்சில்வர் தட்டு

                                 சரியாக மதியம் 12 :30 மணி அளவில் ஒலித்தது அந்த மெஸ்ஸின்  மணி  ,மணி அடிச்சா சோறு என்பது போல தட்டை தூக்கிக் கொண்டு ஓடினான் அவன், மெஸ்ஸில் நுழைந்து அவன் எடுத்து வந்த எவர்சில்வர் தட்டில் சோற்றை நிரப்பி , சாம்பார் வாளியில் வலை வீசி மீன்களை பிடிப்பதை போல முருங்கைக்காய்களை பிடித்து தட்டில் போட்டு, அப்பளங்களை அடித்து நொறுக்கி தட்டில் தூவி புடலங் காய் கூட்டை சோற்றுடன் கலந்து , அந்த தட்டை எடுத்து மூன்றாவது டேபிளில் போய் அமர்ந்தான். அவனுக்கு முன்னே மூன்றாவது டேபிளில் சாப்பிட்டு போனவனின் எச்சில் உணவுப் பருக்கைகள் அவன் தட்டின் பின்னே ஒட்டிக் கொண்டன, மோர்,ரசம் என்று பல ரவுண்டு வந்து  ஒரு வழியாக சாப்பாட்டை முடித்தான். தட்டின் முன்பக்கத்தை  நன்றாக  சோப்புப் போட்டு கழுவியவன் , பின் பக்கத்தை சுத்தம் செய்ய மறந்து விட்டான். மெஸ்ஸில் இருந்து வெளியில் வந்தவன், சாப்பாடிற்காக வெளியில் காத்து இருந்த இன்னொரு நண்பனிடம் தட்டை கொடுத்தக் கிளம்பினான். அது ஒரு மாணவர் தங்கும் விடுதி, பலருக்கு சாப்பாடு ஒரே தட்டில் தான். பின் இரண்டாமவனும் பசி வெறியல் தட்டின்  முன் பக்கத்தை நன்றாக கழுவி பின்பக்கத்தை மறந்து விட்டான். அவனும் சாப்பிட்டுச் சென்றான், இப்போது தட்டின் பின்புறம் மேலும் அழுக்காகி இருந்தது.பின்னர் தட்டு பலர் கை மாறியது , யாரும் தட்டின் பின்பக்கத்தை கவனிக்கவே இல்லை, முன்பக்கம் எப்போதும் போல பளபளப் பாகவே இருந்தது.  இது போலத்தான் இந்தியாவும் வல்லரசாகிக்கொண்டேஇருக்கிறது.
--முற்றும்


அன்னாஹசாரே ஊழழை எதிர்த்து
நியாயம் வேண்டி
உண்ணாவிரதம் இருந்தார்
எங்கள் வீட்டில்
ஒரு வாரமாக நாங்கள்
உணவு வேண்டி
உண்ணாவிரதம் இருக்கிறோம்.

அவருக்கு நியாயம் கிடைத்தது
எங்களுக்கு இன்னும்
உணவு கிடைக்கவில்லை.

ஒரு கல்லூரி - ஒரு தற்கொலை - நான்கு மர்மங்கள்


                               பூட்டிய கதவு உடைக்கப்படும் சத்தம் ,நண்பர்களின் அலறல் சத்தம், ஆம்புலன்சின் சைரென் சத்தம் , அந்த விடுதியின் ஓர் அறையில் ஒரே கூட்டம், கண் பிதுங்கிய நிலையிலும், நாக்குத் தள்ளிய நிலையில் கிடந்தான் அவன். போலீசுக்கு தகவல் சொல்லப் பட்டது. கூடியவர்கள் ஒவ்வொருவரும் ,ஒருவாறு பேசிக் கொண்டனர். சிலர் லவ் பெயில்யர் என்றனர், மேலு சிலர் வயிற்று வலிக் கூட காரணமாக இருக்கலாம் என்றனர், அவனுடன் படிக்கும் மாணவர்கள் அழுது கொண்டிருந்தனர். இது நடந்து ஒரு மாதம் ஆகியும் காரணம் கண்டுபிடிக்கப் படவில்லை. அந்த கேஸ் இன்ஸ்பெக்டர் துரைசிங்கத்திடம் ஒப்படைக்கப் பட்டது. மாணவர்களை ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கத் தொடங்கினார் சிங்கம், முதல் மாணவன் "சார் அவனுக்கு இன்டெர்னல் மார்க் கம்மியா இருந்தது,புலம்பிக் கிட்டே இருப்பான் வேற எதவும் எனக்கு தெரியாது சார் " என்றான். பலரை அழைத்து விசாரித்த துரை சிங்கம். முடிவாக , அந்த பையன்  யாரை கடைசியாக சந்தித்தானோ அந்த பையனிடம் சென்றார். சிங்கம்," அந்த பையன் சாகுறதுக்கு நாலு மணி நேரம் முன்னாடி உங்க ரூமுக்கு தான் வந்தான் இல்லையா", பையன்," ஆமா சார், ரொம்பநேரம் பேசிக்கிட்டு இருந்தோம் சந்தோசமா தான் இருந்தான், ஏன் இப்டி பண்ணினான்னு தெரில சார், " பையன் சொல்லும் அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டே வந்தார் சிங்கம். பையனை பார்த்து சிங்கம் ,"  பைய்யன் உன் ரூமுக்கு பேசுறதுக்காக வந்தானா இல்ல வேற ஏதாவது விஷயமா வந்தானா?" , "சார் அக்சுவலா அன்னிக்கி ரொம்ப குஷியா இருந்தான் , பென்டிரைவ்ல ஏதாவது படம் காப்பி பண்ணி தர சொன்னான்" சிங்கம் குறிப்பெடுத்துக் கொண்டார் ," சோ பைய்யன் சாகுறதுக்கு முன்னாடி படம் பாத்து இருக்கான், உன்கிட்ட என்ன படம் வாங்கிட்டு போனான்னு சொல்ல முடியுமா தம்பி" , பையன்," ஸ்யுர் , சார் நாலு படம் குடுத்து விட்டேன், சுறா, விண்ணைத் தாண்டி வருவாயா?, அசல், அப்புறம் சூர்யா நடிச்ச சிங்கம்னு நினைக்கிறேன் சார்", துரை சிங்கம் தன் கேஸ் முடிவுக்கு வந்தது என்று குறிபெடுத்துக் கொண்டு அந்த முன்னணி நடிகரின் வீட்டை நோக்கி தன் காரை செலுத்தினார்.

சிங்கம் யார் வீட்டுக்கு போயிருப்பார்? ,நீங்களே இந்த மிஸ்ட்ரிய சால்வ் பண்ணிக்குங்க

ஒரு 'ஈ' இன் ஆவி - - - அதிரவைக்கும் உண்மைச் சம்பவம்


                       இரவு ஒன்பது மணி இருக்கும், லேசாக முழிப்பு தட்டியது, நன்றாக தூங்கி விட்டதால் ஹாஸ்ட்டலில் இரவு உணவை தவற விட்டேன்.
பசி வயிற்றை கிள்ளியது. மெஸ்சுக்கு போனா ஒண்ணுமே இருக்காதே, நைட்டு தோசை போட்ருப்பாங்க, அது முடிஞ்சிருக்கும் ஆனா தயிர் சாதம் மிச்சம் இருக்கும் என்ற நம்பிக்கையில் கிளம்பினேன். முகத்தை கழுவி விட்டு மெஸ்சுக்கு விரைந்தேன். மெஸ் அறைக் கதவுகளை திறந்து, இருட்டை விரட்ட விளக்குகளை ஆன் செய்தேன்.
                           சுமார் 30 செ.மீ விட்டம் கொண்ட அந்த வட்டத் தட்டை எடுத்து கழுவுவதற்காக சென்றேன். மெல்ல குழாயை திறந்தேன்.  யாருமில்லாத மெஸ்ஸில் குழாயில் இருந்து வரும் தண்ணீர் அருவி போல இரையத் தொடங்கியது. அந்த இரைச்சலைக் காட்டிலும் பேரிரைச்சலாய் என் காதுகளில் அந்த ரீங்காரம் கேட்கத் தொடங்கியது. அது ஒரு ஈ எழுப்பும் ஓசையை போலிருந்தது. என் தலையை சுற்றும் முற்றும் திருப்பிப் பார்த்தேன், அங்கு ஈ போல ஏதும் காணப் படவில்லை. என் காதுகளை நன்றாக குடைந்து எடுத்தும், ரீங்காரம் விடுவதாயில்லை. பசியோடு இருந்ததால் அந்த ரீங்காரத்தை பொருட் படுத்தாமல் , தட்டு நிறைய தயிர் சாதத்தை அள்ளிப் போட்டு , நான்காவது டேபிளில் போய் அமர்ந்தேன். நான், என் தயிர் சாதம், மின்னி மின்னி எரியும் ட்யூப் லைட் தவிர வேறு யாரும் இல்லை, இருந்தாலும் அந்த ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது ஈக்களின் பேரிரைச்சல் அல்ல. பேயிரைச்சல் போல இருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் தயிர் சாதத்தை தின்னத் தொடங்கினேன். தட்டை வழித்துத் தின்ற பின் மெல்ல தலையை உயர்த்தினேன். என் தட்டிற்கு மிக அருகில் ஒரு ஈ செத்துக் கிடந்தது , அது எப்படி இறந்திருக்கும் என்று ஆராய்ச்சி செய்ய விரும்பாமல் இன்னொரு தட்டு தயிர் சாதத்தை அள்ளிப் போட்டுக் கொள்ள கிளம்பினேன். "ஆமா , இந்த செத்த ஈக்கும் , நம்ம காதுல கேக்குற சத்தத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ ? அடச்சே, மனுசப்பயலுக பேயுக்கே அசரமாட்டோம், இது சாதாரண ஈ பேய்தான " என்று நினைத்துக்கொண்டே தயிர் சாதத்தை அள்ளிப் போட்டுக் கொண்டு மறுபடியும் அதே டேபிளில் அமர்ந்தேன்.
                         சற்று முன் அங்கே செத்துக் கிடந்த ஈயின் சடலத்தை காணவில்லை, இருந்தாலும் நான் தயிர் சாதத்தை விடாதவனாய் அள்ளி வாயில் வைக்கப் போனேன், இப்போது ஈக்கள் என் மூளையிலே உக்காந்து கத்துவது போல பேரிரைச்சல். அப்போது தான் அந்த கோரக் காட்சி என் கண்களில் பட்டது. என் வாய்க்கு மிக அருகில் தயிர் சாதக் கவளம், அதனுள்ளே நான்கைந்து செத்த ஈக்கள். அந்த கவளத்தை எறிந்து விட்டு தயிர் சாத சட்டியை நோக்கி ஓடினேன் கரண்டியை எடுத்து தயிர் சாதத்தின் ஆழம் வரை நோண்டினேன், என் கண்கள் மிரண்டன, ரத்தம் உறைந்தது. தோண்டத் தோண்ட ஈக்களின் சடலங்கள்.
                           பின் ஒரு மாத காலத்துக்கு எங்கே போனாலும் தயிர் சாதத்தை தவிர்த்தேன். எங்கள் மெஸ் தயிர் சாதத்தை முற்றிலும் நிறுத்தி விட்டேன்..

இவர்கள் புத்தகம் எழுதினால் ....



  1. 30 நாட்களில் அகோரி ஆவது எப்படி? -- இயக்குனர் பாலா
  2. மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்து விட்டு நாசமாகப் போவது எப்படி? -- இயக்குனர் கௌதம் மேனன்
  3. உலக சினிமாவை காப்பி அடிப்போம் வாங்க -- இயக்குனர் மிஷ்க்கின்
  4. ஆமை போல் இருந்து, ரேசில் ஜெயிப்பது எப்படி? - மகிந்தர்சிங் தோனி
  5. சாமியார் ஆவோம் , ஜல்சா பண்ணுவோம் - சுவாமி நித்தியானந்தா.

கவிக்கோவின் கருத்துகள் : கடவுள் இல்லாத இடம்


பக்தன் : கடவுளே நீ எல்லா இடத்திலையும் இருக்க, நீ இல்லாத இடம்னு ஏதாவது இருக்கா??
கடவுள்: இருக்கின்றது மகனே...
பக்தன் : என்ன அப்படி ஒரு மோசமான இடம் எங்க இருக்கு பிதாவே?
கடவுள்: கோவிலத்தவிர வேறு எல்லா இடத்திலையும் நான் இருக்கேன், கோவில்களைத்தான் மாறி,மாறி இடித்துக் கொண்டே இருக்காங்களே அங்க எப்டி நான் இருக்குறது?

கருத்து: கவிக்கோ அப்துல் ரகுமான்

சமீபத்திய சாதனை


 முப்பது ரூபாய் கொடுத்து MGR தத்துவப் பாடல்கள் வாங்கியது..
அதில ரொம்ப பிடிச்ச வரிகள் இதோ:
  • நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள் ,நாட்டை கெடுத்ததுடன் தானும் கேட்டார், சிலர் அல்லும் பகலும் சிறு கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்.
  • மனம் என்ற கோயில் திறக்கின்ற போது
    அழைக்காமல் அங்கே தெய்வம் வந்து சேரும்
  • இருக்குறதெல்லாம் பொதுவாய் போனா பதுக்குற வேலையும் இருக்காது 
  • வறுமை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே 
  • தன்னை தானும் அறிந்து கொண்டு, ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா?
  • பூமியில் நேராக வாழும் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா?
  • கோழியப் பாரு காலையில் விழிக்கும், குருவியைப் பாரு சோம்பலை பழிக்கும், காக்கயைப் பாரு கூடிப் பிழைக்கும், நம்மையும் பாரு நாடே சிரிக்கும்.
  • நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் 

பாட்டிக்கு ஒரு பாட்டு


என் பெற்றோருக்கு மகனாய்
இருக்க விருப்பமில்லை
என் காதலிக்கு காதலனாய்
இருக்க விருப்பமில்லை
என் நண்பனுக்கு நண்பனாய்
சொந்தங்களுக்கு உறவாய்
கவிஞனாய் ,மருத்துவனாய் ,சிற்பியாய்
எதுவாகவும் இருக்க விருப்பமில்லை
கடைசிவரை எனக்கு பாட்டியாய்
இருந்த உனக்கு மட்டும் பேரனாய்
இருந்துவிட்டு போகிறேன்
இறந்து விட்டுப் போகிறேன்
என்னை வளர்த்து விட்டு  நீ மட்டும்
குழந்தையாகி கொண்டே போகிறாய்
நாள்தோறும்  ....



 எங்கள் வீட்டில் 
பாயைக்கூட அவ்வப்போது 
விரித்து வைப்பார்கள் 
ஆனால் எங்கள் 
பாட்டியை எப்போதும்
சுருட்டியே வைத்திருப்பார்கள்
அரவணைக்க ஆளில்லாத 
பாட்டி கருவறையில் 
கிடக்கும் சிசுவைப்  போல் எப்போதும்
சுருண்டே இருக்கிறாள்.

நான் ஏடிஎம் பேசுகிறேன்


எல்லோருக்கும் வணக்கம். நான் ஏடிஎம் பேசுறேன். தமிழ்ல சொல்லப்போனா பணம் எடுக்கும் இயந்திரம். மனிதர்களுக்கு பிடித்தமான இயந்திரமாகிய எனக்கு உங்களிடம் பேசவேண்டிய நேரம் வந்திருக்கு. வழக்கமா கார்ட எனக்குள்ள போட்டவுடனேயே உங்க பேர கண்டுபிடிச்சி உங்களுக்கு ஹலோ சொல்லுவேன். பதிலுக்கு இது வரைக்கும் யாரும் எனக்கு ஹாய் சொன்னதில்லை. அதெப்பிடி தெரிஞ்ச மனுசங்களையே பாத்தும் பாக்காதமாதிரி போற நீங்க என்னை எப்பிடி கண்டுக்குவீங்க.  என் வயிரு நிறைய உங்களோட குப்பைதான். அதுக்குத்தான் பணம்னு ஏதோ பேரு வச்சிருக்கீங்களே. நாங்கூட எனக்குத்தான் இவ்வளவு பாதுகாப்பும் ஒரு ஏசி ரூமும்னு நினச்சேன். ஆனா எனக்குள்ள இருக்கிற காகிததுக்குத்தான் இவ்வளவு மதிப்புன்னு அப்புறமா தெரிஞ்சிகிட்டேன். ஒரு நாள் எனக்கு காவலா இருக்குற வாட்சுமேன் என்கிட்ட வந்து பொலம்புனாரு. அவரு பொண்ணுக்கு கல்யாணமாம், கையில பணம் இல்லையாம். அவர நம்பி யாரும் கடன் தரலயாம். என்கிட்ட நிறையா பணம் இருந்தும் அவருக்கு கொடுக்க முடியல. என்கிட்ட இருந்து பணம் எடுத்துட்டுப் போறவங்க ஒவ்வொருத்தோரட முகத்தையும் நான் கவனிச்சிட்டுத்தான் இருக்கேன். சம்பளப்பணத்த சிரிச்சிட்டே எடுப்பாங்க , கடனை திருப்பிக் கொடுக்கும்போது கடுப்போட எடுப்பாங்க. எத்தனையோ மழை இரவுகளில் என் வாசல் வந்து பல பேர் தங்கியிருக்காங்க. ஒரு மெஷின் எனக்கு ஏசி ரூம் தந்துருக்கீங்க. ஆனா உங்கள்ல பல பேரு வீடே இல்லாம இருக்காங்க. பணம் இருக்குறவரைக்கும் தான் எனக்கு மதிப்பு. அந்த வகையில என்னைப்போல நடமாடும் ஏடிம் உங்கள்ல நிறைய பேர் இருக்காங்க. நிறைய பேசனுமுன்னு இருந்தேன் அதுக்குள்ள இங்க ஒருத்தன் என் வாயில கார்ட அமுக்கி பணம் எடுக்க வந்துட்டான். அதனால இத்தோட நிறுத்திக்கிறேன்.

ஏழாம் அறிவு-- வேலாயுதம் என் கருத்துகள்


       கருத்து சொல்ல நினைத்து கமெர்சியாலாக்கப்பட்ட படம் ஏழாம் அறிவு, கமெர்சியல் படமாக எடுத்தாலும் நல்ல கருத்துடன் முடிந்தது வேலாயுதம். முந்தைய முருகதாஸ் படங்களை பார்த்தபோது வந்த ஒரு உத்வேகம் இப்படத்தை பார்த்தபோது வரவேயில்லை. ஆனால் வேலாயுதத்தில் கடைசியாக வரும் வசனம் “சந்தோசம்,துக்கம்னா நாமளே அனுபவிக்கிறோம் ஆனா கோபத்த காட்டுறதுக்கு மட்டும் எங்க இருந்தோ ஒருத்தன் ஒங்களுக்காக வரணுமா?” இந்த ஒரே வசனம் போதும். இது மாதிரி இயல்பான உத்வேக வசனங்கள் எதுவும் இல்ல ஏழாம் அறிவுல. அந்த படத்துல இருந்த வசனங்கள் தியேட்டர்ல மட்டும்தான் கைதட்ற மாதிரி இருந்தது.  ஏழாம் அறிவில் முதல் இருபது நிமிடங்களும், வேலாயுதத்தில் முதல் இருபது நிமிடங்களைத் தவிரவும், வருகிற காட்சிகள் பார்க்கும் படியாகவே இருந்தன.
வேலாயுதம்>>>>>>>>ஏழாம் அறிவு

பணம் தின்னும் பிணங்கள்


                       வணக்கம், வெல்கம் அண்ட் ஹாய், ஹலோ டூ த வியூவர்ஸ் ஆஃப் அதிரடி டி.வி. வாரா வாரம் பல வித்தியாசமான ஈவண்ட்ஸோட தில் இருந்தா பண்ணு நிகழ்ச்சி மூலமா நான் உங்கள சந்திதிச்சுகிட்டு இருக்கேன் , என்று சொல்லிக் கொண்டே போனான் அந்த அறிவிப்பாளன். ”அதிரடி டி.வி”, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற தொலைக்காட்சி. மக்கள் தங்களால் நிறைவேற்ற முடியாத சில குரூர ஆசைகளை இத்தொலைக் காட்சியை பார்ப்பதன் மூலம் போக்கிக் கொள்வார்கள். அதிலும் முக்கியமாக நமது அறிவிப்பாளன் நடத்தும் ”தில் இருந்தா பண்ணு” நிகழ்ச்சி குரூரத்தின் எல்லை. அதாவது அறுவறுப்பான, செய்யக்கூசக் கூடிய வேலையை எவன் செய்கிறானோ அவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு. இந்த ஒரு லட்ச ரூபாயை ஜெயிப்பதற்காக மலையில் இருந்து தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று குதித்தவர்கள், மூக்கின் வழியாக கம்பியை விட்டு வாயின் வழியாக எடுத்தவர்கள் என்று ஒரு பெரிய அட்டவணையே போடலாம். 
                    அது போல இந்த வாரமும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள நான்கு பேர் வந்திருந்தனர். அவர்கள் அனைவரையும் அறிமுகப் படுத்திக் கொண்டிருந்தான் நமது அறிவிப்பாளன். இதில் உன்னிப்பாக கவனிக்கப் பட வேண்டியவன் நான்காவதாக நின்ற நமது கதையின் முக்கிய கதாபாத்திரம். அவனை கதையின் நாயகன் என்று அறிமுகப் படுத்த முடியாது ஏனென்றால் கதையின் முடிவில் அவனை நீங்கள் காறித் துப்பும் நிலை வரலாம். சரி நாம் போட்டிக்குள் செல்லலாம். முதலாவதாக வந்தவனிடம் நம் தொகுப்பாளன் விதிமுறைகளையும் ஆட்டமுறைகளையும் விவரித்துக் கொண்டிருந்தான். அதாவது முதலில் 1,2,3 ஸ்டார்ட் என்று கூறியவுடன் வேகமாக முள் நிறைந்த பாதையக் கடந்து, அப்பால் உள்ள எருமை சாணி நிரம்பிய ஊற்றில் மூழ்கி எழுந்து பின் கட்டெறும்புகள் நிறைந்த குகைக்குள் நுழைந்து அங்கே வைக்கப் பட்டிருக்கும் சட்டியில் நெளிந்து கொண்டிருக்கக் கூடிய மண்புழுக்களை பிசைந்து மென்று விழுங்க வேண்டும். இவை அனைத்தையும் 150 விநாடிகளுக்குள் முடிக்க வேண்டும்.
                             போட்டி ஆரம்பமானது, மக்கள் ஆரவாரமுடன் போட்டியாளனை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். முதலாமவன் ஸ்டார்ட் என்ற வார்த்தையை கேட்டவுடன் வெறி கொண்ட வேங்கை என முள்ளில் பாய்ந்து அந்தப் பக்கம் சென்றான். முள் நிறைந்த பாதை அவனை வெகுவாக பாதிக்கவில்லை, ஏனென்றால் அவனும் முள் நிரம்பிய ஸ்பைக் ஷூ என்றழைக்கப்படும் காலணியை அணிந்திருந்தான். முள்ளை முள்ளால் வென்றுவிட்டான். எப்படியோ எருமை சாணி ஊற்றிலும் கஷ்ட்டப்பட்டு மூழ்கி அக்கறை சென்றான்.
 சாணி நிறைந்த அவன் மேனியை பார்த்த பார்வையாளர்கள் பலர் அங்கேயே வாந்தி எடுத்துக் கொண்டிருந்தனர். டி.ஆர்.பி புள்ளிகளை அதிகரிப்பதற்காக ஒளிப்பதிவாளன் இவையெல்லாவற்றையும் அண்மைக் காட்சியில் படம் பிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தான். எல்லாவற்றையும் லாவகமாக செய்ய முடிந்த முதலாவது போட்டியாளனால் மண்புழுக்களை மட்டும் தின்ன முடியவில்லை. அவன் அவ்ற்றை கையில் பிடித்து ஒரு அருவருப்பு உணர்வுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே நேரம் முடிந்து விட்டதென அறிவிப்பாளன் அறிவித்துவிட்டான். பின் வந்த இரண்டாவது போட்டியாளன் நாத்தம் தாங்காமல் ,எருமை சாணி ஊற்றில் மூழ்க முடியாமல் வெளியேறி விட்டான். 
                               ”ஹாய் வியூவர்ஸ் ஐ வில் மீட் யூ ஆஃப்ட்டர் ய ஷார்ட் கமெர்சியல் ப்ரேக், எங்கயும் போய்டாதீங்க அங்கயே இருங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தான் அந்த தொகுப்பாளன். ஒரு வேளை அவன் வெளிநாடாக இருக்கலாம், ஏனென்றால் என் நாட்டு மக்கள் பல காலமாக எங்கேயும் போகாமல் அங்கேயேதான் இருக்கிறார்கள் டி.வி நிகழ்ச்சிகள் பார்த்துக் கொண்டு. ஆக ,அப்படிச்சொன்னதற்காக நாம் அவனை மன்னித்து விடலாம். விளம்பர இடைவேளையின் போது ஒரு நடிகை வந்தார் தன் பளபளப்பான மேனி அழகிற்கு அந்த சோப்புதான் காரணம் என்றார். பின் அதே நடிகை இன்னொரு விளம்பரத்திற்கு வந்து தன் மேனி அழகிற்கு இன்னொரு சோப்பை காரணமாகச் சொன்னார். அதிலும் தலையில் கைவத்து சொன்னார். பின் ஒரு விளம்பரத்தில் ஒரு நடிகர் தென்னை மரத்தில் இருந்து இளநி பறித்த களைப்பில் இறங்கிக் கொண்டிருந்தார், இறங்கிய பின் அவரது கூடையில் வைத்திருந்த வெளிநாட்டு குளிர் பானத்தை கையில் எடுத்து, “புதிய கக்கா சோடா இப்போது இளநி ஃப்லேவரில், இயற்கையான இளநியை விட வேகமாக எனது தாகத்தை தணிக்கிறது “ என்று அந்த குளிர்பானத்தை மடக் மடக் என்று ஒரே மூச்சில் குடித்து முடித்தார். 
                              ஒரு வழியாக விளம்பரங்கள் முடிந்து மறுபடியும் நிகழ்ச்சி தொடங்கியது. மூன்றாவது போட்டியாளனும் அவ்வளவாக சோபிக்கவில்லை. தான் தோற்று விட்ட காரணத்தினால் எழுந்த கட்டுப்படுத்த முடியாத அழுகையை வெடித்து சிதறச் செய்தான். லட்ச ரூபாய் கனவு அவனுக்கு பொசுங்கிப்போனது. கேமராவை மிக அண்மைக் காட்சியில் காட்டிக் கொண்டிருந்தனர். உடன் போட்டியிட்ட போட்டியாளர்கள் அவனை தேற்றிக் கொண்டிருந்தார்கள், நம் நான்காவதாக போட்டியாளனை தவிர. உள்ளூர அவனுக்கு இதில் சந்தோசமே. பார்வையாள்ர்களில் சிலரும் அழுதுக்கொண்டிருப்பதை கேமரா பதிவு செய்து கொண்டது. 
                              கடைசியாக வந்தான் நமது போட்டியாளன், ஆரவார ஒலிகளுக்கிடையில் அலட்சியமாக தன் லட்சிய பயணத்தை மேற்கொண்டான். முள் நிறைந்த பாதை, சாணி ஊற்று இவை யாவற்றையும் துச்சமாக கடந்தான். அவனுக்கு வேண்டியதெல்லாம் ஜெயித்தால் கிடைக்கும் லட்ச ரூபாய். கடைசியாக அவன் எறும்புக் குகைக்குள் நுழைந்தான். கடித்த எறும்புகளை துச்சமெனத் தள்ளி முன்னேறினான், மண்புழு நிறைந்த சட்டியை நோக்கி. சட்டியை கையில் எடுத்து மண் புழுக்களை லாவகமாக கையில் அள்ளி மென்று தின்னத் தொடங்கினான். கேமரா மெள்ளும் அவன் வாயை குறி வைத்து படம் எடுத்துக் கொண்டிருந்த்தது. தின்று முடித்து அவ்வளவுதானா என்பது போல் கூட்டத்தை நோக்கி பார்வை வீசினான். அவனுடலில் ஒட்டியிருந்த சாணியைக் கூட பொருட்படுத்தாமல் தொகுப்பாளன் ஓடிவந்து அவனை கட்டிப் பிடித்து “ கன்ங்ராஜுலேஸன்ஸ்” என்றான். பின் அவனிடம் எப்படி நெளியும் புழுக்களை உங்களால் வாயில் வைத்து மெள்ள முடிகிறது என்று பேட்டி எடுக்கப்பட்டது. அதற்கு போட்டியாளன் ”லட்ச ரூபாய் கொடுப்பதென்றால் தான் எதையும் தின்னத்தயார்” என்றான். ”எதையும்” என்ற வார்த்தையை அவன் அழுத்தமாகக் கூறினான். மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பு தினமும் இரவில் ஃபாஸ்ட் ஃபுட் வகை உணவகங்களுக்குச் சென்று நூடுல்ஸ் சாப்பிட்டு பழக்கப் படுத்திக் கொண்டதாகவும் கூறினான்.
                              வெற்றி களைப்புடன் தன் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டிற்குள் நுழைந்து தன் மனைவியிடம் சூடாக ஒரு கப் காஃபி போட்டுத் தருமாறு கேட்டான். அவன் மனைவி ஆவி பறக்க காஃபி போட்டுக் கொண்டு வந்து நீட்டினாள். அதை டேபிளின் மேல் வைக்கச் சொல்லிவிட்டு , பீரோவை நோக்கி நடந்தான். பீரோவை திறந்து தனக்கு பரிசாக கிடைத்த லட்ச ரூபாய்க்கான காசோலையை பத்திரமாக வைத்தான். இதற்கிடையில் ஒரு ஈ பறந்து வந்து அவனது காஃபி கோப்பைக்குள் விழுந்து இறந்தது. பின் மெல்ல காஃபி கோப்பை வைக்கப்பட்டிருந்த மேஜையை நோக்கி வந்தான். கோப்பையை கையில் எடுத்து முதலில் ஒரு உறிஞ்சு உறிஞ்சினான். இரண்டாவது உறிஞ்சு உறியும் போதுதான் காஃபியில் செத்து மிதந்த ’ஈ’யை பார்த்தான். அவனது முகம் அஷ்டகோணல் ஆகிப்போனது. உறிஞ்சிய காப்பியை துப்பினான். அறுவறுப்புடன் காப்பி கோப்பையை எறிந்து விட்டு, தன் மனைவியிடம் “அப்பிடி எவன் நெனப்புல ஈ வுழுந்ததுகூடத் தெரியாம காஃபி போட்ட சனியனே” என்று அவளை ஓங்கி அறைந்து விட்டு வெளியேறினான். அந்த அறை முழுதிலும் துற்நாற்றம் பரவிற்று. அது அவன் உடலில் இருந்து வந்ததா, மனதில் இருந்து வந்ததா என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

மங்காத்தா - ஒரு ரசிகனின் பார்வையில்


மனதிற்கு நிம்மதி தரும் விஷயம் அஜித்தின் சிணுங்கல் இல்லாத சாதாரண நடிப்பு. முதல் பாதி முழுக்க குடித்து கொண்டே தான் இருக்கிறார்கள் அஜித்தும் அவரது சகாக்களும். தல, ரசிகர்கள் நல்லா இருக்கணும்னுதான ரசிகர் மன்றத்த கலைச்சீங்க. உண்மையிலேயே நீங்க ரசிகர்களுக்கு நல்லது பண்ணனும்னா இந்த மாதிரி காட்சிகள்ல நடிக்கவே கூடாது. ஏன் தல இடையில ஒரு வசனம் பேசுவீங்களே ”காமடி பண்றதுக்கு நான் என்னா சந்தானமான்னு” . நான் தெரியாமதான் கேக்குறேன் வெங்கட் பிரபு என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா, அவரு படம் மட்டும்தான் காமெடியா இருக்குன்னு நெனப்பா?. 
                       முக்கியமா ஒரு விசயம் படத்துல அஞ்சலியையும், ஆன்ரியாவையும் கடத்துறது சீனுக்கு மட்டும் யூஸ் பண்ணீ ருக்கிங்க. அந்த நடிகைகளின் மார்க்கெட் கண்டிப்பா இனி பாதாளத்துக்கு போய்டும். த்ரிஷா பத்தி பேச விரும்பல.லக்ஷ்மி ராய்தான் ப்ரேம்ஜி யோட சோடியாம் #என்ன கொடும சார் இது?
                                                  அந்த அல்லக்கை ப்ரேம்ஜி பண்ற தொல்ல சகிக்கலை அர்ஜூன விட மாட்டுவாயன் ப்ரேம்ஜி தான் அதிகமா வற்ராப்ல. இதில ரோபோ ரஜினிய கிண்டல் பண்ற சீன் நாராசம். அஜித்தான் மெயின் கேரக்ட்டர் ஒத்துக்கிறேன். அதுக்காக மத்த கேரக்டருங்கள டம்மி பண்றது அவ்வளவு நல்லா இல்ல. கெட்ட வார்த்தைகள் பேசுறது தான் இப்போ ஸ்டைலா தல? தமிழ்ல பேசுறதுக்கு கூச்சப்படுறோம் ஆனா ஆங்கிலத்துல ஃபக்னு சொன்னா அது ஸ்டைலா மாறிடும்போல.
            படத்துல பெரும்பாலும் ஃபைட்டும் ச்சேசிங்கும்தான் வருதுங்கிறதுனால ஒளிப்பாதவாளர் சக்தி சரவணன் ரொம்பவே மெனக்கெட்டு இருக்காரு. அற்புதமான ஒளிப்பதிவு. யுவன் சங்கர் ராஜா இசை அற்புதம்.ஆனா வெங்கட் பிரபுவுக்குன்னு வழக்கமா ஒரு டெம்ப்லேட் வச்சிருபீங்க போல.
                                     க்லைமேக்ஸ மாஸா காட்டிட்டா படத்துல வற்ர மத்த நாராசங்கள சகிச்சுடுவோம்னு நெனப்பா? படத்தோட கதையப்பத்தி நான் பேசக் கூடாது, தலயோட அம்பதாவது படம் இது கண்டிப்பா தியேட்டர்ல் போய் பாருங்க.

கடைசியாக தலைக்கு ரசிகனின் அன்பு வேண்டுகோள் இரண்டு
1) குடி குடியை கெடுக்கும்
2) அல்லக்கைகளின் நட்பு மரியாதையை கெடுக்கும்

அழகான அமுல்யாவின் கதை



எல்லாக் குழந்தைகளையும் போல் நம் கதையின் நாயகி அமுல்யாவும் பத்து மாதத்தில்தான் பிறந்தாள். என்ன செய்ய இந்த அவசரமான உலகத்திலும் தன் குழந்தையை அமுல்யாவின் தாய் பெற்றெடுக்க பத்து மாதம் காத்திருக்க வேண்டியிருந்த்து. தாயின் வயிற்றில் இருக்கும் போதே அமுல்யா மடிக்கணினியின் சூட்டை உணர்ந்திருக்கிறாள். அவள் தாயின் மடி மேல் கணிணி, வயிறுக்குள் அமுல்யா.
     அமுல்யா பிறந்துவிட்டாள். பச்சிளங்குழந்தையின் மேல் வீசும் பால் வாடை நம் அமுல்யாவின் மீதும் வீசியது. ஆனால் அமுல்யா குடித்த்து அவல் தாயின் மாரில் அல்ல, தாய் பாலுக்கென்று நியமிக்கப் பட்ட அவள் பணிப்பெண்ணின் மாரில். தாய்ப்பால் கொடுத்தால் மாரழகு கெட்டுவிடும் என்று அமுல்யாவின் தாய் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றில் படித்திருக்கிறாள்.
அமுல்யாவிற்க்கு இப்போது இரண்டரை வயது. அமுல்யா பேசத் தொடங்கினாள். அவள் மழலை மொழி கூட ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று அவள் வீட்டார் நினைத்தனர். என்ன செய்ய அமல்யா வாயில் இருந்தோ ம்மா ம்மா என்று தமிழில் தான் வந்த்து. அவர்கள் அதை மாம் மாம் என்று ஆங்கிலமாக் எடுத்துக் கொண்டார்கள். அமுல்யா தூங்கிய பின் ஒருவர் வீட்டுக்கு வருவதும் , அவ்ள் காலையில் விழிக்கும் முன்னரே செல்வதுமாக ஒருவர் இருந்தார், அவர் பெரும்பாலும் அமுல்யாவின் தந்தையாகவே இருக்க்க் கூடும். அமுல்யாவைக் கொஞ்சுவதற்கு இயந்திர பொம்மைகளும், பஞ்சினால் ஆன கரடிகளும் நியமிக்கப்பட்டன. ஆனால் அவை செய்வதையே திரும்பத் திரும்பச் செய்வதால் அமுல்யா அவைகளை அப்பால் தள்ளிவிடுவாள்.
அமுல்யாவிற்கு ஊட்டச்சத்து மிக்க பானங்கள் கொடுக்கப்பட்ட்து. உடல் அளவில் அமுல்யா வளர்க்கப்பட்டாள். சராசரியாக ஒரு நான்கு வயது குழந்தை என்ன செய்யும், பஞ்சுக் கரடிகளுடன் கொஞ்சி விளையாடும். பலூனை பல்லால்கடித்து உடைக்கச் செய்யும். கண்ணை கட்டி கண்ணாமூச்சி விளையாடும். ஆனால் அமுல்யாவோ கணிணி விளையாட்டு விளையாட பழக்குவிக்கப் பட்டிருந்தாள்.
 இதோ அமுல்யாவிற்கு ஐந்து வயதாகி விட்ட்து. மேற்குடியில் பிறந்த எல்லாக் குழந்தையையும் போல் அமுலயாவும் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு கான்வென்ட்டில் சேர்க்கப் பட்டாள். அவள் பெற்றோருக்கு அவள் எதை கற்றாலும் கற்காவிடிலும் கவலை இல்லை ஆனால் அவள் மெமரியில் இருந்து தமிழ் துப்பரவாக ஃபார்மட் செய்ய்ப் படவேண்டும். நண்பர்களே கவனியுங்கள் மெமரி, ஃபார்மட் என்பது கணிணி மொழி.  அவர்கள் பேச்சில் கணிணி மொழி பெரும்பாலும் கலந்தே இருக்கும்.
அமுல்யா மற்ற குழந்தைகளுடன் அவ்வளவாக நெருங்கிப் பழகாமலே இருந்தாள். அவளை சுற்றி வீசும் காற்றில் ஈரப்பதம் கலந்திருந்த்து. அது அவளின் கண்ணீரில் இருந்து எழுந்தாக இருக்கலாம். அமுல்யாவிற்கு அந்த கான்வெண்ட் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அமுல்யாவின் கான்வெண்ட்டில் இருந்து ஒரு நாள் இனபச்சுற்றுலா அழைத்து சென்றார்கள். அமுல்யாவை பொறுத்தவரை அது ஒரு சுற்றுலா அவ்வளவே. குழந்தைகள் சொகுசுப் பேருந்தில் ஏற்றபட்டார்கள். சில குழந்தைகள் சன்னலோர இருக்கையை தேடி ஓடி உக்காந்துகொண்டார்கள். அமுல்யாவோ கிடைத்த இருக்கையின் நுனியில் உட்கார்ந்து கொண்டாள்.
மலையின் உச்சிக்கு செல்ல செல்ல குளிரும், குழந்தைகளிடம் குதூகலமும் அதிகரித்த்து. அமுல்யா இப்போதும் தலை குனிந்தே உட்கார்ந்து வந்தாள். குழந்தைகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு சாரை சாரையாக அழைத்துச் செல்லப் பட்டார்கள். ஒரு மணி நேரம் சுற்றி பார்த்த பின் குழ்ந்தைகளை எண்ணியபடி ஆசிரியர் பேருந்துக்குள் ஏற்றுகிரார். குழந்தைகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைய அது அமுல்யாதான் என்று அறியப்படுகிறது.
பல நேர தேடுதலுக்குப்பின் ஆசிரியர் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியப் படுத்துகிறார். பள்ளி நிர்வாகம் காவல் துறைக்கு புகார் செய்துவிட்டு அமுல்யாவின் பெற்றோருக்கும் தெரியப்படுத்துகிறது. அமுல்யாவின் தந்தையின் தொலைபேசிக்கு அழைத்த போது அவர் மிகவும் பிஸியாக இருப்பதாகவும், தலை போற காரியமாக இருந்தாலும், சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளுமாறும் சொன்னது ஒரு இயந்திரக் குரல்.
 அமுல்யாவின் தாய்க்கும் தகவல் சொல்லப்பட்ட்து. அவள் மிகவும் நிதானமானவள். மேலாண்மையில் மேற்படிப்பு படித்தவள். பொறுமையாக விஷயத்தை கேட்டுக் கொண்டாள். இந்த விஷயத்தை தன் நண்பர்களுக்கும் தெரிவிப்பதுதான் முறை என்று, தன் குழந்தை அமுல் குட்டியை காணவில்லை என்று ஃபேஸ்புக்கில் தன் ஸ்டேட்டஸ் ஆக அப்டேட் செய்தாள். அதற்கும் சில ஜீவன்கள் விளையாடாதே என்றும், கவலைப் படாதே என் குழந்தையும் அவ்வப்ப்போது இது போல காணாமல் போய் பின் வீடு திரும்பிவிடுவாள் என்று கம்மெண்ட் செய்திருந்தனர்.
இரண்டு நாட்களாகியும் அமுலயா இன்னும் தொலைந்து போனவளாகவே இருந்தாள். அமுல்யாவின் காண்வெண்ட் வாசலில் ஒரு சிகப்பு நிற மேல்நாட்டு கார் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய பெண்மணிக்கு அப்படியே அமுல்யாவின் ஜாடை. ஆனால் அவளுடன் வந்தவனுக்கு அமுல்யாவின் ஜாடை சுத்தமாக இல்லை. அவனின் தோள் மேல் சாய்ந்து கொண்டே அவள் கலங்கிய கண்களுடன் பள்ளி அலுவலகத்தை நோக்கி நடந்தாள்.
இது நடந்து கொண்டிருந்த அதே வேளையில் மேலும் ஒரு வெள்ளை நிற கார் வந்து நின்றது. அதில் இருந்து அலைபேசியை காதில் வைத்து வியாபாரம் பேசியவாறே ஒருவர் இறங்கினார். அவர் தான் அமுல்யா தன் தாயின் வயிற்றில் கருவாக உருவாக காரணமானவர், தந்தை என்றும் வைத்துக் கொள்ளலாம். அவ்ருடன் வந்த பெண்மணி தன் உடையையும், சிகையையும் சரி செய்தவாறே அவர் கைகோர்த்துக் கொண்டாள். அமுல்யாவின் தந்தையும் தாயும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர். ஆனால் சண்டை போடவில்லை. பொது இடத்தில் சண்டை போடுவது அநாகரீகம் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் அவர்கள் பலமுறை அமுல்யாமுன் சண்டை போட்டதுண்டு.  



அமுல்யாவின் தந்தையும் தாயும் வெகுநேரம் பள்ளி நிர்வாகத்துடன் வழக்காடிவிட்டு தங்கள் துணையுடன் திரும்பிச் சென்றனர். அமுல்யாவின் தந்தை சற்று கோபமாகவே இருந்தார். இங்கு வந்ததினால் அவருக்கு முக்கியமான ஒரு மீட்டிங் ரத்தாகிவிட்டதாம். அவருடன் வந்தவள் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தாள்.  
அது சரி நம்ம அமுல்யா எங்க போனா? காலத்தால் கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம் வாங்க. இனபச்சுற்றுலா அன்று ஒரு குட்டி நாய் அமுல்யாவின் குதி காலை நுகர்ந்த்து. அதை பிடிக்க முயன்ற அமுல்யா அந்த நாயின் பின்னாலேயே சென்று வழி தவறி காட்டுப் பாதைக்குள் நுழைந்தாள். அந்த காட்டினுள் அமையப் பெற்றிருந்த மலைவாழ் வேடர்களின் குடிசைக்குள் நுழைந்தாள். அங்கே இருந்த மலைசாதி குழைந்தைகள் அவளுக்கு தேன் தந்தனர். அவளுக்கு கிச்சு கிச்சு மூட்டினர். அங்கிருந்த எல்லோருக்கும் அமுல்யாவைப் பிடித்துவிட்டது. அமுல்யாவை தூக்கிக் கொஞ்சினர். சிலர் முத்தமும் தந்தனர். அநேகமாக இதுதான் அமுலயாவின் முதல் முத்தம் என்று நினைக்கிறேன். அமுல்யாவிற்கு முத்தம் என்றால் என்ன என்று இப்போது தெரியும். இபோதெல்லாம் அவள் பட்டாம் பூச்சியை விரட்டிப் பிடிக்கிறாள். அதன் வண்ணம் அவள் கைகளில் ஒட்டிக்கொள்ளும்போது அது கலையாமல் பார்த்துக் கொள்கிறாள். பூக்களின் வாசனை அமுல்யாவிற்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அமுல்யா ஓடுகிறாள், குதிக்கிறாள், சிரிக்கிறாள். மலைவாழ் குழந்தைகளுடன் கண்ணாமூச்சி கூட விளையாடுகிறாள். மழையில் நனைகிறாள். மண் வாசனை அவளுக்கு குதூகலத்தை தருகிறது. வானவில் அவளுக்கு வியப்பைத் தருகிறது. அமுல்யா சிரிக்கும்போது அவள் கன்னத்தில் குழி விழுவது எனக்கே இப்போதுதான் தெரியும்.
இது ஒருபுறமிருக்க அமுல்யாவின் தந்தை தன் வழக்கறிஞருடன் பள்ளி மீது நஷ்ட ஈடு தொடுப்பது எப்படி என்று ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார். அமுல்யாவின் தாய் முகநூலில் மூழ்கி தன் சோகத்தை தீர்த்துக் கொள்கிறாள். காவல் துறையோ சட்டம் தன் கடமையை செய்யும் என்று தொலைகாட்சிகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிற்து.

சொலவடை